பெத்தானியாவில் உள்ள ஒரு குடும்பம்:
யோவான்11 : 1, 2 “மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்தில் உள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதி பட்டிருந்தான். கர்த்தருக்குப் பரிமளத்தைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்தான்.”
எருசலேமிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் பெத்தானியா என்ற ஒரு கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்திலுள்ள ஒரு குடும்பத்தில் மார்த்தாள், மரியாள், லாசரு என்பவர்கள் வாழ்ந்து வந்தனர். இயேசு அந்த ஊரின் வழியாகச் செல்லும் பொழுதெல்லாம் அவர்கள் வீட்டுக்குச் செல்வார். அங்கு உணவு அருந்தியும் இருக்கிறார். மார்த்தாள் உணவு சமைப்பதிலும், வீட்டு வேலைகள் செய்வதிலும் ஈடுபாடுடையவள். மரியாள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவருடைய வார்த்தைகளைக் கேட்பாள். இந்த மரியாள் தான் யோவான் 12 : 1- 9 ல் இயேசுவுக்குப் பரிமளத்தைலம் பூசி, அவளுடைய தலைமயிரினால் இயேசுவின் பாதத்தைத் துடைத்தவள். இவள் செய்த செயல் உலகமெங்கும் பரவும் என்று இயேசு தன்னுடைய வாயால் கூறினார். சுவிசேஷம் சொல்லப்படும் இடங்களிலெல்லாம் இவள் செய்த செயலும் சொல்லப்படும் என்று கூறினார். இதனால் இந்தக் குடும்பத்தை அனேகர் அறிந்திருந்தனர். மார்த்தாள் மரியாளுடைய சகோதரனாகிய லாசரு வியாதி பட்டிருந்தான்.
இயேசுவிடம் வந்த செய்தியும், அவருடைய பதிலும்:
யோவான் 11 : 3, 4 “அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சினேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதனால் மகிமைப்படுவார் என்றார்.”
முன்னமே இயேசு நடக்கப் போவதைக் கூறியதைப் பார்க்கிறோம். இது பிதாவினுடைய திட்டமாக இருந்தபடியால் லாசருவின் மரணத்தை அனுமதித்தார். இந்த அற்புதத்தினிமித்தம் பெத்தானியா கிராமத்திலுள்ள எத்தனையோ பேர் பிதாவாகிய தேவனைத் தங்களுடைய ஆண்டவராக ஏற்றுக்கொள்ள இருக்கிறார் என்பதை அவர் அறிவார். தேவனுடைய அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது. நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் எதையாவது அனுமதிக்கிறார் என்றால், அதன் மூலமாக தேவனுடைய நாமம் மகிமைப்படப்போகிறது என்பதாகும். மார்த்தாள், மரியாள் இயேசுவிடம் ஆளனுப்பி “நீர் சினேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான்” என்று மட்டும் சொல்லி அனுப்பினார்கள். அவர்கள் இயேசுவைத் தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. என்ன செய்ய வேண்டுமென்பதை அவரே தீர்மானிக்கட்டும் என்று விட்டு விட்டார்கள். நாமும் தேவனிடம் கட்டாயமாக ஒன்றைத் தரச்சொல்லி கேட்கக்கூடாது. அவர் அதை எங்கு, எப்போது சரிசெய்ய வேண்டுமென்பதை அவரே முடிவு செய்வார். அதுதான் நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும். அவர் நாம் கட்டளையிடும் கூலியாள் அல்ல. லாசரு என்ற பெயரைச் சொல்லாமலே “நீர் சிநேகிக்கிறவன்” என்று கூறியதிலிருந்து, இயேசு லாசருவை மிகவும் நேசித்தாரென்று அறிகிறோம். லாசரு வியாதிப்பட்ட நேரத்தில் யோர்தான் நதியின் கீழக்கரையில் பெத்தானியாவிலிருந்து சுமார் 16 மைல் தூரத்தில் இயேசு ஊழியம் செய்து கொண்டிருந்தார்.
