Menu Close

களைகள் – மத்தேயு 13 : 24 – 29

மத்தேயு 13 : 24, 25 “ வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை  விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.”

மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.”

பரலோகத்தின் இரகசியங்களை உவமையின் மூலம் இயேசு சொல்லிக் கொடுத்தார். இந்த உவமையில் பரலோகராஜ்ஜியத்தை நல்ல நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்புமைப் படுத்திக் கூறுகிறார். இதில் நிலம், விதை, களைகளைப் பற்றிக் கூறுகிறார். ஒரு எஜமான் நிலத்தில் நல்ல விதைகளை விதைத்தான். ஆனால் அந்த இரவிலே சாத்தான் கோதுமைக்குள் களைகளை எஜமான் தூங்கும் போது சத்துரு களைகளையும் விதைத்து விட்டுப் போனான். சாத்தான் எப்பொழுதுமே துன்பங்களை விதைக்கிறவன். 

1பேதுரு 5 : 8 “……… உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.”

என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறியதைப் பார்க்கிறோம். தேவபிள்ளைகளின் எதிராளியான பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல அவர்களை விழுங்குவதற்காகவும், அழிப்பதற்காகவும் சுற்றித் திரிகிறான். எபேசியர் 5 ; 14 – 16ல் பவுல் கூறியதைப் போல இதில் கூறப்பட்ட எஜமான் ஞானமற்றவனாய் நடந்தான். சீஷர்கள் இந்த உவமைக்கு விளக்கம் கூறவேண்டுமென்று இயேசுவிடம் கேட்டனர்.. அதனால் இயேசு அவர்களுக்கு விளக்கமளிக்கும் போது, 

மத்தேயு 13 : 37 — 39 “அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்.”

“நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;”

“அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.”

இதில் நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷ குமாரனாகிய இயேசுவைக் குறிக்கிறது. நிலமென்பது உலகத்தைக் குறிக்கிறது. நல்ல விதையென்பது தேவனுடைய ராஜ்ஜியத்தின் பிள்ளைகளைக் குறிக்கிறது. களைகள் என்பது பொல்லாங்கனுடைய பிள்ளைகளைக் குறிக்கிறது. களைகளை விதைக்கிறவன் சத்துருவாகிய பிசாசு. உலகத்தின் முடிவில் கர்த்தர் தேவதூதர்களைக் கொண்டு அவைகளை அறுவடை செய்வார். நிலத்தில் களையும், கோதுமையும் சேர்ந்தே வளருகிறது. அந்த நிலத்துக்கு ஒருவன் பாதுகாவலனாக தண்ணீர் ஊற்றுகிறவனாய் நியமிக்கப்பட்டிருக்கிறான். சாத்தானின் வேலை நிலத்தை பலன் கொடுக்க விடாமல் தடுப்பதும், அவனுடைய வேலையைத் தடுப்பதும் தான். இதேபோல் ஜனங்களைக் குழப்புவதற்குச் சாத்தான் தவறான உபதேசத்தை விதைக்கிறான். வேண்டாதவைகளைக் கேட்கவும், பார்க்கவும் வைக்கிறான். செவியை மிகவும் அதிகமாகப் பயன்படுத்தி சாத்தானின் சொல்லைக் கேட்க வைக்கிறான் . சாத்தானுக்குத் தேவை உங்களுடைய இருதயத்தை ஆளுகை செய்து தேவனுடைய விதையைப் அதில் நிலைக்க விடாமல் செய்வது தான்.

வேலைக்காரனின் கேள்வியும், எஜமானின் பதில்களும்: 

மத்தேயு 13 : 26, 27 “பயிரானது வளர்ந்து கதிர் விட்ட போது, களைகளும் காணப்பட்டது. “

“வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.”

