யோசுவா பார்த்த சேனைகளின் அதிபதி:
யோசுவா 5 : 13 – 16 “ பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையிலிருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புறவிழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான். அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான். “
இங்கு கர்த்தர் யோசுவாவை அழைத்ததையும், அவனை அனுப்பும் காரியத் தையும் பார்க்கலாம். இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்து வந்து எரிகோவின் பக்கத்தில் பாளையமிறங்கியிருக்கின்றனர். யோசுவா எகிப்தின் நிந்தையைப் புரட்டிப்போட்ட இடத்திலிருந்து ஏறெடுத்துப் பார்த்தான். எரிகோ மதிலையும், அதன் ராஜாவையும், அவனது சேனை வீரரையும் பார்ப்பதை விட்டு விட்டு என்னைப் பார் என்றுதான் சேனையின் அதிபதி அங்கு நின்றார். அங்கே ஒருவன் உருவிய வாளுடன் நின்றார். யோசுவா அவனருகில் போய் “நீர் எங்களைச் சேர்ந்தவரா, அல்லது எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரா என்று கேட்டார். அதற்கு அவர் “நான் கர்த்தருடைய சேனையின் அதிபதி” என்று பதில் வந்தது. உடனே யோசுவா தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்தான். இதேபோல் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றனர். உடனே ஆபிரகாம் தரைமட்டும் பணிந்து வணங்கினான் என்று ஆதியாகமம் 18 : 2 ல் பார்க்கிறோம். இஸ்ரவேலர் அனைவரையும் யோர்தானைத் தாண்டி யோசுவா அழைத்து வந்ததால், ஒருவேளை அவனுக்குள் பெருமை வந்திருக்கலாம். யோசுவாவுக்கு வந்த கட்டளை என்னவென்றால் அவன் அடுத்த கட்டப் பணியைத் தொடங்க வேண்டுமென்பது தான்.
அதேபோல் கர்த்தர் மோசேயை முட்செடியின் அழைக்கும்போது அவனுடைய கால்களிலிருந்து பாதரட்சைகளைக் கழற்றிப்போடு என்றார். கர்த்தருடைய பணியிலே பொறுப்பிலே இருக்கிறவர்கள் தாங்களே எல்லாவற்றிற்கும் அதிபதி என்ற எண்ணமற்றவர்களாக, எந்த ஒரு காரியத்தையும் கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து கேட்டு, அவருடைய சித்தத்தை மட்டும் செய்கிறவர்களாகக் காணப்படவேண்டும். அதற்குக் காரணம் மோசே நின்ற இடம் பரிசுத்த பூமி (ஆதியாகமம் 18 : 2). கர்த்தர் மோசேயை ஒரு திட்டத்துடன் அனுப்பி வைத்தார். இஸ்ரவேல் ஜனங்களுக்காகக் கானானைச் சுதந்தரிக்க யோசுவா வாளுடன் களமிறங்கும் முன், கர்த்தருடைய சேனையின் அதிபதி இறங்கினார். சேனையின் அதிபதி யாரென்றால் அவதாரமெடுப்பதற்கு முன் தேவைப்படும் நேரங்களில் செயல் பட்ட இயேசுதான் அவர். இவரே இஸ்ரவேலரை வழி நடத்தின தூதனானவர். யோசுவா கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்காக யுத்தம் செய்யப்போகும் தேவ சமூகத்தையும், பரம சேனையையும் அறிந்து கொள்ளு கிறான் இந்தப் பூமியிலும் நாம் தனியாக இல்லை என்பதை யோசுவாவின் அனுபவங்களிலிருந்து அறிகிறோம். நமக்காய் போராடும் தேவனுடைய ஆவிக் குரிய சேனைகள் உண்டு என்று அறிகிறோம் (எபிரேயர் 1 : 14). நமக்காய் போரிடவும், நம்மைப் பாதுகாக்கவும் எப்போதும் பரிசுத்த ஆவியானவர் நம்மோடிருக்கிறார் (யோவான் 14 : 16 – 23).
