Menu Close

கெட்டகுமாரன் – லூக்கா 15 : 11 – 32

இயேசு பரலோகத்தின் சத்தியங்களை ஜனங்கள் எளிமையாகப் புரிந்து கொள்வதற்காக உவமைகளாகக் கூறினார். இதை தேவனுடைய ராஜ்யத்தின் ரகசியங்கள் என்று சொல்லப்படுகிறது. எபிரேயத்தில் இதை மாஷால் என்பர். உவமைகள் நீதியைப் பற்றிய மத சம்பந்தமானவைகள். இயேசு ஜனங்களோடு உவமைகளினால் தான் பேசினார் என்பதை மத்தேயு 13 : 34ல் பார்க்கிறோம். இயேசு மறைபொருளை வெளிப்படுத்துவதற்காக உவமைகளினால் பேசினார் என்று மத்தேயு 13 : 35ல் பார்க்கிறோம். சீஷர்கள் இயேசுவிடம் “ஏன் உவமைகளாகப் பேசுகிறீர்” என்று கேட்டனர். அதற்கு இயேசு,

மத்தேயு 13 : 14 “அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. அவர்களுக்கோ அருளப்படவில்லை” என்றார்.

எனவே இந்த உவமைகள் பரலோகத்திற்குரிய சத்தியம். இது நம்முடைய வாழ்வில் நம்மை மேம்படுத்துவதற்கும், சரியானவனாக மாற்றவும் உதவியாக இருக்கும்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

இளையகுமாரன் தகப்பனிடம் கேட்டது:

லூக்கா 15 : 11, 12 “பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.”

“அவர்களில் இளையவன் தன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.

இயேசு இந்த உவமையை ஆயக்காரருக்கும், பாவிகளுக்கும், பரிசேயருக்கும் போதகருக்கும் கூறினார். ஒரு தகப்பனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அந்தத் தகப்பன் செல்வச் செழிப்புடனும், அநேக வேலையாட்களுடனும், மதிப்புடனும் வாழ்ந்தான். எனவே அந்த இல்லமானது வசதி நிறைந்த, மகிழ்ச்சி நிறைந்த இல்லமாக இருந்தது. அந்தத் தகப்பனின் இளைய குமாரன் தகப்பனிடம் அன்பும், ஐக்கியமுமில்லாதவன். நியாயப்பிரமாணத்தின் முக்கிய கட்டளையைக் கூடப் பின்பற்றாதவன் (யாத்திராகமம் 20 : 12). எனவே தந்தையோடு இருக்க விரும்பாமல் சுதந்தரமாக இருக்க விரும்பி வீட்டை விட்டுத் தூரமாகச் செல்ல விரும்பினான். இளைய குமாரன் தந்தையிடம் சென்று தந்தையின் சொத்தில் தனக்குரிய பங்கைப் பிரித்துத் தர வேண்டுமென்று கேட்டான். யூதர்களின் வழக்கப்படி தகப்பன் உயிரோடிருக்கிறவரை சொத்தைப் பிள்ளைகளுக்குப் பங்கு வைத்துக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அந்தத் தகப்பனோ இப்பொழுது தரமாட்டேன் என்றோ, தான் மரித்தபின் எடுத்துக் கொள்ளுங்கள் என்றோ எதுவும் சொல்லாமல் அவர்களுக்குரிய ஆஸ்தியைப் பங்கிட்டுக் கொடுத்தான் என்று இயேசு கூறினார். “அவர்களுக்குரிய” என்று கூறியிருப்பதால் தகப்பன் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்திருப்பார். மூத்தவன் தம்பியிடம் சென்று அவனிடம் அவன் செய்கிறது தவறு என்று சொல்லவேயில்லை. அவன் கேட்டதால் மூத்தவன் தனக்கும் கிடைத்தது என்று நினைத்திருப்பான். பாவிகளும் இதேபோல் தேவனை நேசிக்க மாட்டார்கள். அவர்களும் தேவனுக்கெதிரான செயல்களைத்தான் செய்வர்.

இளையகுமாரனின் செயல்:

“லூக்கா 15 : 13 – 16 “சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூர தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.”

“எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,”

“அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.”

“அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

சில நாட்களுக்குப் பின்பு இளைய குமாரன் அவனுடைய அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் அனைத்தையும் பணமாக்கி தந்தையை விட்டுத் தூர தேசத்துக்குப் போகத் தீர்மானித்து வீட்டை விட்டு வெளியேறினான். அந்தப் பணமானது அவனுடைய திறமையினாலும், புத்திசாலித்தனத்தினாலும், அவனுடைய கடின உழைப்பின்னாலும் சம்பாதித்தது அல்ல. அது அவனுடைய தந்தை அவனுக்குக் கொடுத்த பணம். இளைய குமாரன் உலகப் பிரகாரமாக இருக்கும் ஆவிக்கும், முழுமையாக விழுந்து போன ஒரு மனிதனுக்கும், அதாவது தேவனை ஏற்றுக்கொள்ளாத ஒருவனுக்கும் ஒப்பிடலாம். மூத்த குமாரனை தேவனுக்காகப் பிரயாசப்படுகிறவர்களுக்கு ஒப்புமைப் படுத்தலாம். 

நீதிமொழிகள் 18 : 1 “பிரிந்து போகிறவன் தன் இச்சையின்படி செய்யப் பார்க்கிறான்” 

என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளதைப் போல இளையகுமாரன் தன்னுடைய சுயசித்தத்தின்படி செயல்பட்டான். சுயசித்தத்தின்படி செயல்படும் பொது தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற முடியாது. நம்முடைய சித்தத்தை தேவனுடைய கரங்களில் அற்பணிக்கும்படியாக தேவன் விரும்புகிறார். பாவம் செய்கிறவர்கள் தேவனை விட்டுத் தூரமாகப் போகத்தான் பிரியப்படுவார்கள். முதல் உவமையிலே நுறு ஆடுகளிலே ஒரு ஆடு தான் காணாமல் போனது. வெள்ளிக்காசில் பத்தில் ஒன்று தான் காணாமல் போனது. இந்த மூன்றாவது உவமையில் அந்தத் தகப்பனுக்கு இருந்ததே இரண்டே இரண்டு குமாரர்கள் தான். வெளியில் காணாமல் போன ஆட்டைத் தேடி மேய்ப்பன் போனான் (லூக்கா 15 : 4, 5). காணாமல் போனத் தொலைந்து போன வெள்ளிக்காசைத் தொலைத்தவனே தேடிக் கண்டுபிடித்தான் (லூக்கா 15 : 8, 9). ஆனால் காணாமல் போன மகனைத் தேடி அந்தத் தகப்பன் போகவில்லை. ஏனென்றால் இளைய குமாரன் ஒரு ஆடுமில்லை, வெள்ளிக்காசுமில்லை. ஆட்டுக்குத் திரும்பிவர வழி தெரியாது. வெள்ளிக்காசும் அதே போல் தான். ஆனால் இளையகுமாரன் அவைகளைப் போலில்லாமல் ஒரு மனுஷனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். 

தூர தேசத்திற்குப் போன இளைய குமாரன் தூர தேசத்தில் துன்மார்க்கமாய் ஜீவியம் செய்தான். பிதாவின் கட்டுப்பாடு இல்லாததால் தன்னிஷ்டப்படி பணத்தைச் செலவழித்தான். எல்லாத் தீய பழக்க வழக்கங்களினாலும் பாவத்தின் சந்தோஷத்தை அனுபவித்தான். அவனிடம் பணம் அதிகமாக இருந்தபடியால் தீய நண்பர்கள் அவனோடு சேர்ந்தனர். இவைகள் எல்லாமே சில காலம் தான். பணம் காலியானவுடன் வந்த நண்பர்கள் மறைந்துவிட்டனர். பாவத்தின் பின்விளைவு வரத் தொடங்கியது. அந்த தேசத்தில் கொடிய பஞ்சம் வந்தது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டிற்கு செல்வதற்குப் பயம். அவனுடைய பாவம் பயத்தைக் கொடுத்ததால், தந்தையிடம் செல்லாமல் தன் காலில் நிற்க முயற்சித்து வேலை தேடினான். வேலை எதுவும் கிடைக்கவில்லை. தன்னோடிருந்த நண்பர்களிடம் சென்று தன்னுடைய நிலைமையை விளக்கி இருப்பான். அவர்கள் தீய நண்பர்கள் ஆதலால் இவனுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. 

