Menu Close

கிதியோன்

கிதியோன் என்றால் வெட்டுபவர், தாக்குபவர் என்று பொருள். இவர் பாகால்களின் தோப்பை வெட்டி வீழ்த்திய போது யெருபாகால் (பாகால் பழிவாங்கட்டும்) என்று தன் தந்தையால் மறு பெயரிடப்பட்டவர். இவரை 2 சாமுவேல் 11: 21 ல் எருப்பேசேத் (வெட்கம் போராடட்டும்) என்றும் அழைத்ததுண்டு. கிதியோன் ஓர்பாவைச் சேர்ந்தவர். தந்தையின் பெயர் யோவாஸ். இவனுக்கு 71 குமாரர்கள் இருந்தனர். அபிமெலேக்கு என்ற மகனை சீகேமிலிருந்த ஒரு மறுமனையாட்டிக்குப் பெற்றார். இவர் உற்சாகமான உழைப்பாளி. தனது விளைச்சலை மீதியானியரிடமிருந்து காப்பாற்ற முயற்சி செய்தார். தன்னைக் குறித்து சிந்தித்ததை விட அதிகமாக மக்களின் அவல நிலையை எண்ணி வருந்தினார்.தேவனுடைய பணிக்காக அழைக்கப்பட்டவர். கோதுமையின் மேல் அக்கறை உடைய மனிதனே தனது களஞ்சியத்தில் மேல் அக்கறை உடையவனாக இருக்க முடியுமென தேவன் அறிவார். அழைப்பின் காலத்தில் மிகவும் தாழ்மையுள்ளவராக நடந்து கொண்டவர். 

பயமிருந்த போதிலும் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து பாகாலின் பலிபீடத்தையும், தோப்பையும் இரவோடு இரவாக அழித்தார். கர்த்தரிடம் அடையாளம் கேட்டார். கர்த்தர் தமது ஊழியனைத் தயார்படுத்த அடையாளங்களைக் கொடுத்தார். தூய ஆவியானவரின் பலத்தால் ஊழியம் செய்தார்.32000 வீரர்களில் 31700 வீரர்களை கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து திருப்பி அனுப்பினார். கையில் பட்டயம் எடுக்காமல் தீவட்டிகளையும், பானைகளையும் எக்காளங்களையும் ஏந்திய 300 பேருடன் பெரிய படையை விசுவாசத்துடன் எதிர்த்து வெற்றி கண்டவர். பிரச்சனையை உருவாக்கிய எப்பிராயீமரை கனிவான மொழியால் சமாளித்தார். எள்ளி நகையாடிய அன்னியருக்கு முள்ளுகளால் பாடம் கற்பித்தார். வெற்றி அடைந்தாலும் அரசராக பதவி ஏற்க மறுத்தார். விசுவாச வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றவர். (எபிரேயர்11 : 32) இஸ்ரவேலை 40 வருடங்கள் நியாயாதிபதியாக இருந்து நியாயம் விசாரித்தார்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

மீதியானியர்:

மீதியானியர்கள் ஆபிரகாம் மணந்த கேந்தூராளின் பிள்ளைகளின் வம்சத்தில் வந்தவர்கள். (ஆதியாகமம் 25 :1 – 4) இவர்களை ஆபிரகாம் ஈசாக்கிடமிருந்து பிரித்து கிழக்கு தேசத்துக்கு அனுப்பினார். (ஆதியாகமம் 25 : 1 – 6) யோசேப்பு இந்த மீதியானிய வணிகர்களின் கையில் தான் விற்கப்பட்டதாக (ஆதியாகமம் 37 : 23 – 28) ல் பார்க்கிறோம்.மோசே பார்வோனுக்குப் பயந்து ஓடிய போது, இந்த மீதியானியரிடம் தான் போனார். அங்குள்ள கேனியர் கோத்திரத்திலிருந்து தான் சிப்போராளைத் திருமணம் செய்தார். (யாத்திராகமம் 2 :15 – 22) இஸ்ரவேலரின் வனாந்தரப் பயணத்தின் போது இந்த மீதியானியர் எதிர்த்தனர். மோவாபியருடன் சேர்ந்து பிலேயாமை கூலிக்கு அழைத்து இஸ்ரவேலரை சபிக்க முயன்றனர். (எண்ணாகமம் 22 – 25). மோவாபியர் மிகச் சிறந்த வணிகர்களாக இருந்தனர். பல மீதியானிய குழுக்கள் இஸ்ரவேலருடன் இனக்கலப்பு கொண்டனர். (ஆதியாகமம் 37 : 25 – 28, நியாயாதிபதிகள் 8 : 24).

