திபேரியாக் கடற்கரையில் சீஷர்கள்:
யோவான்21 : 1, 2 “இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது: சீமோன்பேதுருவும் திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும் போது,”
இந்த சம்பவம் இந்த ஒரு சுவிசேஷத்தில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலிலேயாக் கடல் இயேசுவின் ஊழியத்தோடும் அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னரும் கூட இணைக்கப்பட்ட ஒரு இடமாக உள்ளது. இது சீடர்களுக்கு மிகவும் அறிமுகமான இடம். இயேசு சீடர்களிடம் கலிலேயாவுக்குச் செல்லுங்கள், நான் உங்களை அங்கே சந்திப்பேன் என்று கூறியிருந்தார். இயேசு உயிர்த்தெழுந்தபின் வாரத்தின் முதல்நாளில் சீஷர்கள் யூதர்களுக்குப் பயந்து கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தனர். அப்பொழுது இயேசு அவர்கள் நடுவில் நின்று அவர்களுக்கு ஆணி கடாவப்பயட்ட கைகளையும், விலாவையும் காண்பித்தார் சீஷர்களும் சந்தோஷப்பட்டனர் (யோவான் 20 : 19, 20). அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரும் பிரச்சனைக்குரியவர்களாக இருந்தவர்கள்.
பேதுருவுக்கு இயேசுவுக்காக மனதில் வைராக்கியம் உண்டு. ஆனால் அடிக்கடி தவறுகிறவர். வழி விலகக் கூடியவர். தோமா எதையும் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடியவர். நாத்தான்வேல் ஞானம் உள்ளவர் தான். ஆனாலும் “நாசரேத்திலிருந்து ஒரு நன்மை வரக் கூடுமோ” என்று கேள்வி கேட்டவர். யாக்கோபும், யோவானும் இடி முழக்கத்தின் மக்கள். இது போக இரண்டு சீஷர்களின் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. இவர்கள் அனைவரும் இயேசு வருவார் என்று அங்கு காத்துக் கொண்டிருந்தனர். இங்கு இயேசு 12 சீஷர்களுக்கல்ல, ஏழு சீஷர்களுக்கு மட்டுமே தரிசனமானார். இதில் சீமோன் பேதுருவின் பெயருக்கு அடுத்தது தோமாவின் பெயர் வருகிறது. இதுவரை தோமா என்ற பெயர் கடைசியில் இருக்கும். தோமாவின் தோல்வி இயேசுவை நெருங்கச் செய்தது.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
கடற்கரையில் இயேசு:
யோவான் 21 : 3, 4 “ சீமான் பேதுரு மற்றவர்களை நோக்கி; மீன்பிடிக்கப் போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்; நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகிலேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. விடியற்காலமானபோது இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.”
இயேசு சிலுவையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிரோடெழுந்தார். இதை சீஷர்கள் முழுமையாக விசுவாசிக்காதபடியால், இயேசு வரவில்லை என்றவுடன் பொறுமை இழந்த பேதுரு தன்னுடைய அழைப்பை மறந்து, மற்றவர்களிடம் “‘நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்றான். மற்றவர்களும் அவர்கள் அழைப்பை மறந்து, நாங்களும் உன்னோடு வருகிறோம் என்றதால், அனைவரும் பேதுருவுடன் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். இவர்கள் மீன் பிடிக்கச் சென்றதால் பின்மாற்றமாகி விட்டார்கள. குடும்பத் தேவைகளுக்காக மீன் பிடிக்கப் போயிருக்கலாம். மீனவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாயிருப்பார்கள். சும்மாயிருக்க மாட்டார்கள். தன்னுடைய அன்றாடத் தேவைகளை கூட சந்திக்க இயலாதவர்களைக் கொண்டுதான் இயேசு உலகத்தைக் கலக்கச் செய்தார். இயேசுவின் ஊழியத்திற்கு வெறுமையும், வறுமையும் தடையாக இருக்க முடியாது.
