Menu Close

யாபேஸ்

1 நாளாகாமம் 4 : 9, 10 “யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசிர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.”

யாபேசின் பெயரும், அவனது ஜெபமும்: 

1நாளாகமம் 1ம் அதிகாரத்திலிருந்து 9ம் அதிகாரம் வரை வெறும் பெயர்கள் மட்டும் வரும். மற்றவர்களின் பெயரை மட்டும் எழுதிய ஆசிரியர், யாபேசுக்கு மட்டும் அவனுடைய பெயரை மட்டும் குறிப்பிடாமல், அவரது ஜெபத்தையும், கர்த்தர் கேட்டதையும் எழுதியிருக்கிறார். 1நாளாகாமம் 4:1-8 ல் தகப்பனின் பெய ரும், சந்ததியும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 9ம் வசனத்திலும், 10ம் வசனத் திலும் யாபேஸ் என்ற நபரின் பெற்றோரின் பெயரோ, அவனது சந்ததியின் பெயரோ, அவனது குலம், கோத்திரமோ கொடுக்கப்படவில்லை. யாபேஸ் என்ற ஒரே ஒரு நபருக்காக எழுதப்பட்ட 2 நீள வசனங்கள். இதேபோல் ஆதியாகமத் தில் உள்ள வம்ச வரலாற்றுப் பட்டியலில் ஏனோக்குக்கு மட்டும் 4 வசனங்கள் கொடுக்கப் பட்டுள்ளது (ஆதியாகமம் 5 : 21–24). இவர்கள் இருவரும் தேவனுடைய பார்வையில் வேறுபட்டவராக, வித்தியாசமானவராக இருந்திருக்கின்றனர். இயேசுவின் வரலாற்றை அறிய, நாம் முழு சுவிசேஷங்களையும் வேதபுத்தகத் தில் படிக்க வேண்டும். ஆனால் இதில் யாபேஸைப் பற்றி அறியவும், அவன் பண்ணிய ஜெபத்தைப் பற்றியறியவும் இரண்டே இரண்டு வசனங்களில் ஆவியானவர் கொடுத்திருக்கிறார். 

அவன் கேட்டதைக் கர்த்தர் கொடுத்தார். யாபேஸ் என்றால் “துக்கம் உண்டாக் குகிறவன்” என்று பொருள்.அவனுடைய தாய் அவனைத் துக்கத்துடனும், வேத னை யுடனும் பெற்றேன் என்று தான் யாபேஸ் என்று பெயரிட்டாள். என்ன துக்கத்தைப் பெற்றோர்களுக்குக் கொடுத்தான் என்று வேதத்தில் கொடுக்கப் படவில்லை. ஆனால் தன்னுடைய துக்கத்தைப் பிள்ளையின் பெயரால் மாற்றி னாள். அவன் தன்னுடைய தாயால் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காமல் அன்பில்லாமல் வளர்க்கப்பட்டான். ஆனால் அவனைக் குறித்த தேவ திட்டம் வித்தியாசமாக இருந்தது. யாபேஸின் ஜெபத்தை நமக்கு ஒரு எடுத்துக் காட்டா கக் கர்த்தர் வேதத்தில் எழுதச் செய்தார். அந்தக் காலத்தில் அர்த்தத்தோடு தான் பெயர்களை வைப்பார்கள். கர்த்தர் ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட் சிப்பார் என்ற பொருளோடுதான் தன் மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார் (மத்தேயு 1 : 21). அதேபோல் யோவான்ஸ்நானனுக்கு யோவான் என்று பெயரிட தூதன் கூறினான். ஏனென்றால் அவனது பிறப்பினால் அநேகர் சந்தோஷப்படு வார்கள் என்பதுதான் (லூக்கா 1 : 13, 14). 

