Menu Close

செங்கடலை இரண்டாய் பிளந்த தேவன்

கர்த்தர் எகிப்திலிருந்து மீட்டெடுத்தது:

கர்த்தர் இருபது லட்சத்துக்கு அதிகமான இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் கால்நடையாக ராமசேஸிலிருந்து (ஆதியாகமம் 47 : 11) புறப்பட்டனர். ராம்சேஸ் என்ற இடம் நல்ல இடம். ஆனால் கர்த்தரோ ஜனங்களிடம் அதை விட பாலும், தேனும் ஓடுகிற நலமும் விசால முமான இடத்தில், மலைகளும், பள்ளத்தாக்குகளும் உள்ள இடத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பேன் என்றார். அதாவது உலகத்தின் நடுப் பகுதியில் குடியிருக்கப் பண்ணுவேன். ஆதலால் கடந்த காலத்தைக் குறித்துக் கலங்க வேண்டாம் என்றார் (யாத்திராகமம் 3 : 8). அங்கிருந்து கானானுக்குச் செல்வதற்கு பெலிஸ்தியரின் தேசம் வழியாகச் செல்வது எளிது. ஆனால் கர்த்தர் அவர்களை அந்த வழியாகச் செல்ல அனுமதிக்காமல் வனாந்திர வழியாகச் சுற்றிப் போகப் பண்ணினார். அதற்குக் காரணம் பெலிஸ்தியர் யுத்தத்துக்கு வந்தால் அடிமையாய் இருந்த ஜனங்கள் சோர்ந்து போவார்கள் என்று அவ்வாறு போகத் தடை செய்தார் (யாத்திராகமம் 13 : 17, 18).

கர்த்தர் எப்பொழுதும் தன்னுடைய பிள்ளைகளைத் திராணிக்கு மேலாகச் சோதிக்க விட மாட்டார். எனவே மோசே ஜனங்களுடனும், யோசேப்பு கூறியபடி அவருடைய எலும்புகளுடனும் சுக்கோத்துக்கு வந்தடைந் தனர். பின் இரண்டாவதாக அங்கிருந்து ஏத்தாமிலே பாளையமி றங்கினர். கர்த்தர் அவர்களை வெயில் தாக்காதபடி மேகஸ்தம்பத் தினாலும், இரவில் அவர்களைக் கடுங்குளிரிலிருந்து காக்க அக்கினி ஸ்தம்பத்தினாலும் வழி நடத்தினார் (யாத்திராகமம் 13 : 20 – 22). இந்த மேகஸ்தம்பமும், அக்கினிஸ்தம்பமும் இஸ்ரவேல் ஜனங்களைக் கானானில் கொண்டுபோய்ச் சேர்க்கிற வரை அவர்களை விட்டு விலகாமல் காத்தது. கர்த்தருக்கு விரோதமாக ஜனங்கள் அநேக காரியங்களைச் செய்தாலும் அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகவேயில்லை. 

செங்கடலுக்கு முன் இஸ்ரவேலரின் சேனைகள்:

கர்த்தர் மோசேயிடம் மூன்றாவதாக ஜனங்களை அங்கிருந்து திரும்பி மிக்தோலுக்கும், சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக ஈரோத் பள்ளத்தாக்கில் பாளையமிறங்கக் கட்டளையிட்டார். இந்த இடம் சிவந்த சமுத்திரத்துக்கு எதிரான இடம். எதற்காக அங்கு இறங்கச் செய்தாரென்றால், வனாந்தரமானது இஸ்ரவேல் ஜனங்களை முன்னேற விடாமல் அடைத்துப் போட்டது என்று பார்வோன் நினைக்கட்டும் என்றும், அதனால் பார்வோன் ஜனங்களைப் பிடிக்க பின்தொடர்ந்து வரட்டும் என்றும் அவ்வாறு கட்டளையிட்டார். மேலும் கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, தானே கர்த்தர் என்று எகிப்தியர் அறியவும், பார்வோனாலும், அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படவும் அவ்வாறு கூறினார். (யாத்திராகமம் 14 : 3, 4). இதேபோல் பார்வோனுக்கு வாதையை அனுப்பிய போது பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதை யாத்திராகமம் 4 : 21 லும், 7 : 3லும் பார்க்கிறோம். 