இயேசுவிடம் அவர்கள் அனுப்பிய செய்தி வந்து சேருவதற்கு முன்னதாகவே லாசருவின் மரணம் சம்பவித்தது விடுகிறது. இயேசு அந்தச் செய்தியைக் கேட்ட பொழுது, இந்த வியாதி மரணத்துக்கேதுவாய் இராது என்றும், தேவனுடைய குமாரன் அதனால் மகிமைப்படுவார் என்றும் கூறினார். நோயினால் தேவனுடைய நாமம் மகிமைப்படாது. நோயிலிருந்து அற்புத சுகம் கிடைக்கும் பொழுது மட்டுமே தேவனுடைய நாமம் மகிமைப்படும். இந்த அற்புதத்தின் மூலம் தேவனுடைய குமாரனின் நாமம் மகிமைப்படப் போகிறது
இயேசுவின் உபதேசம்
யோவான் 11 : 6 – 10 “அவன் வியாதியாயிருக்கிறதாக இயேசு கேள்விப்பட்ட பொழுது, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் தங்கினார். அதன்பின்பு இயேசு தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார். அதற்கு சீஷர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார்.”
இயேசு லாசருவின் சுகவீனச் செய்தியைக் கேட்ட பின்பும் உடனே அங்கு போகவில்லை. தனக்கு அன்பாய் இருந்தவனாக இருந்தாலும் உலகப் பிரகாரமான எந்த உணர்வுகளின் அடிப்படையிலும் இயேசு செயல் படவில்லை. பிதாவின் சித்தம் செய்வதே அவருடைய பிரதான நோக்கமாயிருந்தது. உணர்ச்சிவசமான ஊழியக்காரனாக இருந்தால், உடனே பெத்தானியாவுக்கு போயிருப்பார். அந்தக் குடும்பத்தாரின் விசுவாசமும், சீஷர்களின் விசுவாசமும் பலப்பட வேண்டுமென்பதற்காகவும், அவர்களுக்குப் பெரிதான நன்மையை அளிப்பதற்காகவும், இயேசு தாமதம் பண்ணினார். தேவனுடைய தீர்மானம் என்னவென்றால் நான்குநாட்கள் கழிந்தபின் லாசருவை உயிரோடெழுப்பி, அதன் மூலம் பிதாவாகிய தேவனும், குமாரனாகிய இயேசுவும் மகிமைப்பட வேண்டுமென்பதுதான். லாசரு வியாதியாயிருக்கிறான் என்ற செய்திக்குப்பின், பெத்தானியாவிலிருந்து வேறு எந்தச் செய்தியும் வரவில்லை.
லாசரு மரித்து விட்டதால் இனி இயேசுவுக்கு அவனுடைய மரணத்தைக் குறித்து எந்தச் செய்தியும் அனுப்ப வேண்டாமென்று முடிவு செய்திருப்பார்கள். ஆனால் எசேக்கியேல் 37 : 12 – 14 ல் “…… என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப் பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீ“ர்கள்.” என்றுள்ளது. யூதேயாவில் இப்படிப்பட்ட ஒரு அற்புதத்தைத்தான் கிறிஸ்து செய்யப் போனார். இயேசு சீடர்களிடம் பெத்தானியாவுக்குப் போவதாகக் கூறாமல் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் என்றார். அதற்கு சீஷர்கள் முன்னால் இயேசு அந்த இடத்திற்குச் சென்றிருந்த பொழுது நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10 : 30) என்றதால் ஜனங்கள் இயேசுவை நோக்கிக் கல்லெறிந்தனர். அதனால் இயேசு அங்கிருந்து வெளியேறினார். இதை சீஷர்கள் ஞாபகப்படுத்தினர்.
அதற்கு இயேசு சீடர்களிடம் பகலுக்கு 12 மணி நேரம் உண்டு, ஆதலால் அதை யாராலும் மாற்ற முடியாது. பகலில் வெளிச்சம் காணப்படுவதால் இடறமாட்டார்கள். இரவில் வெளிச்சம் தெரியாததால் இடறுவார்கள் என்றும் கூறினார். எனவே வெளிச்சம் இருக்கிற பகல் நேரத்தில் நாம் நடப்பிக்க வேண்டிய நற்கிரியைகளைக் காலத்தை வீணாக்காதபடி செய்து முடிக்க வேண்டுமென்கிறார். இயேசுவுக்குக் கொடுத்த பணியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பெத்தானியாவில் மரணம் ஏற்பட்டிருக்கிற அந்த இருளான நேரத்தில் வெளிச்சத்தை அளிக்க இயேசு அங்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு கூறினார்.
