லூக்கா 23 : 34 “இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.”
இயேசுசிலுவையில் பாடுபட்டுக் கொண்டிருக்கும்போது கூறிய முதல் வார்த்தை இது. உலகத்தைப் படைத்த தேவன் உலகத்தாரின் பாவங் களை மன்னிக்கவும், பிசாசின் கிரியைகளை தமது மரணத்தினாலே அழிக்கவும், அழிந்து கொண்டிருக்கிற ஆத்துமாவுக்கு அழியாமையைக் கொடுக்கவும் உலகத்துக்கு வந்தார்.ஆனால் உலகத்தில் வாசம் பண்ணிய மனிதர்கள் அவரை வேண்டாமென்றனர். ஏனெனில் அவர்கள் தேவனின் செயல்களை அறிந்து கொள்வதற்கு விருப்பமில்லாதபடியாலும், உயிரு ள்ள தேவனிடம் வருவதற்கு மனமில்லாதபடியினாலும், ஜீவனுள்ள தேவனின் செயல்களைக் காணாதபடி அவர்களுடைய கண்கள் பாவத் தால் குருடாக்கப் பட்டிருந்தது. இயேசுவின் பிறப்பிலிருந்து சாத்தான் அவரை துன்புறுத்தினான். அது சிலுவையில் தான் முடிந்தது. அதனால் தேவ குமாரனாகிய இயேசு அவர்களின் விருப்பத்தின்படி தன்னுடைய ஆவியை ஒப்புக்கொடுத்தார். சத்துருக்கள் அவரைப் பரியாசம் பண்ணிய போதும், கன்னத்தில் அறைந்த போதும், அவர் மேல் காறித்துப்பிய போதும் மவுனமாயிருந்தார்.
நடுவர்கள் அவரிடம் குற்றம் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாவிட்டா லும் சிலுவையிலறைய ஒப்புக் கொடுத்தனர். வியாதிகளைக் குணமாக்கிய கைகளும், நன்மை செய்ய ஓடின கால்களும் ஆணிகளால் அறையப் பட்டு தொழுமரத்தில் மாட்டப்பட்டிருந்தது. அவரது உடலோ உழப்பட்ட நிலம் போலானது. அப்பொழுது இயேசு தன்னை அடித்த சிப்பாய்கள், துன்பப்படுத்தியவர்கள், பரியாசம் பண்ணியவர்கள், சிலுவைக்கு ஒப்புக் கொடுக்கக் காரணமாயிருந்த அன்னா, பிரதான ஆசாரியன், இயேசுவி டம் குற்றம் கண்டுபிடிக்க முடியாமலும், சரியான தீர்மானம் எடுக்க முடியாமலும் கைகளைக் கழுவிய பிலாத்து, தந்திரமான ஆட்சி செய்த ஏரோது, தானும் உட்பிரவேசியாமல் மற்றவர்களையும் உட்பிர வேசிக்க விடாமல் தடுத்த பிரதான ஆசாரியரான காய்பா, ஓடிப்போன சீஷர்கள் ஆகியவர்களை மன்னிக்கச் சொல்லி பிதாவை நோக்கி திறப்பில் நின்று ஜெபம் பண்ணினார். இது ஒரு மன்னிப்பின் ஜெபம்.
அவருடைய இருதயத்திலிருந்த தெய்வீக அன்பு வார்த்தை வடிவில் வெளிப்பட்டதைப் பார்க்கிறோம். பகை, வெறுப்பு, மூர்க்கம், வெறிச் செயல் நிறைந்தவர்களாகத் தம்மைப் பழிவாங்கிய சூழ்நிலையில் கூட இயேசுவின் அன்பு மாறவேயில்லை. இயேசு இப்படிப்பட்டவர்களை சாபமிட்டு சபித்திருக்கலாம். அல்லது பூமியை பிளக்கச் செய்து அவர் களை விழுங்க வைத்திருக்கலாம். தேவதூதர்களை வரவழைத்து அவர் களைச் சின்னாபின்னாமாக்கியிருக்கலாம். இவைகள் ஒன்றையும் இயேசு செய்யாமல் தமது அன்பினால் அனைத்தையும் வென்றார். அன்பு சகலத்தையும் வெல்லும் என்று நிரூபித்துக் காட்டினார். அதைக் கல்வாரி சிலுவையில் பாடுகளை அனுபவித்துக் கொண்டிருந்த போதும் நமக்காகக் காண்பித்தார். அன்பில்லாதவன் தேவனை அறியான். அன்பு பூரணமானது என்பதையும், அன்புக்கு விரோதமான எந்தச் செயலும் ஆபத்தானது என்பதையும் அவர்கள் அறியவில்லை. அவர் களின் அறியாமை என்னவென்றால் தாங்கள் சிலுவையில் அறைந்த நபர் மகிமையின் ஆண்டவர் என்பதுதான்.
