வெளிப்படுத்தல் 2 : 17 “ ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.”
சிமிர்னா பட்டணத்துக்கு வடக்கே 20 மைல் தூரத்தில் பெர்கமு பட்டணம் அமைந்திருந்தது. இது ரோம ஆட்சி பகுதியின் தலைநகராக விளங்கியது. இங்கு ஒரு பல்கலைக்கழகமும், இரண்டு லட்சம் புஸ்தகச் சுருள்கள் அடங்கிய நூலகமும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. எகிப்தின் அரசியான கிளியோபாட்ராவுக்கு இவைகள் மார்க் ஆண்டணியால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக சரித்திர ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பெர்கமு இன்று பெர்கமொஸ் என்று அழைக்கப்படுகிறது. துருக்கியரும், அமோனியரும் கிரேக்கரும் இங்கு வசிக்கின்றனர். இயேசு தன்னை இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவராக அறிமுகப்படுத்துகிறார். பட்டயம் என்பது தேவனுடைய வார்த்தை யையும், அதனால் உண்டாகும் நியாயத்தீர்ப்பையும் அறிவிக்கிறது. “அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது என்று வெளிப்படுத்தல் 1 : 16 ல் பார்க்கிறோம். வெளிப்படுத்தல் 19 : 15, 21 ல் அந்தி கிறிஸ்துவும் அவனுடைய கூட்டத்தாரும் அவருடைய பட்டயத்தால் சங்கரிக்கப்படுகிறார்கள் என்று பார்க்கிறோம். சிமிர்னா சபை மிகுந்த உபத்திரவத்தை அனுமதித்தது மாறி, கான்ஸ்டாண்டி அரசனால் சலுகைகளைப் பெற்றது. இவர் ஆட்சியைப் பிடிக்க யுத்தத்துக்குப் புறப்பட்ட போது வானத்தில் அக்கினிமயமான சிலுவையைத் தரிசிக்கிறான். “இந்த அடையாளத்தினாலே ஜெயங்கொள்“ என்ற சத்தத்தையும் கேட்கிறான். வெற்றியடைந்த கான்ஸ்டாண்டி ரோமப்பேரரசனாகி விரைவில் மேற்கத்திய உலகம் முழுவதையும் மேற்கொள்ளுகிறான்.
ஞானஸ்நானம் எடுத்து கிறிஸ்தவனாகிறான். கிறிஸ்தவர்களையும், புறஜாதிய ரையும் ஒரே மக்களாக இணைத்து தன்னுடைய ஆட்சியைப் பலப்படுத்தும் படியாக இந்த ராஜா கிறிஸ்தவ சபைகளுக்குப் பல சலுகைகளை வழங்கினான். அரசு அதிகாரிகள், போர்வீரர்கள், ராஜாவைத் திருப்திப்படுத்தும்படியாக கிறிஸ்தவர்கள் ஆகிறார்கள். சூரிய கடவுளின் நாளான டிசம்பர் 25 கிறிஸ்து பிறந்தநாள் என்று அறிவித்தான். ஆராதனைகள், திருவிழாக்கள், வழிபாடுகளில் புறஜாதி பாபிலோனிய முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. உலகம் சபைக்குள் பிரவேசித்து ஆவிக்குரிய வேசித்தனத்துக்குள் விசுவாசிகளை வழிநடத்தும் தவறான உபதேசங்கள் சபையின் அங்கீகாரத்தைப் பெற்றன. பெர்கமு சபையின் தூதனுக்கு வெளிப்படுத்தல் 2 : 12 லிருந்து 2 : 17 வரையுள்ள வசனங்கள் கூறப்பட் டுள்ளது. முதலில் இயேசு அந்த சபையிலுள்ள இரண்டு நற்கிரியைகளைப் பாராட்டுகிறார். 1.