இயேசுவும் சீஷர்களும்:
யோவான்11 : 11 – 14 “இவைகளை இயேசு சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சினேகிதனான லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப் போகிறேன் என்றார். அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். இயேசுவானவர் அவருடைய மரணத்தைக் குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரை செய்து இளைப்பாறுதலைக் குறித்து சொன்னாரென்று நினைத்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப் போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி;”
இயேசு சீஷர்களிடம் நம்முடைய சினேகிதனாகிய லாசரு நித்திரை அடைந்திருக்கிறான், அவனை எழுப்பப் போகிறேன் என்றார். நம்முடைய சிநேகிதன் என்று கூறியதிலிருந்து, லாசருவை இயேசு எவ்வாறு சினேகித்திருப்பார் என்பதை அறிகிறோம். இயேசு கூறியதை சீஷர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இயேசு லாசருவின் மரணத்தைக் குறித்துத் தான் அவ்வாறு கூறினார். ஒருவர் மரணமடைந்தால் சரீரம் தான் நித்திரை செய்யும். அந்த ஆத்துமா உறங்குவதில்லை. வேதத்தில் நித்திரையடைவது என்ற வார்த்தை மரணத்தைக் குறிக்கிறது (அப்போஸ்தலர் 7 : 60, 1 கொரிந்தியர் 15 : 20, 1 தெசலோனிக்கேயர் 4 : 13 – 15). கிறிஸ்தவர்களை பொறுத்தவரை விசுவாசிகளின் மரணம் நித்திரைக்கு ஒப்பாயிருக்கிறது. விசுவாசியின் ஆவி இயேசுவோடிருக்கும்படி சென்றுவிடுகிறது. உலகத்தின் பணியில் ஓய்வு பெறுவதே நித்திரை. இயேசு தனது பணியை அங்கு துவங்கினார். மரணம் ஒரு முடிவல்ல. அது ஒரு வாசல். இயேசு அதன் பின் அவர்களுக்குப் புரியாததால் வெளிப்படையாக லாசரு மரித்துப் போனான், நாம் அங்கே போகலாம் என்று வெளிப்படையாக சீஷர்களிடம் கூறினார். லாசரு ஏற்கெனெவே மரித்து விட்டான் என்பதை சீஷர்கள் இன்னும் அறிந்து கொள்ளாதவர்களாயிருந்தார்கள்.
இயேசு பெத்தானியாவில்:
யோவான் 11: 15 – 18 “நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார். அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்ற சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான். இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார். பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.”
இயேசு சீஷர்களின் விசுவாசம் இன்னும் பெலனடையும் என்றும், அதனால் அவர்கள் தன்னைக் கூடுதலாக நம்புவார்கள் என்பதால் சந்தோஷப்படுகிறேன் என்று கூறிவிட்டு, அங்கு போவோம் வாருங்கள் என்றார். தோமா உடனே மற்ற சீஷர்களைப் பார்த்து, அவரோடு கூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றார். இயேசுவோடு கூட மரிப்பதற்கும் தோமா ஆயத்தமாயிருந்தார் என்பதை அறிகிறோம். இந்தத் தோமா தான் இந்தியாவிற்கு வந்து கர்த்தர் தனக்குக் கொடுத்த தன்னுடைய பணியை நிறைவேற்றி இரத்த சாட்சியாக மரித்தார். தன்னோடுகூட சாகும்படி கிறிஸ்து ஒரு அப்போஸ்தலனையும் தெரிந்து கொள்ளவில்லை. தன்னுடைய காலத்துக்குப் பின்பு உலகமெங்கும் சென்று தன்னுடைய சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாகவே இயேசு அவர்களை நியமித்தார். இயேசுவும் சீஷர்களும் எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரம் பிரயாணம் பண்ணி பெத்தானியா ஊருக்கு வந்தனர். அங்கு வந்தபோது லாசரு மரணமடைந்து கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாள் ஆயிற்று என்பதை அறிந்து கொண்டார். தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகள் அல்லவே. இயேசு தன்னுடைய பிதாவின் ஒவ்வொரு அசைவிற்கும் யாதொரு பிழையுமில்லாமல் கீழ்ப்படிந்தார். பிதா அனுமதியாமல் அவர் ஒரு இடத்திற்குக் கூடச் செல்லவில்லை. இதில் ஆவிக்குரிய பாடம் என்னவென்றால் நாம் ஒரு பூஜ்ஜிய நிலைக்கு வந்தபிறகுதான், தேவன் தன்னுடைய வல்லமையை அனுப்புவார்.