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணும் போது யாத்திராகமம் 7 : 5 ல் “நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள்” என்று கர்த்தர் கூறினார். இஸ்ரவேல் ஜனங்களை வேவு பார்க்க பார்வோன் ஆட்களை நியமித்திருந்தான். அவர்கள் பெலிஸ்திய தேசத்து வழியாகப் போவார்கள் என்றெண்ணினர். கர்த்தர் நினைத்தபடி பார்வோன் இஸ்ரவேலர்கள் வழி தவறி வனாந்தரத்திற்குச் சென்றதாக நினைத்தான். அகப்பட்டுக் கொண் டனர் என்று நினைத்தபோது, கர்த்தர் பின் தொடர்ந்து வருவான் என்கிறார். சங்கீதம் 71 : 11 ல் கூறியதுபோல பார்வோன் தேவன் அவர்களைக் கைவிட்டு விட்டார் என்றும், அவர்களை விடுவிப்பார் இல்லை, எனவே நாம் அவர்களைத் தொடர்ந்துபோய் பிடித்து விடலாம் என்றெண்ணினார். ஆனால் இன்னமும் கர்த்தர் பார்வோனோடு செயல்பட்டு முடிக்கவில்லை. 

பார்வோனின் சேனைகள் பின்தொடர்ந்தன: 

பார்வோன் தனக்கு வேலை செய்ய ஆட்கள் இல்லாததால் கோபத்துடன் தன்னுடைய பிரதான 600 இரதங்களையும், எல்லா அதிபதியான வீரர்க ளையும், குதிரைவீரர்களையும், சேனைகளையும் கூட்டிக் கொண்டு இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்து அவர்கள் இறங்கியிருக்கிற இடத்தை அடைந்தனர். கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார். இஸ்ரவேலர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள். யாத்திராகமம் 6: 1 லும் , 13 : 9 லும், எண்ணாகமம் 33 : 3 லும் பலத்த கையினால் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார் என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்னால் செங்கடல், இரண்டு பக்கமும் சீனாய் மலை, பின்னால் பார்வோன் பின்தொடர்ந்து வருகிறான். 

நாலா பக்கமும் அடைக்கப்பட்ட சூழ்நிலையில் நின்று கொண்டிருந்த னர். இஸ்ரவேல் ஜனங்கள் பார்வோனின் சேனைகள் தங்களுக்குப் பின்னே சமீபித்து வருகிறதைக் கண்டு மிகவும் பயந்தனர். அப்பொழுது ஜனங்கள் எல்லோரும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டனர். அவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாயிற்று. இரட்சிக்கப்பட்ட பின் சிலரை இதே போன்று கடினமான பாதையில் கர்த்தர் நடத்துவார். நாம் அனைவரும் பிரேதக் குழியை நோக்கித்தான் போய்க் கொண்டிருக் கிறோம் (ரோமர் 5: 12). நம்மையும் கர்த்தர் இரட்சிக்கப்படாவிட்டால் நாம் காக்கப்படவும் மீட்கப்படவும் முடியாது. மீட்பு என்பது தேவனுடைய செயல். யோனாவும் தாவீதும் இரட்சிப்பு கர்த்தருடையது என்றெண்ணினார் (யாத்திராகமம் 14 : 5 – 10). 

செங்கடல்:

செங்கடலானது ஆப்ரிக்காவுக்கும், ஆசியாவுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. இதில் 250 வகையான பவளப்பாறைகள் உள்ளன. செங்கடலின் மொத்த பரப்பளவு 174000 சதுரமைல்கள். அதாவது 438000 சதுர கிலோமீட்டர். அதன் நீளம் 1200 மைல் அல்லது 2250 கிலோமீட்டர். அதனுடைய அகலம் 300 கிலோமீட்டர். அதனுடைய ஆழம் சுமார் 3 கிலோமீட்டர் அதாவது 1640 அடி முதல் 8200 அடி வரை. blue algae என்ற ஒருவகை கடற் பாசிகள் மேல்மட்டத்தில் அதிகமாகக் காணப்படும். இப்பாசிகள் மீது சூரிய ஒளி படுவதால் சிவப்பு நிறமாக மாறுகிறது. கடலும் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கிறது. 

ஜனங்களின் கோபமும் மோசேயின் தேவ வார்த்தைகளும்: 

இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயை நோக்கி “எங்களைச் சாகடிக்கிறதா கூட்டி வந்தீர். வனாந்தரத்திற்கு வந்து சாகிறதைப் பார்க்கிலும் எகிப்திய ருக்கு வேலை செய்து வாழ்ந்திருப்போமே” என்று முறுமுறுத்து கேவல மாகப் பேசினர் (யாத்திராகமம் 14 :11,12). தாங்கள் அனைவரும் கொல்லப் படப் போவதாக இஸ்ரவேலர் எண்ணினார். அவர்கள் எகிப்திலிருந்த போது தங்களுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வேண்டுமெ ன்று கர்த்தரை நோக்கிக் கூக்கிரலிட்டனர். அதைக் கேட்டுக் கர்த்தர் அவர்களுக்கு விடுதலை கிடைக்கப் பண்ணினார். ஆனால் கர்த்தர் அத்தனை அற்புதங்கள் செய்ததை ஜனங்கள் பார்த்த பின்னும், ஆபத்து வந்தபோது அவைகளை மறந்து, பழைய அடிமைத்தனத்திற்கே போக விரும்பினார். இஸ்ரவேல் ஜனங்கள் நம்பிக்கையற்ற நிலைமையில் இருக்கும் போது கர்த்தர் அவர்களுக்கு உதவி செய்தார். அவர்கள் மீட்கப்பட, காக்கப்பட உதவி செய்தார். கர்த்தர் எப்பொழுதும், எவ்வே ளையும் தனது ஜனங்களுக்காகச் செயல்படுவார். அப்பொழுது மோசே ஜனங்களிடம் கூறியதாவது,

யாத்திராகமம் 14 : 13, 14 “ அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.” (2 நாளாகமம் 20 : 17, சங்கீதம் 46 : 10, உபாகமம் 1 : 30, 3 : 22) 

கர்த்தருடைய தாசனாகிய மோசே பயத்துடனும், கலக்கத்துடனும் நின்று கொண்டிருக்கும் ஜனங்களைப் பார்த்து, பயப்பட வேண்டாம் என்று அவர்களைத் தைரியப்படுத்தினார். அவர்களைப் பார்த்து கர்த்தர் நமக்காக இன்று யுத்தம் பண்ணப் போகிறாரென்றும், நாம் சும்மா நின்று கர்த்தர் இரட்சிக்கும் செயலைப் பார்க்கப் போகிறோம் என்றார். மேலும் இப்பொழுது நாம் பார்க்கிற எதிரிகளாகிய எகிப்ப்தியரின் சேனைகளை இனி என்றுமே காண முடியாதபடி கர்த்தர் செய்யப்போவதாக, நடக்கும் முன்னே நடக்கப் போவதை முன்னறிவித்தார். அன்று கர்த்தரே அவர்களுக்காக யுத்தம் பண்ணினார் (யாத்திராகமம் 14 : 10 – 14). 

