எலியா கர்த்தரின் கட்டளையை நிறைவேற்றிய ஒரு ஆண்டுகளுக்குப் பின் கேரீத் ஆற்றில் நீர் வற்றி விட்டதால், தேவன் எலியாவிடம் அடுத்த கட்டளையாக, பாகாலை வணங்குபவர்கள் இருக்கும் புறஜாதியரின் எல்லைப் பகுதிக்குப் போகுமாறு கூறுகிறார். தேவன் யாருக்கும் குவியலாகக் கட்டளை கொடுப்பதில்லை. கீழ்ப்படிய மனமுள்ளவர்களுக்கு மட்டுமே மீண்டும் வழங்குவார். சாரிபாத் ஊர் ஒரு புறஜாதியரின் தேசம். இது எலியா இருந்த இடத்திலிருந்து 75 மைல் தூரத்திலிருந்தது. இந்தப் பிரயாணம் கடுமையான பிரயாணம். இது எதிரியான இஸ்ரேலின் தாய்நாடான சீதோனுக்குட்பட்ட பகுதி. சீதோன் தேசத்திலுள்ளவர்கள் விதவைகளை அபசகுணமுள்ளவர்கள் என்றும், துரதிர்ஷ்டசாலிகள் என்றும் நினைப்பர். விதவைகளை அங்கு மதிக்கப்படுவது கிடையாது. அவர்களை நகரங்களை விட்டு எல்லைபுறப் பட்டணங்களில் குடியிருக்க அனுப்பிவிடுவர். அப்படிப்பட்ட இடத்தில்தான் இந்த விதவையும் இருந்தாள். ஏனெனில் எதிரி படையெடுத்து வரும்போது முதலில் அடிபடுகிறவர்கள் எல்லைப்புறத்தில் உள்ளவர்கள் தான். அப்படிப்பட்ட ஒருத்திக்கு அற்புதம் செய்யத் தேவன் எலியாவை அனுப்பினார்.
1 இராஜாக்கள் 17 : 8, 9 “அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.”
கேரீத்தில் ஒளிந்து கொண்டு இரு என்று கூறின தேவன், சாறிபாத் ஊரில் தங்கியிரு என்று கூறியதைப் பார்க்கிறோம். மேலும் இந்தக் கட்டளையில் எலியாவைப் பராமரிக்க விதவைக்குக் கட்டளையிட்டேன் என்கிறார். எலியா இத்தனை நாளும் காகம் கொண்டு வரும் உணவை உண்டதால், இனி நல்ல சாப்பாடு கிடைக்குமென்று நினைத்திருப்பார். ஆனால் கர்த்தரோ எலியாவை அடுத்த நிலைமைக்குக் கொண்டு போகத்தான், அந்த நீர் ஊற்றை வற்றிப் போகப் பண்ணினார். உடனே எலியா துணிச்சலுடன் ஒளிந்து கொண்டு செல்லாமல், ஒலிமுகவாசல் வழியாகச் சென்றார். எல்லோரும் அவரை அறிந்திருந்தும் யாரும் அவரைப் பிடிப்பதற்குக் கர்த்தர் ஒப்புக் கொடுக்கவில்லை. அந்த ஒலிமுக வாசலில் ஒரு விதவை விறகு பொறுக்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் எலியா தன்னைப் பராமரிக்கப் போகிறவள், இந்த விதவை தான் என்று தன் ஆவியில் உணர்ந்தான்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
அவள் விறகு பொறுக்கிக் கொண்டிருந்ததால் அவள் ஒரு ஏழை என்று அறிந்து கொண்டார். அந்த விதவையிடம் தேவன் கூறியிருப்பார் என்றெண்ணி குடிக்கிறதுக்குக் கொஞ்சம் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொண்டு வா என்றார். எலியா பேசும் எபிரேய மொழி அந்த விதவைக்குத் தெரியாது. அந்த விதவை பேசும் சீதோனிய மொழி எலியாவுக்குத் தெரியாது. கை ஜாடையில் தான் கேட்டிருப்பார். அந்த விதவை தண்ணீரை எடுத்துக்கொண்டு வரப் போகிற போது எலியா திரும்பவும் அவளை கூப்பிட்டுக் கொஞ்சம் அப்பமும் கொண்டு வா என்கிறார். அதற்கு அவள் என்னிடம் ஒரு பிடிமாவும் கொஞ்சம் எண்ணையும் மட்டுமே உண்டு. அதில் அடைகளைப் பண்ணி, நானும் என் குமாரனும் செத்துப் போவதற்காகத் தான் இந்த இரண்டு விறகுகளைப் பொறுக்குகிறேன் என்று உம்முடைய தேவனாகிய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்.