நிலத்தில் பயிரோடு களைகளும் சேர்ந்தே வளருகிறது. எஜமானுடைய வேலைக்காரன் எஜமானிடம் வந்து, நாம் நல்ல விதையை விதைத்த போது களைகள் எப்படி வந்தது என்று கேட்டான். அதற்குக் காரணம் மனுஷன் நித்திரை பண்ணியதால் சத்துரு களைகளை விதைத்து விட்டுச் சென்றான். விதைத்த மனுஷன் விழிப்பாகக் காணப்பட்டால் களைகள் வர வாய்ப்பில்லாமல் ஆகியிருக்கும். இந்த இடத்தில் களைகளுக்கான காரணம் நித்திரை என்று பார்க்கிறோம். இங்கு நிலம் சபைக்கும், உலகத்துக்கும், நமது இருதயத்திற்கும் ஒப்பாயிருக்கிறது. நிலத்துக்கு ஊற்றப்பட்ட தண்ணீரையும், போடப்பட்ட உரத்தையும் கோதுமைக் கதிர்களோடு, களைகளும் சேர்ந்தே சாப்பிடுகிறது. செடியானது நன்றாக வளர்ந்த பின் கோதுமை எது, களைகள் எது என்று எளிதாகப் பார்க்க முடியும். நீங்களும் வளர்ந்து வரும் வேளையில் சத்துரு சில பிரச்சனைகளை களைகளைக் கொண்டுவருவான். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேலைக்காரர்கள் அந்த களைகளைப் பிடுங்கிப் போட எஜமானிடம் உத்தரவு கேட்டான். 

மத்தேயு 13 : 28, 29 “அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்”

“அதற்கு அவன் வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு இரண்டையும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள்.”

எஜமான் வேலைக்காரர்களிடம் சத்துரு தான் களைகளை விதைத்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்கள் அந்தக் களைகளைப் பிடுங்கிப் போடட்டுமா என்று எஜமானிடம் கேட்டனர். அதற்கு எஜமான் களைகளைப் பிடுங்கும் போது, கோதுமையும் சேர்த்தே பிடுங்கி விடுவீர்கள் எனவே அறுவடை வரை களைகளை வளர விடுங்கள் என்றார். பயிர்களோடு களைகளும் வளர்கிறது. பயிர்களுக்குச் செல்ல வேண்டிய உரத்தையும், தண்ணீரையும் கிரகித்துக் களைகள் செழிக்கின்றன. பயிர்களைவிட களைகள் வேகமாக வளர்ந்து பயிர்களை ஒடுக்கி, பயிர்களுக்கு கிடைக்க வேண்டிய சூரியஒளியை அபகரித்துக் கொள்கின்றன. இயேசுவின் இரகசிய வருகை வரை சபையில் விழிப்புணர்வு உள்ளவர்களாக ஜெபித்து, உபவாசித்து, வேதத்தின் சத்தியத்தைப் போதித்து, விசுவாசிகளுக்குப் பாதுகாப்பாக இருந்து, பரலோகத்திற்கு அவர்களைக் கொண்டு சேர்ப்பதுதான் மேய்ப்பர்களின் கடமை. சபைக்குள் வருகிறவர்கள் அனைவரும் ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்கள் என்று எண்ணக்கூடாது. 

சபைக்குள் களைகளை விதைப்பதற்கு நாம் வாசலாகவோ, படியாகவோ இருக்கக் கூடாது. ஏனெனில் சிலர் குறை உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். தேவன் நல்ல சுபாவம் உள்ளவர்களைக் கொண்டு வருகிறார். பிசாசு கெட்ட சுபாவம் உள்ளவர்களைக் கொண்டு வருகிறான். அறுப்பு மட்டும் வளர வேண்டும் என்று கூறுவது, இரண்டு வகை அறுப்புகள் உண்டு. ஒன்று உலகத்தின் முடிவு, இரண்டாவது இயேசுவின் வருகை. அவிசுவாசிகளை இயேசு கடைசிவரை சபையில் வைத்துக் கொள்ளச் சொல்கிறார் கோதுமையும் களைகளும் பின்னி பிணைந்திருப்பதைப் போல, சபையிலும் இருவரும் சேர்ந்தே இருக்கிறார்கள். கோதுமையைப் பிடுங்கக் கூடாது என்பதற்காகக் களையையும் வளரவிடச் சொல்லுகிறார். சிலரிடம் குறைபாடுகள் இருந்தாலும் அவர்கள் சத்தியத்தைக் கேட்க கேட்க அவர்களின் குறைபாடுகள் மாறலாம். இயேசுவோடு யூதாஸ் இருந்தான். உங்களில் ஒருவன் என்னை காட்டிக் கொடுப்பான் என்று இயேசு கூறினார். அவன் மனம் திரும்புவதற்கான சந்தர்ப்பம் அது. ஆனால் அவன் மனம் திரும்பவில்லை. அவனுடைய முடிவு பரிதாபமானது. 