கர்த்தர் மோசேயிடம் கூறியது:

கர்த்தர் மோசேயிடம் “புறப்பட்டுப் போங்கள் ” என்று இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கட்டளையிடச் சொன்னார். மோசே திகைத்து நின்றாலும் அடுத்துத் தேவனே கட்டளை கொடுப்பார் என்று காத்திருந்தான். ஆனால் கர்த்தர் அதற்குள் மோசேயிடம்,

யாத்திராகமம் 14 : 16 “நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.”

அவன் கையிலிருக்கும் கோலை ஓங்கி, கையை சமுத்திரத்தின் மேல் நீட்டும் போது சமுத்திரம் பிளந்து விடுமென்றும், அப்பொழுது சமுத்திர மானது வெட்டாந்தரையாகும் என்றார். அப்பொழுது இஸ்ரவேலர்கள் லெகுவாகக் கடந்து போவார்கள் என்றார். மறுபடியும் முன்னால் கூறிய படி கர்த்தரே பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனா லும் அவனுடைய இரத்தங்கள், குதிரைவீரர் போன்ற அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றும், அப்பொழுது கர்த்தரின் மகிமையை அறிந்து கொள்வார்கள் என்றார் (யாத்திராகமம் 14 : 15 – 18). 

கர்த்தர் செய்த அற்புதம்:

இஸ்ரவேலருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த தேவதூதனானவர் விலகி அவர்களுக்குப் பின்னால் நடந்தார். இதைத்தான் ஏசாயா 63 : 9 ல் ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்கள் நெருக்கப்படும் போது அவருடைய சமூகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார் என்று கூறினார். அதேபோல் இஸ்ரவேலருக்கு முன்னிருந்த மேகஸ்தம்பமும் விலகி அவர்களுக்குப் பின் சென்றது. இதில் தேவதூதனானவர் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே குறிக்கும். தன்னுடைய திட்டத்தைக் கர்த்தர் செயல்படுத்தும் போது அக்கினி ஸ்தம்பத்தையும், மேக ஸ்தம்பத்தையும் செயல்படுத்திப் பின்னால் போகச் செய்தார். இது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. இஸ்ரவேலரின் சேனையும், எகிப்தியரின் சேனையும் இரவு முழுவதும் ஒன்று சேராதபடி இருவருக்குமிடையே ஒரு பிரிவை, தடுப்பை உண்டு பண்ணினார். அப்பொழுது எகிப்தியருக்கு காரிருளாக இருந்தது. இஸ்ரவேலருக்கோ அந்த இரவு வெளிச்சமாகத் கர்த்தர் தோன்றச் செய்தார். மோசே தன்னுடைய கையை நீட்டியபோது கர்த்தர் பலத்த கீழ்க்காற்றை அனுப்பினார். 

அந்தக் கீழ்க்காற்று சமுத்திரத்தை ஒதுங்கச் செய்து தரையை வறண்டு போகச் செய்தது. கடலிலுள்ள ஜலமானது இரண்டாகப் பிளந்து பிரிந்து போயிற்று. அவ்வாறு பிரிந்து போன ஜலமானது வலதுபுறத்திலும், இடதுபுறத்திலும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மதிலாக நின்றது. பார்வோனும் சேனைகளும், மேகஸ்தம்பமும், அக்கினி ஸ்தம்பமும் விலகியதைப் பார்த்து திரும்பிப் போயிருக்க வேண்டும் அவர்கள் போகவில்லை. செங்கடலைப் பிளந்ததைப் பார்த்தாவது போயிருக்க வேண்டும் அப்பொழுதும் போகவில்லை. இஸ்ரவேலர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து அந்தப் பக்கம் போனார்கள். அவர்களின் கால்கள் ஈரமாகும் அளவுக்குக் கூடத் தண்ணீர் இல்லை. இருபது லட்சம் ஜனங்கள் நடந்து அக்கரைக்குப் போகிற வரை ஜலத்தைக் கர்த்தர் மதிலாக நிற்கச் செய்தார். இதேபோன்ற அற்புதத்தை யாரும் நடத்தியதே இல்லை. கர்த்தரே தன்னுடைய ஜனங்களுக்காக செய்தார். இதேபோல் நம்மையும் எல்லா இக்கட்டுகளிலிருந்து காப்பார் (யாத்திராகமம் 14 : .19 – 22) 

