இயேசுவானவர் தமது செய்திகளை மக்களும், சீடர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் போதனை செய்தார். பரலோகத்தின் இரகசியங்களை எளிய உவமைகள் மூலம் விளக்கிக் காட்டி அதை நமது நடைமுறை வாழ்க்கையோடு இணைத்துப் பேசினார். எல்லா உவமைகளும் ஒரு முக்கிய செய்தியை நமக்கு உணர்த்துவதோடு கர்த்தரை நெருங்கும் பாடங்களையும் தெரிவிக்கின்றன. இதில் இயேசு ஒரு ராஜா தன்னிடம் கடன்பட்ட ஒரு மனிதனை எவ்வாறு மன்னித்தார் என்றும், அந்த கடனிலிருந்து மாணிக்கப்பட்ட அந்த மனிதன் தன்னிடம் கடன்பட்ட ஒரு மனிதனை எவ்வாறு மன்னிக்கவில்லை என்பதைப் பற்றியும் கூறியுள்ளார். இந்த உவமை மன்னிப்பை மையமாக வைத்து கூறப்பட்டுள்ளது. இதை மத்தேயு 18 : 23 – 35ல் காணலாம்.
ராஜா கணக்குப் பார்த்து அறிந்து கொண்டது:
மத்தேயு 18 : 23 – 25 எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்க வேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.”
“அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாக கொண்டுவந்தார்கள்.”
“கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.”
ஒரு ராