ஆலயத்தில் கூனி:
லூக்கா 13 : 10,11 “ ஒரு ஓய்வுநாளில் இயேசு ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கே இருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக் கூடாத கூனியாயிருந்தாள்.”
இந்த அற்புதத்தை லூக்கா மட்டும்தான் குறிப்பிட்டுள்ளார். இந்த அற்புதம் இயேசுவின் ஊழிய நாட்களில் கடைசியாக நடந்தது. இயேசு ஒரு ஓய்வுநாளில் தேவாலயத்தில் பிரசங்கம் பண்ணிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த ஆலயத்தில் 18 வருடமாகப் பலவீனப்படுத்தும் ஆவியோடுள்ள ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். 18 வருடம் என்பதால், இது பிறவியில் அந்த பெண்ணுக்கிருந்த கூன் அல்ல. இந்தப் பெண் வேதத்தில் கூறப்பட்டுள்ள கொடிதான நோயில் மிகவும் பாதிக்கப்பட்டவளாக இருந்தாள். அந்த ஆவியானது அவள் நிமிரக் கூடாதபடி, அவளைக் கட்டி வைத்திருந்தது. அன்றிலிருந்து அவளால் நிமிர்ந்து பார்க்க முடியாதவளாக இருந்தாள். இந்தப் பெண் இப்படிப்பட்ட வியாதியிலிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஆலயத்துக்கு வந்திருந்தாள். இவள் ஆண்டவரைத் தேடுவதிலும் தொழுது கொள்வதிலும் உண்மையாக இருந்திருக்கிறாள். ஆண்டவரைத் தேடுவதற்கு இவளுடைய வியாதியோ, பலவீனமோ தடையாக இல்லை. அந்தத் தடைகளை உடைத்து தேவனைத் தேடுவதிலும், போதகத்தைக் கேட்பதிலும் கருத்தாய் இருந்தாள்.
அன்னாள் தன்னுடைய பிரச்சனைக்கான பரிகாரத்தை தேவ சமூகத்தில் தேடினாள் (1சாமுவேல் 1 : 11). தேவன் அவள் புலம்பலை ஆனந்தக் களிப்பாக்கினார். எசேக்கியேலைச் சுற்றி விரோதிகள் சூழும் போது அவர்கள் கொடுத்த ஒரு கடிதத்தை ஆலயத்தில் விரித்து வைத்து தேவ சமூகத்தில் அவர் கண்ணோக்கிப் பார்க்கும்படி ஜெபித்தார் (2 இராஜாக்கள் 19 : 14). நடந்தது என்னவென்றால் ஒரே ராத்திரியில் ஒரு தூதன் வந்து 180000 பேரைக் கொன்று குவித்து வெற்றியைக் கொடுத்தார். இயேசு இந்தப் பெண்ணை தனிப்பட்ட விதத்தில் சந்தித்தார். நாமும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு உள்ளவர்களாக வாழ வேண்டும். வியாதிகள் பாவத்தின் விளைவாகவோ, சாத்தான் கொண்டு வருவதன் மூலமாகவோ வரலாம். சாத்தான் திருடவும், கொல்லவும், அழிக்கவும் தான் வருவான். சரீரத்தின் சுகத்தை, ஆரோக்கியத்தை, பலத்தை, வல்லமையைத் திருடுகிறான். அந்தப் பெண் தன்னைக் குணமாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஆலயத்துக்குள் வரவில்லை.
இயேசு செய்த அற்புதம்:
லூக்கா13 :12,13 “இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.”
உலகத்திலுள்ளவர்கள் அந்தப் பெண்ணின் கூனைப் பார்த்து, அது இயற்கையாக ஏற்பட்ட கூன் என்று எண்ணினார்கள். ஆனால் கர்த்தரோ, அது சாத்தானின் கட்டு என்பதை அறிந்தார். ஏவல் பிசாசினால் 18 வருடமாக கட்டப்பட்டிருந்தாள். சாத்தான் கட்டுகிறவன், கெடுக்கிறவன், விலங்கைப் போல் மாற்றுகிறவன். ஆனால் இயேசுவோ அந்தக் கட்டிலிருந்து அந்தப் பெண்ணை விடுதலையாக்க அவளைக் கண்டார், அழைத்தார். இயேசு அவளை அழைத்தவுடன் அவரிடம் உடனே சென்றாள். “உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப் பட்டாய் என்று சொல்லி,” தன்னுடைய கைகளை அந்தப் பெண்ணின் மேல் வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து பார்த்துத் தேவனை மகிமைப்படுத்தினாள். லேவியராகமம் 26 : 13ன் படி அவளை நிமிர்ந்து நடக்கப் பண்ணினார். மனதளவிலும், சரீரத்திலும் பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் உள்ள இந்தப் பெண்ணை அன்றே சுகம் கிடைக்கச் செய்தார். இது பாவத்தில் வாழும் மனிதர்களுக்கு அடையாளமாயிருக்கிறது. ஜெப ஆலயத்தில் அநேகர் இருந்தாலும் அவர்களையெல்லாம் அழைக்காதவர் இந்தப் பெண்ணை மட்டும் இயேசு அழைத்து சுகம் கொடுத்தார். இயேசு நமக்கு ஜீவன் உண்டாயிருக்கும், அது பரிபூரணப்படவும், கட்டுண்டவர்களை விடுதலையாகவும் இந்த பூமிக்கு வந்தார். இதைத்தான் பேதுரு 1
பேதுரு 2: 24 ல் “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்து இருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” என்றார்.
ஜெப ஆலயத்தலைவனின் கட்டளை:
லூக்கா13 :14 “இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெப ஆலயத் தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக் கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.”
இந்த அற்புதத்தை இயேசு ஓய்வுநாளில் செய்ததால், ஜெப ஆலயத் தலைவன் கோபத்துடன் ஜனங்களிடம் ஓய்வு நாட்கள் அல்லாத நாட்களில் வந்து சொஸ்தமாக்கிக் கொள்ளுங்கள் என்றான். ஓய்வுநாளில் சொஸ்தமாக்க வரக்கூடாது என்று கடினமாகக் கூறினான். ஒரு ஏழைப் பெண்ணின் கஷ்டத்தை போக்குவதை விட ஜெபஆலயத் தலைவனுக்குச் சபைக் கட்டுப்பாடே பெரிதாகத் தோன்றியது. சமயத் தலைவர்களுக்கும் இயேசு ஓய்வுநாளில் நன்மை செய்வது விருப்பமில்லை. ஏனெனில்
யாத்திராகமம் 20 : 10 ல் “ ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.” என்றுள்ளது.
சபையின் சடங்குகளை விட மனிதனின் தேவையை பூர்த்தி செய்வதே அவசியம் என்பதை இயேசு செய்து காட்டியதால் அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாத பாரம்பரிய மக்கள் அவரை வெறுத்தனர். ஜெபஆலய மக்கள் இயேசுவை வெறுத்தாலும், இயேசு ஜெபஆலயத்தை வெறுக்காமல் அங்குள்ள தவறுகளைத் திருத்தினார்.
இயேசுவின் உபதேசம்:
லூக்கா 13 :15,16 “ கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறது இல்லையா? இதோ, சாத்தான் 18 வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்து விடவேண்டியதில்லையா என்றார்.”
இயேசு ஜெப ஆலயத் தலைவனைப் பார்த்து மாயக்காரனே என்று அழைக்கிறார். இவர்கள் புதிய ஏற்பாட்டைப் போதிக்கிற மாயக்காரர்கள். இயேசு அவர்களைப் பார்த்து ஓய்வு நாளில் உங்கள் வீட்டிலுள்ள மிருகஜீவன்களைத் தொழுவத்தில் இருந்து அவிழ்த்துக்கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவதில்லையா என்று கேட்டார். அவர்களால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. இயேசு இந்தப் பெண்ணை ஆபிரகாமின் குமாரத்தி என்று கூறுகிறார். ஆபிரகாமின் குமாரத்தி என்பது, ஆபிரகாமின் விசுவாசத்தைப் போல நீதிமானாயிருக்கிற பெண் என்று கூறுகிறார். 18 வருடமாக ஆபிரகாமின் குமாரத்தியான இவளை இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்து விடுவது நல்லதில்லையா என்று கேட்டார். இதிலிருந்து அவள் யூத ஸ்திரீ என்று தெரிகிறது. லூக்கா 19 : 9 ல் சகேயுவைப் பார்த்து “ஆபிரகாமின் குமாரன்” என்றதைப் பார்க்கிறோம்.
ஜனங்களின் சந்தோஷம்:
லூக்கா13 : 17 “இயேசு அப்படிச் சொன்ன போது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக் குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.”
இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டு, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டனர். மோசேயின் நியாயப்பிரமாணக் கட்டுகளைத் தேவன் தகர்த்தெறிந்தார். இயேசுவின் சிலுவை மரணம், பழைய ஏற்பாட்டை முடித்துவிட்டது. அவருடைய உயிர்த்தெழுதலை நினைவுகூர கர்த்தருடைய நாளில் நாம் கூடுகிறோம். நமக்கு ஓய்வு நாள் கிடையாது. பவுல் ரோமர் 10 : 2 ல் பழைய ஏற்பாட்டைப் போதிக்கிற அவர்களிடம் தேவனைப் பற்றிய வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல” என்று கூறினார் ரோமர் 10 : 4 ல் “…கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்” என்று கூறியிருப்பதையும் பார்க்கிறோம்
நாம் ஆண்டவருக்கு முதலிடம் கொடுக்கும் போது அவர் நமது குறைவுகளை நிறைவாக்குவார். 12 வருஷ பெரும்பாடுள்ள ஸ்திரீக்கு சுகம் கொடுத்தவர் கர்த்தர். 38 வருடமாக நடக்க முடியாமலிருந்தவனுக்கு நொடிப்பொழுதில் சுகம் கொடுத்தவர் கர்த்தர். இந்த அற்புதத்தில் 18 வருடமாக கூனியாக இருந்து, பிசாசின் கட்டினால் கட்டப்பட்டிருந்த ஒரு பெண்மணியை இயேசு ஆலயத்தில் கண்டு அன்றே சுகம் கொடுத்து நிமிர வைத்ததைப் பார்க்கிறோம். அவளுடைய வாழ்க்கையில் நித்திய மகிழ்ச்சியைக் கொடுத்தார். உங்களுக்கும் வியாதிகளும், பலவீனங்களும், வருடக்கணக்காக சுகமாகாமல் இருந்தாலும், இந்த நிமிடத்தில் இயேசுவை நோக்கி நீங்கள் பார்க்கும் போது, உங்கள் பலவீனங்களை இயேசு ஏற்றுக்கொண்டு, உங்கள் நோய்களைச் சுமந்து, கட்டுக்களைத் தகர்த்தறிந்து நாளைக்கடத்தாமல் விடுதலையாக்குவார். ஆமென்.