Menu Close

பிலதெல்பியா சபையிலுள்ள ஜெயங்கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 3 : 12 “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.”

பிலதெல்பியா சர்தைக்குத் தென்கிழக்கில் 50 கிலோமீட்டர் தொலைவிலிருந்தது. பிலதெல்பியா பட்டணம் மூன்று சமவெளிப்பகுதியின் எல்லைப் பட்டணமாக வும் காணப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக இந்தப் பட்டணம் கட்டப்பட்டது. இந்த நகரம் வழியாக கிரேக்கக் கலாச்சாரம் சுற்றிலும் பரவ வேண்டுமென்பதுதான் பிலதெல்பியாவின் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தை பிலதெல்பியா நிறைவேற்றியது. கி. பி 19 ல் அவர்களது மொழியான விடியல் மொழியை மறந்து கிரேக்க மொழி பேசுபவராக மாறினார். இன்று துருக்கியில் அல்லாஷேர் என்று அழைக்கப்படும் அந்தப் பட்டணத்தில் பல கிறிஸ்தவ சபைகள் காணப்படுகின்றன. அதாவது தேவனுடைய நகரம் என்று அழைக்கப்படுகி றது. இன்று ஒரு அழகான நகரமாகக் காணப்படுகிறது. பூஞ்சோலைகளும் திராட்சத்தோட்டங்களும் நகரைச் சுற்றிலும் காணப்படுகிறது. இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் மணவாட்டி சபையை இவை பிரதிபலிக்கின்றன. ஆறு இஸ்லாமிய பள்ளிகள் உள்ளன. இங்கு பழைய தேவாலயங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த சபைக்கு கிறிஸ்து தன்னை அறிமுகப்படுத்தும் போது தன்னுடைய குணாதிசயங்களான பரிசுத்தமுள்ளவர், சத்தியமுள்ளவர், தாவீதின் திறவுகோலை உடையவர், பூட்டக்கூடாதபடி திறக்கிறவர், திறக்கக் கூடாதபடி பூட்டுகிறவர் என்று அறிமுகப்படுத்துகிறார். 

லேவியராகமம் 11 : 45 ல் “நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தமாயிருங்கள்” என்றார். கிறிஸ்து பூமியிலிருந்து நாட்களில் அவருடைய சொல், செயல் எல்லாவற்றிலும் பரிசுத்தமாகவே வாழ்ந்தார். அவரைப்போல யாரும் பரிசுத்தராக வாழ முடியாது பழைய ஏற்பாட்டில் அவருடைய நாமங்களில் ஒன்றாக பரிசுத்தர் என்றுள்ளது (ஏசாயா 1 : 4, 5 : 19, 24, 6 : 3, 10, 17, 20, 22 : 6, யோபு 6 : 10, எரேமியா 50 : 29, 51 : 5, எசேக்கியேல் 39 : 7, ஆசியா 11 : 9, ஆபகூக் 3 : 3). 1யோவான் 5 : 20ல் “அவர் சத்தியமுள்ளவர்” என்றுள்ளது. யோவான் 14 : 6 ல் “ நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்;” என்று அவர் ஒருவரால் மட்டுமே சொல்ல முடியும். பிலாத்து இயேசுவை நியாயம் விசாரித்தபோது சத்தியமானது என்ன என்ற கேள்வியைக் கேட்டார். சத்தியமே அவர்தான் என்பதால், இயேசு அவருடைய கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். கர்த்தர் திறக்கும் வாசலை யாராலும் அடைக்க முடியாது. அதேபோல் கர்த்தர் அடைக்கும் வாசலை யாராலும் திறக்க முடியாது. இந்தச் சபைக்கு வைத்திருப்பது போன்று நமக்கும் நாடெங்கும் திறந்த வாசலை கர்த்தர் வைத்திருக்கிறார். சபைகளில் புதிய ஊழியப் பாதையைத் திறக்கிறவர் அவரே. 