அதன்பின் ஒரு குடியானவனிடம் சென்று வேலை கேட்டான். அவன் பன்றிகளை வளர்த்துக் கொண்டிருப்பவன். அவன் தன்னுடைய வயலில் சென்று பன்றிகளை மேய்த்தால் அவனுக்கு உணவு கிடைக்கும் என்றான். இளைய குமாரனும் சரி என்று கூறி, அந்த வேலையில் சேர்ந்தான். பன்றிகளை மேய்க்கும் மோசமான நிலைமைக்குத் தள்ளப் பட்டான். மோசேயின் நியாயப்பிரமாணத்தின் படி பன்றி அவர்களுக்கு அசுத்தமானது (லேவியராகமம் 11 : 7). உபாகமம் 14 : 8ல் பன்றியின் உடலைத் தொடவும் கூடாது என்றுள்ளது. அத்தகைய அருவருப்பான இடத்தில் சென்று அந்த இளைய குமாரன் வாழ்ந்து வந்தது எத்தனை கொடூரமானது. பாவமானது ஒரு மனிதனை அடி மட்டத்திற்குக் கொண்டு சென்று விடும். இளைய குமாரன் பிதாவோடு இருந்தபோது, அவருடைய ஐக்கியத்தில் இருந்தபோது குமாரனாகக் காணப்பட்டான். தூர தேசத்திற்குச் சென்று துன்மார்க்கமாக ஜீவியம் செய்தபோதும் குமாரனாகவே இருந்தான். ஆனால் பிதாவோடிருந்த போது அவனிருந்த நிலைமை வேறு பிதாவை விட்டுச் சென்ற பின் அவனிருக்கிற நிலை வேறு. அந்த வேலையை அவன் செய்யும் போது பன்றிகளின் ஆகாரமான தவிட்டைத் தின்ன ஆசைப்பட்டான். அதைக்கூட ஒருவனும் அவனுக்குக் கொடுக்கவில்லை. பசியின் கொடுமையை உணர்ந்தான். பாவிகளின் நிலைமையும் இதுதான். அவர்களுடைய சுயசித்தத்தினால் வேண்டாத தீய வழிகளில் சென்று கீழ்த்தரமான நிலமைக்குத் தள்ளப்படுவர்.

இளையகுமாரனின் மனந்திரும்புதல்:

லூக்கா 15 : 17 – 21 “அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.”

“நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.”

 “இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;”

“எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

“குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.”

இளைய குமாரன் தன்னுடைய நிலைமையை உணர்ந்து புத்தி தெளிந்தான். அவனுக்குப் புத்தி தெளிந்த போது தான் இவ்வாறு ஆனதற்கான காரண காரியங்களை ஆராய ஆரம்பித்தான், தன்னுடைய அறிவை பயன் படுத்தினான். தன்னுடைய தகப்பனுடைய வீட்டில் எவ்வளவு நேர்த்தியான ஆகாரம் இருக்கும் போது, நான் பசியினால் சாகிறேனே என்று நினைத்துப் பார்த்தான். தான் தன் தகப்பனை விட்டு வந்தது தவறு என்று உணர்ந்தான். எனவே தான் எழுந்து தகப்பன் வீட்டிற்குப் போய் “பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்து விட்டேன். இனி மேல் நான் உம்முடைய குமாரன் அல்ல என்று கூறி, கூலிக்காரர்களின் ஒருவனாக வைத்துக்கொள்ளும்” என்று கேட்பதற்காக எழுந்து புறப்பட்டு தகப்பனிடத்தில் வந்தான். தயக்கத்துடனே தகப்பனிடம் செல்கிறான். தன் தகப்பன் சேர்த்துக் கொள்வாரோ இல்லையோ என்ற தயக்கம். இதில் இளையகுமாரன் மனந்திரும்பிய நான்கு காரியங்களைப் பார்க்கிறோம். 

  1. அவன் அவனுடைய பாவ நிலைமையையும் பரிதாப நிலையையும் உணர்ந்து வருந்தினான்.
  2. தன்னுடைய பாவங்களை விட்டு மனம் திரும்புவதற்குத் தீர்மானித்தான்.
  3. தன்னுடைய தகப்பனைத் தேடிச் சென்றான்.
  4. தாழ்மையுடன் தன்னுடைய தவறுகளை ஒப்புக் கொண்டான். 

