Menu Close

எலியாவை காகத்தைக் கொண்டு தேவன் போஷித்தார்

1 இராஜாக்கள் 17 : 2 – 7

எலியா சொன்னபடி தேசத்தில் மழை இல்லாததால், ஆகாப் ராஜா எலியாவை அநேக இடங்களுக்கு ஆளனுப்பித் தேடினார். ஆனால் எலியாவுக்குக் கர்த்தரின் வார்த்தை வந்தது. 

 1 இராஜாக்கள் 17 : 3 ,4 “நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு. அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.”

இதில் கர்த்தர் யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் போய்த் தங்கியிரு என்று கூறாமல், ஒளித்துக் கொண்டிரு என்று கூறியதைப் பார்க்கிறோம். மக்களின் விசுவாச மறுதலிப்பின் போதும், எலியா தேவனோடு உறுதியாக நின்றதால், அவரைப் போஷிக்கத் தேவன் சித்தம் கொண்டு கேரீத் ஆற்றண்டைக்கு அனுப்பிப் போஷித்தார். யோர்தான் என்றால் மரணம் என்று பொருள். கேரீத் என்றால் இடுக்கம் அல்லது வறட்சி என்று பொருள். மரணத்திற்கு நேராயிருக்கிற இடுக்கம் என்று பொருள். கர்த்தரின் வார்த்தையின்படியே மறுக்காமல் எலியா கேரீத் ஆற்றங்கரையில் போய்த் தங்கினார். வேதத்தில் தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுக்க வனாந்தரத்திற்கு எடுத்துச் சென்று பயிற்சி கொடுத்த சிலரைப் பார்க்கலாம். மோசேக்கு வனாந்தரத்தில் பயிற்சி கொடுத்தார். யோவான்ஸ்நானகனுக்கும் வனாந்தரத்தில் பயிற்சியளித்தார். அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இரண்டு ஆண்டுகள் அரபு தேசத்திலுள்ள வனாந்திரத்தில் பயிற்றுவித்தார். கல்தேயரின் பட்டணமாகிய ஊர் என்ற பட்டணத்திலிருந்து ஆபிரகாமை வெளியில் கொண்டு வந்து பயிற்சி கொடுத்தார். இதுதான் தேவன் தன்னுடைய பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் விதம். இதேபோல் தான் எலியாவுக்கும் பயிற்சியளித்ததைப் பார்க்கிறோம். 

அந்த இடத்தில் எலியாவைப் போஷிக்கக் கர்த்தர் இரண்டு காரியங்களைச் செய்தார். 1. இயற்கையான அந்த ஆற்றின் தண்ணீர் 2. இயற்கைக்கு மாறுபாடாக காகத்தினால் போஷித்தார். அங்கு தினமும் அவருக்குக் காகம் இறைச்சியும், அப்பமும் கொண்டு வந்து கொடுத்தது. தெளிந்த நீரோடையின் நீர் தாராளமாகக் கிடைத்ததால் அதைக் குடித்தார். காகம் கொண்டு வந்த உணவைப் பின்பற்றி, எலியா எங்கே இருக்கிறார்களென்று எந்த ஒற்றர்களும் நெருங்க முடியவில்லை. தேவன் ஏற்படுத்தும் பாதையானது மிகவும் அற்புதமானது. நாம் எங்கு இருக்க வேண்டும் என்று விரும்புவதை விட, கர்த்தர் நம்மை எங்கு இருக்க வேண்டுமென விரும்புகிறார் என்பது தான் முக்கியம். கர்த்தர் கூறிய இடத்தில் நாம் இருக்கும் போது பரலோக தேவனின் ஆசீர்வாதங்கள் நம்மைச் சரியாக வந்தடையும். ஒவ்வொரு ராஜாவும் தனக்குத் தேவன் கொடுத்திருக்கும் பொறுப்புகளில் உண்மையும், உத்தமுமாக செயல்பட வேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். காகங்கள் மனிதர்களிடமிருந்து களவாடித் தான் செல்லுமே தவிர, எதையும் மனிதர்களுக்குக் கொடுக்காது. 

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

பிணங்களையும், அசுத்தங்களையும் தேடித்திரியும் காகமானது, கர்த்தருடைய கட்டளையினால் எலியாவைச் சரியாகத் தேடிவந்து பரலோகம் கொடுத்தனுப்பும் அப்பத்தையும், இறைச்சியையும் அனுதினமும் கொண்டு வந்து கொடுத்தது மிகவும் அதிசயம். பறவைகளையும் கர்த்தர் பயன்படுத்தியதை இதில் நாம் பார்க்கிறோம். எலியா காகம் கொண்டு வந்தது என்று எண்ணாமல், தேவன் கொடுத்தனுப்பிய உணவாததால் புசித்தார். அரண்மனை ஊழியனான ஒபதியா தீர்க்கதரிசி யேசபெல் ராணிக்கு பயந்து தன்னுடைய குகையில் நூறு தீர்க்கதரிசிகளை ஒளித்து வைத்து, அப்பமும் தண்ணீரும் கொடுத்துக் காப்பாற்றினார் என்று 1 இராஜாக்கள் 18 :13 ல் பார்க்கிறோம். தேவனிடமிருந்து எலியாவுக்கு வந்த ஆசீர்வாதம் உலகின் ஆசீர்வாதங்களை விட ஒரு படி சிறந்ததாகவே இருந்தது. அந்தக் கேரீத் குறிப்பிட்ட காலம் வரைதான் உதவி செய்தது. ஆற்றில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் வற்றியது. அந்தத் தேசத்தில் மழை இல்லாததால் முற்றிலும் ஆற்றில் நீர் வற்றியது. தேசத்தைப் பாதித்த நியாயத்தீர்ப்பு, தீர்க்கதரிசியையும் பாதித்தது. ஆனால் எப்போது நீர் வற்றியதோ அப்பொழுது தேவன் மற்றும் ஒரு கதவைத் திறந்தார். 

நமக்கும் சில கேரீத்களைத் தேவன் வைத்திருக்கிறார். அந்தக் கேரீத்தில் மீன் பிடிக்கவோ, நீந்தவோ, முடியாது. எலியாவைப்போல கர்த்தர் நடத்தும் வரை ஒளிந்திருக்க வேண்டும். கர்த்தர் தரை மார்க்கமாக உணவு அனுப்பாமல் ஆகாய மார்க்கமாக உணவு அனுப்பியதைப் பார்க்கிறோம்.  காகத்துக்குள்ளிருந்த அந்தத் தன்மையை மாற்றி அற்புதத்தைச் செய்ய வைத்தார்.

Related Posts