பிலதெல்பியா சபை எதிர்ப்புகள் மத்தியிலும் கிறிஸ்துவின் வசனத்தைக் கைக்கொண்டபடியினால் அந்த சபையின் ஊழியத்தில் திறந்த வாசலை வைக்கிறேன் என்கிறார். அதை ஒருவனும் பூட்டமாட்டான் என்று வாக்களிக்கிறார். மணவாட்டி சபையின் உருவகமாகவே இந்தச் சபை இருந்தது. பிலதெல்பியா சபையில் ஆவியானவர் செயல்பட்டதால் பெரிய காரியங்களைச் செய்தனர். அதனால்தான் இயேசு தன்னுடைய நாமத்தை மறுதலிக்காததையும், வேத வசனத்தை அவர்கள் கைக்கொண்டதையும் பாராட்டுகிறார். ஞானஸ்நானம் எடுத்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் அல்ல. அவர்கள் சாத்தானின் கூட்டத்தாராகவும் இருக்கலாம். இந்தச் சாத்தானின் கூட்டத்தாரின் சிலரை இந்தச் சபைக்குக் கொடுக்கப்போவதாக இயேசு கூறுகிறார். ஏனென்றால் அவர்கள் சபையோடு ஐக்கியம் கொண்டு பாதங்களில் விழுந்து பணிந்து கொள்வார்கள் என்கிறார் (3 : 9). இந்தச் சபையிலுள்ள உண்மையுள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுவிப்பேன் என்று கிறிஸ்து கூறுவது வரப்போகும் கோபாக்கினையிலிருந்து காக்கப்படப் போவதற்கு இணையாக உள்ளது. இது தேவனுக்கு உண்மையாக வாழும் அனைவருக்கும் பொருந்தும். அடுத்ததாக இயேசுவின் பொறுமையைப்போல் இந்த சபை தன்னுடைய பொறுமையைக் காத்துக்கொண்டதால் சோதனைக் காலத்தில் அவர்களைக் காப்பேன் என்று வாக்களிக்கிறார் (3 : 10). 

கிறிஸ்துவுக்கும் அவருடைய வார்த்தைக்கும் உண்மையாயிருந்து காத்திருந்து ஜெபிப்பதின் மூலமே விசுவாசிகள் இவ்வுலகில் உண்டாகப்போகும் உபத்திரவத்திலிருந்து விடுவிக்கப்பட முடியும். இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரை விளங்கிக் கொள்ளாமலிருந்தாலும், மூன்றரை ஆண்டுகள் அவரோடிருந்த சீஷர்கள் அவருடைய மேன்மையை அறிந்து கொள்ளாமலிருந்தாலும், அவருடைய அதிசயங்களையும், அற்புதங்களையும் அனுபவித்த மனிதர்கள் அவரை மேசியாவாக ஏற்றுக் கொள்ளாமலிருந்தாலும், அவர் அவசரப்பட்டதாகவோ, பொறுமையை இழந்ததாகவோ கூறப்படவில்லை. சோதனை காலத்தில் உதவியாக இருப்பேன் என்றோ, அந்தக் காலத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பையோ, ஆறுதலையோ தருவேன் என்றோ கூறாமல் அதிலிருந்து தப்பித்துக்கொள்ளச் செய்வேன் என்கிறார். இவ்வாறு தான் நோவாவை ஜலப்பிரளயத்திலிருந்தும், லோத்துவை கந்தகம் கலந்த அக்கினியிலிருந்தும் தப்புவித்தார். உலகத்தில் குடியிருக்கிறவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சோதனை காலமென்பது உலகின் இறுதி நாட்களில் அந்திகிறிஸ்துவின் ஆட்சியின் கீழ் நடக்கும் ஏழு ஆண்டுகால உபத்திரவ காலத்தைக் குறிக்கிறது. 3 : 11 ல் இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்று கூறுகிறார். 

இது அவருடைய வருகை இமைப்பொழுதில் சம்பவிக்கும் என்பதைக் காட்கிறது. புதிய ஏற்பாட்டில் 318 இடங்களில் அவருடைய வருகையைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இயேசுவின் வருகை அறிவித்த பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் 46 பேரில் 10 பேர் மட்டுமே அவருடைய முதலாம் வருகையில் சம்பவிக்கும் காரியங்களைக் முன்னறிவிக்கின்றனர். 36 பேர் அவரது இரண்டாம் வருகையின் வருகையின் நிகழ்ச்சிகளை மட்டுமே பேசினார். கர்த்தருடைய பந்தியைக் குறித்துப் இரண்டு முறையும் ஞானஸ்நானத்தைக் குறித்து 13 முறையும் பேசிய பவுல் அவரது வருகையைக் குறித்து 50 முறைக்கு மேலாகப் பேசியுள்ளார். இயேசு எதற்காக மீண்டும் வருகிறார் என்றால் சபையை எடுத்துக் கொள்ளவும் (யோவான் 14 : 3), சாத்தானை முறியடிக்கவும் (2 தெசலோனிக்கேயர் 2 : 8), புறஜாதியினரை நியாயந்தீர்க்கவும் (மத்தேயு 25 : 31 – 33), இஸ்ரவேலின் இரட்சிப்புக்காகவும் (ரோமர் 11 : 25 – 27), ஆயிரம் வருஷ அரசாட்சியை ஸ்தாபிக் கவும் (வெளிப்படுத்தல் 20), வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்காகவும் (வெளிப்படுத்தல் 20 : 4), புதிய வானம் புதிய பூமியை உருவாக்கவும் வருகிறார் (வெளிப்படுத்தல் 22). எனவே பிலதெல்பியா சபையாரிடம் தன்னுடைய வருகை சடுதியாக இருப்பதினால் அவர்களுடைய கிரீடத்தை அதற்குள் யாரும் எடுத்துக் கொள்ளாதபடி எச்சரிக்கையாயிரு என்கிறார். 