இயேசுவும், மார்த்தாளும்:
யோவான் 11 : 20 -27 “இயேசு வருகிறார் என்று ….எதிர் கொண்டுபோனாள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவனை நோக்கி உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார் அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றார். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிற வனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவ குமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.”
இயேசு காலதாமதமாக வந்ததால் மார்த்தாள் கோபப்படவில்லை. மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து நீர் இங்கே இருந்தால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டானென்றும், நீர் பிதாவிடம் கேட்பதை தேவன் உமக்குத் தருவார் என்றும் கூறினாள். இயேசு அவர்களோடு உணவு அருந்தியிருக்கிறார், ஆனாலும் இயேசுதான் தேவனென்பதை அப்பொழுது மார்த்தாள் உணரவில்லை. அதன்பின்னும் இயேசு அவளை நோக்கி உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பானென்று வெளிப்படையாகக் கூறினார். லாசரு வியாதிப்பட்ட செய்தியை இயேசுவிடம் கூறச் சென்ற மனிதனிடம் இயேசு “இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது” என்று கூறியதை அவன் மார்த்தாள், மரியாளிடம் கூறியிருப்பான். இவைகளைக் கேட்டும் “என் சகோதரனை எழுப்பும்” என்று வேண்டிக்கொள்ளும் தைரியம் மார்த்தாளிடமில்லை. மார்த்தாள் இயேசு அப்போது உயிரோடெழுப்புவாரென்று நம்பவில்லை. அடுத்தாற்போல் இயேசு ஆவிக்குரிய உயிர்த்தெழுதலைப் பற்றி கூறுகிறார். “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றும், தன்னை விசுவாசிக்கிறவர்கள் மரித்தாலும் பிழைப்பார்கள்” என்றும் கூறினார்.
அதன் பொருள் அவரை விசுவாசிப்பவர்களுக்கு பாவமன்னிப்பை இயேசு அளித்து விட்டதால், அவர்கள் பாவத்திற்கானத் தண்டனையை அடையப் போவதில்லை என்றும், தேவனை விட்டு அவர்கள் பிரியப் போவதில்லை என்பதாகும். மாம்ச சரீரம் மட்டுமே மறைந்து போகும். மண்ணில் இருந்து வந்தது மண்ணுக்கே திரும்பி விடும். ஆனால் ஒருபோதும் ஆவிக்குரிய சரீரம் மரணமடைவதில்லை. இயேசுவை விசுவாசிக்கிறவன் இரகசிய வருகைக்கு முன் மரணமடைந்தால் அவரால் அச்சமயத்தில் உயிரோடு எழுப்புவார். அச்சமயத்தில் உயிரோடு இருக்கிறவர்கள் மரணம் அடைய மாட்டார்கள் (1 கொரிந்தியர்15 :51 -54, 1 தெசலோனிக்கேயர்4 : 14 – 17) விசுவாசிக்கிறவன் நித்தியஜீவனைப் பெற்றிருப்பதால் என்றும் கிறிஸ்துவோடு இருப்பான். உடனே மார்த்தாள் பேதுரு கூறியதைப் போல “நீர் தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து” என்று அறிக்கையிட்டாள். பேதுருவும் “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். நாத்தான்வேல் அவன் இயேசுவை முதலில் சந்தித்த போதே “நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்றும் கூறியதை வேதத்தில் பார்க்கிறோம்.