எரிகோ பட்டணம்:
யோர்தானுக்கு 8மைல் மேற்கிலும், எருசலேமிற்கு 19 மைல் வடக்கிலும் சவக்கடலுக்கு வடக்கே 20 மைல் தள்ளி உள்ள பட்டணம் எரிகோ. இயேசு பர்திமேயு குருடனுக்குப் பார்வையளித்ததும், வேறு இரண்டு குருடர்களுக்குப் பார்வையளித்ததும் இந்த எரிகோ பட்டணத்தில்தான். சகேயுவைச் சந்தித்ததும் இந்தப் பட்டணத்தில்தான் (மத்தேயு 20 : 29, 30 மாற்கு 10 : 46, லூக்கா 18 : 35, 19 : 1). இந்தப் பட்டணத்துக்கு அண்மையிலுள்ள பகுதி வழியாகத்தான் யோர்தானைக் கடந்து இஸ்ரவேலர் கானானில் கால் பதித்தனர் (யோசுவா 3 : 16). யோசுவா முதன் முதலில் கைப்பற்றிய நகரமும் இதுவே. இந்தப் பட்டணத்தில்தான் ஏரோது ராஜா இறந்தார். இன்று எரிகோ ஒரு சிறு கிராமமாகக் காணப்படுகிறது. கொஞ்ச ஜனங்கள் வாழும் சுகாதாரமற்ற இடமாகவும் விளங்குகிறது. கானான் தேசமானது எரிகோவின் அருகில் உள்ளது. எரிகோ பட்டணம் ஒரு மலையின் மேல் உள்ளது. இந்த நகரம் அரணான மதில்கள் சூழ்ந்தது.எரிகோ கோட்டை யின் உயரம் 30 அடி வெளிப்புற மதில் 6 அடி, இடைவெளி 15 அடி. உட்புறக் சுவர் 23அடி.44அடிகளைத் தாண்டித்தான் எரிகோ பட்டணத்துக்குள் செல்ல முடியும். எரிகோவின் மதில்களில் வீடுகளைக்கட்டி அதில் குடியிருந்தனர்.
அந்தக் கோட்டைகளில் சிலைகளையும், உருவ வழிபாடுகளையும் குடைந்து கோவில் கட்டி வைத்திருந்தனர். மரித்தவர்களை நிற்க வைத்து சாந்துப்பூசி கல்லறையைக் கோட்டைச் சுவரில் கட்டி விடுவர். எரிகோவிற்குள் குடியிருப் பவர்களுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ள நாட்டுப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் பாதுகாப்பளிப்பது எரிகோ பட்டணம். எரிகோ பட்டணத்தை எவரும் தோற்கடிக்க முடியாதென்றும், அது கானானியரின் தெய்வங்களால் காக்கப்பட்டது என்றும் ஜனங்கள் நம்பினார்கள். இஸ்ரவேலர் நாற்பது ஆண்டுகள் சுற்றித்திரிந்து கர்த்தர் வாக்குப் பண்ணின கானானை நெருங்கினார்கள். கானானுக்குள் நுழைய வேண்டுமானால் எரிகோவைத் தாண்டிச் செல்ல வேண்டும். இந்தப் பட்டணம் மிகவும் செழிப்பான பட்டணம். ஏராளமான நீரூற்றுகள் அங்கிருந்தது. பேரீச்சை மரங்கள் நிறைந்த பட்டணம். கானானியர்தான் இந்த எரிகோ மதிலைக் கட்டி இஸ்ரவேலருக்குச் சவால் விட்டனர். இஸ்ரவேலர் எரிகோவில் நுழைய முடியாதபடி அடைக்கப்பட்டிருந்தது. அதற்குக் காரணம் எரிகோவின் ராஜா இஸ்ரவேலருக்குப் பயந்து, எரிகோவின் உயர்ந்த வாசலைப் பூட்டி வைத்தான். யாரும் அங்கிருந்து வெளியே வரவும் முடியாது. வெளியிலுள்ளவர்கள் உள்ளே நுழையவும் முடியாது. எரிகோ பட்டணம் ஒரு சபிக்கப்பட்ட பட்டணம். இயேசு அதை மாற்றத்தான் அங்கு போனார்.