அவர்கள் அந்த இரவு முழுதும் பிரயாசப் பட்டும் மீன்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. மீன்பிடித் தொழிலில் திறமைசாலிகளாக இருந்தும், அவர்கள் தோல்வி அடைந்ததால் சோர்ந்து போனார்கள். ஆனால் இது தேவனுடைய அநாதி திட்டத்தின்படியும் தீர்மானத்தின்படியும் நடந்ததாகும். இயேசு நம்மை சந்திக்கும் இடமே தோல்வியின் களத்தில்தான். இது இயேசு பரலோகத்திற்குப் போவதற்கு முன் செய்த அற்புதம். லூக்கா 5 : 1 – 11 ல் பேதுருவின் படகை இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பத்தில் நிரப்பி அற்புதம் செய்தார். இந்த அற்புதம் இயேசுவின் ஊழியத்தில் செய்த கடைசி அற்புதம். இயேசுவின் ஊழியத்தின் இயேசு உயிர்த்தெழுந்த பின் திபேரியா கடற்கரையில் மறுபடியும் அந்த விடியற்காலையில் மகிமை அடைந்த சரீரத்தோடு நின்றார். சீஷர்களுக்குக் கரையில் நின்று கொண்டிருப்பது இயேசு என்று தெரியவில்லை.அத்தனை தூரத்தில் அவர்கள் படகில் சென்று கொண்டிருந்தனர்.
இயேசு என்று அவர்கள் அறியாதபடி அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது (லூக்கா 24 : 16). இதேபோல் மகதலேனா மரியாள் இயேசு உயிரோடெழுந்ததை அறியாமல், கல்லறையில் அவரைக் காணாமல் கல்லறையினருகில் அழுதுகொண்டு நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது இயேசுவோ அவள் பின்னால் நின்று கொண்டிருந்தார். அனால் அவரை இயேசு என்று அவள் அறியாதிருந்தாள் (யோவான் 20 : 14). மீன் பிடிக்கும் தொழிலில் இருந்து மனிதரை பிடிக்கும் தொழிலுக்கென்று ஏற்படுத்தப்பட்ட பேதுருவும் மற்றவர்களும் (மத்தேயு 4 : 18 20) மீண்டும் பழைய தொழிலுக்குச் சென்றதை இயேசு பார்த்தார். இந்தத் தடவை இயேசு கடலின்மேல் நடந்து வராமல் கடலின் கரையிலே நின்று சீஷர்களுக்கு காத்திருந்தார்.
ஆனால் அவர்கள் யாரையும் இயேசு கடிந்து கொள்ளவில்லை. இயேசு இங்கு அவர்களைப் போஷித்து, இரட்சிப்பை மட்டும் கொடுக்க வரவில்லை. அவர்களின் விசுவாசத்தை அதிகரிக்கவும், தன்னுடைய திட்டத்தை அவர்களுக்குள் செயல்பட வைக்கவும் தான் அங்கு வந்தார். நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், அவர் ஒரு குறிக்கோளை வைத்திருக்கிறார். நம்முடைய வாழ்க்கையை அவர் நடத்த விரும்புகிறார். நம்முடைய திறமையினால் அல்ல, ஆண்டவருடைய வல்லமையினால் விசுவாசிகளாகிய நாம் குறைவுகளின் மத்தியிலும் முடிவுபரியந்தம் காத்துக் கொள்ளப்படப் போகிறோம். இயேசுவை விட்டு பின்வாங்கினதினால் சீஷர்களுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. நாமும் தேவன் நம்மை அழைத்த அழைப்பை உதறித்தள்ளிவிட்டு பின் வாங்கிப் போனால், தேவ ஆசீர்வாதங்களை தேவனிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.
இயேசு செய்த அற்புதம்:
யோவான் 21 : 5, 6 “இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள். அப்பொழுது இயேசு: நீங்கள் படகுக்கு வலது புறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்க மாட்டாதிருந்தார்கள்.”
இயேசு அவர்களைப் பார்த்து பிள்ளைகளை என்று பாசத்துடன் ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளையை அழைத்ததைப் போல அழைத்ததைப் பார்க்கிறோம். சாப்பிடுவதற்கு ஏதாவது அவர்களிடம் இருக்கிறதா என்று இயேசு கேட்டபோது, அதற்கு அவர்கள் ஒன்றும் இல்லை என்று தங்கள் தோல்வியை ஒத்துக் கொண்டனர். அவர்கள் மாலை 6 மணிமுதல் அடுத்தநாள் காலை 5 மணிவரை சுமார் 11 மணி நேரங்கள் மீன்பிடிக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் பிடிக்க முடியவில்லை. உடனே இயேசு அவர்களிடம் படகின் வலதுபுறமாக வலையைப் போடச் சொன்னார். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையை வழிநடத்துகிறவர். என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆலோசனை கூறியதை இங்கு பார்க்கிறோம்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
நம்முடைய வாழ்க்கையிலும் இயேசுவின் ஆலோசனையின்படி நாம் செயல்பட வேண்டும். அவருடைய ஆலோசனையின்படி சீஷர்கள் போட்டபோது திரளான மீன்கள் கிடைத்தது. வலையை இழுக்க முடியாத அளவுக்கு மீன்களைப் பிடித்தனர். ஆனால் வலை கிழியவில்லை. அது உறுதியாயிருந்தது. முழுமையான கீழ்ப்படிதல் இருந்தால் இப்படிப்பட்ட அற்புதம் நடக்கும். எங்கே தோற்றுப் போனார்களோ அந்த இடத்திலேயே அற்புதம் நடந்தது. மீன்கள் எங்கே, எவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்தவர் இயேசு. பேதுரு முதன்முதலில் கெனேசரேத் கடற்கரையில் இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் மீன்கள் ஒன்றும் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தான் அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து “ஆழத்தில் தள்ளிக்கொண்டுபோய் வலைகளைப் போடுங்கள்” என்றதை லூக்கா 5 : 4 ல் பார்க்கிறோம்.
