பரலோக ராஜ்ஜியம் வீட்டெஜமானனாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்புமைப்படுத்தி இயேசு கூறுகிறார். ஒரு மனுஷன் தன் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த காலையில் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி அனுப்புகிறான். மூன்றாம் மணியிலும், ஒன்பதாம் மணியிலும், பதினொன்றாம் மணியிலும் வேறு சிலரைக் கண்டு வேலைக்கு அமர்த்தினான். ஆனால் அவன் கூலி கொடுக்கும் பொழுது எல்லோருக்கும் ஒன்றாகக் கொடுத்தான். இதனால் முந்தி வந்தவர்கள் முறுமுறுத்ததைப் பார்க்கிறோம்.
இதில் அதிகாலையில் (6 மணி) மூன்றாம் மணி (9 மணி) ஆறாம் மணி (12 மணி) ஒன்பதாம் மணி (பிற்பகல் 3 மணி) பதினொன்றாம் மணி (மாலை 5 மணி) என்று யூதர்கள் கால அளவுபடி கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையின் இளமைப்பகுதியில், வாலிபப்பருவத்தில், நடுத்தர வயதில், முதிர்வயதில் கர்த்தரை ஏற்றுக்கொண்டு மறுபடி பிறக்கிறவர்கள் உண்டு. மறுபடி பிறந்த ஒவ்வொருவரும் கர்த்தருடைய பணியை ஏதாவது ஒருவிதத்தில் செய்ய அழைப்பு பெற்றவர்கள். எத்தனை ஆண்டுகள் உழைத்தார்கள் என்பதல்ல தாங்கள் அழைக்கப் பட்ட நாளிலிருந்து கர்த்தருக்குக் கீழ்படிந்து இறுதிவரை உண்மையாக உழைத்தார்களா என்பதுதான் முக்கியமானது.
இளம் வயதினராயிருந்தாலும், கல்வியில் குறைவுள்ளவர்களாயிருந்தாலும் கர்த்தர் அவர்களை நம்மைவிட அதிகமாகப் பயன்படுத்தும்பொழுது அவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளக்கூடாது. நமக்குக் கர்த்தர் கொடுக்கும் பணியை புகழ், செல்வாக்கு, பதவி
ஆகியவற்றை நாடாமல் கர்த்தர் நமக்காகப் பட்டபாடுகளை நினைத்து அன்பினால் ஊழியம் செய்வோம்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் தேவனுடைய கிருபையை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கும் போது தேவனுடைய கரிசனையை மறந்துவிடக் கூடாது மற்றவர்கள் அனுபவிக்கும் ஆவிக்குரிய நன்மைகளைக் கண்டு பொறாமை கொள்ளக்கூடாது.