தூக்கத்தில் விளைவு:

வேதத்தில் இரண்டு விதமான நித்திரையை பார்க்கிறோம். 1. சரீரப் பிரகாரமான நித்திரை. இது தூக்கம். 2. ஆவிக்குரிய நித்திரை. இது உணர்வு இல்லாத நிலை. இது ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கும். இந்த இரண்டு விதமான நித்திரையிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறிய தூக்கம் கூடாது. அது ஆவிக்குரிய வளர்ச்சியைக் கெடுத்துவிடும் 

நீதிமொழிகள் 20 : 13 “தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண் விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.” என்று சாலமோன் கூறியதைப் பார்க்கிறோம். 

மத்தேயு 25ஆம் அதிகாரத்தில் பத்து கன்னிகைகள் மணவாளன் வருகைக்காகக் காத்திருந்ததைப் பார்க்கிறோம். இதில் 5 பேர் புத்தி உள்ளவர்கள்.. 5 பேர் புத்தி இல்லாதவர்கள். அவர்கள் அனைவரும் நித்திரை அடைந்தனர். அவர்களின் தூக்கத்தால் 5 பேர் மணவாளனை சந்திக்க முடியவில்லை

சவுல் தாவீதைக் கொல்லப் பிரயாசப்பட்டான். ஆனால் சவுல் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவன் பக்கத்தில் வைத்திருந்த ஈட்டியையும், செம்பையும் தாவீது எடுத்துக்கொண்டு போனான். ஆனால் அவனைக் கொல்லவில்லை. சவுலின் படைத் தலைவனான அப்னேரை தாவீது அழைத்து உன் ஆண்டவரை நீ காக்காமல் தூங்கி விட்டாயே என்று கேட்கிறான் (1சாமுவேல் 26 : 12, 15). ஈட்டி என்பது வைராக்கியத்தையும், தண்ணீர் செம்பு கிருபையையும், அபிஷேகத்தையும் குறிக்கிறது. அதனால்தான் சவுல் கிருபையின் ஆவியை இழந்தான்.

நியாயாதிபதிகள் 16 : 19ல் சிம்சோன் நித்திரையில் இருக்கும்போது அவனது 7 ஜடைகளையும் எடுத்துவிட்டனர். ஜடை பிரதிஷ்டையையும், நசரேய பிரதிஷ்டையையும் வெளிப்படுத்துகிறது. அதை எடுத்தவுடன் சிம்சோன் சாதாரண மனிதனானான். பெலிஸ்தியர் பிடித்துக் கொண்டு போய் வெண்கல விலங்கிடப்பட்டு கண்களைப் பிடுங்கி மாவரைக்க வைத்தனர். அவனுடைய வல்லமை, பிரதிஷ்டை அனைத்தையும் இழந்து அடிமையாக மாவரைத்தான். ஆவிக்குரிய நித்திரையான உணர்வில்லாத இதயத்தில் பிசாசு குடிபுகுந்து வேண்டாதவைகளை விதைத்துவிடாதபாடி நாம் கவனமாக இருக்க வேண்டும். 

அறுவடையாகிய நியாயத்தீர்ப்பு: 

மத்தேயு 13 : 30 “அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.”

அறுக்கிற வேலையை மனுஷர்களிடம் கொடுக்காமல் தேவன் தேவதூதர்களின் கையில் கொடுக்கப் போவதைப் பார்க்கிறோம். 100 மடங்கு பலனைப் பெற்றவன் தூங்காமல் பயிரைக் காத்தவன். அறுப்புக் காலத்தில் அறுக்கிறவர்களிடம் முதலில் களைகளைப் பிடுங்கி சுட்டெரிப்பதற்காக கட்டுகளாகக் கட்டுங்கள் என்றார். கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்றும் கூறினார். பயிர் விளையும் நேரத்தில் களைகளைப் பிடுங்குவது தேவனுடைய சித்தமல்ல. கர்த்தருடைய கண்கள் பயிர்களின் மேல் நோக்கமாயிருக்கிறது. களைகளைப் பிடுங்கும் போது உத்தம விசுவாசிகள் இடறிவிடக் கூடாதென்றும், சிறியரில் ஒருவர் கூடக் கெட்டுப்போகக்கூடாதென்பதும் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. களைகளைப் பிடுங்க கர்த்தருக்கு அதிக ஆர்வமுண்டு. 

