இயேசு கூறிய இந்த உவமை. மத்தேயு இருபத்திநாலு இருபத்தைந்து அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிற ஆறு உவமைகளில் இதுவும் ஒன்று. இது ஒலிவ மலைப் பிரசங்கம் என்று சொல்லப்படுகிறது. இயேசுவின் வருகை வரை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பொறுப்பை உணர்த்துகிற உவமை இது. குறிப்பாக இஸ்ரவேல் ஜனங்களுக்குரியது. அதில் அடங்கியிருக்கிற கொள்கையானது இன்றைய விசுவாசிகளுக்குப் பொருத்தமானது. இயேசு பேசிய முதல் செய்தி மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது என்பதாகும். மத்தேயு 5, 6, 7ல் மலைப்பிரசங்க செய்திகளைப் பார்க்கிறோம். அது தான் இயேசுவின் முதல் பிரசங்கம். கடைசிப் பிரசங்கம் மத்தேயு 24, 25 அதிகாரங்களில் ஒலிவமலைப் பிரசங்கத்தைப் பார்க்கிறோம். மலைப் பிரசங்கத்தில் கிறிஸ்தவனின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார். ஒலிவமலைப் பிரசங்கத்தில் ஒரு கிறிஸ்தவன் தேவனுடைய வருகைக்கு எவ்வாறு ஆயத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார். அந்த வரிசையில் இந்த உவமை வருகிறது.
இதில் இரண்டு வேலைக்காரர்களைப் பற்றி போதிக்கிறார். இயேசு ஒரு நல்ல ஆசிரியராக, போதகராக சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். சீஷர்கள் நன்றாகக் கற்றுக்கொள்ளக்கூடிய மாணவர்களாக இருக்க வேண்டுமென்பது இயேசுவின் விருப்பம். இதில் வீட்டெஜமானென்பது தேவ ஊழியரைக் குறிக்கிறது. போதிக்கின்ற போதகர் என்பது இயேசுவைக் குறிக்கிறது. முதல் நூற்ராண்டில் யூத சமூகத்தில் வேதத்தைப் போதிப்பது வேதபாரகனின் முக்கிய வேலையாயிருந்தது. கிறிஸ்துவுக்கு முன் எஸ்ராவும், நெகேமியாவும் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் மிகவும் தேறினவர்களாக, மக்களை ஆவிக்குரிய வாழ்க்கையைக் கட்டி எழுப்புகிறவர்களாக இருந்தனர் (எஸ்றா 7 : 6, நெகேமியா 8 : 2 – 8). ஒரு வேதபாரகன் கட்டி எழுப்பும் சத்தியத்தைப் போதிக்க வேண்டும். பவுல் தீமோத்தேயுவுக்கு இதையே கூறினான் (2தீமோத்தேயு 2 : 16).
போஜனம் கொடுக்கும் ஊழியன்:
மத்தேயு 24 : 45 – 47 “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.”
“ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?”
“எஜமான் வரும்போது அப்படிச்செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்.”
“தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
இதில் உணவும், இடமும் எஜமானுடையது. ஊழியக்காரனும் எஜமானுக்குரியவன். இது தேவனுடைய சபையைக் குறிக்கிறது. சபையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஊழியத்தைக் கொடுத்திருக்கிறார். அங்கு என்ன சொல்லப்படுகிறது என்றால் எல்லோருக்கும் போஜனம் கொடுக்க வேண்டும். போஜனத்தை எப்பொழுது கொடுக்க வேண்டும் என்கிறார் . அங்கு நிறைய வேலைக்காரர்களும் நிறைய ஊழியர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு இங்கு எஜமான் எதிர்பார்ப்பது என்னவென்றால் எஜமானின் உணவை எஜமானின் வீட்டிலிருக்கும் ஊழியர்களுக்கு உண்மையாகவும், சரியான நேரத்திலும் பகிர்ந்து கொடுத்து பராமரிக்க வேண்டியது இந்த ஊழியக்காரனின் பொறுப்பு என்கிறார். ஆவிக்குரிய போஜனமாகிய தேவனுடைய வசனமாகிய உணவை, சபையாகிய வீட்டில் உள்ளவர்களுக்கு உண்மையாகவும், சரியாகவும் ஏற்ற வேளையிலும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான சத்தியத்தை மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான ஆறுதலையம் கொடுத்து பராமரிக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய ஊழியக்காரர்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையைத் தேவன் கொடுத்திருக்கிறார். எஜமானுடைய வீட்டிலும், நிறுவனத்திலும் பல பல வேலைகள் இருக்கின்றன. இந்த வேலைக்காரர்களுக்கு அவர்களுக்குப் போஜனம் கொடுக்கிற வேலை. ஆடுகளை மேய்ப்பாயாக என்றும், ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றும் பேதுருவுக்கு இயேசு ஊழியத்தைக் கொடுத்ததைப் பார்க்கிறோம். ஆவிக்குரிய போஷாக்கு இன்று விசுவாசிகளுக்கு கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது. ஆவிக்குரிய போஷாக்கு எதுவென்றால் வேதவசனம்தான். இது இன்றைய விசுவாசிகளுக்கும் பொருந்தும்.
எல்லா வயதினருக்கும் இதில் உணவு இருக்கிறது. ஆவிக்குரிய நிலைமையில் குழந்தைகளாக இருப்பவர்களுக்கு இது பாலாக இருக்கிறது. வளர்ந்து வருகிற இளைஞர்களுக்கு இது அப்பமாகக் காணப்படுகிறது முதிர்ச்சியாக வளர்ந்து காணப்படுகிறவர்களுக்கு இறைச்சியாகக் காணப்படுகிறது. எல்லா வயதினருக்கும் அவரவருடைய ஆவிக்குரிய நிலைமைக்கு ஏற்ப இதில் உணவு காணப்படுகிறது. எல்லோரும் போஷிக்கப்பட்டு உற்சாகமாக ஆண்டவருடைய பணியைச் செய்ய வேண்டும் என்பது தேவனுடைய விருப்பம். அதற்காக நம்மை வைத்திருக்கிறார். ஊழியங்களைச் செய்யக் கடந்து செல்லவேண்டும். அப்போஸ்தலர்கள் பந்தி விசாரிப்பை நீங்கள் செய்யுங்கள். நாங்கள் ஜெபம் பண்ணுவதிலும், வேத வாசிப்பதிலும் தரித்திருப்போம் என்று கூறுவதைப் பார்க்கிறோம். வீட்டெஜமான் ஊழியனுக்குக் கொடுத்த வேலை ஏற்ற வேளையில் ஆகாரம் கொடுப்பதுதான். ஆகாரம் கொடுத்தால்தான் வேலை செய்வார்கள். எஜமானின் வருகைக்கு ஆயத்தமாக போஷாக்கு கொடுக்கப்படவில்லையென்றால், வசனம் பிரசிங்கிக்கப்படவில்லை என்றால், வசனம் கேட்கப்படவில்லையென்றால் ஆவிக்குரிய நிலமையில் தூங்கினவர்களாக இருப்பார்கள். செயல் இருக்காது. ஆண்டவருடைய வருகைக்கு ஆயத்தப்படவும் மாட்டார்கள். உண்மையும் விவேகமுள்ள ஊழியக்காரனாக இருக்க வேண்டியது அவசியம். ஊழியக்காரர்களாக இருந்தாலும், போதிக்கிறவர்களாக இருந்தாலும், சிறுவர் ஊழியமாக இருந்தாலும் வசனத்தைச் சொல்லிக் கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
அந்த ஊழியன் உண்மையாக அவனுக்குக் கொடுத்த ஊழியத்தைச் செய்தான். ஆண்டவருடைய வருகைக்கு அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். ஆவிக்குரிய போஷாக்கைக் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. முதலாவது சொல்லப்பட்ட ஊழியக்காரன் உண்மையும் விவேகமும் உள்ள ஊழியக்காரனாக இருக்கிறான். இரண்டாவது பொல்லாத ஊழியக்காரனாக இருக்கிறான். இதில் நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள். எஜமான் வரும்போது ஆயத்தமாக இருக்கும் ஊழியக்காரனை மத்தேயு 24 : 46 ,47ல் பாக்கியவான் என்று கூறப்பட்டுள்ளது. மலைப் பிரசங்கத்தின் போது இயேசு அநேக பாக்கியவான்களைப் பற்றி போதித்திருப்பதைப் பார்க்கிறோம். அதற்கு சந்தோஷம், மகிழ்ச்சி என்று பொருள். எஜமான் வரும்போது விழித்திருக்கிறவனாக, எஜமானின் சித்தத்தைச் செய்கிற ஊழியக்காரனே பாக்கியவான். கர்த்தரை சந்திப்பதற்கு எவ்வாறு ஆயத்தப்பட வேண்டுமென்றால் மறுபடி பிறந்த அனுபவமும், தண்ணீரினால், ஆவியினால் பிறந்த அனுபவமும் உடையவர்களாய் இருக்க வேண்டும். மாய்மாலம் செய்யாமல், உண்மையுள்ளவர்களாக இருப்பதும், சோம்பலின்றி கொடுக்கப்பட்ட ஊழியத்தை பயப்படாமல் சரிவரச் செய்வதும், பேராசைப்படாமல் ஊழியங்களுக்கும், ஏழைகளுக்கும் உதவுவதும், கவலைப்படாமல் விசுவாசத்துடனிருப்பதும், மென்மேலும் பரிசுத்தமாவதும், விழித்திருந்து