Menu Close

மத்தேயு 5:16 – Matthew 5 : 16 in Tamil

“மனுஷர் உங்கள் நற்கிரியைகனைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16). 

நாம் கிறிஸ்துவின் நாமத்திலே இந்த உலகத்திற்கு நற்கிரியை செய்யும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். நற்கிரியைகளை செய்வதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு தேவனுடைய சிருஷ்டியாய் இருக்கிறோம் என்று (எபேசி.2:10) அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார்.

உலகம் தீய காரியங்களினால் நிரம்பியிருக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடூரமான செயல்களைச் செய்கிற மக்கள் மத்தியிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் கர்த்தரோ நம்மை இந்த உலகத்திற்கு உப்பாக, உலகத்திற்கு வெளிச்சமாக மட்டுமல்ல, உலகத்திற்கு நற்கிரியைகளைச் செய்கிறவர்களாக ஏற்படுத்தியிருக்கிறார். நாம் தேவனுடைய உன்னதமான அன்பை வெளிப்படுத்தும்படி அழைக்கப்பட்டவர்கள்.

ஒரு காலத்தில் நீங்கள் துன்மார்க்கமாய் தேவனற்றவர்களாய் இருந்திருக்கலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் வரும்போது புது சிருஷ்டிகளாய் இருக்கிறீர்கள். “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின” (2கொரி 5:17). கிறிஸ்து இந்த உலகத்திலிருந்தபோது நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் (அப்.10:38). “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்” என்று நற்கிரியைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன (ஏசா. 61:1-3).

சிலர் நற்கிரியைகள் செய்வதில் சோர்ந்துபோய் விடுவார்கள். மற்றவர்களுக்கு நற்கிரியைகள் செய்து யாருக்கு என்ன லாபம்? பாம்புக்கு பால் ஊற்றுவது போலிருக்கிறது என்று அங்கலாய்த்து க்கொள்ளுகிறார்கள். தேவ பிள்ளைகளே, நற்கிரியைகளைச் செய்வது பதில் உபகாரத்தை எதிர்பார்த்து அல்ல, பதில் உபகாரம் நமக்கு நித்தியத்தில்தான் உண்டு. ஆனால் நற்கிரியைகளைச் செய்யும்போது கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறோம். சுவிசேஷம் பரவுவதற்கு அது ஏதுவாயிருக்கிறது. ஆகவே “சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார்” (ரோமர் 2:7).

தேவனுடைய பிள்ளைகள் நற்கிரியைகள் செய்வதில் மட்டுமல்ல, எதிலே பெருகவேண்டும்? மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரண முடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச் செய்ய வல்லவராயிருக்கிறாரே” (2கொரி.9:8). தேவனுடைய பிள்ளைகளே, உங்களுக்கு முன்பாக தேவையுள்ள மக்கள் பிரச்சனையிலே வாடுகிற மக்கள் எவ்வளவு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். உங்களுடைய நற்கிரியைகள் புண்பட்டவர்களுடைய உள்ளத்திற்கு கிலேயாத்தின் பிசின் தைலமாக விளங்குவதாக.

Related Posts