அந்நாட்களில் கிறிஸ்து தேவகுமாரன் என்பதையும், பிதாவுக்கு இணையானவர் என்பதையும் மறுதலிக்கும் உபதேசம் அரியுஸ் என்பவனால் உபதேசிக்கப்பட்டு வந்தது. இந்தக் கருத்து வேறுபாடு சபையைப் பாதித்தபடியால் கி. பி 325 ல் நிசியா என்ற இடத்தில் கான்ஸ்டாண்டி ராஜா தன்னுடைய தலைமையில் 1500 சபைத்தலைவர்களைக் கூட்டி மாநாடு ஒன்றை நடத்தினான். இதன் முடிவில் கிறிஸ்துவே ஆண்டவர் என்றும், அவரே தேவனும் மனிதனுமாயிருக்கிறார் என்ற உபதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2. இந்த பெர்கமு பட்டணம் சாத்தான் குடிகொண்டிருக்கிற இடமென்று குறிப்பிடுகிறார். பெர்கமுவில் ஒரு மலை உச்சியில் நாற்பது அடி உயரத்தில் சீயுஸ் என்ற கிரேக்க தேவனுக்குப் பலிபீடம் ஒன்று சிங்காசனம் போல் அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவே சாத்தானின் சிங்காசனமாகக் கருதப்பட்டது. விக்கிரக ஆராதனை நிறைந்த இந்த இடத்திலும், தேவனுக்கு உண்மையுள்ள சாட்சியாக அந்திப்பா செயல்பட்டதை இயேசு பாராட்டுகிறார். இதன் விளைவாக வெண்கலப் பானையில் அடைக்கப்பட்டு உயிரோடு வேக வைத்து அந்திப்பா கொல்லப்பட்டார். இவர்களது குறை விக்கிரகாராதனை. பிலேயாமின் போதனைகளையும், நிக்கோலாய் மதஸ்தர்களுடைய போதகத்தையும் சபை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அதை ஏற்றுக் கொண்டவர்கள் சபையில் செயல்படுவதை இயேசு வெறுக்கிறார். பிலேயாம் தனது ஊழியத்தை புறஜாதி ராஜாவுக்கு விற்றுப் போட்ட கள்ளத் தீர்க்கதரிசி. இவன் இஸ்ரவேலரை விக்கிரக ஆராதனையாலும், வேசித்தனத்தாலும், சோதிக்க ஆலோசனை கூறினவன் (எண்ணாகாமம் 22 : 5, 7, 25 : 1, 2, 31 : 16).பிலேயாமின் போதனை என்பது ஒழுக்கக் கேடு, உலக சிநேகம் தவறான கொள்கைகள் முதலானவற்றை சுய முன்னேற்றத்திற்காகவும், பொரு ளாதார லாபத்துக்காகவும் சபையில் அனுமதித்துப் போதிக்கின்ற போதகர்களின் உபதேசத்தைக் காட்டுகிறது.
பெர்கமுவிலிருந்த போதகர்கள் இரட்சிப்புக்கேதுவான விசுவாசமும் ஒழுக்கமற்ற வாழ்வும் இணைந்து செல்லக்கூடியவை என்று போதித்தனர். நிக்கோலாய் என்பவர் நிக்கோலாய் மதத்தை உருவாக்கிய அந்தியோகியாவைச் சார்ந்த ஒரு யூத மதத்தைத் தழுவிய மனிதர். இவர் பந்தி விசாரணை செய்ய ஸ்தேவானுடன் தெரிந்தெடுக்கப்பட்ட ஏழுபேரில் ஒருவர் (அப்போஸ்தல நடபடிகள் 6 : 5). பின்பு பொய் போதகராக மாறினார். ஒவ்வொரு மனிதனும் மாம்ச இச்சைகளின்படி நடப்பதில் வெட்கப்பட வேண்டியதில்லையென்பது நிக்கோலாய் மதஸ்தரின் போதனை. இங்குள்ள அத்திப்பா என்பவன் ரோம அரசினால் கொல்லப்பட்ட முதல் இரத்த சாட்சி. இயேசு அந்த சபை உடனடியாக மனந்திரும்ப வேண்ட மென்றும், இல்லாவிட்டால் தேவனுடைய வார்த்தையாகிய வாயின் பட்டயம் அவர்களை நியாயந்தீர்க்கும் என்கிறார். பாவத்தோடு ஒத்துப்போகும் யாரும் சபையில் இருப்பினும் இயேசு அவர்களை எதிர்ப்பார். ஒழுக்கக் கேட்டுடன் வாழும் விசுவாசிகள் மனந்திரும்பாவிட்டால் அவர்களுடன் இயேசு யுத்தம் பண்ணுவார். பாவத்தை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஒழுக்கக்கேட்டை நம் மத்தியில் அனுமதிக்காக கூடாதென்றும் கிறிஸ்து சபைகளுக்குக் கூறியதையே இன்று ஆவியானவரும் நமக்குக் கூறுகிறார். இவைகளை நாம் மேற்கொள்ளா விட்டால் தேவ பிரசன்னத்தையும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும் இழந்து விடுவோம். தேவனுடைய ராஜ்ஜியத்தின் எதிரிகளாகவும் மாறி விடுவோம்.
அதேவேளையில் நாம் மேற்கொண்டுவிட்டால் ஆவிக்குரிய வாழ்வில் மறைவான மன்னாவையும், தேவன்மேல் உள்ள விசுவாசத்தைக் கெடுக்கும் அனைத்தையும் ஜெயிப்பதற்கு அடையாளமான வெள்ளைக் கல்லையும் பெற்றுக் கொள்வோம். இந்த சபை சாத்தானின் சிங்காசனம் இருக்கிற இடமாக இருந்தாலும், தேவன் அந்த சபையோடு ஐக்கியம் கொண்டிருந்ததால் அங்கு ஜெயங் கொண்ட சிலர் இருந்தனர். இவர்களுக்கு மூன்று வித்தியாசமான ஆசீர்வாதங்களை வைத்திருப்பதாக இயேசு அறிவிக்கிறார். 1.மறைவான மன்னா, 2. வெண்மையான குறிக்கல், 3. புதிய நாமம். இஸ்ரவேலரைக் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் வானத்து மன்னாவினால் போஷித்தார். இது மோசேயுடன் புறப்பட்டு வந்த எல்லா இஸ்ரவேலருக்கும் வழங்கப்பட்டது (சங்கீதம் 78 : 24). ஆனால் இந்த வசனத்தில் சொல்லப்படும் மன்னா ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு பரலோகத்தில் மட்டுமே தரப்படுகிறது. இந்த மறைவான மன்னா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது. இயேசு தன் வாயால் நானே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம். என்றும், அந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான் என்றும் யோவான் 6 : 49 – 51ல் கூறியுள்ளதைப் பார்க்கிறோம். ஜெயங்கொள்ளுகிறவர்கள் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டு நித்திய நித்தியமாய் உயிர் வாழ்வார்கள். வெண்மையான குறிக்கல் என்பது வெற்றியின் அடையாளமாக விளையாட்டுப் போட்டியில் ஜெயம் கொண்டவர்களுக்கு அந்த நாட்களில் வழங்கப்பட்டது. மேலும் நியாயஸ்தலங்களில் குற்றம் சாட்டப் பட் டவர்கள் நியாயாதிபதிகளினால் நிரபராதிகளாகக் காணப்பட்ட போது வெண்மை யான கல்லையும், குற்றவாளிகளாகக் காணப்பட்டபோது கருமையான கல்லையும் தங்கள் மேஜையின்மேல் வைத்துத் தீர்ப்பு வழங்குவார்களாம். வெண்மையான கல்லைப் பெறும் மனிதன், இயேசுகிறிஸ்துவினால் பரிசுத்தவானாக அங்கீகரிக்கப்படுகிறான்.
மேலும் அவர்களுக்குப் புதிய நாமம் வழங்கப்படுகிறது. இந்தப் பெயர் அந்தக் குறிக்கல்லில் பதிக்கப்பட்டிருக்கும். அதனால் அது ஒருபோதும் மாற்றப்படு வதில்லை. “என்றும் அழியாத நித்திய நாமத்தை அருளுவேன்” என்று ஏசாயா 56 : 5 லும், “கர்த்தருடைய வாய் சொல்லும் புதிய நாமத்தினால் நீ அழைக்கப்படுவாய்.” என்று ஏசாயா 62 : 2 லும், கர்த்தர் தமது ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார் என்று ஏசாயா 65 : 15 லும் கூறப்பட்டுள்ளது இவைகளனைத்தையும் ஜெயங்கொள்ளுகிறவர்கள் பரலோகத்தில் பெற்றுக் கொள்வார் கள். பரிசுத்த ஆவியானவரின் எச்சரிப்பை நாம் இன்று கேட்க வேண்டும். பாவத்தை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஒழுக்கக்கேட்டை நம் மத்தியில் அனுமதிக்கக் கூடாதென்றும் கிறிஸ்துசபைகளுக்குக் கூறியதையே இன்று ஆவியானவரும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். இந்தக் காரியத்தை நாம் மேற்கொள்ளாமல் போனால் தேவ பிரசன்னத்தையும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும் இழந்து விடுவோம். மேலும் தேவனுடைய ராஜ்ஜியத்தின் எதிரிகளாக மாறிவிடுவோம். நாம் அதை மேற்கொண்டு விட்டால் ஆவிக்குரிய வாழ்வின் மறைவான மன்னாவையும், தேவன் பேரில் உள்ள விசுவாசத்தைக் கெடுக்கும் அனைத்தையும் ஜெபிப்பதற்கு அடையாளமான வெள்ளைக் கல்லை யும் பெறுவோம். ஆமென்.