சவுலும், தாவீதும்:
பென்யமீன் கோத்திரத்தில் பாராக்கிரமசாலியான கீஸ் என்னும் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான் அவனது பெயர் சவுல் (1சாமுவேல் 9 1,2). தந்தையின் கழுதையைத் தேடிப்போன சவுலைக் கர்த்தர் சாமுவேல் தீர்க்கதரிசியை அனுப்பி ராஜாவாக அபிஷேகித்தார். சவுல் தாவீதைச் சந்திக்கும் வரை நல்லவனாகவே இருந்தான். எந்தத் தீய குணமும் அவனை ஆட்கொண்டிருக்கவில்லை. தன்னைத் திட்டுகிறவர்களைக் கூட மன்னித்தான். கர்த்தர் இரட்சிப்பைக் கட்டளையிட்ட அன்று, யாரையும் கொல்லக் கூடாது என்ற நல்ல குணமும், சாமுவேல் தீர்க்கதரிசியைப் பார்க்கச் செல்லும் போது தான் எப்படி வெறுங்கையாய்ப் போவேன் என்று நினைக்கிற நல்ல குணமுமிருந்தது. சவுல் ராஜாவாக இருக்கும்போது, பெலிஸ்தியருக்காக இஸ்ரவேலருடன் யுத்தம் பண்ண ஒரு இராட்சதன் நின்றான். அவன் காத் ஊரைச் சேர்ந்தவன். அவனுடைய பெயர் கோலியாத். 40 நாட்கள் காலை, மாலை இரண்டு தடவையும் வந்து “யாராவது தன்னோடு போட்டியிட்டு ஜெயித்தால் பெலிஸ் தியர்கள் இஸ்ரவேலர்களுக்கு வேலைக்காரர்களாயிருப்போம் என்றும், அதே போல் நான் ஜெயித்தால் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியருக்கு வேலைக்காரர் களாக இருந்து அவர்களைச் சேவிக்க வேண்டும்” என்றும் சவால் விட்டான்.
சவுல் ராஜாவும், அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் பயந்து நடுங்கினர். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தாவீது யுத்த வீரர்களாக இருந்த தன்னுடைய அண்ணன்மார்களுக்கு உணவு கொடுக்க யுத்தகளத்துக்கு வந்தான். தாவீது ஒரு கவணுடனும், ஐந்து கூழாங்கற்களுடனும் கோலியாத்தை எதிர்க்கச் சென்றான். கோலியாத் என்னும் மகா பராக்கிரமசாலியான பெலிஸ்தியன், நாற்பது நாட்கள் காலை, மாலை இரண்டு தடவை வந்து தான் சொன்னதையே சொல்லிச் சவால் விடுவதைப் பார்த்தான். அங்கு நின்றவர்கள் அனைவரும் ஓடினர். தாவீதின் உள்ளத்திலே தைரியம் வந்தது. அது என்ன தைரியமென்றால் தான் ஒருநாள் கர்த்தருடைய நாமத்திலே சிங்கத்தைக் கொன்றதையும், ஒருநாள் கர்த்தருடைய நாமத்திலே ஒரு கரடியைக் கொன்றதையும் நினைத்துப் பார்க் கிறான். கோலியாத்தையும் அதேபோல் கர்த்தருடைய நாமத்தில் கொல்ல முடியும் என்பதுதான்.தாவீதோ அந்தத் தைரியத்தில் அவனண்டையில் போனான்.