இயேசு தேவனின் பரிசுத்தராய், நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார். அவரது போதனை அதிகாரமுடையதாகவும், ஆச்சரியப்படக் கூடியதாகவும் இருந்தது. ஆனாலும் அவர் யாரென்று அறியாதபடி அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டிருந்தது. அன்பை ஒருவராலும் மேற்கொள்ளக் கூடாது. அன்பான இயேசுவுக்கு விரோதமான தங்கள் செயல்கள் தங்களுக்கே அழிவைக் கொண்டுவரும் என்ற உண்மை யையும் அவர்கள் அறியவில்லை. தன்னை விரோதிக்கும் ஜனங்கள் தங்களைத் தாங்களே அழிவைத் தேடுகிறார்கள் என்ற உண்மையை இயேசு அறிந்தபடியால் அவர்களுக்காகப் பரிதபித்து இந்த ஜெபத்தை பிதாவை நோக்கி ஜெபித்தார். நாமும் இந்த அறிவையுடை யவர்களாகத் திகழ வேண்டும். இதேபோல் சோதோம் கொமாராவுக்காக ஆபிரகாம் திகைப்பில் நின்று கர்த்தரிடம் ஜெபித்ததையும், மோசே இஸ்ரவேல் ஜனங்களின் தவறை மன்னிக்கக் கோரி கர்த்தரிடம் மன்றாடி திகைப்பில் நின்றதையும் பார்க்கிறோம். பேதுருவும் அப்போ ஸ்தலர் 3 : 17ல் அறியாமையால் ஜீவாதிபதியான இயேசுவைக் கொலை செய்ததாகக் கூறினான். பவுல் உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ எது வந்தாலும் கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க முடியாது என்கிறார் (ரோமர் 8 : 36, 37).
இயேசுவின் அன்பு கொஞ்ச காலத்திற்கு மட்டும் உரியதல்ல. அது சதா காலமும் தொடரக்கூடியது. நம்முடைய அன்புக்கும் இயேசுவின் அன்புக்கும் மிகுந்த வித்தியாசமுண்டு. நாம் எதிராளிகளாக இருக்கும் போதே அவர் நம்மில் அன்பு கூர்ந்தார். நாமோ அவர் நம்மில் அன்பு கூர்ந்ததால் மட்டுமே அன்பு கூறுகிறோம். இயேசுவின் அன்புக்கு ஒரு போதும் இந்த உலக அன்பு ஈடாகாது. இயேசுவானவர் கொடூரமான சிலுவையின் வழியில் சென்று அன்பை வெளிப்படுத்தியது நம்மை நெகிழ வைக்கிறது. சிலுவை மரணம் எத்தனை கொடூரமோ, அதைவிட தேவ அன்பின் ஆழம், உயரம், அகலம் பெரியது. பரிசேயனான சீமோன் இயேசுவுக்குப் பெரிய விருந்தைக் கொடுத்தான் (லூக்கா 7 : 36 – 43). ஆனால் பாவியான ஸ்திரீயோ தன்னிடத்திலுள்ள மிகச் சிறந்த வெகுமதியாக கண்ணீரோடு கூடிய தொழுகையைக் கொடுத்தாள் (லூக்கா 7 : 37, 38). ஆண்டவரோ அவள் மிகுந்த அன்பு கூர்ந்தாள் என்று பாராட்டியதைப் பார்க்கிறோம். இயேசுவின்மேல் நாம் வைக்கிற அன்பே அவருக்குப் பணி செய்வதற்கு நம்மை உந்தித்தள்ளுகிறது மாத்தி ரமல்ல, பாவத்தை வெறுக்கவும் உதவி செய்கிறது. நம்மைப் பகைக்கி றவர்கள் அழிந்துபோக வேண்டுமென்று நினைத்தால் நாம் இயேசுவின் சீஷர்கள் அல்ல. நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதே என்பதும், தீமை செய்தவர்களுக்கு நன்மையே செய் என்பதும் இயேசுவின் போதனை.