மரியாளும் இயேசுவும்:
யோவான் 11 : 28,29, 32 -35 “ ….. மார்த்தாள் ….. மரியாளை ரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள் அவள்… அவரிடத்தில் வந்தாள்…மரியாள் வந்து, …. இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான் என்றாள். அவள் அழுகிறதையும் அவளோடே கூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்ட போது ஆவியில் கலங்கித் துயரமடைந்து: அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்! இயேசு கண்ணீர் விட்டார்.”
இயேசு பெத்தானியாவிலுள்ள லாசருவின் வீட்டிற்கோ, அவனை அடக்கம் பண்ணின கல்லறையின் அருகிலோ செல்லாமல் மார்த்தாள் அவரை சந்தித்த இடத்திலேயே இருந்தார். மார்த்தாள் தன் சகோதரியிடம் இயேசு வந்திருக்கிறாரென்று தெரிவித்தாள். மரியாள் உடனே எழுந்து இயேசுவினிடம் சென்று, அவருடைய பாதத்தில் விழுந்து மார்த்தாளைப் போல “ஆண்டவரே நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்க மாட்டான்” என்றாள். மார்த்தாளும், மரியாளும், அவளோடு கூட வந்த யூதர்களும் அழுகிறதை இயேசு பார்த்து அவர்களுக்காக மிகுந்த வருத்தத்தில் கண்ணீர் விட்டார். லாசருக்காக அழவில்லை. ஏனென்றால் தான் லாசருவை எழுப்பப் போவதை இயேசு அறிந்திருந்ததார். இதேபோல் இயேசு நம்மைப் பார்த்தும் கண்ணீர் விடுவார். யோவான் 11 : 35 ல் உள்ள ”இயேசு கண்ணீர் விட்டார்” என்ற வசனம் தான் வேதாகமத்தில் மிகச் சிறியது. இயேசு கண்ணீர் விட்டது அவரது மனிதத் தன்மையை வெளிப்படுத்தியது. லாசருவையும், அவர்களது குடும்பத்தினரையும் மூன்று ஆண்டுகளாகத்தான் இயேசு அறிந்திருந்தார் என்றாலும் அந்த ஐக்கியத்தை அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. லாசரு மரித்துப் போன அந்த நான்கு நாட்களில் சகோதரிகள் அனுபவித்த தாங்க முடியாத துயரத்தை இயேசு அறிந்து கண் கலங்கியிருக்கலாம். இயேசு அவர்களிடம் லாசருவை எங்கே வைத்தீர்கள் என்று கேட்டார். ஆண்டவரே வந்து பாரும் என்றனர்.
இயேசுவின் கட்டளை:
யோவான் 11 : 36 – 40 “அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சினேகித்தார் என்றார்கள்! அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப் பண்ணவும் கூடாதா என்றார்கள். அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின் மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி ஆண்டவரே, இப்பொழுது நாறுமே நாலு நாளாயிற்றே என்றாள். இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.”
யூதர்கள் இயேசு லாசருவை நேசித்ததால் அழுகிறார் என்று எண்ணினார்கள் இங்கு யூதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய காரியத்தை அறிந்து கொள்ளவில்லை. குருடனை சுகமாக்கினதை நினைவில் வைத்திருக்கின்றனர். ஆனால் இயேசுவுக்கு உயிரோடெழுப்பும் வல்லமையுண்டென்பதை அவர்கள் அறியவில்லை. இயேசு எல்லாவற்றையும் அறிந்திருந்தும் மனிதத்தன்மையில் அவனை எங்கே வைத்தீர்கள் என்று கேட்டார். கல்லறை இருக்கும் இடத்திற்குச் சென்றார். அது ஒரு குகையாக இருந்தது. அதை ஒரு கல்லால் மூடி வைத்திருந்தனர். மறுபடியும் இயேசு கலங்கி கல்லை எடுத்துப் போடுங்கள் என்று கட்டளையிட்டார். ஒரு மனிதனை உயிரோடெழுப்பும் வல்லமை தேவன் ஒருவருக்கே உண்டு. ஆனால் கல்லறையை மூடி வைத்திருக்கும் கல்லை எடுத்துப்போட மனிதர்களால் முடியும். உடனே மார்த்தாள் அவசரபுத்தியால் “ஆண்டவரே அடக்கம் பண்ணி 4 நாட்கள் ஆகிவிட்டதால் நாறுமே” என்றாள். ஏனென்றால் அந்த சரீரம் அழுக ஆரம்பித்திருக்கும் என்பதால். இயேசு அவளிடம் நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று தான் முன்னமே அவளிடம் கூறியதை நினைவுபடுத்தினார். எந்த ஒரு மனிதனும் விசுவாசமின்றி தேவனுடைய மகிமையைக் காண முடியாது. மார்த்தாள் கூறியதற்காக இயேசு கோபப்படவில்லை.