தேவன் மீதியானியர்களை அமலேக்கியரோடும், கிழக்கத்திப் புத்திரரோடும் சேர்ந்து ஏழு வருஷங்கள் இஸ்ரவேலரைக் கொள்ளையடித்து சிறுமைப்படுத்தும்படி அனுமதித்தார். (நியாயாதிபதிகள் 6 :1).மீதியானியரின் சுபாவம் இஸ்ரவேலர்களுக்கு நல்ல விளைச்சல் விளைந்திருக்கும் போது அமலேக்கியரையும், கிழக்கத்திபுத்திரரையும் கூட்டி வந்து அந்த விளைச்சலை அழித்து, நிக்கிரகம் பண்ணுவர். வெட்டுக்கிளிகளைப் போல விளைச்சலை அழித்துப் போடுவர். மேலும் அவர்களின் ஆடு, மாடுகளையும், கழுதைகளையும் கூட நிக்கிரகம் பண்ணுவர். இவர்களால் இஸ்ரவேலர் பலமுறை அல்லல் பட்டனர். எதையும் அவர்கள் அழிக்காமல் போக மாட்டார்கள். எடுத்துக் கொண்டும் போக மாட்டார்கள். அவர்களும் அனுபவிக்க மாட்டார்கள் மற்றவர்களையும் அனுபவிக்க விட மாட்டார்கள். இதனால் இஸ்ரவேலர்கள் மீதியானியருக்கப் பயந்து மலைகளிலும், குகைகளிலும், கெபிகளிலும், போய்த் தங்குவர். (நியாயாதிபதிகள் 6 : 1)

இஸ்ரவேலரின் முறையிடுதல், கர்த்தரின் பதில்: (நியாயாதிபதிகள் 6 : 6 – 10)

இஸ்ரவேலரின் குணம் தங்களுக்கு நெருக்கடியோ, துன்பமோ வரும்போது தான் ஆண்டவரை நோக்கிப் பார்ப்பார்கள். மீதியானியரின் கொடுமையையும், ஒடுக்குலையும் அவர்களால் தாங்க முடியாத போது கர்த்தரை நோக்கி முறையிட்டனர். கர்த்தர் அந்த முறையீட்டைக் கேட்டு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். தேவன் எகிப்திலிருந்து கூட்டி வந்ததையும், அவர்களைத் துரத்தி அந்த தேசத்தைக் கொடுத்ததையும், கர்த்தர் ஒருவரே அவர்கள் தேவன் என்று உணர்த்தியதையும், மேலும் அவர்கள் குடியிருந்த தேசத்திலுள்ள எமோரியருடைய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள் என்று கூறியதையும் கேளாதே போனீர்கள் என்றும், தேவன் கூறுவதாகத் தீர்க்கதரிசி கூறினார். 

கிதியோனும், தேவதூதனும் : (நியாயாதிபதிகள் 6 : 11 – 16)

கிதியோன் மீதியானியருக்குப் பயந்து தன்னுடைய திராட்சை ஆலைக்குச் சமீபமாய் போராடித்தான். அனைவரும் திராட்சையைப் பறித்து ரசமாக்க கீழே இருக்கும் ஆலைக்குக் கொண்டு வருவர். கோதுமை விளைச்சலைக் கீழே இருந்து மலைக்கு மேலே கொண்டு செல்வர். மலையில் போரடிக்கும் போது பதர்கள் காற்றில் பறந்துவிடும். கிதியோன் அவர்களுக்குப் பயந்ததால் அவ்வாறு செய்யவில்லை. கிதியோனின் சுபாவம் மானின் சுபாவம். மான்களுக்குக் காலில்தான் பலம். அதேபோல் கிதியோனுக்கும் அவனுடைய கால்களில் பலம் இருந்ததால் தன் கால்களாலேயே மிதித்துப் போராடித்தான். கிதியோனின் தந்தையை அபியேஸ்ரியனான யோவாஸ் என்பர். இவர் ஓப்ராவில் மனாசே குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய தோப்பில் ஒரு பலிபீடத்தைக் கட்டி வைத்திருந்தார். அதில் ஒரு கர்வாலி மரமும் இருந்தது.கர்த்தருடைய தூதனானவர் அந்தக் கர்வாலி மரத்தின் கீழ் உட்கார்ந்தார். வேதத்தில் தூதன் என்று தான் அனேக இடங்களிலிலும் வரும். தூதனானவர் என்று ஒரு சில இடங்களில் மட்டுமே வரும். தூதனானவர் என்பது இயேசுவைக் குறிக்கும். யாத்திராகமம் 14 :19 ல் செங்கடலைக் கர்த்தர் பிளந்த போது அதில் கர்த்தருடைய தூதனானவர் என்று வருவதைப் பார்க்கலாம்.