ஜெபிப்பதும் நம்மை ஆயத்தப்படுத்துவதற்கான வழிகளாகும். ஆயத்தமில்லாதவன் மகிழ்ச்சியாக இருக்க மாட்டான். நம்மைப் பார்த்து ஆண்டவர் உண்மையுள்ள விவேகமுள்ள ஊழியக்காரனே என்றழைக்கும்படி செயல்பட வேண்டும். போஜனம் கொடுத்துக் கொண்டிருந்தவனை தேவன் அவன் வீட்டிலிலுள்ள எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக வைத்து பலர் முன்னிலையில் அவனை மேன்மைப்படுத்திக் கனப்படுத்தி, உயர்த்துவார்.
யோசேப்போடு கர்த்தர் இருக்கிறாரென்று கண்டு பொத்திப்பார் தன்னுடைய வீட்டுக்கு அதிபதியாக வைத்தான். அதுமட்டுமல்லாமல் எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியானான். குடும்பமானாலும், சபையானாலும் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு சரியாய்ச் செய்கிறவர்களைத் தேவன் தனது ஆஸ்திக்கெல்லாம் அதிகாரியாக்குவார். கர்த்தர் தனது ஜனங்களை கீழாக்காமல் மேலாக்குவார். வாலாக்காமல் தலையாக்குவார்.
பொல்லாத ஊழியக்காரன்:
மத்தேயு 24 : 48 – 51 “அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,”
“தன் உடன்வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால்,”
“அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து,”
“அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.”
இரண்டாவது ஊழியக்காரன் தன் உள்ளத்திலே எஜமான் வர நாள் செல்லும் என்று நினைக்கிறான். எஜமான் வர நாளானதால் அவனுடைய நம்பிக்கை தளர ஆரம்பித்தது. இவனோ எஜமானுடைய வீட்டைக் கெடுத்தான். குடிக்கவும் வெறிக்கவும் செய்து .இஷ்டம் போல் நடந்தான். தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் நமக்குத் தண்டனை நிச்சயம் (1கொரிந்தியர் 3 : 17). நாம் கர்த்தருடைய ஊழியத்தை கெடுப்போமானால் நம்மை அவர் கெடுப்பார். ஒவ்வொருவரும் தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம். அதனால் நாம் யாரையும் கெடுக்கக் கூடாது. கெடுத்தால் நாம் கெட்டுப்போவோம். முதலில் ஆண்டவருடைய வருகையை இந்த ஊழியக்காரன் சந்தேகப்படுகிறான். இன்றும் அநேகர் அந்த சந்தேகத்தில் உள்ளனர். 2000 வருடம் தாண்டி விட்டதே என்று சந்தேகப்படுகின்றனர். ஆனால் தேவன் சொன்னபடி கண்டிப்பாக வருவார். இயேசுவின் முதல் வருகையைக் குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களை விட இரண்டாம் வருகைக்காக சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் அதிகம். முதலாம் வருகை எப்படி நிறைவேறியதோ அப்படியே இரண்டாம் வருகையும் கண்டிப்பாக நிறைவேறும். அவரது வருகைக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் தேவன் ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். நாம் அதை சிரத்தையோடு செய்ய வேண்டியது அவசியம். நம்முடைய வாழ்க்கையை மாத்திரமே பார்த்து சுயநலத்தில் வாழக்கூடாது.
