Menu Close

1 யோவான் 3 : 1 – 1 John 3 : 1 in Tamil

“நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவா. 3:1). 

சற்று சிந்தித்துப் பாருங்கள். தேவன் நம்மேல் எவ்வளவு பெரிய அன்பு பாராட்டி நம்மை அவருடைய சொந்தப் பிள்ளைகள் என்று அழைக்கிறார். சற்று அதை சிந்தியுங்கள், தியானியுங்கள். உள்ளத்தில் அனல் கொள்ளுங்கள். ஆவியில் பரவசம் அடையுங்கள்.

மட்டுமல்ல, “நான் தேவனுடைய பிள்ளை ” என்று திரும்பத் திரும்ப ஒரு நூறு முறையாவது சொல்லுங்கள். “நான் உன்னதமான தேவனுடைய பிள்ளை ,” “ராஜாதி ராஜாவுடைய பிள்ளை .” “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளை .” “வானத்திலும் பூமியிலும் சகல அதிகார முடைய சர்வவல்லவருடைய பிள்ளை .” “அண்டசராசரங்களைச் சிருஷ்டித்துக் காத்து பயன்படுத்தி வருகிற உன்னதமான தேவனுடைய பிள்ளை” என்று அறிக்கையிடுங்கள். அப்போது தேவவல்லமை உங்களை நிரப்பும். எல்லாக் காரிருளின் அதிகாரங்களும் உங்களைவிட்டு ஓடிப்போகும்.

நீங்கள் அனாதைகள் அல்ல. திக்கற்றவர்கள் அல்ல. வானத்தின் கீழே திறந்துவிடப்பட்டவர்கள் அல்ல. நீங்கள் கர்த்தருடைய குடும்பத்தில் இருக் கிறவர்கள். அவரை அப்பா பிதாவே” என்று அழைக்கிற புத்திர சுவிகார ஆவி உங்களுக்குள்ளே இருக்கிறது. கர்த்தருடைய பிள்ளையாய் இருக்கிற உங்கள் மேல் சாத்தான் தன் கையை வைக்கவும் முடியாது. தன்னுடைய அதிகாரத்தை செலுத்தவும் முடியாது. நீங்கள் மகிமையின் ராஜாவின் குடும்பத்தில், உன்னத மான தேவனுடைய குடும்பத்தில் செல்லப் பிள்ளையாய் இருக்கிறீர்களே,

நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறபடியினால் அவருடைய சுதந்திரர்களாகவும் இருக்கிறோம். தகப்பனுடைய சொத்துக்கும் ஆஸ்திக்கும் பிள்ளை உரிமையானவன் அல்லவா? அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார்: “நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே” (ரோமர் 8:17). நாம் எதற்கு சுதந்திரர் தெரியுமா? தேவனுடைய – ஒவ்வொரு வாக்குத்தத்தங்களுக்கும் சுதந்திரர். அவருடைய வல்லமைகளுக்கும் அதிகாரங்களுக்கும் சுதந்திரர். அவருடைய ஆளுகைக்கு சுதந்திரர். அவருடைய நித்தியத்திற்கு சுதந்திரர். பரலோக ராஜ்யத்திற்கு சுதந்திரர். ஆ! அவர் நம்மேல் பாராட்டின அந்த அன்பு எவ்வளவு பெரியது என்று பாருங்கள்!

நாம் பிள்ளைகள் என்ற உரிமையோடு அவரை, “அப்பா, பிதாவே” என்று அழைக்கும் புத்திர சுவிகார ஆவியை நமக்குத் தந்திருக்கிறார். நாம் தேவ னுடைய பிள்ளைகளானபடியால் நம்முடைய ஜெபத்தையெல்லாம் கேட்கிற நாம் அவருடைய நாமத்தினால் வேண்டிக்கொள்வதையெல்லாம் அவர் நமக்கு தந்தருளுகிறார். இயேசு நமக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுக்கும் போது. “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று உரிமையோடு அழைத்து ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தாரே!

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகள் என்கிற சிலாக்கியத்திலே நிலைத்து நிற்பீர்களாக. அந்த பாக்கியமான சுதந்திரத்தை ஒருபோதும் தவறவிட்டுவிடாதேயுங்கள்.

Related Posts