கர்த்தர் எகிப்தியரை அழித்தது:

எகிப்தியர் இத்தனை அற்புதங்களைப் பார்த்த பின்னும் திரும்பிப் போகாமல் இஸ்ரவேலர்களைத் தொடர்ந்து அந்த இருட்டில் சகல இரதங்களோடும், குதிரைகளோடும் சமுத்திரத்தின் நடுவே பிரவேசித் தனர். கர்த்தரோ அக்கினி ஸ்தம்பத்திலிருந்தும், மேக ஸ்தம்பத்திலி ருந்தும் எதிரிகளின் சேனைகளைப் பார்த்து அதைக் கலங்கடித்தார். அவர்களுடைய இரத்தங்களின் உருளைகள் கழன்று போகச் செய்து, அவர்களால் இரதங்களை ஓட்ட முடியாதபடி பண்ணினார். அந்த நேரத்தில் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சொன்ன வார்த்தையை இப்பொழுது எகிப்தியர் கூறினர். எகிப்தியர் கர்த்தர் அவர்களுக்குத் துணையாக நின்று யுத்தம் பண்ணுகிறார்கள் என்றும், நாம் ஓடிப்போய் விடலாம் என்றும் கூறினர். அப்பொழுது கர்த்தர் மோசேயிடம் அவனுடைய கையை விடியற்காலத்தில் சமுத்திரத்தின் மேல் நீட்டி சமுத்திரம் பலமாய் எகிப்தியருக்கு விரோதமாக வரும்படி செய்யச் சொன்னார் அதன்படி மோசே செய்தபோது சமுத்திரமானது பலமாய்த் திரும்பி வந்து சமுத்திரத்தை ஒதுங்கும்படி செய்தது. 

எகிப்தியர் அதற்கு எதிராக ஓடியபோது கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப் போட்டார். எகிப்தியரின் சேனைகளிலிருந்த ஒருவர் கூடத் தப்பாதபடி கர்த்தர் அனைவரையும் அழித்துப் போட்டார். கர்த்தர் தனது ஜனங்களுக்கு விரோதமாக எழும்பினவர்களை தம்முடைய கோபத்தால் அவர்களை தாளடியைப் போலப் பட்சித்தார் (யாத்திராகமம் 15 : 7). இவ்வாறு இஸ்ரவேலர்களை எகிப்தியரின் கைக்குக் கர்த்தர் இரட்சித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடந்ததை இஸ்ரவேலர்கள் கண்டார்கள். இன்று கண்ட எகிப்தியனை என்றும் காணாதபடி கர்த்தர் தன்னுடைய ஜனங்களுக்காக யுத்தம் பண்ணி மீட்டெடுத்தார். இதைத்தான் சங்கீதக்காரன் 78 : 53 லும், 106 : 11 லும் அவர்கள் சத்துருக்களைக் கடல் முடிப்போட்டது என்றும், அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர் மூடிக்கொண்டது, அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை என்று பாடினார். அதைப் பார்த்த இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரிடத்திலும், அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயிடமும் விசுவாசம் வைத்தார்கள். 