ஆனால் நடந்தது என்னவென்றால் இளையகுமாரன் தூரத்தில் வரும் போதே, அவனுடைய அண்ணன் பார்ப்பதற்கு முன்பு, வீட்டிலிலுள்ள வேலைக்காரர்கள் பார்ப்பதற்கு முன்பு, ஊரிலிலுள்ள ஜனங்கள் பார்ப்பதற்கு முன்பு, முதலாவது பார்த்தது அவனுக்காக ஏங்கி நின்ற தகப்பன் தான். தன்னுடைய காணாமல் போன மகன் வருகிறதை தூரத்தில் வரும்போதே தகப்பன் பார்த்தான். தன்னுடைய பணத்தையும், சொத்தையும், பெயரையும் நாசப்படுத்தி விட்டு அவன் வருகிற நிலைமையைப் பார்க்கிறான். ஒரு பிச்சைக்காரனைப் போல் அழுக்கான துணிகளோடும், பன்றிகளின் துர்வாசனையோடும் நின்று கொண்டிருந்த மகனைப் பார்த்து மனம் வருந்தினானேயொழிய அவனைத் தண்டிக்கவில்லை. வித்தியாசமான ஒரு காரியத்தைச் செய்கிறான். தன் வயதையும் பொருட்படுத்தாமல் வெளியே ஓடிப் போகிறான். அவனைக் கண்டு மனதுருகி கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தஞ் செய்தான். சமாதானத்தின் முத்தத்தை அந்தத் தந்தை கொடுத்தான். இந்தத் தகப்பன் ஒரு நாள் தன்னை விட்டுப் போன மகன் வரமாட்டானா என்று ஏங்கியிருந்திருப்பான். இயேசுவும் நாம் மனந்திரும்பி அவரிடம் செல்லும் போது நம்மை நேசிப்பார். நம்மைப் பார்த்து மனதுருகுவார். நம்மை ஏற்றுக்கொள்வார்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

தகப்பனின் சந்தோஷம்:

 லூக்கா 15 : 22 – 24 “ அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.”

“கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.”

“என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.”

இளைய குமாரனைப் பார்த்துத் தகப்பன் மிகவும் சந்தோஷத்துடன் “அவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான், காணாமற் போனான் திரும்பவும் காணப்பட்டான்” என்று தன்னுடைய ஊழியக்காரனிடம் கூறுகிறான். பாவம் செய்யும் போது ஒருவன் காணப்படாமற் போகிறான். தேவனுடைய பார்வையில் அவர்கள் செத்துப் போகிறார்கள். அவன் மனந்திரும்பும்போது ஆத்துமா வாழ்கிறது. ஏனெனில் “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்திருந்த நம்மைத் தேவன் உயிர்ப்பித்தார்.” என்று எபேசியர் 2 : 1ல் பார்க்கிறோம். தந்தை தன் ஊழியக்காரனிடம் அவனுடைய நாற்றம் பிடித்த ஆடையை (ஏசாயா 64 : 6). மாற்றச் சொல்லி உயர்ந்த வஸ்திரங்களை (ஏசாயா 61 : 3, 10) கொண்டு வந்து கொடுக்கச் செய்தான். இயேசு நம்முடைய பாவங்களைக் கழுவி சுத்திகரித்து நமக்குக் கொடுக்கும் வஸ்திரமானது நீதியின் வஸ்திரம். ஒரு விசுவாசி சுத்திகரிக்கப்பட்ட பின், இந்த வஸ்திரமானது அவனை மூடியிருக்கும். அவன் தன்னுடைய மகன் என்பதையும், அவனுக்கு எல்லா உரிமைகளும் கொடுக்கப்பட்டது என்பதையும் அடையாளப்படுத்த அவனுடைய கைக்கு மோதிரங்களை அணிவிக்கச் செய்தான். அவனுடைய காலைப் பார்த்து கால்களில் பாதரட்சை இல்லாததால் புது பாதரட்சைகளை (எபேசியர் 6 : 15) போட வைத்தான். 2000 ஆண்டுகளுக்கு முன் அடிமைகள் பாதரட்சை அணிவதில்லை. தன்னுடைய மகன் அடிமையல்ல என்பதைக் காண்பிக்க பாதரட்சைகளை அணிவித்தான்.