இதில் அந்த விதவை கர்த்தரை நம்பாதவள் என்பதால், உம்முடைய தேவன் என்று கூறுகிறதைப் பார்க்கிறோம். இவ்வாறு அவள் தன் சரித்திரத்தைச் சொல்லி முடித்தபின், எலியா அவளிடம், பயப்படாதே நீ கூறினபடியே ஆயத்தப்படுத்து. ஆனால் முதலில் ஒரு சிறிய அடையைப் பண்ணி எனக்குத்தா. பின்பு உன் குமாரனுக்குப் பண்ணலாம் என்றார். கர்த்தர் கடைசி நாள் சாப்பாட்டை சாப்பிட்டுச் செத்துப்போகவிருக்கும் ஒரு பெண்ணிடம் எலியாவை அனுப்புகிறார். ஆனால் பஞ்சம் முடிந்து திரும்ப எருசலேமுக்குச் சென்று அவருடைய ஊழியத்தைத் தொடங்கும் வரை, கர்த்தர் எலியாவை அந்த வீட்டில்தான் வைத்திருந்தார். அதனால் தான் தேவன் “உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல” என்கிறார். மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழிகள் உண்டு. ஆனால் அது மரண வழிகள். என்று வேதம் கூறுகிறது. அந்த விதவை விசுவாசிப்பதற்காக எலியா
1 இராஜாக்கள் 17 :14 “கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணை குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.”
அதைக் கேட்டவுடன் அவள் விசுவாசித்து எலியாவின் சொற்படி முதலில் எலியாவுக்கு அடையைப் பண்ணிக் கொடுத்தாள். அப்பொழுது அவளுடைய வாழ்க்கையில் அற்புதம் நடந்தது. கர்த்தர் நாம் நினைத்தபடி ஆசியளிக்காமல், அவர் நினைத்தபடி நம்மை ஆசீர்வதிப்பார். அவருடைய வழி ஜீவ வழி. பஞ்சகாலம் முடியும் வரை, அவளுடைய பானையில் மா செலவழிந்து போக்கவுமில்லை. எண்ணை குறையவுமில்லை. இதில் தேவன் எலியாவை நடத்திய செயல், எலியாவுக்குத் தேவன் பேரில் இருந்த விசுவாசத்தை உறுதிப்படுத்தியது. நாம் தேவனுடைய சித்தத்திற்கு அடங்கியிருக்கும் போது நமக்குத் துன்பங்கள் வரலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் தேவன் நம்மை ஒரு அற்புதமான வழியில் நடத்தி, அதிலிருந்து விடுவிப்பார். நாம் எதிர்பார்ப்பதற்கும் மேலாக அவருடைய பாதுகாப்பு இருக்கும்.
ஒரு ஏழை விதவையின் துன்பமும், தேவைகளும் ஆண்டவருடைய பார்வையில் அற்பமானவைகள் என்பதை இதிலிருந்து அறிகிறோம். அந்த நெருக்கடியான பஞ்ச நேரத்தில் அந்த விதவையைப் பாதுகாக்கத் தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பியதையும், அந்த தீர்க்கதரிசியின் மூலம், அவர் கூறிய வார்த்தைகளை அவள் விசுவாசித்து, அவளிடமிருந்த நிச்சயமற்ற தன்மைக்குப் பதிலாக நிச்சயத்தையும், காணப்படாதவைகளுக்குப் பதிலாகக் கண்டு உணரும் நிலைமையையும் பெற வைத்தது, அந்த விதவையின் விசுவாசமும் கீழ்ப்படிதலும் தான். எலியாவின் மூலமாக உணவு என்னும் உலகப்பொருளைப் பெற்றது மட்டுமல்லாமல் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டாள். விசுவாசமும் கீழ்படிதலும் அற்புதத்தைப் பெறுவதற்கான வழிகள். இந்த விதவையைக் குறித்து இயேசு லூக்கா 4 : 25, 26ல்
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
“அன்றியும் எலியாவின் நாட்களிலே 3 வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப் படவில்லை”
என்பதைப் பார்க்கிறோம். யாராயிருந்தாலும், இஸ்ரவேல் தேசமல்லாதவர்களாயிருந்தாலும் தேவன் உதவி செய்கிறவராயிருக்கிறார். எலியாவின் வார்த்தையின்படி அந்த விதவை செய்த போது, அவளும் அவள் வீட்டாரும் பஞ்ச காலம் முடியும் வரை எந்தக் குறைவுமில்லாமல் ஆசீர்வதிக்கப் பட்டனர். எலியா அவளிடம் என்ன கூறினான் என்றால், உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதை முதலில் எனக்குக் கொடு என்பதுதான். அதேபோல் நாமும் நம்மிடம் என்ன இருக்கிறதோ, அதைத் தேவனிடம் கொடுக்கும் போது அதைத் தேவன் நூறு மடங்காக ஆசீர்வதித்துக் கொடுப்பார். மெய்யான தேவ மனிதனின் அடையாளம் எலியாவுக்குக் கொடுத்ததை கர்த்தர் நூறு மடங்கு திருப்பிக் கொடுத்தார். எலியா யாருக்கும் கடனாளி அல்ல. ஒரு வீட்டுக்குப் போனால் அந்த வீட்டை ஆசீர்வதிப்பார். எலியா ஒரு தேவ மனிதன்.