இஸ்ரவேலர்கள் கர்த்தரைப் புகழ்ந்து பாடிய பாடல்:

எகிப்தியர்களைக் கர்த்தர் சங்கரித்தபின் மோசேயும், இஸ்ரவேல் ஜனங்களும் தேவனைப் புகழ்ந்து பாடினர் (யாத்திராகமம் 15 : 1 – `19). அவர்கள் கர்த்தரே எங்கள் பெலனும் கீதமும் இரட்சிப்புமானவர் என்றனர். அவரே யுத்தத்தில் வல்லவர் என்றும், பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவர் என்றும் துதிகளில் பயப்படத்தக்கவர் என்றும், சதாகாலங்களிலும் கர்த்தரே ராஜரீகம் பண்ணுவாரென்றும் அவருக்கு ஒப்பான வேறு தெய்வம் இல்லையென்றும் பாடினார். கர்த்தருடைய நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது என்றும், ஆழமான ஜலம் நடுக்கடலில் உறைந்து போயிற்று என்றும் பாடினார். பார்வோனையும் அவனுடைய சேனைகளையும் கர்த்தர் தமது வலது கரத்தினால் ஆழி மூடச் செய்து, அமிழ்ந்து போகப்பண்ணினார் என்று பாடினார். 

வேத ஆராய்ச்சிகள்:

1987 ல் lenet molar செங்கடலுக்குக் கீழே ஆராய்ச்சி செய்தபோது நூற்றுக்கணக்கான இரத்தங்களின் சக்கரங்கள் கிடைத்தது. அது பார்வோனின் சக்கரங்கள் என்றதால் அரசாங்கம் அதற்குத் தடை விதித்தது. ஆனாலும் எடுத்த ஒரு சக்கரத்தை எகிப்திலுள்ள அருங்காட்சியத்தில் வைத்தனர். jain peter, alexander andrews இருவரும் திரும்பவும் அந்த முயற்சியில் ஈடுபட்டு, அவர்களுக்கு ஒரு ரதமே கிடைத்திருக்கிறது. இதிலிருந்து செங்கடலைப் பிளந்து, பார்வோனின் படைகளைக் கடலில் அமிழ்த்த சம்பவம் உண்மை என்பதைக் காட்டுகிறது. 

முடிவுரை:

கர்த்தர் எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுதலை செய்த போது இரத்தத்தினால் விடுதலை செய்தார். அதில் தேவனுடைய வல்லமையையும், அதற்காகக் கர்த்தர் அனுப்பிய பத்து வாதைகளை யும், அற்புதங்களையும் பார்த்தனர். ஆனால் இங்கு ஜலத்தினால் எகிப்தியர் அனைவரையும் ஜலத்தினால் அழித்ததையும் கடலையே பிளக்கப் புண்ணியதையும், ஜலம் மதிலாக நின்ற அற்புதத்தையும் பார்த்தனர். கர்த்தர் செங்கடலில் செய்த அற்புதத்தின் மூலம் இஸ்ரவேல் ஜனங்கள் தன்னுடைய வல்லமையையம், மகத்துவத்தையும் தெரிந்து கொள்ளவும், எதிரிகளான பார்வோனையும் அவனுடைய படைகளுக்கும் நியாயத்தீர்ப்பை வழங்கி, ஜனங்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த எதிரிகள் ஒருவரும் இல்லை என்பதை அறிந்து கொள்ளவும், அதைத் தங்களுடைய வாயால் அறிக்கை செய்யவும் செய்தார். தேவன் ஜனங்கள் தன்னை விசுவாசித்து மோசேயின் மீது நம்பிக்கை வைக்கச் செய்தார். அதைச் சுற்றியிருந்த பட்டணங்களும், நாடுகளும் கர்த்தரின் வல்லமையையும், அதிகாரத்தையும் அறியப் பண்ணினார். ராகாபும் இதைக் கேட்டு விசுவாசித்ததை யோசுவா 2 : 9 – 11 ல் பார்க்கிறோம். நமக்கும் ஆவிக்குரிய வாழ்க்கையில் தடைகளும், போராட்டங்கள் உண்டு என்பதை வேதத்தில் கர்த்தர் செங்கடலில் நடத்திய அற்புதம் நமக்கு காட்டுகிறது. நமக்கும் கர்த்தர் துணை நிற்பார். ஆமென்.

Related Posts