வஸ்திரமானது அன்பையும், மோதிரமானது உறவையும், பாதரட்சையானது அவனுடைய தகுதியையும் வெளிப்படுத்தியது. அவன் முன்னே இருந்த நிலைமைக்கு மீட்டுக் கொண்டு வரப்பட்டான்.மேலும் பன்றி தின்கிற தவிடு போன்ற தரக்குறைவான ஆகாரமும் கிடைக்காதவனுக்குக் கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடிக்கச் சொல்லி எல்லோரும் புசித்து சந்தோஷமாக இருப்போம் என்று கூறினான். தகப்பன் இளையமகன் வந்த தகவலை தன்னுடைய மூத்த மகனுக்குச் சொல்லி அனுப்பவில்லை. இதிலிருந்து மூத்தமகனும் தந்தையிடம் சரியான உறவில் இல்லையென்று அறிகிறோம். பன்றிகளின் சத்தத்தைக் கேட்ட இளைய மகனுக்கு இசையோடு கூடிய பாடல்களையும், தள்ளாடி நடந்தவனுக்கு நடனக் களிப்பையும் கேட்கவும் பார்க்கவும் செய்தார். இதில் அந்தத் தந்தை தன்னிடம் பெற்றுச் சென்ற சொத்தையும் துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணி இழந்து வந்து நிற்கிறானே என்று கோபப்படாமல், இப்பொழுதாவது என்னைத் தேடி வந்தானே என்று சந்தோஷப்படுவதைப் பார்க்கிறோம். இது தான் ஒரு தந்தையின் அன்பு. 

மூத்த குமாரனின் கோபம்: 

லூக்கா 15 : 25 – 30 “அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீத வாத்தியத்தையும், நடனக்களிப்பையும் கேட்டு;”

“ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.”

“அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.”

“அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.”

“அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.”

“வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.” 

இளைய குமாரன் தகப்பனை விட்டுப் போனாலும், மூத்த குமாரன் தன் தகப்பனுக்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு வாழ்க்கையை வாழ்கிறான். இளைய குமாரன் திரும்பி வரும்போது கூட வயலில் தான் இருக்கிறான். சுறுசுறுப்பானவன். தகப்பனைக் கூட வயலுக்கு வர விடவில்லை. மூத்த குமாரன் வயலிலிருந்து தன்னுடைய வீட்டுக்குத் திரும்பி வரும்போதே தன்னுடைய வீட்டில் கேட்கிற கீத வாத்தியத்தையும், நடனங்களின் சத்தத்தையும் கேட்டான். உடனே தன்னுடைய ஊழியக்காரரின் ஒருவனை அழைத்து எதற்கு இந்த கீத வாத்தியம் என்று விசாரித்தான். தன்னுடைய தகப்பனிடம் சென்று அதைக் கேட்கவில்லை. அதற்கு அந்த ஊழியக்காரன் உன்னுடைய சகோதரன் வந்துவிட்டான். அவன் திரும்பவும் உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினால் உன்னுடைய தகப்பன் கொழுத்த கன்றை அடித்து விருந்து வைக்கிறான் என்ற தகவலை அறிவித்தான்.

அதைக்கேட்ட மூத்தக்குமாரன் தன்னுடைய சகோதரன் திரும்பி வந்ததையும் அவனுக்கு கொடுக்கப்பட்ட விருந்து மரியாதையும் கேட்ட போது, சந்தோஷத்துடன் தம்பியைப் போய்ப் பார்க்கவில்லை. மிகவும் கோபம் கொண்டு உள்ளே சென்று தகப்பன் கொடுத்த விருந்தில் கலந்து கொள்ளவுமில்லை. உள்ளே போகாமலேயே வெளியே நின்றான். யோனா தீர்க்கதரிசி நினிவே மக்கள் இரட்சிக்கப்பட்ட போது மகிழ்ச்சியடையாமல் கோபத்துடன் பட்டணத்துக்கு வெளியேயிருந்து பார்த்ததைப் போல, முத்த குமாரனும் வெளியே நிற்பதைப் பார்க்கிறோம். ஆனால் தகப்பனோ அவனை உள்ளே வரச்சொல்லி வருந்தி அழைத்தான். அவன் தகப்பனைப் பார்த்து “இதோ, இத்தனை வருஷ காலம் உம்மோடு கூட நான் இருந்தும் உம்முடைய கற்பனையை மீறாமல் இருந்தும் ஒரு நாள் கூட நான் சந்தோஷமாக இருப்பதற்கு ஒரு ஆட்டுக்குட்டியைக் கூட நீர் கொடுக்கவில்லை” என்று குறை கூறினான். இதில் தகப்பன் முத்தாகுமாரனை அவனுடைய விருப்பத்தின்படி செயல்பட அனுமதிக்கவில்லை என்றறிகிறோம். தகப்பனைப் பார்த்து தகப்பனே என்றழைக்காமல் “இதோ” என்றழைப்பதைப் பார்க்கிறோம். தகப்பனுக்குரிய மரியாதையையும் அவன் கொடுக்கவில்லை. “வேசிகளிடம் தன் பணத்தையும், ஆஸ்தியையும் அழித்துப் போட்ட இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிக்கிறாயே” என்று கேட்டான். தகப்பன் செய்தது சரியில்லை என்று தகப்பனைப் பார்த்துக் குற்றம் சாட்டுவதைப் பார்க்கிறோம்.