எரிகோவுக்கு செல்லுமுன் கர்த்தரின் வாக்கு:
யோசுவா 6 : 2 “கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.”
கர்த்தர் எரிகோவுக்கு போவதற்கு முன்னே யோசுவாவிடம் எரிகோ பட்டண த்தை உன் கையில் ஒப்புக் கொடுத்தேன் என்றும், எரிகோவின் ராஜாவை உன் கையில் ஒப்புக் கொடுத்தேன் என்றும், அவர்களுடைய யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் என்றும் வாக்குரைக்கிறார். இவர்களைவரையும் ஒப்புக் கொடுக்கப் போகிறேன் என்று கூறாமல் ஒப்புக்கொடுத்தேன் என்று வாக்குரைக்கிறார். இதற்கு முன்னே யோசுவா இரண்டு வேவுகாரர்களை அனுப்பி எரிகோவை வேவுபார்த்து வரும்படி அனுப்பினான். அவர்கள் எரிகோவின் அலங்கத்தில் குடியிருந்த ராகாப் என்ற வேசியின் வீட்டிற்குச் சென்று அங்குள்ள நிலைமையை விசாரித்தனர். அவள்,
யோசுவா 2 : 9 “கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப் பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்க ளைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்கள் என்றும் அறிவேன்.”
என்று அந்த வேசி அங்குள்ளவர்கள் எண்ணத்தைப் பற்றிக் கூறினாள் வேவுபார்க்கச் சென்றவர்கள் யோசுவாவிடம்
யோசுவா 2 : 24ல் “ கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக் கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்குமுன்பாகச் சோர்ந்து போனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்.”
ஆனால் யோசுவாவும் ஜனங்களும் அங்கு சென்ற போது எரிகோவின் வாசல்க ளெல்லாம் அடைக்கப் பட்டிருந்தது. ஏற்கனேவே இஸ்ரவேலர் 40 நீண்ட வருட ங்கள் பிரயாணம் செய்து அதிகமான பிரச்சனைகளைச் சந்தித்து கானானின் எல்லைக்குள் வரும்போது, எரிகோவின் வாசல்கள் எல்லாம் அடைக்கப் பட் டிருந்தது. இதேபோல் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் சில வேளைகளில் எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டது போலவும், கர்த்தர் நம்மைக் கைவிட்டது போலவும் காணப்படும். கர்த்தர் நம் மூலமாகவும் நமக்குள்ளும் பெரிய காரியங்களைச் செய்ய முற்படும்போது பிசாசு இதேபோன்ற பெரிய தடைகளைக் கொண்டு வருவான். அதைக்கண்டு நாம் கலங்கக் கூடாது. கர்த்தர் நிச்சயமாக அவைகளைத் தகர்த்தெறிந்து தம்முடைய திட்டத்தை நிறைவேற்றுவார். இதில் தேவனுடைய திட்டம் என்னவென்றால் ஒரு வாசலையோ அல்லது அனைத்து வாசல்களையுமோ திறக்க விரும்பாமல் எல்லா மதில்களையும் வாசலாக்க வேண்டுமென்று விரும்பினார்.