இயேசு. பேதுருவை அப்போஸ்தலனாக்குவதற்கு விரும்பியிருந்ததால், அவன் அதற்கு நேர்மாறாக எந்த வேலைக்குச் சென்றாலும் அது தோல்வியாகத்தானிருக்கும். இதனிமித்தமே ஒரு மீனவனாய்ச் சென்ற பேதுரு, அன்றிரவு தோல்வியைத் தழுவினான். அவன் பிறவி மீனவனாதலால் எங்கே, எப்பொழுது, எவ்வளவு மீன்கள் கிடைக்கும் என்று தெரியும். ஆனால் அன்று அவனுடைய அறிவு தோல்வியைத்தான் கொடுத்தது. மேலும் இன்னும் 10 நாட்கள் அவர்கள் எருசலேமில் தங்கியிருக்க வேண்டும்.. அதன்பின்தான் அவர்கள் ஊழியத்தைத் தொடங்க வேண்டும். அந்த 10 நாட்களுக்குத் தேவையான செலவிற்காக இயேசு இவ்வாறு அற்புதம் செய்தார்.
இயேசு அப்பம்,மீன்களுடன் காத்திருந்தார்:
யோவான் 21 : 7 – 9 “ ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாய் இருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான். மற்ற சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்தபடியினால் படகிலிருந்து கொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக் கொண்டு வந்தார்கள். அவர்கள் கரையிலே வந்திறங்கின போது, கரி நெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின் மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.”
பேதுரு யோவானைப் போல கருத்து உள்ளவனாகத் தெரியவில்லை. இயேசுவுக்கு அன்பாயிருந்த யோவான், சீமோன் பேதுருவிடம் கரையில் நின்று கொண்டிருப்பது கர்த்தர் என்றான். பேதுருவிடம் காணப்படாத ஒரு ஆவிக்குரிய அறிவு யோவானிடம் காணப்பட்டதைப் பார்க்கிறோம். இதைப் போன்ற செயல்களை இயேசு செய்திருந்ததை யோவான் பார்த்திருந்ததால், கர்த்தரை அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக அதே இடத்தில்தான் பேதுருவையும் யோவானையும் அழைத்திருக்க வேண்டும். இப்போது அவர்கள் மீன்பிடிக்கச் சென்று விட்டனர். யோவான் காத்திருப்பவர் கர்த்தர் என்றதால் பேதுரு படகு கரைக்கு வருகிற வரை காத்திருக்க முடியாமல் தன்னுடைய மேல்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலில் குதித்து இயேசுவிடம் வந்தான்.
படகு கரையிலிருந்து 200 மீட்டர் தூரத்திலிருந்ததால், படகிலிருந்த மற்றவர்கள் மீன்கள் இருந்த வலையை இழுத்து கொண்டு வந்தார்கள். மற்றவர்கள் படகு கரைக்கு வருகிறவரை காத்திருந்ததைப் போல பேதுருவால் காத்திருக்க முடியவில்லை. இதிலிருந்து இயேசுவிடம் பேதுருவுக்கு இருந்த அன்பைப் பார்க்கிறோம். அதனால் தான் இயேசு தனது வல்லமையை பேதுருவுக்கு கொடுத்து, அவனுடைய ஒவ்வொரு பிரசங்கத்திலும் 3000 பேர், 5000 பேர் என்று ஜனங்களை இரட்சிப்புடையச் செய்தார். கர்த்தருக்கு அருகில் வர பேதுரு விருப்பப்பட்டதைப் போல கர்த்தருடைய வசனத்தை உணரும் போதெல்லாம் இயேசுவின் அருகில் செல்ல நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். சீஷர்கள் கரைக்கு வந்தபோது கரி நெருப்பை மூட்டி, அப்பமும், மீனும் வைத்து இயேசு காத்திருந்ததைப் பார்க்கிறோம்.