மூத்த குமாரனுக்குத் தகப்பனைப் போல அன்பு செலுத்தும் குணம் இல்லை. தன் சொந்த சகோதரனிடமே அன்பு செலுத்தாதவன், வெளியே போய் யாரிடம் அன்பு செலுத்த முடியும். தனக்குத் தகப்பன் தந்த பொக்கிஷத்தை அறியாதவனாக இருந்தான். இதேபோல் நாமும் தேவன் நமக்குத் தந்திருக்கும் பொக்கிஷங்களின் விலைமதிப்பை அறியாதவர்களாய் இருக்கிறோம். தனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக் கூட கொடுக்கவில்லை என்று தகப்பனிடம் குறை சொல்கிறான். இதிலிருந்து அவன் வேலையை உற்சாகமாகவோ சந்தோஷமாகவோ தன் தகப்பனுக்குச் செய்யவில்லை. அனைத்தையும் தனக்காகவே அவன் செய்தான் என்று அறிகிறோம். மூத்த குமாரனின் குணங்கள் பரிசேயரின் குணங்களுக்கு ஒத்திருப்பதைப் பார்க்கிறோம். அவைகள் என்னவென்றால், 

மூத்த குமாரன் பரிசேயரைப் போல முறுமுறுத்தான் (15 : 2, 29, 30). 

பரிசேயரைப் போல பொறாமை கொண்டான் ( 15 : 2, 30). 

இவனுக்கு தம்பி மேல் அக்கறை இல்லை (15 27 : 32). பரிசேயர்களுக்கு பிறர் மேல் அக்கறை இல்லை (15 : 2). 

இவன் தம்பியை குற்றஞ்சாட்டினான் (15 : 30). பரிசேயர்கள் பிறரைக் குற்றம் சாட்டினர் (15 : 2). 

தம்பிக்கு கிடைத்த அங்கீகாரத்தை கண்டு இவன் கோபமுற்றான் (15 : 28). பிறர் இயேசுவண்டை சேர்க்கப்பட்டதால் பரிசேயர்கள் கோபம் கொண்டனர் (15 : 2). 

வீட்டுக்குள் செல்ல இவனுக்கு மனமில்லை (15 : 26). பரிசேயர்கள் தேவராஜ்ஜியத்துக்குள் செல்லவுமில்லை. பிறரைச் செல்ல விடவும் இல்லை. ( மத்தேயு 23 : 13) 

இவன் தம்பியை அற்பமாக எண்ணினான் (15 : 30). பரிசேயர் பிறரை அற்பமாக எண்ணினர் (லூக்கா 18 : 9) . இப்பொழுது மூத்த குமாரனே கெட்ட குமாரன். 

 தகப்பனின் பதில்:

லூக்கா 15 : 31, 32 “அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.” 

“உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்.”

தகப்பனிடம் இரண்டு குமாரர்களையும் பாரபட்சமின்றி பார்க்கும் குணத்தைப் பார்க்கிறோம். ஆனால் முதலில் இளைய குமாரன் தான் வெளியே போனான். அவன் வந்தவுடன் தந்தை வெளியே போய் தன் மகனை அழைத்து வரப் போனான். ஆனால் இப்பொழுது மூத்த குமாரனும் வெளியே நின்று கொண்டிருக்கிறான். வருந்தி அழைத்தும் உள்ளே வரவில்லை. மூத்த மகனைப் பார்த்துத் தந்தை கோபப்படவில்லை. மேலும் தகப்பன் அவனிடம் தன்னுடைய செல்வம் எல்லாம் அவனுக்கே உரியது என்பதைத் தெளிவு படுத்தினான். அவனது தம்பி திரும்பி வந்ததற்காக மகிழ்ச்சியடையும்படி கூறினார். 