அபியேஸ்ரியன் என்பதற்கு எபிரேய மொழியில் பிதா என்றும், ஓப்ரா என்றால் இளமான் என்றும், யோவாஸ் என்றால் கொடுத்திருக்கிறார் என்றும் பொருள். பிதா இஸ்ரவேலருக்கென்று இளமானைப் போன்ற கிதியோனைக் கொடுத்திருக்கிறார் என்று பொருள். கிதியோனுக்குக் கர்த்தருடைய தூதனானவர் தரிசனமாகி “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்றார். ”இதில் கர்த்தர் அவனைப் பார்த்து பராக்கிரமசாலி என்கிறார். அந்த சமயத்தில் கிதியோன் பயந்த சுபாவத்தால் கோழையாக இருந்தவன். வருங்காலத்தில் தேவன் அவனை மாற்றும் போது, ஜனங்கள் அவனை அழைக்கப் போகும் பெயரைச் சொல்லி அழைக்கிறார். மேலும் கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்றார். அப்போது அந்த சமயத்தில் இஸ்ரவேலரோடு கர்த்தர் இல்லை. கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்றால் வார்த்தை உன்னோடு கூட இருக்கும் என்று பொருள்.  தேவன் ஒரு மனுஷனுக்கு ஒரு காரியத்தை செய்வதற்கு முன்னாடி முதலில் வார்த்தையைத் தான் கொடுப்பார். இதுதான் கர்த்தர் கிதியோனுக்குக் கொடுத்த அழைப்பு. 

இப்போதும் அவன் நம்பாமல், “மீதியானியர் இவ்வாறு கொடுமைப்படுத்துகிறார்களே, நீர் எங்களோடு இருந்தால் இவைகளெல்லாம் நடைபெறுவானேன். மேலும் எங்கள் பிதாக்கள் எகிப்திலிருந்து அழைத்து வரும்போது எங்களிடம் விவரித்துச் சொன்ன அற்புதங்கள் எல்லாம் எங்கே என்று தூதனிடம் கேட்டான்.” கிதியோனிடம் அற்புதங்களைப் பற்றிச் சொன்ன அப்பாவும், தாத்தாவும் அப்போது பாகால்களை வணங்க ஆரம்பித்து விட்டனர். தன்னை வழிநடத்தியவர்கள் வழி மாறிய போதும் கிதியோன் வழி மாறவில்லை. கர்த்தர் அதைக்கேட்டு அவனை நோக்கிப் பார்த்தார் ஆங்கில வேதாகமத்தில் கர்த்தர் அவனைத் திரும்பிப் பார்த்தார் என்று உள்ளது. மற்றவர்கள் தான் கர்த்தரை நோக்கிப் பார்ப்பர்கள். ஆனால் இங்கு கர்த்தர் அவனை நோக்கி பார்க்கக் காரணம், அவனுடைய வாஞ்சையும், அவனுடைய இருதயத்தில் இருந்த வைராக்கியமும் தான். புதிய ஏற்பாட்டில் இயேசு பெரும்பாடுள்ள ஸ்திரீ தன்னைத் தொட்டபோது திரும்பிப் பார்த்தார். அது தன்னைத் தொட்டது யார் என்று கேட்க.

கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து “உனக்கு இருக்கிற இந்த பலத்தோடு போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நானல்லவா என்றார். கிதியோனிடம் வேறு பலன் ஒன்றுமில்லை. அவனிடம் இருக்கிற பலம் வாஞ்சையும், வைராக்கியமும் தான்..கிதியோன் பதிலாக “நான் இஸ்ரவேலை எதினால் ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன் என்றான். இவ்வாறு அவன் தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் தாழ்த்தியதைப் பார்க்கிறோம். மனாசே யோசேப்பின் 2 குமாரர்களில் ஒருவன். கர்த்தர் எப்போதுமே பலவீனமான மனிதனையே பயன்படுத்து கிறார். இதைத்தான் பவுல் 1கொரிந்தியர் 1 : 27 ல் “……… பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார்.” என்கிறார். அதற்குக் காரணம் மாம்சம் தன்னில் பெருமை பாராட்டாமலிருக்க. கர்த்தர் என் மூலம் செய்கிறார் என்று அறிந்து கொள்ள. நியாயாதிபதிகளின் வாழ்க்கையிலும் யாரும் சிறந்தவர்கள் இல்லை. கர்த்தர் அவனிடம் “நான் உன்னோடு கூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறியடிப்பது போல நீ மீதியானியரை முறியடிப்பாய் என்றார். “கர்த்தர் நான் உன்னோடு கூட இருப்பேன்” என்று பலப்படுத்துகிற வார்த்தையைக் கூறினதுமல்லாமல், ஒரு மனுஷனைப் போல அவர்களை முறியடிப்பாய் என்ற வாக்கைக் கொடுத்துத் தேற்றினார். 