ஆதியாகமத்தில் லேயாள் கடைசியில் கர்ப்பவதியாகி கர்த்தரைத் துதிப்பேன் என்று தான் பெற்ற குழந்தைக்கு யூதா என்று பெயரிட்டாள் (ஆதியாகமம் 29:35).யோசேப்பு தன்னுடைய வருத்தத்தையும், தகப்பனுடைய குடும்பத்தையும் கர்த்தர் மறக்கச் செய்தார் என்று தன்னுடைய முத்த மகனுக்கு மனாசே என்று பெயரிட்டதை ஆதியாகமம் 41:51ல் பார்க்கிறோம். யாத்திராகமம் 2 : 10 ல் பார்வோனுடைய குமாரத்தி மோசேயை ஜலத்திலிருந்து எடுத்தேன் என்று சொல்லி மோசே என்று பெயரிட்டாள். அதற்கேற்றபடி அவர்களும் வாழ்ந்தார்கள். மேலே குறிப்பிட்ட எல்லாப் பெயர்களிலும் செய்திகள் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் யாபேஸின் பெயரில் துக்கம் மட்டுமே நிறைந்திருந்தது. யாபேஸின் விண்ணப்பங்கள் என்னவென்றால், 

“என்னை ஆசீர்வதியும்,”

“என் எல்லையைப் பெரிதாக்கும்” 

“உமது கரம் என்னோடிருக்க வேண்டும்” 

“தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடி அதற்குத் என்னை விலக்கிக் காத்தருளும்”

இது விசுவாசிகளுக்கு ஒரு மாதிரியான ஜெபம்.இந்த ஜெபத்தில் யாபேஸ் தன்னுடைய 3 தேவைகளுக்காக ஜெபித்ததையும், அதற்கு உடனடியாக தேவன் பதிலளித்ததையும் பார்க்கிறோம். 

  1. என்னை ஆசீர்வதியும்:

இதில் யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி ஜெபிக்கிறான். ஏனெனில் எண்ணாகமம் 24 : 1 ல் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்.” என்றும், சங்கீதம் 115 : 12 “கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்; என்றும் வேதத்தில் கூறப்பட்டதை யாபேஸ் அறிந்திருந்தான். அதனால்தான் இஸ்ரவேலின் தேவனே என்று ஆரம் பித்து ஜெபம் பண்ணுகிறான். இதேபோல் தான் யாக்கோபு தேவனிடம் “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய போக விடேன்” என்றதை ஆதியாகமம் 32 : 26 ல் பார்க்கி றோம். யாக்கோபு தேவனிடம் கேட்ட நேரத்தில் அவனுக்கு சகல ஐசுவரியங்களும், மனைவி பிள்ளைகளுமிருந்தனர். ஆனாலும் தன்னுடைய பழைய வாழ்க்கையில் தான் தன்னுடைய தகப்பனையும், அண்ணனையும், மாமனாரையும் ஏமாற்றியதால் நிம்மதியில்லாமல் இருப்பதால் ஆசீர்வதியும் என்று மன்றாடினான். கர்த்தருக்கு அவனுடைய பெயர் தெரிந்தும், அவனுடைய வாயால் சொல்ல வைத்து எத்தன் என்ற பொருளுள்ள அவனுடைய பெயரை, தேவபிரபு என்று பொருள் படும் இஸ்ரவேலாக மாற்றினார். உடனே அவர் அவனை ஆசீர்வதித்ததையும் பார்க்கி றோம் (ஓசியா 12 : 4). அவன்தன் வாயால் கூறியதை, 

ஆதியாகமம் 32 : 10 “அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.” என்று அறிக்கையிட்டதைப் பார்க்கிறோம். 

உபாகமம் 1 : 11 “நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக என்று மோசே இஸ்ரவேலரை ஆசீர்வதித்ததையும், பவுல், 

எபேசியர் 1 : 3 ல் “அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.” என்றும் கூறியதைப் பார்க்கிறோம். இயேசு பரலோகத்திற்குச் செல்லுமுன் எருசலேமிலிருந்து பெத்தானியா வரைக்கும் சீஷர்களை அழைத்துச் சென்று தன் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்ததை லூக்கா 24 : 50 ல் பார்க்கிறோம். கலாத்தியர் 3 : 29 ல் கூறியுள்ளதைப் போல ஆபிரகாமுக்கு கொடுத்த ஆசீர்வாதம், அவருடைய சந்ததியான நாம் பெறுக்கொள்வோம் என்ற நிச்சயத்தோடு ஜெபம் பண்ண வேண்டும். 