கற்றுக்கொண்ட பாடம்:

இதில் மூன்று குமாரர்களைப் பார்க்கிறோம். இளைய குமாரன் பிதாவின் இதயத்தை நொறுங்கச் செய்தான். மூத்த குமாரன் தந்தையின் ஐக்கியத்தை விட்டு கோபத்தில் வெளியே இருந்தான். மூன்றாவது குமாரனாகிய இயேசு தான் இந்த உவமையைக் கூறியவர். அவர் தேவனுடைய குமாரன். அவர் பாவமில்லாதவர். தூரப்பிரதேசமான உலகத்திற்கு பிதாவினிடத்திலிருந்து அவருடைய சித்தம் செய்ய வந்தவர். தியாகமான வாழ்க்கை நடத்தியவர். சமாதான பிரபு. உலகத்தின் பாவங்களுக்காகத் தன்னுடைய இரத்தத்தைச் சிந்தினவர். இளைய குமாரன் “நான் உம்முடைய குமாரன் என்று சொல்வதற்கு பாத்திரனல்ல” என்று தன்னைத் தாழ்த்தினான். “ஒரு வேலைக்காரனாகத் தன்னை வைத்துக்கொள்ளும்” என்று கேட்டான். இளைய குமாரனிடம் முற்றிலும் மாற்றத்தைப் பார்க்கிறோம். அவனுக்குப் புத்தி தெளிந்த பின்பு தான் இந்த மாற்றத்தைப் பார்க்க முடிந்தது. நமக்கும் புத்தியில் தெளிவு வேண்டும். நமக்குள் ஆவியானவர் வந்து விட்டால் முற்றிலும் மாற்றம் வந்து விடும். பின்வாங்கி போன தன்னுடைய சகோதரன் உள்ளே வந்தவுடன் மூத்தவன் சந்தோஷப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை. தன்னுடைய சகோதரனிடம் அன்பு இல்லாதவனாய், கரிசனை இல்லாதவனாக இருந்தான். இதேபோல் தான் கிறிஸ்தவனாக நாம் இருந்தும் கிறிஸ்துவின் குணம் நமக்குள் வரவில்லை. மனந்திரும்புவது எவ்வளவு அவசியம் என்பதை இந்த உவமை நமக்கு வெளிப்படுத்துகிறது. அதனால் தான் இயேசு 

அப்போஸ்தலர் 17 : 20 “அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.” 

தேவன் கெட்டுப் போனவர்களின் பரிதாபமான நிலையைக் கண்டு இரங்குவார். அவர்கள் மீது தேவனின் அன்பு மிக அதிகமாக இருப்பதால், அவர்களுக்காக அவர் துக்கப்பட்டு, திரும்பி வருவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். 

மத்தேயு 11 : 28 “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” 

பாவிகள் உண்மையில் மனம் திரும்பும் போது தேவன் அவர்களை மன்னித்து தன்னுடைய பிள்ளை என்ற உரிமையோடு ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறார். தேவனைத் தேடுகிறவர்களுக்குத் தேவனுடைய கிருபையும், பரிசுத்தாவியின் வல்லமையும், இரட்சிப்பின் நன்மைகளும் கிடைக்கும். மீண்டும் இரட்சிக்கப்பட்டு மனந்திரும்பிய ஆத்துமாவைக் குறித்து தேவன் அடையும் சந்தோஷத்திற்கு அளவில்லை (15 ; 6, 7, 10, 22 — 24). நம்முடைய பிதா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களிலே ஐசுவரியவானாக இருக்கிறார். அவை எல்லாம் நமக்குச் சொந்தமானவை. ஆனால் அதை எடுத்துப் பயன்படுத்தும்படி நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை. நாமே அதை எடுத்து பயன்படுத்த வேண்டும். இந்த உவமை பிதாவின் ஐக்கியத்தை விட்டு தூரம் போயிருந்த மூத்த குமாரனோடு நிறைவு பெறுகிறது. இருந்தாலும் பிதாவானவர் கதவைத் திறந்தே வைத்திருக்கிறார். ஐக்கியம் கொள்ள அவரிடம் செல்லுவோம். எதைச் செய்தாலும் நாம் கர்த்தருக்கென்று செய்ய வேண்டும். கர்த்தரை கவுரவப்படுத்தச் செய்ய வேண்டும். கர்த்தரைப் பெருமைப்படுத்தச் செய்ய வேண்டும். ஆமென்.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

Related Posts