இயேசுவின் ஜெபம்:
.”யோவான் 11 : 41 – 45 “அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப் போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்கு செவி கொடுக்கிறீரென்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். இவைகளைச் சொன்ன பின்பு : லாசருவை, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது; அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார். அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அனேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்கள் ஆனார்கள்
இயேசு அங்கு நின்றவர்களிடம் கல்லறையை மூடியிருந்த கல்லை எடுத்துப் போடச் சொல்லி கட்டளையிட்டார். அவர்கள் இயேசுவின் கட்டளையின்படி மூடியிருந்த கல்லை எடுத்துப் போட்டனர். இயேசு பிதாவை நோக்கி அவர் தனக்குச் செவிகொடுத்தபடியால் ஸ்தோத்தரிக்கிறேன் என்றும், எப்பொழுதும் நீர் எனக்குச் செவி கொடுப்பதையறிந்திருப்பதாகவும் ஆனாலும் பிதா தன்னை அனுப்பியதை அங்கு சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் விசுவாசிப்பதற்காக இதைக் கூறுகிறேன் என்றார். இந்த ஜெபத்தை இயேசு ஏறெடுப்பதற்கு முன்னமே (11 : 41) பிதாவிடம் ஜெபித்துப் பதிலைப் பெற்றிருந்தார் என்று அறிகிறோம். அதன்பின் லாசருவை வெளியே வா என்று உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். ஏன் இயேசு சத்தமாய் ஜெபித்தாரென்றால் அவர் பிதாவின் சித்தத்தைச் செய்கிறாரென்று ஜனங்கள் அறிந்து கொள்வதற்காக. இயேசு உரத்த சத்தமாய்ப் பேசுவது மத்தேயு 27 : 46, 50, லூக்கா 23 : 46, 1 தெசலோனிக்கேயர் 4 : 16 ஆகிய வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது.
மரித்த நிலையிலிருக்கும் லாசருவிடம் இயேசு பேசுகிறார். அவன் வெளியே வரும்படி அந்தச் சடலத்திற்கு கட்டளையிடுகிறார். அவனுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறது. மரித்த லாசரு சத்தத்தைக் கேட்டு கால்களும், கைகளும், முகமும் துணியினால் சுற்றப்பட்ட கட்டுகளோடு வெளியே வந்தான். இயேசு அதைப் பார்த்து அவனுடைய கட்டுக்களை அவிழ்த்து விடச் சொன்னார். கால்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையிலும் லாசருவால் கல்லறையின் வாசல்வரை நடந்துவர முடிந்தது. இதேபோல் தான் இயேசுவையும் துணிகளால் சுற்றி வைத்திருந்தனர். ஆனால் அவருடைய கட்டுக்களை யாரும் அவிழ்க்கவில்லை. தானாகவே கழற்றி வைத்து விட்டு வந்தார். லாசரு வெளியே வர கல்லை எடுத்துப் போட்டார்கள். இயேசுவை மூடியிருந்த கல் உருட்டித் தள்ளப்பட்டிருந்தது. இயேசுவைப் பார்க்க வந்தவர்கள் கல் உருட்டித் தள்ளப்பட்டிருந்ததைப் பார்த்தனர். எதற்காக இயேசுவின் கல்லறை திறந்திருக்கிறதென்றால் இயேசு அங்கே இல்லையென்று அனைவரும் அறிந்து கொள்வதற்காக. லாசரு அவனுடைய முந்தின சரீரத்தோடு வெளியே வந்தான். இயேசுவோ மகிமையடைந்த சரீரத்தோடு வெளியே வந்தார். மரியாளோடு அங்கு வந்திருந்த அனைவரும், இயேசுவுக்கு எதிரிகளாக இருந்த சமயத் தலைவர்களும், யூதர்களும் இயேசுவை விசுவாசித்தனர்.