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

கிதியோன் கேட்ட அடையாளம், தேவ செயல்: (நியாயாதிபதி 6 : 17 – 23)

கிதியோனுக்குப் பேசுகிறவர் தேவன் தானா என்ற சந்தேகம் வந்ததால், ஒரு அடையாளத்தைக் காட்ட வேண்டும் என்று தூதனிடம் கேட்டான். அவன் கேட்ட அடையாளம் தான் ஒரு காணிக்கையைக் கொண்டு வருவதாகவும், அதுவரை போக வேண்டாம் என்பது தான். அதற்குக் கர்த்தர் “நீ திரும்பி வரும் மட்டும் நான் இருப்பேன்.” என்று காத்திருந்தார். கிதியோன் இறைச்சியையும், புளிப்பில்லா, அப்பங்களையும், ஆணத்தையும் கொண்டு வந்து கர்த்தருக்கு முன்பாக வைத்தவுடன், தூதனானவர் அவைகளைக் கற்பாறையின் மேல் வைத்து ஆணத்தை (கொழுப்பை) அதன் மேல் ஊற்றச் சொன்னார். அவன் அப்படியே செய்தான். கர்த்தருடைய தூதன் கோலின் நுனியினால் அவைகளைத் தொட்டார். 

அப்போது அக்கினியானது கற்பாறையிலிருந்து எழும்பி இறைச்சியையும், புளிப்பில்லா அப்பங்களையும் பட்சித்தது. தூதன் மறைந்து போனான். கிதியோன் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேன் என்று புலம்பினான். அதற்குக் கர்த்தர்: “உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை” என்று சொன்னார். “கிதியோன் பலி செலுத்திய உடனே கர்த்தர் “உனக்குச் சமாதானம்.” என்று கூறியதைப் பார்க்கிறோம். கிதியோன் அங்கு கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு “யெகோவாஷாலோம்” என்று பெயரிட்டான். இப்போதும் அது ஓப்ராவில் இருக்கிறது. ஆண்டவருக்குப் பெயர் வைத்த இடங்களில் எல்லாம் பலி செலுத்தியதைப் பார்க்கிறோம். ஆபிரகாம் “யெகோவாயீரே” என்று பெயரிட்ட போதும் பலி செலுத்தினான். மோசே “யெகோவாநிசி” என்று பெயரிட்ட போதும் பலி செலுத்தினான். 

கிதியோன் செய்த தீரச் செயல் : (நியாயாதிபதிகள் 6 : 25 – 27)

கர்த்தர் கிதியோனிடம் உன் தகப்பனிடமுள்ள 7 வயதான ஒரு காளையைக் கொண்டு தகப்பனின் பலிபீடத்தைத் தகர்த்தெறி என்றும், அதன் பக்கத்தில் உள்ள தோப்பை வெட்டி போடு என்றும், அங்குள்ள கற்பாறையின் உச்சியில் அந்தக் காளையை வைத்து வெட்டிப் போட்ட தோப்பினுடைய கட்டை விறகை வைத்துத் தகனபலியிடு என்றும் கட்டளையிட்டார். கிதியோன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும், அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியால், கர்த்தர் சொன்னதைப் பகலில் செய்யாமல் தன் வேலையாட்கள் பத்து பேரோடு இரவிலே செய்தான். 

தேவனுடைய அழைப்பு கிதியோனுக்கு வந்தாயிற்று. இனி போராட வேண்டும். அதற்கு முன் தன்னை ஆயத்தமாக்க, தன்னைத் தூய்மைப்படுத்த தன்னுடைய தோப்பிலேயே தொடங்கினார். எழுந்தார். தோப்பு விக்கிரகங்க ளையும் அதன் கூடாரங்களையும் வெட்டி வீழ்த்தினார். தேவன் அவனோடு இருந்ததால் யாரும் எதுவும் அவனைச் செய்யவில்லை.

ஊர் ஜனங்களின் கோபம், கிதியோனின் தந்தையின் செயல்: (நியாயாதிபதிகள் 6 : 28 – 32)

ஊர் ஜனங்கள் காலமே எழுந்து நடந்ததைப் பார்த்து அதைச் செய்தவன் கிதியோன் என்பதை அறிந்து கொண்டு யோவாஸிடம் சென்று “உன் மகனை வெளியே கொண்டு வா, அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து தோப்பை வெட்டிப் போட்டதால் அவன் சாக வேண்டும்.” என்று கூறி கூடி வந்தனர். யோவாஸ் தனக்கு விரோதமாக நிற்கிற அனைவரையும் பார்த்து “நீங்கள் ஏன் அதற்காக வழக்காடுகிறீர்கள் என்றும், நீங்கள் அதை இரட்சிக்கப் போகிறீர்களா என்றும் கேட்டு, பாகால் தேவனானால் தன் பலிபீடத்தைத் தகர்த்தற்காக அது தானே வழக்காடட்டும்.” என்றான். யோவாஸ் தன்னுடைய பலிபீடத்தைக் கிதியோனாகிய தன் மகன் தகர்த்ததால் பாகால் அவனோடு வழக்காடட்டும் என்று சொல்லி அந்நாளில் அவனுக்கு “யெருபாகால்” என்று பெயரிட்டான்.