தாவீது அடைப்பையிலிருந்து ஒரு கல்லை எடுத்து கவணில் சுழற்றி கர்த்தரின் நாமத்தில் நெற்றியில் எறிந்தான். அந்தக் கல்லைக் கர்த்தர் சரியான இடத்தில் அடிபடும்படிச் செய்தார். கோலியாத் தரையில் முகங்குப்புற விழுந்தான். யுத்தம் முடிய வேண்டுமெனில் கோலியாத்தின் தலையை வெட்ட வேண்டும். தலையை வெட்டப் பட்டயம் வேண்டும். சிறிது யோசித்து தாவீது அவன்மேல் நின்று அவனுடைய பட்டயத்தையே எடுத்து அவனைக் கொன்று அவன் தலையை வெட்டினான். யுத்தம் முடிந்தது. இஸ்ரவேலருக்கு அது மாபெரும் வெற்றியைக் கொடுத்ததால், ஸ்திரீகள் வீரர்களுக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்பொழுது அவர்கள் சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” என்று சந்தோஷத்தால் பாட்டுப் பாடினார். சவுல் அங்கு ஒருவரையும் கொல்ல வில்லை. தாவீதுதான் கர்த்தரின் நாமத்தில் கோலியாத்தைக் கொன்றான். கர்த்தரைப் புகழ வேண்டிய வேளையில் ஜனங்கள் மனிதனைப் புகழ்ந்தனர். ஜனங்கள் தாவீதைப் புகழ்ந்ததைக் கேட்ட போது தாவீதின் மேல் சவுலுக்குப் பொறாமை ஏற்பட்டது.
அவர்களுடைய வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்து எரிச்சலடைந்தான். தாவீது கொன்றது பதினாயிரம், தான் கொன்றது ஆயிரம் என்கிறார்களே, இன்னும் ராஜாங்கம் மாத்திரமே குறைவாயிருக்கிறது என்று நினைத்து, அந்நாள் முதல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான். சவுல் சுமார் 14 ஆண்டுகள் வெறிபிடித்து தாவீதைக் கொலை செய்யத் தேடி அலைந்தான். சவுல் தாவீதை 21 முறை கொல்ல முயற்சித்தும் தாவீதோடு தேவ கரம் இருந்ததால் சவுலால் தாவீதைக் கொல்ல முடியாமல் போனது. சவுல் தன்னுடைய ஸ்தானத்தை மறந்து பொறாமைப் பட்டதால் அவனுக்குள் பொல்லாத ஆவி ஆட்கொண்டது. சவுலை ஆட்கொண்ட பொல்லாத ஆவியை விரட்ட தாவீது சுரமண்டலம் வாசித்துக் கொண்டிருந்த போது, தாவீதின் மேல் ஈட்டியை எரிந்தான். அப்போதும் தாவீது இரண்டுதரம் விலகிப் போய் தப்பித்தான் (1சாமுவேல் 18 : 11). தன்னுடைய மகளைக் கொடுக்கச் சம்மதித்துத் சவுல் தாவீதைக் கொல்லச் சதி பண்ணினான்.
தனது மகளை மனைவியாகத் தாவீதுக்கோ கொடுக்க 100 பெலிஸ்தியர்களின் நுனித் தோல்களைக் கொண்டு வர வேண்டுமென்று சவுல் கூறினான். அதாவது தாவீதைக் கொண்டு 100 பெலிஸ்தியர்களைக் கொல்ல வைக்கும் போது, அவர்கள் தாவீதைக் கொன்று போடுவர் என்று சவுல் சதித் திட்டம் தீட்டினான். ஆனால் தாவீதோ தன்னோடுள்ள மனுஷரைக் கூட்டிக்கொண்டு போய், பெலிஸ்தியரில் இருநூறு பேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு போய்க் கொடுத்து வெற்றி பெற்றான் (1சாமுவேல் 18 : 25 – 27). இன்னுமொரு முறை சவுலுக்குள்ளிருந்த ஆவியை விரட்ட தாவீது சுரமண்டலம் வாசித்துக் கொண்டிருந்த போது. தாவீதை ஈட்டியினால் சுவரோடு சேர்த்துக் குத்திப்போட சவுல் பார்த்தான். ஆனால் தாவீது அதனின்று விலகிப் போனான் (1 சாமுவேல் 19 : 10, 11, 12). கோபம் நிர்மூடனைக் கொல்லும், பொறாமை புத்தியில்லாதவனை அதம் பண்ணும்” என்று யோபு 5 : 2 ல் பார்க்கிறோம். பொறாமையுள்ளவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையைக் கெடுப்பார்கள், ஆனால் அது அவர்களையே அழித்து விடும். ரோமர் 13 : 12, 13 ல் பொறாமையானது அந்தகாரக் கிரியைகளுக்குள் காணப்படுகிறது என்று பவுலடியார் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.