  1. எல்லையைப் பெரிதாக்கும்:

யாபேஸ் தான் குறுகிய எல்லைக்குள் முடங்காமலிருக்க வேண்டுமென்று எல்லையைப் பெரிதாக்கும் என்று ஜெபிக்கிறான். கர்த்தர் இஸ்ரவேலருக்காக ,யாத்திராகமம் 34 : 24 ல் “நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்தி விட்டு, உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்;” என்றும், ஏசாயா 26 : 15 “இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; கர்த்தாவே, இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் நெடுந்தூரத்தில் தள்ளி வைத்தீர்.” என்றும்,

ஏசாயா 54 : 2,3 “ உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங் களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங் கொண்டு பெருகுவாய்;” என்றும் இஸ்ரவேலர் காலடி வைக்கும் எல்லா இடத்தையும் அவர்களுக்கு கொடுத்தேன் என்றும், லீபனோன் தொடங்கி ஐபிராத்து நதி மட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தையும் மட்டுமல்லாமல், சூரியன் அஸ்தமிக்கிற பெரிய சமுத்திரம் வரைக்குமுள்ளவைகளை அவர்க ளுக்கு எல்லையாகக் கொடுத்ததை யோசுவா 1:3,4 ல் பார்க்கிறோம். ஆபிரகாமும் லோத்தும் பிரியும் போது ஆபிரகாமை அழைக்கும் போது, 

எபிரேயர் 6 : 14 “நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன்.” என்றார். அதன்பின் ஆபிரகாமும் லோத்தும் பிரியும் போது அவனது குணத்தைப் பார்த்த கர்த்தர்,

ஆதியாகமம் 13 : 15, 17 ல் நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,

“நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்.” அது நிறைவேறியதை ஏசாயா தீர்க்கதரிசி, 

ஏசாயா 51 : 2 ல் ஆபிரகாம் ஒருவனாயிருக்கையில் கர்த்தர் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து அவனைப் பெருகப்பண்ணியதாகக் கூறுகிறார். 

நாமும் அதேபோல் நமது ஊழியத்தின் எல்லையை, வரத்தின் எல்லையை, ஆத்மாக்களின் எல்லையை, ஜெபத்தின் எல்லையை, சுவிசேஷத்தின் எல்லையை, தரிசனத்தின் எல்லையைப் பெரிதாக்க தேவனிடம் ஜெபிக்க வேண்டும். 

  1. உமது கரம் என்னோடிருக்கட்டும்:

யாபேஸ் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து மீட்டது தேவனுடைய கரமென்றும், வனாந்தரத்தில் அவர்களை வழிநடத்தியது தேவனுடைய கரமென்றும், பார்வோ னின் சேனைகளை செங்கடலில் சாகடித்தது கர்த்தரின் கரத்தின் வல்லமையால் என்றும் அறிந்திருந்ததால் “உமது கரம் என்னோடிருக்க வேண்டும்” என்று ஜெபிக் கிறான். எஸ்றாவின்மேல் தேவனுடைய கரம் இருந்ததினால் எருசலேம் தேவா லயத்தைக் கட்டச் செல்லும்போது அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான் என்றும், தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந் ததினால் தாங்கள் அனைவரும் எருசலேமுக்கு வந்ததாகவும் கூறுவதை எஸ்றா 7 : 6, 9 ல் பார்க்கிறோம். மேலும் எஸ்றா “எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிற தென்று” அறிக்கையிடுகிறார் ஏனென்றால் தேவனுடைய கரம் அவர்கள் மேலிரு ந்ததால் 1500 கிலோமீட்டர் துரத்தைக் கால்நடையாக நடந்து செல்லும் போது வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் அவர்களைத் தப்புவித்தது என்கிறார். (எஸ்றா 8 : 22, 31). நெகேமியாவின் மேல் தேவனுடைய கரம் இருந்ததால் ராஜா எருசலேமின் அலங்கம் கட்டுவதற்குத் தேவையான மரங்களைக் கொடுக்கக் கட்டளையிட்டதாக நெகேமியா 2 : 8லும் அதனால் தான் தங்களால் எருசலேமின் இடிந்து கிடந்த அலங்கத்தை 52 நாட்களில் கட்டி முடித்ததாகக் கூறுகிறான். இதற்கு தேவன் தரியு ராஜா, கோரேஸ் ராஜா, அர்தசஷ்டா ராஜா போன்ற ராஜாக்களின் கண்களில் தயவு கிடைக்கச் செய்தார். அதேபோல் சவுல் ராஜா வியாதியிலிருந்தபோது தாவீது சுரமண்டலம் வாசித்தான். அப்போது கர்த்தருடைய கரம் சவுலின் மேல் இறங்கி அவனுக்கு விடுதலை கொடுத்ததை 2 இராஜாக்கள் 3 : 15 ல் பார்க்கிறோம்.

லூக்கா 1 : 66 ல் யோவான்ஸ்நானைப் பற்றிக் கூறும்போது “கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.“ என்று சொல்லப்பட்டதைப் பார்க்கிறோம். அதனால் தான் அவன் ராஜாக்களுக்கோ, மதத்தலைவர்களுக்கோ பயப்படாமல் சுவிசேஷத்தை அறிவித்தான். 

தேவனுடைய கரம் நம்மைப் பிடித்து நடத்தும். யாபேஸ் ஆசீர்வாதத்தை மட்டும் கேட்டு விட்டு விடாமல் உமது கரம் தன்னோடிருக்க வேண்டும் என்று கேட்கிறான். கர்த்தருடைய கரம் மிகவும் வல்லமையுடையது (1 நாளா 29 : 22). அந்தக் கரத்தினால் நம்மை ஆசீர்வதிப்பார் (ஆதியாகமம் 48 :13), அரவணைப்பார், கண்ணீரைத் துடைப்பார் (ஏசாயா 25 : 8), இரட்சிப்பார் (சங்கீதம் 98 : 1, சங்கீதம் 44 : 3), சுகம் கொடுப்பார் (மத்தேயு 8 : 3), விடுதலையளிப்பார் (ஏசாயா 41 : 20), உருவாக் குவார் (சங்கீதம் 95 : 5), தாங்குவார் (சங்கீதம் 18 : 35, ஏசாயா 41 : 10), உளையான சேற்றிலிருந்து தூக்கியெடுப்பார்(மத்தேயு14:31), வழிநடத்துவார். (சங்கீதம் 139:10), தடைகளை உடைத்து, இக்கட்டுக்கு விலக்கிக் காப்பார் (எஸ்ரா 8 : 31), பகைவர் களைக் கண்டுபிடிப்பார் (சங்கீதம் 21 : 8). சரியான வழியில் நம்மை நடத்தி உன்னதத்தில் உட்கார வைப்பார் (எபேசியர் 2 : 7), பராக்கிரமம் செய்வார் (சங்கீதம் 118 : 16), உயிர்ப்பிப்பார் (மாற்கு 5 : 38 – 42). 

எனவே கர்த்தரிடம் கர்த்தாவே உமது கரத்தை என்னை விட்டு எடுத்து விடாதே யும் என்றும், உமது கரம்தான் என்னை ஆசீர்வதிக்க வேண்டுமென்றும், உமது கரம்தான் என்னை விடுதலையாக்க வேண்டுமென்றும், உமது கரம்தான் சாத்தான் வைக்கிற கண்ணிகளிலிருந்து என்னைத் தப்புவிக்க வேண்டுமென்றும், உமது கரம்தான் சத்துருக்கள் சதித் திட்டங்களை செயல்படுத்தாமல் செய்ய வேண்டுமென்றும் ஜெபிக்க வேண்டும். 

