- நாலாம் ஜீவன் யோவானை அழைத்தது:
வெளிப்படுத்தல் 6 : 7, 8 “ அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.
ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது நான்காம் ஜீவன் யோவானை வெளிப்படப் போவதை வந்துபார் என்று அழைத்தது. நான்காம் ஜீவன் கழுகுக்கு ஒப்பானவன். பறவைகளின் ராஜாவாகக் கருதப்படும் கழுகு, மிக வேகமாக அதிக உயரத்தில் பறக்கக்கூடியது (உபாகமம் 28 : 50, யோபு 9 : 26, 39 : 27 – 30, ஆபகூக் 1 : 8).
- மங்கின நிறமுள்ள குதிரையிலேறி இருந்தவனுக்குக் கொடுத்த அதிகாரம்:
வெளிப்படுத்தல் 6 : 8 “நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.”
இதில் அந்திகிறிஸ்து எறிவருகிற குதிரை மங்கின நிறமுடையது. வெள்ளை, சிவப்பு, மற்றும் கருப்பு நிறங்களின் கலவையே மங்கின நிறம். இதற்கு முந்தின மூன்று குதிரை வீரர்களின் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. நான்காவது குதிரை வீரனின் பெயர் மரணம் என்று அறிவிக்கப்படுகிறது. மரணம் என்பது நாம் அறியாத பலவற்றைத் தன்னுள் அடக்கி மூன்று அர்த்தங்களை உடையதாக இருக்கிறது. 1. சரீரப்பிரகாரமான மரணம். இது ஆதாமின் பாவத்தினால் வந்தது. 2. ஆவிக்குரிய மரணம். இது தேவனைவிட்டு விலகி தேவனுக்கு எதிர்த்து நிற்பதைக் குறிக்கிறது. 3. நித்திய மரணம். இது தேவனிடத்திலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டுப் போவதைக் குறிக்கிறது. ஒருவன் பாவத்திலிருந்து மீட்கப்படா விட்டால் இது நேரிடுகிறது.
வெளிப்படுத்தல் 20 : 14, 15 ல் “ அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.”
ரோமர் 5 : 14 ல் மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும் ஆதாமின் மீறுதலுக்கோப்பாய் பாவஞ் செய்யாதவர்களை ஆண்டுகொண்டது என்றும்,
1 கொரிந்தியர் 15 : 26 ல் “பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு மரணம்”
என்று பவுலடியார் கூறுவதைப் பார்க்கிறோம். ஆதாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் செத்தவனாகவே இருந்தான். நம்முடைய வாழ்க்கையிலும் நாம் பாவஞ் செய்யும் போது ஆவிக்குரிய மரணத்துக்குள்ளே கடந்து செல்கிறோம். அவ்வாறு கடந்து செல்லும்போது, நமக்கும் தேவனுக்குமிடையே பெரிய பிளவு ஏற்படுகிறது. மேலும் அதைத் தொடர்ந்து பாதாளம் பின் சென்றது என்று பார்க்கிறோம். பாதாளம் தனிக் குதிரையில் வந்ததாகாச் சொல்லப்படவில்லை. மரித்த ஒரு மனிதனுடைய சரீரம் மண்ணுக்கே திரும்பிப் போகிறது. அவனுடைய ஆத்துமாவோ பாதாளத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மரித்தோர் உயிர்தெழும்படியாகவும், நியாயத்தீர்ப்படையும் படியாகவும் காத்திருக்கும் இடமே பாதாளம். என்று அழைக்கப்படுகிறது. பாதாளத்தின் திறவுகோல்களை இயேசு வைத்திருப்பதை வெளிப்படுத்தல் 1 : 18 ல் பார்க்கிறோம். இது நரகமல்ல. மரணமின்றி யாரும் பாதாளத்துக்குள் பிரவேசிக்க முடியாது. லூக்கா 16 : 23 ல் ஒரு ஐசுவரியாவான் மரித்து பாதாளத்தில் அவன் வேதனைப் பட்டான் என்றுள்ளது. இவர்கள் ஆயிரம் ஆண்டு அரசாட்சிக்குப் பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டு நியாயத்தீர்ப்படைவார்கள் (வெளிப்படுத்தல் 20 : 11 – 15).
மத்தேயு 24 : 7, 8 ல் “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.”
என்று இயேசு முன்னமே கூறியுள்ளார். யுத்தம், பஞ்சம், மரணம், கொள்ளைநோய், வியாதிகள், துஷ்ட மிருகங்கள் ஆகியவை மிகவும் அதிகரிக்கும். இந்த வசனத்தின்படி துஷ்ட மிருகங்களும் இணைந்து கொள்கின்றன.
இதை எசேக்கியேல் 14 : 21 ல் “ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்?”
மேலும் இதேபோல் எரேமியா 14 : 12, 15 : 2, 24 : 10, 29 : 17 எசேக்கியேல் 5 : 12, 17, 29 : 5 வசனங்களில் பட்டயம், பஞ்சம், கொள்ளைநோய், ஆகியவைகள் வரப்போவதை முன்னமே தீர்க்கதரிசிகள் கூறியிருப்பதைக் காணலாம். இந்த நியாயத்தீர்ப்பு கடுமையானதால், இதன் மூலம் நான்கில் ஒரு பங்கு ஜனங்கள் மரிப்பார்கள். இதை சங்கீதக்காரன்,
சங்கீதம் 49 : 14 ல் “ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.” என்று கூறுகிறார்.
இதுதான் மகா உபத்திரவத்தை ஆரம்பம். மகாஉபத்திரவ காலத்தில் மரணம் கட்டுக்கடங்காததாயிருக்கும். உலகில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே அழிவு அனுமதிக்கப்பட்டதால், இது மற்றவர்கள் மனந்திரும்புவதற்கு ஏதுவாகும். நான்காம் முத்திரை மனிதனின் சமாதான உடன்படிக்கையின் தோல்வியால் ஏற்பட்ட மரணத்தைக் காட்டுகிறது.