கிதியோன் மேல் இறங்கின ஆவியானவர்: (நியாயாதிபதிகள் 6 : 33 – 35)

மீதியானியரும், அமலேக்கியரும், கிழக்கத்திப்புத்திரரும் ஏகமாய் யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் பாளையமிறங்கினர். யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு ஒரு வளமையான பள்ளத்தாக்கு. இந்தப் பள்ளத்தாக்கின் விளைச்சல் ஒரு லட்சம் பேரை ஒரு வருஷம் போஷிக்கப் போதுமானது. அத்தனை விளைந்து இருந்த நேரத்தில் தான் அவைகளை அழிக்க அந்தப் பள்ளத்தாக்கில் அவர்கள் இறங்கினர். தூய்மையான கிதியோன் தூய ஆவியானவரால் நிரப்பப்பட்டான். ஆவியானவர் இலவசமாக ஞானஸ்தானம் தருபவர், முத்திரையிடுபவர், அச்சாரமானவர், அபிஷேகம் செய்பவர், நிறைவாய் இறங்குபவர். ஆவியில் நிறைந்தவர்கள் தேவசித்தம் செய்து முடிப்பர்.

ஆவியானவரால் கிதியோன் பலனடைந்து, தேவனுடைய மக்களுக்காக ஊழியம் பண்ணத் தகுதி பெற்றான். ஆவியானவரின் நிறைவு பெற்று, அவருடைய வழிநடத்துததால் செய்யும் ஊழியமே சிறந்தது. ஆவியானவர் இறங்கின உடன் தைரியம் அடைந்து, எக்காளம் ஊதி அபியேஸ்ரியரையும், மனாசே, ஆசேர், செபுலோன், நப்தலி நாட்டில் உள்ளவர்களையும் அழைத்துத் தன்னோடு கூட்டினான். கிதியோன் தன் கையினால் இஸ்ரவேலை இரட்சிக்க ஒன்றுக்கொன்று எதிரிடையான இரண்டு அடையாளங்களைத் தேவனிடம் கேட்டான்.

கிதியோன் கேட்ட அடையாளம்: (நியாயாதிபதிகள் 6 : 40)

மயிருள்ள ஒரு தோலைக் களத்தில் போடுகிறேன், தோலின் மேல் பனி பெய்து பூமி எல்லாம் காய்ந்திருக்க வேண்டும் என்றும், மறுநாள் இரவு தோல் மாத்திரம் காய்ந்திருக்கவும், பூமி எங்கும் பனி பெய்யவும் கட்டளையிட வேண்டும் என்றும் தேவனிடம் கிதியோன் கேட்டான். இதில் கூறப்பட்ட தோல் நமது நீதியைக் குறிப்பதாகவும், பனியானது கர்த்தருடைய வார்த்தைகளைக் குறிப்பதாகவும் உள்ளது. தேவன் ஒரு காரியத்தை மனிதனுக்குச் செய்வதற்கு முன் வார்த்தையைத் தான் கொடுப்பார். கிதியோன் கேட்ட அடையாளத்தைத் தேவன் காட்டினார். கிதியோனை ஜனங்கள் ஏற்றுக் கொள்வதற்கு முன்பாகவே, வெற்றி கிடைப்பதற்கு முன்பாகவே, கிதியோனோடு ஆயிரம் ஜனங்கள் வருவதற்கு முன்பாகவே, கிதியோன் யுத்தத்திற்குப் புறப்படுவதற்கு முன்பாகவே, நியாயாதிபதி என்ற பதவி கிடைப்பதற்கு முன்பாகவே, கர்த்தருடைய வார்த்தை வந்தது.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

கர்த்தர் காட்டிய படைக்குறைப்பின் ரகசியம்: (நியாயாதிபதிகள் 7 : 1 – 7)

கிதியோனும் அவனோடிருந்த ஜனங்களும் ஆரோத் நீரூற்றின் பக்கத்தில் பாளயமிறங்கினார்கள். ஆரோத் என்றால் “இருதயத் துடிப்புள்ள” என்று பொருள். கர்த்தர் கிதியோனிடம் “நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனங்களின் கையில் ஒப்புக் கொடுப்பதற்கு அவர்கள் மிகுதியாக இருப்பதால் என் கை என்னை இரட்சித்தது என்று வீம்பு பேசுவார்கள் என்றார். ”தேவனுடைய பிரசன்னத்தில் எந்த மாம்சமும் பெருமை பாராட்டுதல் கூடாது. இந்த அடையாளத்தைத் தேவனுடைய அன்பும், கிருபையும் தான் காட்டியது. தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் தங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தும்படி தேவனிடம் அடையாளத்தைக் கேட்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. (யாத்திராகமம் 4 : 1 – 9, மாற்கு 9 : 24) கர்த்தர் கிதியோனிடம் அவனுடைய ஆட்களின் எண்ணிக்கையை 32300 லிருந்து 300 ஆகக் குறைக்கும்படிக் கட்டளையிட்டார். இது நான்கு சத்தியங்களை வெளிப்படுத்துகிறது. 