மத்தேயு 5 : 44, 45 ல் இயேசு கூறிய “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிற வர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்;”
இயேசு போதித்த வார்த்தைகளை அவர் அப்படியே நிறைவேற்றியதைப் பார்க்கிறோம். இதன் பொருள் அவர்களுடைய பாவங்களை மன்னித்து, குற்றங்களைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளும் என்பதுதான். தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக் சபிக்காமலும், தன்னை விடுதலை பண்ண இயேசு பிதாவிடம் கேட்காமலும் இருந்ததைப் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் பாவத்தைக் குறித்து அறியாதிருந்தனர் (அப்போஸ்தலர் 3 : 17).அவர்கள் தாங்கள் பாவிகள் என்றும் அறியவில்லை. அறியாமை யால் செய்த பாவத்துக்கு பழைய ஏற்பாட்டில் யூத சட்டத்தில் தப்பிக்க வழி இருந்தது. அதனால் இயேசு தாங்கள் என்ன செய்கிறார்களென்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆனால் தான் என்ன செய்கிறேனென்று தனக்குத் தெரியும் என்று இயேசு கூறுகிறார். தான் அவர்களின் மன்னிப் புக்காக மன்றாடுகிறேன் என்று பிதாவிடம் கூறுகிறார். இயேசு பாவங் களை மன்னிக்க அதிகாரம் உள்ளவர் என்று மத்தேயு 9 : 6 ல் கூறியிரு ப்பதைப் பார்க்கிறோம். லூக்கா 5 : 20 ல் இயேசு திமிர்வாதக்காரனுக்கும், விபச்சார ஸ்திரீக்கும் பாவமன்னிப்பைக் கொடுத்தார். இயேசு லூக்கா 3 : 21 ல் ஊழியத்திற்குச் செல்வதற்கு முன் ஜெபித்துத்தான் ஊழியத்தை ஆரம்பித்தார். அதேபோல் கல்வாரி சிலுவையில் ஜெபித்துத்தான் தன் ஊழியத்தை முடித்தார்.
பழையஏற்பாட்டில் பாவநிவாரணபலியாக ஒவ்வொரு வருஷமும் பலியிட வேண்டும். ஆனால் அங்கு பாவம் மன்னிக்கப்படாமல் மூடப் பட்டது. எனவே பிதாவானவர் நிரந்தர பாவ மன்னிப்பை நமக்குக் கொடு க்கச் சித்தம் கொண்டு தன்னுடைய ஒரேபேறான குமாரனை அனுப்பி சிலுவையில் இரத்தம் சிந்த வைத்து பாவமன்னிப்பைக் கொடுத்தார். அவராலேயன்றி பாவமன்னிப்பு இல்லை. இதுவே சுவிசேஷத்தின் செய்தியாகும். பாவத்தின் சுமைகளை இனி நாம் சுமக்க வேண்டிய தில்லை. இயேசுவே எல்லாவற்றையும் சுமந்து தீர்த்துவிட்டார். சிலுவை யில் சுமந்து தீர்த்தத்தினால் நாம் மன்னிக்கப்படுகிறோம். நம்மில் அவரு டைய கிருபையை விளங்கப் பண்ணி நம் எல்லோருடைய பாவங்க ளையும் மன்னித்து நீதிமான்களாக்கினார். நாம் தகுதியற்றவர்களாயிரு ந்தும் நம்மை உயரத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். நம்மை உயர்த் தவே இயேசு சிலுவையில் மரண பரியந்தம் தம்மைத் தாழ்த்தினார். அதேபோல் யோவான் 17 : 20 ல் நாம் எல்லோரும் ஒன்றாயிருக்கும்படி பிதாவிடம் வேண்டினார். இயேசு உயிரோடெழுந்து பரலோகம் சென்ற பின்பும் அவர் ஜெபித்த ஜெபத்தால் அப்போஸ்தலர் 4 : 4, 12 ல் 3000 பேர் இரட்சிக்கப்பட்டனர். இந்த ஜெபமானது ஏசாயா 53 : 12 ல் கூறப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று.
பழைய ஏற்பாட்டில் யோசேப்பை அவனது சகோதரர்கள் பொறாமயால் குழிக்குள் போட்டனர். பின் மீதியானியரின் கையில் விற்றுப் போட்னர். ஆனால் யாக்கோபுக்கும், அவனது மற்ற பிள்ளைகளுக்கும் அவர்களது தேசத்தில் பஞ்சம் வந்த போது, தேவன் யோசேப்பை உயர்த்தி வைத்தி ருந்த எகிப்துக்குத் தானியம் வாங்கச் சென்றனர். யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுததையும், அவர்களை மன்னித்ததையும் அறிகிறோம். மேலும் அவன் தன் சகோதரர்களிடம் “நீங்கள் என்னை விற்றுப்போட்டதற்குக் கவலைப்பட வேண்டாம். ஜீவரட்சணை செய்யும்படி தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்” என்றான் அவனது மன்னிக்கும் குணத்தினால் தேவன் அவனை எகிப்துக்குப் பிரதம மந்திரியாக்கினார் (ஆதியாகமம் 45 : 4, 5). பழைய ஏற்பாட்டில் பாவத்திற்கான தண்டனை உடனுக்குடன் வழங்கப் பட்டது. ஆனால் இப்போழுதோ நாம் கிருபையின் காலத்தில் இருக்கி றோம். எனவே அவர் நம்முடைய பாவங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் உரிய நியாயத்தீர்ப்பை உடனே நிறைவேற்றாமல் காலம் தள்ளிப் போடுகிறார்.
