Menu Close

கவலைப் படுவது பற்றி இயேசு: மத்தேயு 6:25-34 லூக்கா 12:22-31

எதற்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று இயேசு உபதேசிக்கிறார். மிருகஜீவன்களை தன் வாயின் வார்த்தையால் படைத்த தேவன் மனிதனுக்கு ஜீவனைக் கொடுக்க வானத்திலிருந்து இறங்கி வந்து தன்னுடைய சொந்த சுவாசத்தைக் கொடுத்தார். இவ்வாறு ஜீவனைத் தந்த தேவன் ஜீவனின் பராமரிப்புக்கு தேவையானதையும் தருவார். உடலைத் தந்த தேவன் உடையைத் தருவார். ஆகாயத்துப் பட்சிகளைப் பற்றி இயேசு குறிப்பிடும்போது, அவைகள் உழைக்கவில்லை என்ற பொருளில் கூறவில்லை. ஒரு பறவை உணவுக்காக உழைப்பது போன்று ஒரு மனிதன் உற்சாகத்துடன் உழைப்பதில்லை என்றும், அவைகள் நாளைய உணவுக்காகக் கவலைப்படுவதில்லை என்றும், அதாவது காணப்படாத எதிர்காலத்தைப் பற்றி அவைகள் மனிதனைப்போல துயரப்படுவதில்லை என்ற பொருளில் எடுத்துரைக்கிறார். அவைகள் தன் உணவுக்காக தானியங்களை விதைக்கிறதுமில்லை, அறுவடை செய்கிறதுமில்லை, பஞ்சகாலத்திற்கென்று சேர்த்து வைக்கிறதுமில்லை. ஆனாலும் எந்த பறவையும் ஆகாரமின்றி மரிப்பதில்லை. அதற்கு தேவையான உணவைத் தேவன் பல வழிகளில் ஆயத்தம் பண்ணி ஏற்ற நேரத்தில் கிடைக்கும்படி செய்கிறார்.

கவலைப்படுவதினால் எவனும் தன் உயரத்துடன் ஒரு முழத்தைக் கூட்ட முடியாது. அதாவது கவலைப்படுவது வீண் என இயேசு கூறுகிறார். சிலமணி நேரமே வாழும் பூக்களுக்கு அழகைப் பொழிந்த ஆண்டவர் தனது படைப்பின் மக்களை மறப்பாரோ? இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் போடப்படும் காட்டுப்  புல்லுக்கு உடுத்துவித்த தேவன் நித்தியத்துக்கு நியமிக்கப்பட்ட மனிதனுக்கு உடுத்துவியாமல் விட்டு விடுவாரோ? (1பே 2:9,10)

கவலைப்படுவது தேவனை அவிசுவாசிப்பது ஆகும். புறவினத்தார் கவலைப்பட வேண்டும். ஏனெனில் அவர்களது தேவர்கள் சபலம் நிறைந்தவர்களும், பொறாமை பிடித்தவர்களும், நிலையான பண்பு இல்லாதவர்களுமாவார். நம்முடைய பரமபிதா நமது சரீரத் தேவைகளையும், ஆன்மீகத் தேவைகளையும் அறிந்த்திருக்கிறார். (ரோ 8:32)

கவலையை வெல்ல தேவன் கூறும் காரியம் “தேவனுடைய ராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடுங்கள் மற்றவைகள் உங்களுக்கு அருளப்படும்” என்கிறார். அதாவது நாம் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்கும் பொழுது, அவரது அன்பை நாம் பெறும் பொழுது, கதிரவனைக் கண்ட பனியைப்போல நமது கவலைகளும், கலக்கங்களும் மறைந்து விடும் என்கிறார். பரலோகராஜ்ஜியம் ஒருவனுக்குள் எப்பொழுது பிரவேசிக்கிறது என்றால் அவனுடைய அன்றாட வாழ்க்கையில், நடத்தையில், செய்யும் வேலையில் அல்லது தொழிலில், அவனுடைய பேச்சில், பார்வையில் தேவனுடைய ஆளுகை வரவேண்டும். தேவனுடைய அனுமதியின்றி ஒரு காரியமும் நடப்பதில்லை.

உபா 4:29 ல் மோசே “உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்.” என்றார். தாவீது சங்  105:4 ல் “கர்த்தருடைய சமூகத்தை நித்தமும் தேடுங்கள்” என்றார். ஏசாயா 55:6 ல் “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்” என்றார். நாம் அவரைத் தேடும்போது அவர் நம்மைக் குறித்த எல்லாக் காரியங்களையும் பார்த்துக் கொள்வார்.

Related Posts