Menu Close

கோடித்துண்டு – பழைய வஸ்திரம் / புதியரசம் – பழைய துருத்தி பற்றிய உவமை

மத்தேயு 9 : 16, 17 மாற்கு 2 : 21, 22 லூக்கா 5 : 36 – 38

யோவானுடைய சீஷர் இயேசுவினிடம் வந்து உபவாசிப்பதைப் பற்றிக் கேட்ட பொழுது இயேசு இந்த வார்த்தைகளைக் கூறினார். “ஒருவனும் கோடித்துண்டை பழைய வஸ்திரத்தோடே இணைக்க மாட்டான். இணைத்தால் அதனோடே இணைத்த துண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும். பீறலும் அதிகமாகும். இங்கு கோடித்துண்டு என்பது புதிய ஏற்பாடு. பழைய வஸ்திரம் என்பது பழைய ஏற்பாடு. கோடித்துண்டையும் பழைய வஸ்திரத்தையும் இணைக்கும் பொழுது, கோடித்துண்டானது வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும் என்கிறார். புதிய ஏற்பாடென்பது பழைய ஏற்பாட்டின் விரிவு அல்ல. பழையஏற்பாடு நீக்கப்பட்டு புதிய ஏற்பாடு தரப்பட்டுள்ளது.

ஏனெனில் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதற்காகவே இவ்வுலகிற்கு வந்தார். நமது சார்பில் அதை நிறைவேற்றினார். இவ்வாறு நிறைவேற்றியதும் அதைத் தமது மாம்சத்தினாலே ஒழித்தார் – எபேசியர் 2 : 15 இயேசு நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிற படியால் – ரோமர் 10 : 4  ஆவியினால் நடத்தப்படுகிற நாம் கலாத்தியர் 5 : 18  நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.

புதிய திராட்சரசம் என்பது புதிய பழங்களிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட புளிக்காத திராட்சரசம். துருத்தி என்பது தண்ணீர், திராட்சரசம், எண்ணெய் ஆகியவற்றை சேகரித்து வைப்பதற்காகத் தோலினால் செய்யப்பட்டது. இது இயேசுவின் இரட்சிப்பின் செய்தியையும், பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொருவரிடத்திலும் இறங்கியதையும் குறிக்கிறது. இந்த புதிய திராட்சரசம் புளிக்க ஆரம்பிக்கும்போது புதிய துருத்தியாக இருந்தால் துருத்தியின் தோல் விரிந்து கொடுக்கும்போது கிழிந்துபோகாது. ஆனால் பழைய துருத்தியாக இருந்தால் அது வெடித்து விடும்.

புதியதுருத்திகளில் புளிக்கச் செய்யும் புளித்தமா அணுக்கள் எதுவும் தங்கி   இருக்காது  பழைய துருத்திகளில் இவை அதிகமாகக் காணப்படும். பழைய துருத்தி என்பது யூதர்களின் கொள்கைகளும், பாரம்பரியங்களும் ஆகும். பரிச்சேயரின் போதனைகளினால் இஸ்ரவேலர் மாற்றமடைத்து விடக்கூடாது என்பது இயேசுவின் கருத்து. புதிய துருத்தி என்பது மனம் புதிதாக்குதலையும் ரோமர் 12 : 2  புதிய ரசம் என்பது மனக்கண்களில் அடையும் பிரகாசத்தையும் எபேசியர் 1 : 19 குறிக்கின்றன.

கிறிஸ்து வெறும் மாற்றங்களுக்காக மாற்றங்களை ஏற்க அழைப்பு விடுக்கவில்லை. நாகரிக உலகப்போக்கின் வாழ்க்கை நிலையிலிருந்து மாறுபட்ட தேவசித்தப்படியான புதியதோர் வாழ்க்கை நிலைக்கான அழைப்புக்குத் தயாராக வேண்டுமென்கிறார். பழைய சமயச் சடங்குகளில் நிலைத்திருப்பவன் மனந்திரும்பாமல் உடனே புதிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள மாட்டான்.  

Related Posts