  1. தீங்கு துக்கப்படுத்தாமல் காத்துக்கொள்ளும்:

சங்கீதம் 91 : 3 “அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.”

சங்கீதம் 121 : 7 “கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;” சங்கீதம் 27 : 5 “ஏனெனில் துன்ப நாளில், அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்; அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து, கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார்.”

மத்தேயு 6 : 13 “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் …”

2 தெசலோனிக்கேயர் 3 : 3 “ கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.”

2 தீமோத்தேயு 4 : 18 “கர்த்தர் எல்லாத் தீமையிலிருந்தும் என்னை இரட்சித்து, தம்முடைய பரலோக ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; “

செப்பனியா 3 : 15 “கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்.”

கர்த்தராகிய இயேசு தனது சீடர்களுக்கு கற்றுக் கொடுத்த ஜெபத்தில் ”தீமையி னின்று இரட்சித்துக் கொள்ளும்” என்று ஜெபிக்கச் சொன்னதைப் பார்க்கிறோம். தீமையாகிய சாத்தானும் அவனுடைய தூதர்களும் நம்மைப் பலவழிகளில் துன்புறுத்துவான். எனவே இது ஒரு முக்கியமான விண்ணப்பம் ஆகும். தீங்கு நம்மைத் துக்கப்படுத்தாமலிருக்கவும், தேவ பக்தியுடன் வாழவும் சீர்கேடுகளுக் கும், கட்டுக்கதைகளுக்கும், லெளகீக இச்சைகளுக்கும் விலகி தெளிந்த புத்தியு டன், இச்சையடக்கத்துடனும், பொறுமையுடனும், சகோதர சிநேகத்துடனும், அன்புடனும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் (1தீமோத்தேயு 4 : 7, தீத்து 2 : 12, 2 பேதுரு 1 : 6, 7), 

ஜெபத்தின் முடிவும், தேவனின் ஆசியும்:

யாபேஸ் தன்னுடைய ஜெபத்தில் என்னை, என், என்னோடிருந்து, என்று தனக்கா கவே ஜெபித்தான். யோபு தன் சிநேகிதருக்காக வேண்டியதையும், ஆபிரகாம் சோதோம் கொமோராவுக்காக பரிந்து பேசியதையும் மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்காகப் பரிந்து பேசியதையும் பார்க்கிறோம். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கக் கூறும்போது, 

எண்ணாகமம் 6 : 24, 25, 26 ல் “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.”. 

என்றார். எபேசியர் 3 : 20 ல் கூறியபடி யாபேஸ் வேண்டிக் கொண்டதற்கும், நினைத்ததற்கும் அதிகமாக தேவ வல்லமை அவனுக்குள் கிரியை செய்து உயர்த்தியது. எரேமியா 33 : 3ல் கூறியபடி யாபேஸ் தேவனை நோக்கிக் கூப்பிட்டதால் அவன் அறியாததும், அவனுக்கு எட்டாததுமான காரியங்களைச் செய்ய வைத்தார். யாபேஸின் ஜெபத்துக்கு உடனே பதில் வந்ததைப் போல எலியா பாகால்களின் தீர்க்கதரிசிகள் 450 பேரையும், தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் 400 பேரையும் எதிர்த்துப் பலி செலுத்தும் போது கர்த்தரை நோக்கி ஜெபித்தான். உடனே கர்த்தரிடமிருந்து அக்கினி இறங்கி சர்வாங்க தகன பலியை நக்கிப் போட்டதை 1 இராஜாக்கள் 18 : 38 லும், ஏசாயா 38 : 3ல் எசேக்கியா தன்னுடைய ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுக்கக் கர்த்தரை நோக்கி ஜெபித்த போது, கர்த்தர் 38 : 5 ல் உடனே அவனுடைய ஆயுசுநாட்களைக் கூட்டிக் கொடுத்த தையும் பார்க்கிறோம். புதியஏற்பாட்டில் ஒருபரிசேயனும், ஆயக்காரனும் ஜெபம் பண்ண தேவாலயத்துக்குச் சென்றனர். ஆயக்காரன் பண்ணிய தாழ்மையான ஜெபத்தைக் கேட்டு இயேசு உடனே அவனை நீதிமான் என்று கூறியதை லூக்கா 18:14ல் பார்க்கிறோம்.