சரியாக வசனம் கேட்கப் படவில்லையென்றால் பிரிவினையும், வழக்குகளும், சண்டைகளும், சமாதானக்கேடும் ஏற்படும். வசனத்தைக் கேட்டு அதற்கு நேரம் கொடுக்கும்போது ஆசீர்வாதமாக ஊழியம் பண்ண முடியும். அதனால் ஆவிக்குரிய நிலைமையில் வளர்ந்து, கர்த்தரையும் மற்றவர்களையும் நேசிக்க முடியும் (கலாத்தியர் 6 : 2). இயேசு “நான் தலையாக இருக்கிறேன், நீங்கள் என்னுடைய சரீரமாய் இருக்கிறீர்கள்” என்று கூறினார். வசனம் பிரசிங்கப்படாத இடத்தில் வல்லமை இருக்காது. ஊழியக்காரன் நல்ல ஆகாரமாகிய வசனத்தைக் கொடுத்துப் போஷிக்கிறவனாக இருக்க வேண்டும். இயேசு நாம் அறியாத நேரத்தில் வருவார். இனி அவர் வரமாட்டார் என்று நினைத்தவர்கள், அவர் வந்தவுடன் அவர்களைக் கடினமாய்த் தண்டித்து, நீதிமானோடு அவர்களுடைய பங்கு நியமிக்கப்படாமல், பரிசேயரோடு அவர்களுடைய பங்கு நியமிக்கப்பட்டு, நித்திய துன்பமான அழுகையும், பற்கடிப்புமுள்ள இடத்தில் போடப்படுவார்கள். மத்தேயு 7 : 21ல் கூறியிருப்பதைப் போல பிதாவின் சித்தத்தைச் செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும்.
கருத்து:
நமது குடும்பம், வேலை, பொருட்கள் அனைத்தும் கர்த்தர் கொடுத்தது. எனவே அதைக் கர்த்தருடைய காரியங்களுக்காகச் செலவிட வேண்டும். நாம் செய்கிற வேலையை அக்கினி பரீட்சிக்கும். முழு பலத்தோடு கர்த்தருடைய வேலையைச் செய்ய வேண்டும். தேவன் கொடுத்திருக்கிற பொறுப்புகளில் நாம் உண்மையாக இருக்க வேண்டும். ஆண்டவர் வரும்போது நாம் நியாயம் தீர்க்கப்படுவோம். ஆண்டவருக்கு முன்னால் போய் நிற்கும் போது நம்முடைய நடத்தையை ஆண்டவர் பாராட்ட வேண்டும். அவரிடத்திலிருந்து வெகுமதியைப் பெறத் தகுதியிருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். இதைத்தான் பவுல்,
2 கொரிந்தியர் 5 : 10 ல் “ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.”
1 கொரிந்தியர் 3 : 13 “அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.”
நாம் ஆண்டவருடைய பிரசன்னத்தில் நிற்கத்தக்கதாக வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடத்தப்பட அழைக்கப் பட்டிருக்கிறோம். அவர் வருகிறபோது உண்டாகிற பிரசன்னமல்ல, எப்பொழுதும் அவருடைய பிரசன்னம் நம்மைச் சுற்றி இருப்பதினால் ஒவ்வொரு நிமிடமும் நாமும் குற்றமற்றவர்களாக அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ வேண்டும். இரட்சிக்கப்பட்டவர்கள் தேவனது கரத்தில் வெகுமதியைப் பெற்றுக்கொள்ளத் தக்கதாக வாழ வேண்டும். தேவனுடைய பிரசன்னத்தில் நிற்கிறவர்களாக எப்பொழுதும் காணப்பட வேண்டும். இயேசுவின் மூலமாக இரட்சிப்பைப் பெற்ற நாம் இயேசுவோடு இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட உண்மையும், உத்தமுமான ஊழியக்காரனாக இருக்க உறுதி எடுப்போம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.