சவுலும், சாமுவேல் தீர்க்கதரிசியும்:
சவுல் கோலியாத்தைக் கொன்றதினால் கொடுத்த வாக்கின்படி தன்னுடைய முதல் மகளான மேராபை மனைவியாகத் தாவீதுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தன் ஆணையை மாற்றி, தாவீதை ஏமாற்றி அவனுடைய மகளான மீகாள் தாவீதை விரும்பினதினால், அவளை அவனுக்குத் திருமணம் பண்ணிக் கொடுத்தான். சவுல் தன்னுடைய சொந்த மகளின் படுக்கையறையில் தாவீதைக் கொல்ல சூழ்ச்சி பண்ணினான். அவனது மகளான மீகாளோ, தந்தையின் சூழ்ச்சியை அறிந்து அவனைத் தப்புவிக்கச் செய்தாள். தாவீது சாமுவேல் தீர்க்கதரிசியோடு ராமாவிற்கு அடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுல் கேள்விப்பட்டு சாமுவேல் மேல் பயமற்றவராக, அங்கு தன்னுடைய சேவகர்களை மூன்று முறை அனுப்பித் தாவீதை அங்கிருந்து பிடித்து வர அனுப்பினான். பழைய ஏற்பாட்டின் வித்தியாசமான நிகழ்ச்சியாக ஆவியானவர் சாமுவேல் தீர்க்கதரிசி தங்கியிருந்த இடத்தில் தீர்க்கதரிசன ஆவியாகத் தங்கியிருந்தார். சவுல் அனுப்பின சேவகர்கள் மூன்று முறையும் தீர்க்கதரிசனம் உரைத்தபடி வந்த இலட்சியத்தை விட்டுத் திரும்பிச் சென்றனர். அதனால் சவுல் தானே போருடை பூண்டு தாவீதைத் தேடி ராமாவுக்கு அடுத்த நாயோத்திற்குச் சென்றான். அங்கு சவுலின் மேலும் ஆவியானவர் இறங்கியதால் தீர்க்கதரிசனம் உரைத்துப் போர் உடைகளைக் களைந்து போட்டு சாதாரண மனிதனாக விழுந்து கிடந்தான். சவுல் தான் வந்த இலக்கை மறந்து திரும்பிச் சென்றான் (1சாமுவேல் 19 : 18 – 24).
சவுலின் மரணம்:
அதன் பின் தாவீது அகிமெலேக் என்னும் ஆசாரியனிடம் போய் கேட்டு வாங்கி, பரிசுத்த அப்பத்தைச் சாப்பிட்டான். தன்னுடையில் ஆயுதம் இல்லாததால் தாவீது அந்த ஆசாரியனிடம் கேட்டு கோலியாத்தின் பட்டயத்தை வாங்கிக் கொண்டு போனான். இவைகளையெல்லாம் அறிந்த ஏதோமியனான தோவேக்கு அதை சவுல் ராஜாவிடம் கூறியதால், தன்னிடம் செய்தியைக் கூறிய அவனைக் கொண்டே 85 ஆசாரியர்களையும், அந்த ஆசாரியர்கள் பட்டணத்திலுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும் ஆடு, மாடு களையும், கழுதைகளையும் பட்டயத்தினால் வெட்டிப் போட்டான். தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்த ஆசாரியரைக் கொன்றது தேவன் மீதும், தேவ மனிதர் மீதும் சவுலுக்கு எந்த மரியாதையும், பயமும், பாசமும் இல்லை யென்பதைக் காட்டுகிறது. இவைகள் சவுலின் கோபத்தையும், எந்தப் பாவத்தை யும் செய்யலாம் என்ற அகங்காரத்தையும், கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யத் துணியும் ஆணவத்தையும் காட்டுகிறது. தனது நாட்டிலுள்ள அப்பாவியான குழந்தைகளையும், மிருகங்களையும் கொன்றது சவுலின் இரக்கமற்ற தன்மையைக் காட்டுகிறது.