உடனடியாக எல்லா இஸ்ரவேலர்களையும் உள்ளே நுழையும்படி அந்த மதில்கள் அனைத்தையுமே கிழே விழத்தள்ள விரும்பினார். இதேபோல்தான் யோசேப்பின் வாழ்க்கையிலும் நடந்தது. கர்த்தர் ஒரு சொப்பனத்தைக் கொடுத்தார் ஆனால் நடந்ததோ அதனால் அவனை சொந்த சகோதரர்களே குழியில் போட்டனர், தகப்பனோ சொப்பனத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு கடிந்து கொண்டார். சகோதரர்களால் அடிமையாக விற்கப்பட்டான். போத்திபாரின் வீட்டிலும் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு, அதற்குரிய தண்டனையைப் பெற்றான். அதனால் சிறைச்சாலையில் போடப்பட்டான். பானபாத்திரக்காரனும் யோசேப்பை மறந்தான். எல்லாமே தீமையாக நடந்தது போலிருந்தது. ஆனால் கர்த்தர் யோசேப்பிடம் அறிவித்தபடி எகிப்தில் அந்நிய தேசத்தில் சிறைச்சாலை யிலிருந்து அழைத்து வரப்பட்டு உயர்த்தப்பட்டான்.
யுத்தமில்லாமல் எரிகோ கோட்டை விழுந்தது: (யோசுவா 6 : 3 – 5)
யோசுவா கர்த்தர் கூறியபடி யுத்த சன்னத்தரானவர்களை முன்னே போகச் சொல்லி, அதன்பின் ஆசாரியர் பெட்டியை எடுத்துக்கொண்டு போகவும், ஏழு எக்காளங்களை ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக நடக்கவும் கட்டளையிட்டான். யுத்தசன்னத்தாரானவர்கள் என்பவர்கள் விசுவாச வீரர்க ளைக் குறிக்கிறது. மேலும் ஜனங்களிடம் தான் கூறுகிற வரை எந்த ஆர்ப்பரிப்பும் செய்யக்கூடாதென்றும், எதுவும் பேச வேண்டாமென்றும் கட்டளையிட்டான் (யோசுவா 6 : 10). அதற்குமுன் துதித்ததினால் ஏதாவது நடந்ததாக இஸ்ரவேலர் பார்க்கவில்லை. இந்த ஆலோசனை ஜனங்களுக்கு வேடிக்கையாகவும், விசித்தி ரமாகவும் இருந்தாலும், ஜனங்கள் மறுப்பு எதுவும் கூறாமல் கீழ்ப்படிந்தனர். கீழ்ப்படிகிறவன் மட்டுமே அற்புதங்களைக் காண முடியும். கானாவூர் கல்யா ணத்தில் மரியாள் அவர் என்ன சொல்லுகிறாரோ அதன்படி செய்யுங்கள் என்று கூறியதைப் பார்க்கிறோம்.. பேதுரு இயேசு கூறியபடி ஆழத்தில் வலையைப் போட்டதால் அதிகமான மீன்களைப் பெற்றான். ஆனாலும் அவர்கள் கர்த்தரின் வார்த்தையை விசுவாசித்துக் கீழ்ப்படிந்தனர். இத்தனை மைல்கள் நடக்க வைக்காமலே மதிலைக் கீழே தள்ளியிருக்கலாமே என்ற கேள்வி எதுவும் ஜனங்கள் எழுப்பவில்லை. இஸ்ரவேலர் தேவனுடைய பெட்டியைச் சுமந்தபடி எரிகோவை ஆறுநாள் சுற்றிசுற்றி வந்தனர்.
