கர்த்தருக்குப் பிரியமானவர்களே, வேதத்தில் விசுவாசிகளின் தகப்பனாக ஆபிரகாமைத் தெரிந்து கொண்டார். இஸ்ரவேலரை அடிமைத் தனத்திலிருந்து மீட்க மோசேயைத் தெரிந்து கொண்டார். ஆசாரிய ஊழியம் செய்ய ஆரோனைத் தெரிந்து கொண்டார். இஸ்ரவேலை அரசாளத் தாவீதைத் தெரிந்து கொண்டார். ஆலயத்தைக் கட்ட சாலமோனைத் தெரிந்து கொண்டார். ஆனால் புதிய ஏற்பாட்டில்.
“ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார் ; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார்”. “உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தில் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்து கொண்டார்.” (1கொரி1:27,28)
இயேசு பிசாசு பிடித்திருந்த மனிதனைத் தேவனின் நாமம் மகிமைபடும்படியாகவும், அவனை ஊழியத்திற்குப் பயன்படுத்தவும் தெரிந்து கொண்டார். (மாற் 5:1-20) வரையுள்ள வசனங்களில் ஆயிரக்கணக்கானப் பிசாசுகள் குடியிருந்த (லேகியோன்) ஒரு மனிதனை இயேசு எவ்வாறு சுகமாக்கி, அந்தப் பிசாசின் பிடியிலிருந்து விடுதலை கொடுத்தார் எனப் பார்ப்போம்.
இயேசு அவனைச் சுகமாக்கச் சித்தம் கொண்டதால்தான் வலிய சுதரேனருடைய நாட்டிற்குப் போனார். அந்த நாட்டிற்குத் தமது சீடர்களுடன் படகில் சென்று கொண்டிருந்தபோது, சுழல் காற்றினால் படகு தத்தளித்தது. அதைப் பார்த்து சீடர்கள் பதறினர். தூங்கிக் கொண்டிருந்த இயேசுவை எழுப்பினார்கள்.
“இயேசு எழுந்து, காற்றை அதட்டி, கடலைப் பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்று போய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று” (மாற் 4:39)
சீடர்கள் இயேசுவைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியது மட்டுமல்ல பயத்துடன் காணப்பட்டனர். இந்த இடத்தில் “ஜார்ஜ் முல்லர்” என்ற தேவ மனிதனின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைப்பூட்ட விரும்புகிறேன். முல்லர் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகக் கப்பலில் சென்று கொண்டிருக்கும் போது, கடுமையான மூடுபனியால் பாதி வழிக்கு மேல் கப்பலைச் செலுத்த முடியவில்லை. முல்லர் மாலுமியிடம் கேட்டு பயங்கரமான மூடுபனியால் கப்பல் நகர சில மாதங்களாகும் எனத் தெரிந்து கொண்டார். சிறிதளவு கூடப் பதட்டமில்லாமல், மாலுமியை அழைத்து ஜெபிக்கத் தொடங்கினார். என்ன ஜெபம் என்றால், “ஆண்டவரே இந்தப் பனிப்பாறையை அகற்றி, நான் செல்லவிருக்கும் பிரசங்க மேடைக்குச் செல்ல, இந்தப் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணும். இன்னும் சில நாட்களில் உம்முடைய கூட்டத்தில் நான் பங்கு பெற வேண்டுமே” என முடித்தார். முல்லர் கண்களைத் திறந்து பார்த்த போது, மாலுமி ஜெபித்துக் கொண்டிருந்தான். முல்லர் அவனைத் தடுத்து நிறுத்தி “நான் ஜெபித்து முடித்து விட்டேன் ஜன்னல் வழியே பார்” என்றார். திகைப்படைந்த மாலுமி எட்டிப் பார்த்தான். என்ன ஆச்சரியம்! தேவன் பனிப் பாறையை முற்றிலும் அகற்றியிருந்தார். இது தான் விசுவாச ஜெபத்தின் பலன்.
சீடர்களும் இயேசுவும் படகிலிருந்து இறங்கினவுடன் ஆயிரக்கணக்கான அசுத்த ஆவிகள் பிடித்த ஒரு மனிதன், இயேசுவுக்கு எதிராக வந்தான். அவனுடைய குடியிருப்போ பிரேதக்கல்லரைகளில் தான். அவனைக் கட்டுவதற்கு ஒருவனாலும் கூடாது. அவனுடைய வேலை என்னவெனில் இரவும் பகலும் மலைகளிலும், கல்லரைகளிலும் இருந்து கொண்டு கூக்குரலிடுவது. அதுமட்டுமல்ல கல்லுகளினால் தன்னைக் காயப்படுத்திக் கொள்வான். இயேசுவைத் தூரத்தில் கண்டபோது பிசாசுகள் நடுங்கின. நடுக்கத்துடன் ஓடி வந்து இயேசுவின் பாதத்தில் விழுந்தான். இயேசுவுக்கும் பிசாசு பிடித்தவனுக்கும் நடந்த சந்திப்பைப் பாருங்கள். நடுக்கத்துடன் கூடிய சந்திப்பு. இதே போல் சந்தித்த அனேக பரிசுத்தவான்களை வேதத்தில் காணலாம். அதில் சிலவற்றைப் பார்ப்போம்.