கோதுமையை வளர்ப்பது தான் நமது பொறுப்பு. களைகளைப் பிடுங்கத் தேவன் நமக்கு உத்தரவு கொடுப்பதில்லை. களைகளைக் கவனித்துக் கொள்வது கர்த்தருடைய பொறுப்பு. நியாயத்தீர்ப்பு நாளில் கர்த்தர் அதை பார்த்துக் கொள்வார். இதில் அறுப்புக் காலம் என்பது நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. உலகத்தின் முடிவு வரும்போது தேவதூதர்கள் அக்கிரமம் செய்பவர்களை அழுகையும் பற்கடிப்பும் உள்ள அக்கினிச்சூளையில் போடுவார். போட்டபின் களைகளாகிய அவிசுவாசிகள் திருந்துவதற்கு வாய்பில்லாமல் போய்விடுகிறது. இதில் வசனத்தின்படி நடக்கிறவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகவும் நடக்காதவர்கள் சாத்தானின் பிள்ளைகளாகவும் இருப்பதாக மத்தேயு 13 : 38ல் கூறுகிறார். கோதுமையாகிய விசுவாசிகள் மாறாமல் இருப்பது தேவனுடைய கிருபை. நாம் களைகளாக மாற தேவன் அனுமதிப்பதில்லை. அவர் நமக்குத் தண்ணீர் ஊற்றி, உரம் போட்டு வளர்த்து முதிர்ச்சியாக்கி நம்மைக் கொண்டுபோய் பரலோகத்தில் சேர்க்கிற வரை ஆவியானவர் சும்மாயிருக்க மாட்டார். கோதுமைமணியான விசுவாசிகள் நன்றாய் வளருவதற்கு சபையில் சத்தியத்தைப் போதிக்க வேண்டும். 

அக்கினி சூளைக்குச் செல்லாமலிருக்க நாம் பாவம் இல்லாதவர்களாக வாழவேண்டும். பாவம் நம்மை ஆட்கொள்ள அனுமதிக்கக்கூடாது. இயேசு “என்னிடம் பாவம் உண்டு என்று யார் சொல்ல கூடும்” என்றார். இயேசு நமக்கு முன்னோடியாக பாவம் இல்லாதவராக வாழ்ந்து காட்டினார். “நான் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்றார். எனவே நாம் களைகளாக இராதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டும். நாம் கோதுமையாயிருப்போமானால் நம்மைப் பரலோகத்தில் கொண்டுபோய் நிச்சயமாய்ச் சேர்ப்பார். களைகளை நாம் அடையாளம் கொள்ள வேண்டும். அவ்வாறு அடையாளம் கண்டு கொண்டால் நிச்சயமாக அதற்குத் தப்பித்துக் கொள்வோம். வேதம் என்ன கூறுகிறதென்றால் கடைசி நாட்கள் வரை களைகளுக்கு அவர்கள் களைகள் என்று தெரியாது. கடைசியில் அவைகளை அறுத்து அக்கினியில் போடும் பொழுது தான் அவைகளுக்கு அது தெரியும். அது துர்பாக்கியமான நிலமை. கர்த்தர் நமக்கு ஆரோக்கியமான உபதேசங்களைக் கொடுத்திருக்கிறார். சபையின் உபதேசங்களாக முதுகெலும்பாக இருப்பது பவுலின் 14 நிருபங்களும், மற்றவர்கள் எழுதிய 7 நிருபங்களும் தான். இவைகள் தான் சபைக்காக எழுதிக் கொடுத்திருக்கிற விலையேறப்பெற்ற முத்துக்கள். யோவான் இதில் களை எது கோதுமை எது என்பதை அழகாகத் தெளிவாகக் காட்டுகிறார். கிறிஸ்துவை மறுதலிக்கிறவன் அந்திகிறிஸ்து என்கிறார். கிறிஸ்துவை மறுதலித்து பிதாவை மட்டும் ஆராதிப்பவர்கள் கிறிஸ்துவை ஒரு சிருஷ்டி என்றும், அவர்களை கடவுளிடமிருந்து அனுப்பப்பட்டவர் என்றும் கூறுவார்களே தவிர, அவரை மேசியா என்றோ, தேவனுக்குச் சமமானவர் என்றோ, தேவனுடைய குமாரன் என்றோ கூறுவதில்லை. அவர்களைப் பற்றி தீமோத்தேயு கூறும் போது 

1 தீமோத்தேயு 4 : 1 “ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.” என்கிறார். 