அ) தேவனால் அர்ப்பணிப்புள்ள சிறு கூட்டம் பெரிய காரியங்களைச் செய்ய முடியும். இது பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல அவருடைய ஆவியினால் மட்டுமே ஆகும். (சகரியா 4 : 6) ஆ) ஆவியில் விழிப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுதலே தேவனின் விருப்பம். பெரிய எண்ணிக்கையில் ஆட்கள் இருப்பது அல்ல. (வெளிப்படுத்தல் 3 : 4, 5)

இ) நம்முடைய வாழ்வில் ஏற்படும் சவால்களைச் சந்திக்க நமக்குத் தேவையான பலமும் ஊக்கமும் தேவனிடம் மட்டுமே உண்டு. (பிலிப்பியர் 4 :13) ஈ) நம்முடைய சாதனையைப் பற்றிய பெருமை, நிச்சயமாக நாம் தேவனுடைய வல்லமையையும் உதவியையும் பெறுவதற்கு தடையாகும். (நீதிமொழிகள் 6: 13,15) கிதியோனின் படையில் இருந்தவர்கள் 32000 பேர். எதிரிகளின் படையில் இருந்தவர்கள் 135000 பேர். முதலாவது பயமும், திகிலும் உள்ளவர்களைத் திரும்பிப் போகச் சொல்லி அவர்களில் 22000 பேர் போய்விட்டனர். பயமுள்ளவர்கள் தோல்வி அடைவர் என்பதால் கர்த்தர் கிதியோனிடம் மீதியாயிருக்கிற பத்தாயிரம் பேரைத் தண்ணீரண்டைக்கு வரச்சொல்லி அவர்களில் தண்ணீரை நாய் குடிப்பது போல் குடிப்பவர்களைத் தனியாகவும், முழங்காலை ஊன்றிக் குடிக்கிறவர்களைத் தனியாகவும் நிறுத்தச் சொன்னார். 

முழங்கால் ஊன்றிக் குடித்தவர்கள் 9700 பேர். இவர்கள் கர்த்தரை முழுவதுமாக பின்பற்றாமல் விக்கிரகம், ஆறு, மலை, நிலா, சூரியன் போன்றவற்றையும் வணங்கினர். எனவே ஆற்றில் தண்ணீரைக் குடிக்கும் போதும் அதை வணங்கும் பாணியில் முழங்கால்படியிட்டனர். இவர்களை அதனால் தனது சேனையை விட்டு அகற்றினார். நாயைப் போல நக்கிக் குடித்த 300 பேரும் 100 சதவிகிதம் யுத்தத்துக்கு ஆயத்தமாகி நிமிர்ந்து நின்றவர்கள், அர்ப்பணிப்பு நிறைந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள். அந்த 300 பேரைக் கொண்டு மீதியானியரை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். எந்த படைத் தலைவரும் செய்யாததை 9700 அனுப்பி விட்டு வெறும் 300 பேரைக் கொண்டு போருக்குக் கிதியோன் போனார். அவன் தேவனை முற்றிலும் சார்ந்து விசுவாசித்துக் கீழ்படிந்தான். முன்னூறு பேரைக் கொண்டு பெரிய சேனையை எதிர்த்துப் போரிடச் செல்லும் கிதியோனின் மனநிலையை அறிந்திருந்த கர்த்தர் கிதியோனுக்குத் தைரியம் சொன்னதுமின்றி அடையாளத்தையும் கொடுத்தார். 

கர்த்தர் கிதியோனிடம் போகச் சொன்ன இடம், கிதியோன் செய்த செயல்: (நியாயாதிபதிகள் 7 : 10 – 15)

கர்த்தர் கிதியோனிடம் “நீ எழுந்து எதிரிகளின் சேனையிடத்திற்குப் போ; அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.” என்று கூறிவிட்டு “நீ பயப்படாமல் நீயும் உன் வேலைகாரனான பூராவும் அந்த எதிரிகளின் சேனைகளிடம் போய் என்ன பேசுகிறார்கள் என்று பார். அப்போது உங்கள் கைகள் திடப்படும்.” என்றார் இது கர்த்தர் கிதியோனுக்கு கூறிய கடைசி பாடம். யுத்தத்திற்குச் செல்லு முன் உற்சாகமடைய இதைக் கூறினார். தேவன் முதலில் பூராவை அனுப்பு என்று கூறாமல், நீயும் அவனோடு போ என்றார். பூரா என்றால் “கிளை” என்று பொருள். எதிரிகளின் சேனை வெட்டுக்கிளிகளைப் போல திரளாய்ப் படுத்திருந்ததைக் கிதியோனும் பூராவும், பார்த்தனர். அங்கிருந்த இரண்டு ஜாமக்காரர்களில் ஒருவன் மற்றொருவனிடம் முந்தின இரவு தான் கண்ட சொப்பனத்தைப் பற்றிக் கூறுவதை இருவரும் கேட்டனர்.