வேதத்தில் விசுவாசிகள் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வெற்றியின் சின்னமாக இது கருதப்படுகிறது. கிறிஸ்துவோடு ஆளுகை செய்யும் அதிகாரத்தை முன்னறிவிக்கிறது. இயேசு வருகிறவரை உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு என்கிறார். ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு மூன்று ஆசிகளைத் தேவன் தருவதாக வாக்களிக்கிறார். 1. உபத்திரவ காலத்தில் தப்புவிப்பேன் 2. ஆலயத்தில் தூணாக்குவேன் 3. புதிய நாமத்தை சூட்டுவேன் என்பவைகளாகும். தேவாலயத்தின் தூண்களாக நிறுத்தப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் அதினின்று ஒருக்காலும் நீக்கப்படுவதில்லை என்று வாக்குப் பண்ணப்படுகிறது. தூண்கள் என்ற வார்த்தை கலாத்தியர் 2 : 9ன் படி ஆளுகை, அதிகாரத்தைக் குறிக்கிறது. தூண்கள் நீக்கப்படுவதில்லை என்று சொல்லும்போது இரட்சிப்பின் ஸ்திரத்தன்மை வலியுறுத்தப்படுகிறது. தேவனுடைய நாமம் ஜெயங்கொண்டவர்கள் மேல் எழுதப்படுவதால், இனி அவர்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. தேவனிடம் அவருடைய நாமம் என்ன என்று கேட்டவர் மோசே. அதற்குக் கர்த்தர் யாத்திராகமம் 3 : 14 ல் “இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்றார். பின் ஒரு மேகத்திலிறங்கி அவன் அருகே நின்று அவருடைநாமத்தைக் கூறினார் அது என்னவென்றால் 

யாத்திராகமம் 34 : 6, 7 “ கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.”

தேவனுக்குச் சொந்தமானவர்களாக இருப்பதினால் அவர்களை தேவனுடைய கரத்திலிருந்து யாரும் பிரிக்க முடியாது என்பதால், 

யோவான் 10 : 28, 29 ல் “ – நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.”என்றார்.

இரண்டாவதாக ஜெயங் கொண்டவர்கள் எருசலேம் நகரத்தார் என்பதால், அந்தப் பட்டணத்தின் பெயரும் அவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் மேல் பதிக்கப்படுகிறது. மூன்றாவதாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் ஜெயங்கொண்டவர்கள் மேல் எழுதப்பட்டிருக்கும். (வெளிப்படுத்தல் 22 : 4). அர்மகெதோன் யுத்தத்துக்காக வெள்ளைக் குதிரையில் இயேசுவானவர் பூமியில் வந்து இறங்கும்போது வெளிப்படுத்தல் 19 : 12 ல் அவருடைய சிரசில் வேறொ ருவருக்கு தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது என்று உள்ளது. இந்த புதிய நாமம் அவர்கள் மேல் எழுதப்பட்டதின் விளைவாக பரிசுத்த பரம எருசலேமில் வாசம் செய்யும் மேன்மை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதிலிருந்து ஜெயங்கொண்டவர்களுக்கு பரலோகத்தில் உள்ள தேவனுடைய ஆலயத்தில் துணாக்குவது மட்டுமல்லாமல், தேவனுடைய நாமத்தையும், தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், புதிய நாமத்தையும் பெறுவர். நாமும் ஜெயங் கொண்டவர்களாக தேவனுடைய நாமம் நம்முடைய நெற்றியில் எழுதப்பட்டு தேவனிடத்தில் சேருவோம். ஆமென்.

Related Posts