யாபேசுக்கு பெரிய வம்சமோ, அடையாளமோ இல்லாமல் இருந்தும் கர்த்தருக்கு அருமையானவனாக இருந்ததால் கனம் பெற்றவனா னான். ஜெபம் சூழ்நிலையை மாற்றும். தேவன் நோவாவை பலுகிப் பெருகிப் பூமியை நிரப்புங்கள் என்று ஆதியாகமம் 9 : 1 லும், ஆபிரகாமின் சந்ததியைப் பூமியின் துளைபோலப் பெருகப் பண்ணுவேனென்று ஆதியாகமம் 13 : 15, –17 லும், யோபுக்கு இரண்டு மடங்கு ஆசியையும் (யோபு 42 : 10), பென்யமீனுக்கு 5 மடங்கு ஆசியையும் (ஆதியாகமம் 43 : 34), தானியேலும் அவரது நண்பர்களும் பத்துமடங்கு ஆசி பெற்றனர் என்று தானியேல் 1 : 20லும் ஈசாக்கை 100 மடங்கு ஆசீர்வதித்ததை ஆதியாகமம் 26 : 12லும், மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்கு 1000 மடங்கு ஆசியையும், ரெபெக்காளை கோடாகோடியாய்ப் பெருகுவாயாக என்ற ஆசியை ஆதியாகாமம் 24 : 60 லலும் பார்க்கிறோம். 1சாமுவேல் 1 : 27 ல் அன்னாள் தான் கர்த்தரிடம் கேட்ட விண்ணப்பத்தைக் கேட்டு தனக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்தார் என்று கூறுவதைப் பார்க்கிறோம். யாபேசும் கர்த்தர் ஆசீர்வதித்ததினால் கனம் பெற்றவனானான்.

முடிவுரை:

நாமும் யாபேஸைப் போல தள்ளப்பட்ட நிலையிலிருந்தால், விசுவாசத்துடன் தேவனண்டை சேருவோம். எபேசியர் 3 : 20 ல் கூறியபடி நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லவரான இயேசு கனவீனப்பட்ட யாபேஸைத் தேவன் கனப்படுத் தினார். சிறுமைப்பட்ட யாபேஸைத் தேவன் பெருமைப் படுத்தினார். யாபேஸ் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளியதைப் போல, நாம் தேவனுடைய சித்தத்தின்படி வேண்டிக் கொள்ளும்போது தேவன் அவைகளை நிச்சயம் அருளிச் செய்வார். சங்கீதம் 139 : 10 ல் கூறியுள்ளது போலக் கர்த்தரின் கரம் என்னைப் பிடிக்கும் என்ற விசுவாசத்தோடு கேளுங்கள். அப்பொழுது தேவ கரம் உங்களை சரியான பாதையில் வழி நடத்திச் செல்லும். அவர்தான் ஆபத் துக்கு காலத்தில் அனுகூலமான துணையானவர். தேவன் ஆசீர்வதிப்பதை யாரா லும் தடுக்க முடியாது. ஒரு ஊருக்கே யாபேஸின் பெயர் சூட்டப்பட்டது (1 நாளாகமம் 2 : 55). அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப் பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்க ளுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று பவுல் கூறியதை ரோமர் 8 : 28 ல் காணலாம்.கலாத்தியர் 2 : 6 “தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே.” என்றார். யோவான் 16 : 24 “இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்ளுவீர்கள்.” என்றார். நாமும் யாபேஸைப்போல கர்த்தரிடம் மன்றாடி ஜெபித்து அவரது ஆசியைப் பெற்றுக் கொள்வோம். ஆமென்.

Related Posts