எரிகோவின் ராஜாவும், படை வீரர்களும் இஸ்ரவேலர் முதல்நாள் சுற்றி வந்ததைப் பார்த்து ஒரே ஆச்சரியப்பட்டனர். கோட்டை மதிலிலிருந்து அவர்கள் தங்களைத் தாக்குதல் எதுவும் நடத்தாமல் திரும்பிப் போனதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். ஆறுநாட்கள் சுற்றிவந்த பின்னும் அந்தக் கோட்டைச் சுவரில் எந்தக் கீறாலோ , பிளவோ ஏற்படவில்லை. ஏழாவது நாள் ஏழுமுறை அந்தப் பட்டணத்தைச் சுற்றி வந்தனர். அதாவது 35 மைல் நடந்து சுற்றி வந்தனர். எரிகோ ஜனங்கள் மறுபடியும் மறுபடியும் அவர்கள் சுற்றி வருவதைப் பார்த்து குழப்பமடைந்திருப்பர். ஏழாவது முறை சுற்றி வந்த அவர்கள் எக்காளம் ஊதி ஆர்ப்பரித்தனர். அத்தனை சோர்வுற்றிருந்தாலும் ஆர்ப்பரித்தனர். அது அவர்களுடைய விசுவாசத்தைக் காட்டுகிறது. அப்போது கோட்டை இடிந்து விழுந்தது. தேவனுடைய கிரியையினால் எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்தன. கர்த்தரின் வார்த்தைக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிந்ததால், கர்த்தருடைய அதிசயமான வல்லமை மீது அவர்கள் கொண்ட விசுவாசம் ஆகியவைகள்தான் எரிகோவின்மீது வெற்றியடையக் காரணம் (எபிரேயர் 11 : 30, 1யோவான் 5 : 4). எரிகோவின் வெற்றிக்காக யோசுவா எந்தத் திட்டங்களையும் வகுக்கவில்லை. தேவன் வகுத்த திட்டத்தின்படி செயல்பட்டான்.
இஸ்ரவேலரின் தேவன் கானானியரின் தெய்வங்களைவிட வல்லமை படைத்தவர் என்று நிரூபணமானது. சோதனை காலத்தில் நம்முடைய யுத்தியைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன் படுத்தினால் வெற்றி கொள்ள முடியாது. ஒருநாள் எக்காளம் தொனிக்கும். அப்பொழுது நமது சரீரம் கீழே விழுவதற்குப் பதில் மறுரூபமடைவோம். உடனடியாக நாம் பரம கானானுக்குள் செல்வோம். கடைசி எக்காளம் தொனிப்பதற்கு முன்னதாக நாமும்கூட பலவிதமான சோதனைகளின் வழியாகக் கடந்து செல்லக்கூடும். இதேபோல் கிதியோன் மீதியானியரை வெற்றி கொள்ள கர்த்தரின் ஆலோசனையின் படி எக்காளங்கள் ஊதி பானைகளை உடைத்து வெற்றி கண்டதை நியாயாதிபதிகள் 7 : 18 – 21 ல் பார்க்கிறோம். கர்த்தர் என்னை ஆசீர்வதித்து விட்டார் என்று அறிக்கையிடும்போது நமக்கு அற்புதம் நடக்கிறது. இயேசுவானவர் சிலுவையில் என்னுடைய நோய்களைச் சுமந்து விட்டார் என்று அறிக்கையிடும் போது நமக்கு அற்புத சுகம் கிடைக்கிறது. இயேசு நமக்காக சாபமாகி, சிலுவையில் வெற்றி சிறந்தார் என்று விசுவாசித்து அறிக்கையிடும்போது சாபங்கள் மாறுகின்றன. இயேசு துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றி சிறந்தார் என்று நாம் ஆர்ப்பரித்து நமக்கு எதிரியான சத்துருக்களை ஓட ஓட விரட்டுவோம்.
எரிகோவை சுட்டெரித்தனர்:
யோசுவா 6 : 21 “ பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.”
எரிகோவின் கோட்டைச் சுவர் விழுந்தவுடன் ஜனங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்து அங்குள்ள ஜனங்களையும், மிருகங்களையும் வெட்டி வீழ்த்தினர். வேவுகாரர்களைத் தப்புவித்த ராகாப் என்ற வேசியையும், அவளது குடும்பத்தையும் வெளியே அழைத்து வந்தபின், எரிகோ பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்தனர். அங்குள்ள வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களை மாத்திரம் கர்த்தரின் ஆலயத்திலுள்ள பொக்கிஷத்தில் சேர்த்தார்கள். யோசுவா புத்தகத்தில் பல இடங்களில் கானானியரையும் அவர்களது பட்டணங்களையும் அழித்துவிட வேண்டுமென்பது தேவனின் கட்டளை என்று பல இடங்களில் கூறப்பட்டுள்ளது (யோசுவா 6 : 2, 8 : 1, 2, 10 : 8). இஸ்ரவேலர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்னமே தேவன் அவர்களிடம் திட்டவட்டமாக அங்கே ஏற்கெனவே குடியிருக்கும் ஜனங்களை முற்றிலும் சங்காரம் பண்ணப்பட்ட வேண்டுமென்று என்று அறிவித்திருந்தார்
உபாகமம் 20 : 16, 17 “ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ள தொன்றை யும் உயிரோடே வைக்காமல், அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.’