களைகள்:

எபேசு சபையில் தேவன் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் களைகளாக இருந்தது. பெர்கமு சபையில் பிலேயாமின் போதகத்தைக் கைக்கொள்கிறவர்கள் களைகளாக இருந்தனர். தியத்தீரா சபையில் யெசபேலின் போதகங்கள் களைகளாக இருந்தது. லேவியராகமம் பத்தாவது அதிகாரத்தில் கோராகு கூட்டத்தார் களைகளாக மோசேயை எதிர்த்ததைப் பார்க்கிறோம். தேவனுடைய கட்டளைகளை மீறி எதிர்த்துக் கலகம் பண்ணினார்கள். அப்படிப்பட்ட கூட்டத்தார் தேவனுடைய சமூகத்தில் இல்லாதபடி கர்த்தர் அழித்ததையும் வேதத்தில் பார்க்கிறோம். தெளிந்த புத்தி உள்ளவர்களாய் இருந்து சாத்தானின் எண்ணங்கள் உங்கள் மனதில் நுழைய முடியாதபடி, காத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் உள்ள பாவம் என்கின்ற களை, பிசாசு என்கின்ற களை, போராட்டம் என்கின்ற களைகளை முதலில் பிடுங்கி சுட்டெரிக்க ஒப்புக்கொடுங்கள். அப்படி சுட்டெரிக்கும் போது ஆவிக்குரிய ஜீவியத்தில் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள். சத்துருவானவன் உங்கள் வாழ்க்கைக்குள், குடும்பத்திற்குள், வேலை பார்க்கிற இடத்திற்குள் வர விடாதபடி கவனமாக இருங்கள். கவனமாய் இருந்தும் களைகள் விதைக்கப்பட்டால் முதலில் அவைகளைப் பிடுங்கி எறியுங்கள். அப்பொழுது ஆசீர்வாதம் உங்களைத் தேடி வரும்.

உவமையின் கருத்து:

உலகத்தில் வேறு எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு கர்த்தருடைய வசனம் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. அதற்காகத் தேவனை ஸ்தோத்தரிக்க வேண்டும். எத்தனையோ பரிசுத்தவான்கள் தங்கள் ஜீவனையே கர்த்தருடைய வார்த்தைக்காகக் கொடுத்தார்கள். அதேவேளையில் உலகம் கேடான நிலைமைக்கும் போய்க்கொண்டிருக்கிறது. களைகளும் அதிகமாக இப்போது காணப்படுகிறது. ஊழியர்களுடைய பணி களைகளைப் பிடுங்குவது அல்ல. உண்மையும் உத்தமுமாய்க் கர்த்தருடைய வசனத்தை விதைப்பது தான். கோதுமை மணியான விசுவாசிகள் மாறாதபடி சபைகள் பார்த்துக்கொள்ள வேண்டும் கோதுமையும் களைகளும் சேர்ந்து வளருகிறது என்று சோர்ந்து போக வேண்டாம். சரியான நேரத்தில் இயேசு கோதுமையைத் தனியாகவும் களைகளைத் தனியாகவும் அறுத்துப் பிரித்து எடுப்பார். அது உங்களுடைய வேலை அல்ல. அது கர்த்தருடைய பணி. சபைகள் குழப்பம் இல்லாததாயும், கலகங்கள் இல்லாததாயும், சமாதானக் கேடுகள் இல்லாத இடமாகவும் பார்த்து கொள்ள வேண்டும். இன்று அநேக சபைகளில் இவைகள் நடக்கின்றன. இவர்களை மேற்கொண்டு சமாதானக்கட்டினாலும், ஒருமனப்பாட்டினாலும், சகோதர சினேகத்தினாலும், ஒருவரையொருவர் மன்னிப்பதினாலும், சபையின் ஊழியங்களை எடுத்து நிறுத்தக்கூடிய கிருபையை சார்ந்து கொள்ளவேண்டும். ஊழியர்கள் ஒருமனப்பட்டு, ஐக்கியம் கொள்ள வேண்டும். அப்பொழுது கர்த்தருடைய வருகைக்கு சபை மறுரூபமாக முடியும். ஆமென்.

Related Posts