Menu Close

நீர்க்கோவை வியாதியுள்ளவனை சுகமாக்கினார் லூக்கா 14 : 1 – 6

இயேசுவுக்கு பரிசேயர் வீட்டில் விருந்து:

லூக்கா14 :1,2 “ஒரு ஓய்வு நாளிலே பரிசேயரின் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார். அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.”

ஓய்வுநாள் ஆராதனையை இயேசு முடித்து விட்டு, இயேசுவோடு எப்போதும் வாக்குவாதம் செய்கிற பரிசேயரின் தலைவன் ஒருவன், இயேசுவை விருந்துக்கு அழைத்ததால், அவனுடைய வீட்டிற்கு இயேசு சென்றார். அங்கு அநேக நியாய சாஸ்திரிகளும், பரிசேயர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இயேசு தன்னை அழைக்கிறவர்களைக் கனம் பண்ணுகிறவர். அழைத்த வீட்டுக்கு மட்டுமல்ல அழைக்காத சகேயுவின் வீட்டிற்கும் இயேசு சென்றார் (லூக்கா 19 : 5). இதேபோல் இயேசு பல சமயங்களில் விருந்து வீடுகளுக்குச் சென்றதை வேதத்தில் பார்க்கிறோம். அவர்கள் நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதனை ஓய்வுநாளில் சுகமாக்குகிறாரா என்று பார்க்க, அவனை அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்து வைத்திருந்தனர். ஜனங்களும் அவர் என்ன செய்வாரோ என்று பார்க்க ஆவலாயிருந்தனர். 

 யூதர்கள் மிகவும் சுத்தமானவர்கள். பரிசேயர்கள் வியாதியுள்ளவர்களை விருந்துக்கு அழைக்க மாட்டார்கள். அதிலும் அந்த வியாதியஸ்தனை இயேசுவுக்கு முன்பாக உட்கார வைத்திருந்தனர். இயேசுவை ஒரு சதி வலையில் சிக்க வைக்கத்தான் விருந்துக்கு அழைத்திருந்தனர். பரிசேயர்கள் இயேசுவை எப்பொழுது, எதில் குற்றம் கண்ண்டுபிடிக்கலாம் என்று காத்திருப்பவர்கள். இயேசு இந்த மனிதனை அந்த ஓய்வுநாளில் சுகமாக்கினால் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினவர் என்று குற்றம் சாட்டலாமென்றும், இயேசு குணமாக்காமலிருந்தால் இயேசுவை இரக்கமுள்ளவர் என்று சொல்லுகிறீர்களே அது மாய்மாலம் என்றும் குற்றம்சாட்ட இருந்தனர். இது இயேசுவுக்குத் தெரியும் தெரிந்தே அங்கு சென்றார். 

இதேபோல் லூக்கா 11 : 3 லும் இயேசு பரிசேயன் அழைத்ததால் அவனுடைய வீட்டிற்குச் சென்றார். லூக்கா 7 : 36 லும் பரிசேயன் ஒருவன் தன் வீட்டுக்கு இயேசுவை அழைத்திருந்தான் அப்பொழுதுதான் பாவியாகிய ஒரு ஸ்திரீ இயேசுவுக்குப் பரிமளத் தைலத்தைப் பூசினாள். நம்முடைய பிரதான ஆசாரியரான இயேசு,எபிரேயர் 7 : 26 “பரிசுத்தரும், குற்றமில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களில் உயர்ந்தவருமாயிருக்கிறவர்”. இயேசுவோ எல்லோருக்கும் நன்மை செய்கிறவராகவே சுற்றித் திரிந்தார் (அப்போஸ்தலர் 10 : 38) இயேசுவின் பார்வையில் விருந்து என்பது ஐக்கியத்திற்கும் , அன்புக்கும் , நன்றிக்கும் அடையாளமாகக் கொடுப்பதாகும். . 

இயேசுவின் உபதேசம்:

லூக்கா 14 : 3 -6 “இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வு நாளிலே சொஸ்தமாகிறது நியாயமா என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு, அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கி விடானோ என்றார்.”

இயேசுவை அழைத்தவர்களுக்கு ஓய்வு நாள் தான் முக்கியம். அவர்களுக்கு வியாதியிலிருந்து, வேதனையிலிருந்தும் ஒருவனுக்கு சுகம் கொடுப்பது முக்கியமல்ல என்றனர். இயேசு குற்றம் கண்டுபிடிக்க வந்தவர்களைப் பார்த்து ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டதற்கு, அவர்கள் பேசாமல் இருந்தனர். இயேசுவின் சீஷர்கள் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து தின்றதால் மத்தேயு 12 : 2 லும் பரிசேயர்கள் இயேசுவிடம் ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே” என்று கேட்டனர். மத்தேயு 22 : 35, 36 லும் இயேசுவை சோதிப்பதற்காக “நியாயப்பிரமாணத்தின் எந்தக் கற்பனை பிரதானமானது” என்று கேட்டான். எனவே இயேசு அந்த வியாதியஸ்தனை தாமாக அழைத்து, அந்த வியாதியிலிருந்து உடனே அவனைக் குணமாக்கி அனுப்பினார். அதன் பின் அவர்களை நோக்கி உங்களிடம் உள்ள ஒரு கழுதையாவது, எருதாவது குழியிலே ஓய்வுநாளில் விழுந்தால் அதைத் தூக்கி விட மாட்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள் பதில் கூறவில்லை. காரணம் நிச்சயமாக அவர்கள் அதைத் தூக்கி விடுவார்கள் என்பதுதான். 

அதேபோல் தேவையுள்ளவர்களுக்கு ஓய்வுநாளில் உதவி செய்வதில் எந்தத் தவறும் இல்லையென்பதை அவர்களுக்கு உணர்த்தினார். அந்த விருந்து வீட்டில் இறுகலான சூழ்நிலை உண்டானது. இவர்களிடமிருந்து கனி வரும் என்று இயேசு எதிர்பார்த்தார். ஆனால் அவர்களிடமிருந்து எந்தக் கனியும் வரவில்லை. தேவன் தன்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கனி கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். முதல் வருடமும், இரண்டாம் வருடமும் கனியில்லை என்றால், அந்த மரத்தை வெட்டிப் போட இயேசுவுக்கு சகல அதிகாரமும் உண்டு. நாம் ஒவ்வொருவரும் கனி கொடுக்கிறவர்களாகத் தேவன் எதிர்பார்க்கிறபடி வாழ அவருடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுப்போம்.நீர்க்கோவை வியாதி உள்ளவனை ஒரு நொடிப் பொழுதில் சுகமாக்கினார். கர்த்தரின் வல்லமையை இந்த அற்புதத்தில் பார்க்கிறோம் இதேபோல் நாமும் தீராத வியாதியாக இருந்தாலும், தீராத பிரச்சனையாக இருந்தாலும் இயேசுவண்டை வரும்பொழுது அவர் நம்மை அதிலிருந்து பரிபூரண சுகத்தையும், ஆரோக்கியத்தையும், விடுதலையும் கொடுப்பார். ஆமென்.

Related Posts