ஒரு வாற்கோதுமை அப்பமானது மீதியானியரின் பாளையத்திலிலுள்ள கூடாரத்தண்டையில் வந்தபோது அதைக் கவிழ்த்ததால் கூடாரம் விழுந்தது என்றான். அதற்கு மற்றவன் இது யோவாசின் குமாரனாகிய கிதியோனின் பட்டயம். இந்த சேனைகள் அனைத்தையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான். கிதியோன் வருவதற்கு முன்னே கர்த்தர் ஒரு சொப்பனத்தை மீதியானியரின் ஜாமக்காரனுக்குக் காட்டியிருந்தார். பிரச்சனைகளின் தீர்வை கர்த்தர் ஏற்கனவே ஆயத்தப்படுத்தி வைத்திருப்பார். முடிவு மட்டும் இன்னும் வரவில்லை. இஸ்ரவேலில் 2அப்பங்கள் உண்டு. 1. கோதுமை அப்பம் 2.வாற்கோதுமை அப்பம். கோதுமை அப்பத்தை உயர்குடியில் உள்ளவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் சாப்பிடுவர். வாற்கோதுமை அப்பத்தை ஏழைகள் சாப்பிடுவர். ஜாமாக்காரர்களின் வார்த்தைகளைக் கேட்ட கிதியோன் முதலில் தேவனைப் பணிந்து கொண்டான். தன்னுடைய பாளையத்திற்கு வந்து எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளையத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.

கிதியோனின் படையெடுப்பும், வெற்றியும்: (நியாயாதிபதிகள் 7 : 16 – 21)

கிதியோன் 300 பேரை 3படையாகப் பிரித்து, அவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் ஒரு எக்காளத்தையும், ஒருபானையையும், அதற்குள் வைக்க ஒரு தீவட்டியையும் கொடுத்தான். 300 வீரர்கள், 300 எக்காளங்கள், 300 தீவட்டிகள், 300 பானைகள், இவைகளைக் கொண்டு 135000 பேரை வெல்ல வேண்டும். வேறு ஆயுதங்கள் எதுவும் அவர்கள் கைகளில் கிடையாது. நடுஜாமத்தில் துவக்கத்தில் ஜாமக்காரரை மாற்றி வைத்த பின்பு, கிதியோனும் அவனோடிருந்த 100 பேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்தில் பாளையத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தனர். அதே போல் மற்றவர்களும் செய்து, எக்காளங்களை ஊதி பானைகளை உடைத்து உரத்த சத்தமாய் ஆர்ப்பரித்தார்கள். கர்த்தருடைய பட்டயம் கிதியோனின் பட்டயம் என்று சத்தமிட்டனர். 2 கொரிந்தியர் 4 : 6,7 ல் கூறியுள்ளதைப் போல மண்பாண்டங்கள் தேவ மகிமை உடையதாக இருந்தது. மண்பாண்டமான மாமிசம் உடைக்கப்பட்டு வெளிச்சம் பிரகாசித்தது. பயத்தையும், குழப்பத்தையும் மீதியானியரின் சேனைகளுக்குக் கர்த்தர் கொடுத்தார். ஒருவருக்கு விரோதமாக ஒருவர் வெட்டிக் கொண்டு ஓடிப் போகப் பண்ணினார். 

போரின் தொடக்கத்தில் வராதவர்கள் கூட சேர்ந்து எதிரிகளை முற்றிலும் தோற்கடித்தனர். கிதியோனின் விசுவாசத்தைப் பார்த்த தேவன் அவனைக் கனப்படுத்தினார். இந்த யுத்தத்தின் ஜெயத்திற்குக் காரணம் “நான் உன் கூட இருக்கிறேன்.” என்ற தேவனின் வார்த்தை தான். கிதியோனுக்கு முன் ஒரு தேசமே வந்தாலும், ஆயுதங்கள் இல்லாமலிருந்தாலும், ஆவியானவரின் அபிஷகம் கொடுக்கப்பட்ட உடன் வெற்றி பெற்றான்.

பெரும்படையைத் துரத்திச் சென்ற கிதியோனின் சிறு படையைக் கண்டு சுக்தோத்தின் மனுஷரும், பெனுவேலின் மனிதரும் எள்ளி நகையாடினர். சோர்ந்து போன ஜனங்களுக்கு அப்பம் கொடுக்க மறுத்தனர். கிதியோன் அதற்காகத் தளரவில்லை. எள்ளி நகையாடுவோர் ஏளனத்துக்கு ள்ளாவோர் என்றும், தனக்கு லட்சியத்தைக் கொடுத்தவர், அதை அடையவும் துணை நிற்பார் என்று போராடினார். சுக்தோத்தின் மனுஷரும், பெனுவேலின் மனுஷரும் தங்கள் அவிசுவாசத்திற்காக தண்டனையைப் பெற்றனர். சுக்தோத்தின் மனுஷர்களின் மூப்பர்களைப் பிடித்து முள்ளுகளாலும், நெருஞ்சில்களாலும் புத்தி வரப் பண்ணினான். பெனுவேலின் கோபுரத்தை இடித்து அவ்வூர் மனுஷரையும் கொன்றான். கடைசியாக மீதியானியரின் 2ராஜாக்களான சேபாவையும், சல்முனாவையும் கொன்று போட்டான். 