யோவான் 21 : 10 – 12 “ இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டு வாருங்கள் என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, 153 பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம் பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தர் என்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.”
இயேசு சீஷர்களுக்காகத் தழலில் மீன் வைத்துக் காத்திருந்தார். அவர்களிடம் உள்ள மீன்களிலும் சிலவற்றைக் கொண்டு வரச்சொன்னார். உடனே பேதுரு 153 மீன்கள் கொண்ட வலையைக் கரையில் இழுத்தான். அவர்களுடைய பணியை இயேசு ஏற்றுக்கொண்டதை இது காட்டுகிறது. இயேசுவின் கட்டளையின்படி அவர்கள் மீன்பிடித்த போது, அதை அவர் ஏற்றுக் கொள்கிறார். அந்தக் காலை வேளையில் சீஷர்கள் குளிருக்கு நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்துக்கு அனல் தேவையாயிருந்தது. அதனால் இயேசு கரிநெருப்பை வைத்திருந்தார். ரோமர் 12 : 11 ல் “ஆவியில் அனலாயிருங்கள்” என்றுள்ளது. பசியோடிருந்தவர்களுக்கு போஜனத்தைக் கொடுத்து ஆவிக்குரிய தேவையோடு சரீரத்தேவையையும் பூர்த்தி செய்கிறார். பேதுருவிடம் “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்று கூறினார். எதைக்கொண்டு மேய்க்கக் கூறுகிறாரென்றால், கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டும், உயிர்த்தெழுந்த இயேசுவின் நற்செய்தியைக் கொண்டும் தான்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
பெத்தலகேம் பாலகனான இயேசுவோடு நாம் இணைக்கப்படாமல் உயிர்த்தெழுந்து ஜீவிக்கிற, மகிமைப்படுத்தப்பட்டு, பிதாவின் வலதுபாரிசத்தில் இருக்கிற, கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளோம். இதில் இயேசு மூன்று விதமான காரியங்களை சீஷர்களுக்கு நினைவு படுத்துகிறார். திரளான மீன்களைப் பிடிக்கச் செய்து கடந்தகால அற்புதங்களை நினைவு படுத்திப் பலப்படுத்த நினைப்பூட்டுகிறார். அடுத்ததாக கரிநெருப்புக்கு முன்பாகத்தான் பேதுரு இயேசுவை மறுதலித்தார். பாவமன்னிப்பின் நிச்சயத்தைச் சொல்ல வைக்க இயேசு அங்கு வந்தார். பேதுருவைப் பார்த்து “நீ என்னை நேசிக்கிறாயா” என்று மூன்று முறை கேட்டு பேதுருவின் கையில் ஊழியத்தை மீண்டுமாய் ஒப்படைத்து அவருடைய ஆட்டுக்குட்டிகளையும், அவருடைய ஆடுகளையும் மேய்ப்பாயாக என்ற கனமான ஊழியத்தை ஒப்படைத்தார்.
இந்த அற்புதத்தின் முக்கியமான சத்தியம், அவர்களிடத்தில் என்ன இருந்ததோ அதையே பயன்படுத்தி அற்புதம் செய்தார். நம்மிடத்தில் இருக்கிற தாலந்தைக் கொண்டும், தேவனால் நம்மைப் பயன்படுத்த முடியும். நாம் இருக்கும் இடத்திலேயே ஆண்டவர் நம்மைப் பயன்படுத்தவில்லை என்றால், வேறு எந்த இடத்திலும் அவர் நம்மைப் பயன்படுத்த முடியாது. 153 பெரிய மீன்கள் பிடிக்கும்படி தம்முடைய சீஷர்களுக்கு அருள் செய்ததைப் போல, நமக்கும் தேவன் பெரிய அளவில் கொடுக்க வல்லமை உள்ளவர். இது இயேசு செய்த கடைசி அற்புதம். அதேபோல் இயேசு உயிர்த்தெழுந்த பின் செய்த ஒரே அற்புதம். புதிய உடன்படிக்கை ஊழியமானது, ஆண்டவர் மீது கொண்ட அன்பை அடிப்படையாக வைத்தே இருக்கிறது. இயேசு தன்னை முழுமையாக நேசிப்பவர்களையே ஊழியம் செய்யும்படி விரும்புகிறார். ஆமென்.