சவுலுக்கு தாவீதிடமிருந்த பொறாமை குறையாததால் கொலைக்கு மேல் கொலையைச் செய்யத் தூண்டினான் (1 சாமுவேல் 22 : 1 – 20). சவுல் தாவீதைக் கேகிலாவில் வைத்து யுத்தம் பண்ணி அழித்துப் போட நினைத்தான். ஆனால் தாவீதோ கர்த்தரின் உத்தரவு பெற்று அங்கிருந்து வேறு இடத்துக்கு போனான் (1சாமுவேல் 23 : 8 – 13). கடைசியில் பெலிஸ்தியர் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணி வெற்றி பெற்றனர். அதில் சவுலின் மகனான யோனத்தானை வெட்டிப் போட்டனர் சவுலோ கில்போவா மலையில் தற்கொலை செய்து மரித்தான். (1சாமுவேல் 31 : 1, 2). அவனுடைய உடலைத் தாவீதின் நகரத்துக்கு கொண்டு போகவேயில்லை. அவனது தலையை மட்டும் கொண்டு சென்றனர். பொறாமையுடையவர்கள் எப்பொழுதும் எதிர்மறையான சிந்தனையிலும், பயம் கலந்த மன உளைச்சலுடனும், தன்னைவிடத் திறமையானவர்களைக் கண்டால் எரிச்சலுடனும் காணப்படுவர். இவர்களிடம் எந்த அன்பையும் காண முடியாது. அவர்களின் பேச்சு நயவஞ்சகத்துடன் காணப்படும். தன்னுடைய நண்பனாக இருந்தாலும் அவர்களுடைய திறமைகளை மேலே வரவிடாமல் தடுப்பர்.
கருத்து:
பொறாமை என்பது ஒரு சிறு விதையாகத்தான் நமக்குள் எழும்பும். அதற்கு நாம் இடம் கொடுத்து விட்டால் அது ஆலமரமாக விழுதுகள் விட்டுக் கிளை எழும்பி நமது வாழ்க்கையையே அலங்கோலமாக்கி ஒன்றுமில்லாமல் போகச் செய்யும். பொறாமையானது சாத்தானுக்குச் செயல்பட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறது. பொறாமையானது நமக்கு வரவிருக்கிற நன்மைகளை வரவிடாமல் தடுக்கிறது. தாவீதால் சவுலுக்கு வரவிருந்த எத்தனையோ நன்மைகளை சவுல் இழந்து விட்டான். பொறாமையானது தேவ திட்டத்துக்கு எதிராகச் செயல்பட வைக்கும். தாவீதைப் படிப்படியாக உயர்த்தி அரியணையில் அமர்த்த வேண்டுமென்பது கர்த்தருடைய திட்டம். விசுவாச வீரனான யோனத்தான் அதை அங்கீகரித்தான் (1 சாமுவேல் 23 : 17). பொறாமை பிடித்த சவுலோ அதற்கு எதிராக எழும்பித் தாவீதைக் கொலை செய்யத் தேடினான். விழுந்த கிடந்த சவுலைக் கொல்ல தாவீதோ, சாமுவேலோ துணியவில்லை. கர்த்தர் குறித்த காலத்துக்காகக் காத்திருந்தனர். கர்த்தரும் சவுல் மனந்திரும்ப வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டிருந்தும் சவுல் செத்து விழும்வரை மனம் திரும்பவேயில்லை. நாமும் தேவனுடைய ராஜ்ஜியத்தின் மகிமைக்காகவும், நமக்கு ஒத்தாசையாகவும் இருப்பவர்கள் மேல் பொறாமை கொள்ளக்கூடாது. ஆமென்.