இயேசு வேதத்தில் மூன்று பேரை உயிரோடெழுப்பினார். முதலாவது சிறுபெண்ணை வீட்டுக்குள் வைத்து எழுப்பினார். இரண்டாவது ஒரு வாலிபனை கல்லரைக்குக் கொண்டு செல்லும் வழியில் எழுப்பினார். மூன்றாவது ஒரு வயது சென்றவனை கல்லறையில் வைக்கப்பட்டபின் உயிரோடெழுப்பினார். இவைகளிலிருந்து இயேசு ஒரு நபரை உயிரோடெழுப்ப வயதோ, இடமோ, காலமோ ஒரு பொருட்டல்ல என்று அறிகிறோம். மற்ற அற்புதங்களைச் செய்ய வெவ்வேறு முறைகளை இயேசு கையாண்டாலும் மரித்தவர்களை உயிர்ப்பிக்கும் போது, ஒரே ஒரு முறையைத் தான் கையாண்டார். அது என்னவென்றால் அவர்களோடு பேசினார். ஏனென்றால் அவர்கள் அவருடைய சத்தத்தைக் கேட்டனர். நம்மை அழைத்துச் செல்ல இயேசு வரும்போதும் மரித்திருந்தாலும் நம்முடைய பெயரைச் சொல்லி அழைக்கும் போது, அந்தச் சத்தத்தை மரித்தவர்கள் கேட்கமுடியும்.
இயேசுவால் உயிரோடு எழுப்பப்பட்ட அனைவரும் திரும்பவும் மரணமடைந்தனர். இயேசு ஒருவரே சாவாமையுள்ளவர். கல்லறையை மூடியிருந்த கல்லை எடுப்பதும், துணிகளை அவிழ்ப்பதும் நமது கடமை. இயேசுவின் மகிமை அவர்களை உயிரோடு எழுப்புவது. ஒரு மனிதனை இரட்சிப்புக்கு நடத்துவது நமது கடமை. ஆனால் அவனுக்கு இரட்சிப்பை வழங்குவது கர்த்தர். நம் ஆண்டவர் உலர்ந்த எலும்புகளை உயிர்பெறச் செய்கிறவர். அவர் மரித்து நான்கு நாட்களுக்குப் பின்னும், நாறிப்போன பிணத்தையும் உயிர்ப்பிக்கிறவர். நீங்கள் கர்த்தரை நேசிக்கிறவர்களானால் கர்த்தர் தமது வார்த்தையினாலே உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பித்து, மகிமையின் மேல் மகிமையடையச் செய்வார். இதோடு இயேசுவின் பொதுவான ஊழியம் முடிவடைந்தது.
இந்த அற்புதத்தில் விசுவாசம் என்ற வார்த்தை 8 முறை வருகிறது. இயேசுவின் உயிர்த்தெழுதலைச் சொல்லித்தான் எருசலேமில் முதல் சபை உருவானது. (அப் 2 : 36,37,41) இயேசுவின் உயிர்த்தெழுதல் அவர்களுடைய இருதயத்தை மாற்றினதினால் 3000 பேர் ஞானஸ்நானம் பெற்றனர். கிறிஸ்தவ மார்க்கம் உலகம் முழுவதும் பரவியது. அதற்குக் காரணம் மரித்தோரின் உயிர்த்தெழுதல். கிறிஸ்தவ மார்க்கம் 33ம் ஆண்டு எருசலேமில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. அதற்குக் காரணம் மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் கிறிஸ்தவம் போதிக்கிறது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வைக் கிறிஸ்தவம் போதிக்கிறது. அதனால்தான் அநேகர் மாறுகின்றனர். மரித்தோரின் உயிர்த்தெழுதல் கிறிஸ்தவத்தின் அச்சாணியாக உள்ளது. ஆமென்.