என்றார் .எரிகோவின் ஜனங்கள் மிகவும் கெட்டவர்களாக, அவர்களின் பாவம் உச்ச கட்டத்தை அடைந்திருந்த போது, தேவன் அதை அழித்துப் போட்டார். ஏனென்றால் அவர்களனைவரும் ஒழுக்கநெறி தவறினவர்களாகவும், அக்கிரமக் காரர்களாகவும் வாழ்ந்தனர். கானானியரின் பாவங்கள், விக்கிரகாராதனை ஆகிய வற்றில் இஸ்ரவேலர் பழகாமலிருக்கக் கானானியரை அழிக்க வேண்டியது அவசியமாயிற்று. இதே கொள்கையை கர்த்தர் நோவாவின் காலத்திலும் (ஆதியாகமம் 6 : 5, 11, 12), சோதோம் கொமோராவை அழிக்கும் போதும் (ஆதியாகமம் 18 : 20 – 33, 19 : 24, 25) செயல்படுத்தினார்
முடிவுரை:
கர்த்தர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் பயன்படுத்துகிறார். கர்த்தர் மோசேயைப் பயன்படுத்திய விதம் வேறு, யோசுவாவைப் பயன்படுத்திய விதம் வேறு. மோசேக்கு கொடுக்கப்பட்ட பணி இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுதலை பண்ணி வனாந்தரத்தில் வழியாக அழைத்து வருவதாகும். யோசுவா வுக்குக் கொடுக்கப்பட்ட பணி இஸ்ரவேலரை கானானுக்கு அழைத்து வந்து அவர் களுக்குக் கானானைப் பங்கிட்டுக் கொடுப்பதாகும். கானானியரின் தலைமுறை அழிக்கப்பட்டது, கடைசி காலத்தில் அநீதியுள்ளவர்கள் மேல் தேவனின் இறுதி நியாயத்தீர்ப்பு வருவதைக் காண்பிக்கும் ஒரு முன்மாதிரிச் செயலாகவும், நிழலாகவும் இந்த நிகழ்வு உள்ளது. இயேசு ஜனங்களை நீதியுடன் நியாயந் தீர்க்கவும், தேவபக்தியற்றவர்களுடன் யுத்தம் பண்ணவும், வான சேனைகளுடன் திரும்ப வருவார் (வெளிப்படுத்தல் 19 : 11 – 21) தேவனுடைய கிருபையையும், இரட்சிப்பையும் புறக்கணித்து தங்கள் பாவங்களில் நிலைத்திருந்தவர்கள் கானானியரைப்போல அழிந்து போவார்கள். இயேசுவானவர் எல்லா உலக அதிகாரத்தையும், வல்லமையையும் கவிழ்த்துப் போட்டு நீதியுள்ள ராஜ்ஜியத்தை நிலைப்படுத்துவார் (வெளிப்படுத்தல் 18 : 20, 21, 20 : 4 – 10, 21 : 1 – 4). இன்றும் எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் செல்லும் பாதை ஆபத்தானதும், திருடர்கள் நடமாடும் இடமாகவும் உள்ளது. நாமும் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் தடையாகக் காணப்படும் அனைத்தையும் கர்த்தரை நோக்கிக் துதித்தும், ஜெபித்தும் முன்னேறுவோம். நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் வெற்றியின் முதற்படி என்னவென்றால் தடைகளைக் கொண்டுவருபவனைப் பார்க்காமல், தடைகளைத் தகர்ப்பவரைப் பார்த்து ஜெபிக்கக் கற்றுக் கொள்வோமாக. ஆமென்.