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

ஜனங்களின் வேண்டுகோள், கிதியோனின் செயல்: நியாயாதிபதிகள் 8 : 22 – 27)

இஸ்ரவேல் மனுஷர் கிதியோனிடம் “நீர் எங்களை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி மீட்டபடியினால் நீரும், உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும் எங்களை ஆள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர்களுக்குப் பதிலாக கிதியோன் நானும், என் குமாரனும் உங்களை ஆள மாட்டோம், கர்த்தரே உங்களை ஆளுவார் என்றான். இவ்வாறு கூறின கிதியோன் தனக்கும், தன்னுடைய பிள்ளைகளுக்கும் இந்த வாழ்க்கை இல்லாவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து, அந்த ஜனங்கள் இஸ்மவேலராக இருந்தபடியால் அவரவர் கொள்ளையிட்ட தங்கங்களை கொண்டுவரச் சொன்னார். அவர்களும் 1700 பொன் சேக்கல் நிறையைக் கொண்டு வந்து கொடுத்தனர். தேவன் கொடுத்த வெற்றியால் கொள்ளையிட்ட ஆசீர்களை விக்கிரக சேவிப்புக்குக் காரணமான ஏபோத்தாக மாற்றி, அதை தன் ஊரான ஓப்ராவில் வைத்தான். 

கிதியோன் மூலமாக இஸ்ரவேலருக்குக் கிடைத்த வெற்றியை, ஜனங்கள் தேவன் கொடுத்த வெற்றியாக நினைக்காமல், கிதியோனால் தான் இந்த வெற்றி கிடைத்தது என்று எண்ணினர். அதனால் தான் அவனையும், அவனுடைய சந்ததியையும் ஆள அழைத்தனர். ஆண்டவருக்குச் சேவை செய்யும்போது பிரதான ஆசாரியன் அணியும் மேலாடையின் மாதிரிதான் இந்த ஏபோத். (யாத்ராகமம் 26 : 6) தேவனுடைய பணியில் வெற்றி கிடைப்பதற்கு ஒரு ஞாபகச் சின்னமாக இதைச் செய்திருக்கலாம். ஆனால் அது தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றல்ல. அந்த ஏபோத்தை ஜனங்கள் மரியாதைக்குரிய ஒரு பொருளாகவும், கிதியோனையும், இஸ்ரவேலரின் சாதனையையும் மகிமைப் படுத்துவதாகவும் மாறியது. எந்த ஒன்றும் பயன்படுத்தப்பட வேண்டுமானால், கர்த்தருடைய விதிமுறைப்படி தான் பயன்படுத்தப்பட வேண்டும்.

கிதியோனின் பலவீனங்களும் தோல்விகளும்: 

தேவனுடைய ஆலோசனையின்றி செயல்பட்டு, பொன்னினால் ஏபோத்தைச் செய்து, இஸ்ரவேலர்கள் தவறுவதற்கு வழி உண்டாக்கினார். தேவனால் கொள்ளையிடப்பட்ட பொருள்களை ஏபோத்தாக மாற்றியது பெரிய முட்டாள்தனம். பல மனைவிகளைப் பெருக்கி, தமது வாழ்வை வீணடித்து, வாழ்க்கையைத் தோல்விக்கு நேராகத் திருப்பினார். (உபாகமம் 17 : 17) தேசப் போரில் வென்ற போதும் குடும்ப வாழ்வில் தோல்வியுற்றார் தங்கள்மேல் ஆளுகையை கேட்ட மக்களுக்கு மறுப்பு தெரிவித்த கிதியோன் பின்பு தனது மறுமனையாட்டி வழியாகப் பிறந்த மகனுக்கு அபிமெலேக்கு என்று பெயரிட்டார். அபிமெலேக்கு என்றால் என் தந்தை அரசர் என்று பொருள். கிதியோன் இறுதி கால வாழ்வில் வீழ்ச்சியடைந்தார்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

முடிவுரை: 

கிதியோனைப் போல நாமும் நம்மை முழுமையாக தேவனிடம் அர்ப்பணிப்போம். அவருடைய வார்த்தைகளின்படி நடக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். உடைக்கப்பட்ட பானைகளைப் போல நாம் உடைக்கப்பட்டு, பற்றியெரியும் தீப்பந்தங்களாக மாறுவோம். கர்த்தரின் கரத்தில் வாளாக இருக்க வாஞ்சிப்போம்.

Related Posts