வேதத்தில் யாக்கோபைக் கர்த்தர் யாப்போக்கு ஆற்றின் கரையில் சந்தித்தார். நடுக்கத்துடன் ஏசாவுக்குப் பயந்து காணப்பட்டான். (ஆதி 32:11) மோசேக்குக் கர்த்தர் முட்செடியின் நடுவிலே காட்சியளித்தார். அப்பொழுது மோசே பயத்துடன் காணப்பட்டான்.. (யாத் 3:6) சவுலைத் தேவன் தமஸ்கு வீதியில் தோன்றிய ஒளியில் சந்தித்தார். அப்பொழுது சவுல் நடுங்கித் திகைத்தான். (அப் 9:6)
இப்பொழுது சில தேவமனிதர்களை தேவன் சந்தித்த விதத்தைப் பார்ப்போம். “ஜான் வெஸ்லி” என்ற தேவமைந்தனை ஒரு ஆவிக்குரிய புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போது தேவனின் சந்திப்பைப் பெற்றார். “C.J. சாமுவேல்” என்ற தேவ மனிதனை அலுவலகப் பணி புரிந்து கொண்டிருந்த வேளையில் சந்தித்தார்.“பில்லிகிரஹாம்” என்ற தேவ மனிதனைக் கால்பந்து மைதானத்தில் சந்தித்தார். “மார்ட்டின் லூதர்” ஆசிரமம் ஒன்றுக்குள் புகுந்து, பலநாள் கதறி அழுது கர்த்தர் மூலம் தேவ அழைப்பைப் பெற்றுக் கொண்டார். நீங்களும் , கர்த்தரைச் சந்திக்க வாஞ்சையாயிருங்கள். அநேகப் பிசாசுகள் குடிகொண்டவன் பதட்டத்துடன் இயேசுவைப் பார்த்து “உன்னதமான தேவனுடைய குமாரனே, …என்னை வேதனைப் படுத்தாதபடிக்குத் தேவன் பேரில் ஆணையிடுகிறேன்” என்றான். இயேசுவைப் பார்த்த மாத்திரத்தில் பிசாசுகளுக்குத் தேவனின் குமாரன் எனத் தெரிகிறது. அதனால்தான் குமாரனே என அழைக்கிறது.
மாற்கு 5 : 8 “இயேசு அவனைப் நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டு போ என்றார்.”
இயேசு அசுத்த ஆவிகளுக்கு உத்தரவு கொடுத்தவுடன், அவைகள் அங்கு மேய்ந்து கொண்டிருந்த பன்றிக் கூட்டத்துக்குள் புகுந்து, ஏறக்குறைய 2000 பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் கடலில் பாய்ந்து அமிழ்ந்து மாண்டது. உடனே அவன் வஸ்திரம் தரித்தவனாய், புத்தி தெளிந்தவனாய் இயேசுவின் அருகில் இருந்தான். மற்றவர்கள் இப்படிப்பட்ட அற்புதம் செய்த இயேசுவைப் பார்த்துப் பயந்தனர். அவன் குணமானவுடன் படகில் ஏறும் இயேசுவிடம் “…அவரோடு கூட இருக்கும்படி தனக்கு உத்தரவு கொடுக்க அவரை வேண்டிக் கொண்டான்.” (மாற் 5:18)
அவன் விடுதலை பெற்றவுடன் இயேசு அவனை சுவிசேஷகனாக ஆக்கினார். நீங்களும் உங்கள் கட்டுகளிலிருந்தும், பாவங்களிலிருந்தும் விடுதலை பெற்றவுடன் தேவனுக்குப் பிரியமான நற்கிரியைகளைச் செய்ய வேண்டும். அப்பொழுது இயேசு உங்களை இரட்சிப்பார். நம் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு திட்டத்தில் தேவனுக்கு கனி கொடுக்க வேண்டும் என்று தேவன் படைத்திருக்கிறார். அவருடைய சித்தத்தை நாம் நிறைவேற்றி, அவருக்குக் கனி கொடுக்கிறவர்களாக மாறுவோம். யார் மிகுந்த கனிகளைக் கொடுப்பார்கள் என்றால்,
“நானே திராட்சை செடி, நீங்கள் கொடிகள் ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (யோவா 15:5) உங்கள் குடும்பம் லேகியோனைப் போல தள்ளி வைக்கப்பட்ட குடும்பமாக இருக்கலாம். உங்களை மற்றவர்கள் அற்பமாக எண்ணலாம். மனம் தளராதீர்கள். தாவீது கூட தன் சகோதரர்களால் அற்பமாக எண்ணப்பட்டார். ஆனால் கர்த்தர் தாவீதைத் தான் தெரிந்து கொண்டார். இஸ்ரவேலின் ராஜாவாக உயர்த்தினார். 40 வருடங்கள் தொடர்ந்து இஸ்ரவேலின் மேலும் யூதாவின் மேலும் அரசாட்சி புரிந்தார். அதே போல் தேவன் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் உயர்த்துவார்.
இயேசுவின் வல்லமையைக் கண்டவுடன் பிசாசுகள் நடுங்குகின்றன. வைத்தியர்களால் குணமாக்க முடியாத பைத்தியங்கள், மந்திரவாதிகளால் குணமாக்க முடியாத பைத்தியங்கள், பில்லி, சூனியக்கட்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இயேசுவின் வல்லமையின் மூலம் சுகமடைவர். இயேசு என்ன கூறுகிறாரெனில்
“… நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விகவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்.” (மாற் 11:24) மகிமையின் தேவன் மகிமையில் உங்களை நிரப்புவாராக. ஆமென்.