சங்கீதக்காரன் சங்கீதம் 46 : 10ல் “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்” என்றார். ஏசாயா தீர்க்கதரிசி ஏசாயா 28 : 16 ல் “விசுவாசிக்கிறவன் பதறான்” என்கிறார்.
தேவனிடம் உறுதியான அஸ்திபாரத்தை நாம் வைத்து அமர்ந்திருப்போமானால் எந்த சோதனையிலும், பாடுகளிலும், துன்பத்திலும் அசைக்கப்படுவதில்லை. நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து சிறைபிடித்து வந்த வாலிபர்களில் தானி யேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ஞானத்திலும், அறிவிலும் அவர்களைச் சிறந்தவர்களாகவும், பத்து மடங்கு சமர்த்தராகவும் இருப்பதைக் கண்டு, ராஜா அவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களுக்கு முக்கிய பொறுப்பு களைக் கொடுத்தார் (தானியேல் 1 : 1- 4, 18 – 20). நேபுகாத்நேச்சார் தன்னுடைய பெருமையை மற்றவர்களுக்கு காண்பிக்க 60முழ உயரமும், 6 முழ அகலமு மான பொன்னினால் செய்யப்பட சிலையை பாபிலோன் மாகாணத்திலுள்ள தூரா என்னும் சமபூமியில் நிறுத்தினான். அந்தச் சிலையைப் பணிந்து கொண்டால் ராஜாவைப் பணிந்து கொள்வதற்குச் சமமாகும். ராஜா அனைவரும் அந்தப் பொற்சிலையைப் பணிந்து கொள்ள வேண்டுமென்றும், யாராவது அதைப் பணிந்து கொள்ள மறுத்தால் அவர்களை அந்நேரத்திலேயே எரிகிற அக்கினிச் சூளையில் போடப்படும் என்று சட்டம் போட்டார் (தானியேல் 3 : 4- 6). சகல ஜனங்களும் ராஜாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அதை வணங்கினர்.
யூத வாலிபரில் மூன்று பேர் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் தங்களுடைய தேவனையல்லாமல் வேறு தேவர்களை வணங்கக் கூடாது என்ற வைராக்கியத்தில், ராஜாவின் சட்டத்தை மதித்து அந்தப் பொற்சிலையைப் பணிந்து கொள்ளவில்லை. நேபுகாத்நேச்சார் இட்ட பொற்சிலையைத் தாழ விழு ந்து வணங்க மறுத்ததை அறிந்த ராஜா, இப்பொழுதே அந்தச் சிலையைப் பணிந்து கொள்ளுங்கள், அவ்வாறு செய்யாவிட்டால் எரிகிற அக்கினிச் சூளையிலே போடப்படுவீர்கள். அதிலிருந்து எந்த தேவனாலும் உங்களைத் தப்புவிக்க முடியாது என்றார். வாலிபர்கள் மூவரும் ராஜாக்கட்டளையை மீறத் துணிந்தனர். மூவரும் ராஜாவைப் பெயர் சொல்லி அழைத்து, ராஜாவின் கேள்விக்குத் தாங்கள் பதில் சொல்ல அவசியமில்லையென்றும், தாங்கள் ஆராதிக்கிற தேவன் தங்களை எரிகிற அக்கினிச் சூளைக்குத் தப்புவிப்பாரென்றும், தப்புவிக்கா விட்டாலும் தாங்கள் அந்தப் பொற்சிலையைப் பணிந்து கொள்வதில்லையென்றும் விசுவாச அறிக்கையிட்டு வைராக்கியமாகத் தங்களுடைய தேவனாகிய கர்த்தரைத் தவிர மற்ற தெய்வங்களை வணங்க மறுத்தனர்.
யாத்திராகமம் 20 : 3, 5 ல் கொடுக்கப்பட்ட இரண்டு கட்டளைகளை மீற அவர்கள் பிரியப்படவில்லை. ரோமர் 8 : 31, 33, 34 ல் கூறியிருப்பதை ராஜா அறியவில்லை. ராஜா கோபத்தில் அக்கினிச் சூளையை 7 மடங்கு அதிகமாகும்படி உத்தரவிட்டு பலசாலியான புருஷர்களைக் கொண்டு மூவரும் உடுத்தியிருந்த வஸ்திரங்களோடு அக்கினிச் சூளையில் போடக் கட்டளையிட்டார். ராஜாவின் கட்டளையின்படி பலசாலியான 4 வாலிபர்கள் மூன்றுபேரையும் தூக்கிப் போட்ட பொழுது, அந்த வாலிபர்களை அக்கினி பட்சித்து அவர்கள் மாண்டனர். ஆனால் அக்கினியில் எறியப்பட்ட எபிரேய வாலிபர்கள் பிழைத்து அக்கினியில் உலாவினர். அதற்குக் காரணம் தேவன் அந்தச் சூளையில் இறங்கி தம்முடைய தாசர்களோடு உலாவினார். ராஜா சூளையைப் பார்த்த போது நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் கண்டார். அவர்களுக்கு ஒரு சேதமுமாகாததையும், நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறதையும் பார்த்தார். எனவே ராஜா தன் வாயால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷண வார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப் போடப்படுவர் என்றும், அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்றும் கட்டளையிட்டான். இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான். (தானியேல் 3 : 25, 26).
ஒரு தடவை யூத புத்திரருக்கு எதிராக சீரியரோடு வந்த ரேத்சீனும், ரெமலியாவும் யுத்தம் பண்ண வந்த போது யூத ராஜாவின் இருதயம் காட்டிலுள்ள மரங்கள் அசைவது போல அசைந்தது. அப்போது கர்த்தர் ராஜாவை நோக்கி புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய அவர்களுக்குப் பயப்பட வேண்டாம் என்றார். தன்னுடைய பிள்ளைகளின் சத்துருக்களைப் புகைகிற கொள்ளிக்கட்டை என்கிறார். வெறுமனே புகைந்து கொண்டிருக்கிற கொள்ளிக்கட்டை எதையும் அழிக்க முடியாததைப் போல, எந்தப் பிசாசும், எந்த மனுஷனும் தீங்கிழைக்க முடியாது. அவர்களின் ஆலோசனை நிலை நிற்பதில்லை (ஏசாயா 7 : 6, 7).
சங்கீதம் 37 : 20 “ துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.”
சங்கீதம் 94 : 12 “ கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும் வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,”
ஏசாயா 25 : 4 “ கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.”
என்ற வாக்குத்தத்தங்களைப் பற்றிக் கொண்டு நாமும் கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்திருந்து அவருடைய கிருபையையும், தயவையும், இரக்கத்தையும் பெறுவோம். ஆமென்.