நாம் பாவிகளாகவும், தேவனுடைய சமூகத்தில் பிரவேசிக்கத் தகுதியற்ற வர்களாகவும் இருக்கிறோம். நம்முடைய நீதி தேவனுக்கு முன்பாக அழுக்கானக் கந்தையைப் போலிருக்கிறது. இயேசு சிலுவையில் மரித்ததினால் நமக்குப் பாவமன்னிப்பும், இரட்சிப்பும் கிடைத்தது. எனவே அவரது பாடுகளை நினைவுகூர்ந்து நமது பாவங்களை அறிக்கையிட்டு அவரண்டை செல்ல வேண்டும். நம்முடைய பாவங் களை மறைக்காமல் அறிக்கை செய்யும்போது நம்மைச் சுத்திகரித்து, மன்னித்து ஏற்றுக்கொள்ள இயேசு உண்மையும் நீதியுமுள்ளவராக இருக்கிறார். அப்பொழுது இயேசுவானவர் நமது பாவங்களை சங்கீதம் 103 : 12 ல் கூறியதுபோல மேற்குக்கும், கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கு வார். ஏனெனில்அவர் இரக்கமும், மனதுருக்கமும் உடையவர். கிறிஸ்து நம்முடைய பாவங்களைமன்னிப்பதோடல்லாமல் நமக்காகப் பிதாவிடம் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களுக்கான கிருபா தாரபலி அவராக இருப்பதினால் தைரியத்தோடு கிறிஸ்துவண்டை நமது அந்தரங்கக் குறைகளை அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெறுவோம்.
நாமும் மாம்சப்பிரகாரமாக நம்மை விரோதிக்கும் சத்துருக்களை மன்னித்து அவர்களுக்காக ஜெபிக்கும்படி நமக்கு மாதிரியை இயேசு வைத்துவிட்டுப் போனார். நாம் இயேசுவின் பிள்ளைகளாக ஆக வேண்டு மானால் நம்முடைய சத்துருக்களைச் சிநேகித்து, நம்மை சபிக்கிறவர் களை ஆசீர்வதித்து, நம்மைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். நம்மை நிந்திக்கிறவர்களுக்காகவும் துன்பப்படுத்துகிறவர் களுக்காகவும் ஜெபம் பண்ண வேண்டும். .இப்படிச் செய்தால் மட்டுமே பரலோகத்திலிருக்கிற பரம பிதாவுக்கு புத்திரராக இருக்க முடியும் (மத்தேயு 5 : 44, 45). நாம் அவரிடம் இளையகுமாரன் மனந்திருந்தி தகப்பனிடம் ஓடி வந்ததைப்போல (லூக்கா 15 : 20) நாம் இயேசுவிடம் ஓடிச் சென்று பாவ மன்னிப்பைப் பெறுவோம் இந்த சிலுவையில் இயேசு கூறிய முதல் வார்த்தை நமக்குக் கொடுக்கப்பட்ட மன்னிப்பைக் குறிக்கிறது.
ஒரு கிறிஸ்தவனின் வாழ்வு பாவமன்னிப்பில் துவங்குகிறது. எப்பேர்ப் பட்ட பாவியாயிருந்தாலும் கிறிஸ்து அவனை மன்னிக்கிறார். நாமும் பிறரை மன்னிக்கும்படி நம்மை வலியுறுத்துகிறார். ஏழுமுறை அல்ல எழுபது முறை மன்னிக்கும்படி நம்மை வலியுறுத்துகிறார். பிறர் குற்றங்களை நாம் மன்னிக்காவிட்டால் நம்முடைய குற்றங்களையும் இயேசு மன்னிக்க மாட்டார். பிறர் செய்த தவறுகளை, துரோகங்களை நாம் மனதில் வைத்திருந்து கசப்பைக் காண்பிப்போமானால் இயேசுவும் நாம் செய்த துரோகங்களை மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார். எனவே நாம் பிறர் செய்த குற்றங்களை மன்னிக்கவும், அதை மறக்கவும், அவர்களை ஏற்றுக்கொள்ளவும் முயற்சிப்போம். கிறிஸ்துவின் விருப்பங்களில் பிரதான விருப்பம் தமது மக்கள் அனைவரும் ஒன்றாய் வாழ வேண்டுமென்பது. எனவே விசுவாசிகள் அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, குறைபாடுகளை மன்னித்து, மனத்தாழ்மையாய், பொறுமையாய், உருக்கமாய், இறுக்கமாய் நாம் நடந்துகொள்ள வேண்டுமென்று இயேசு விரும்புகிறார். எல்லா சூழ்நிலைகளிலும் ஒருமனப்பாட்டைக் காத்து தேவசமாதானம் நம்மை ஆளுகை செய்ய இடம் கொடுக்க வேண்டும். ஆமென்.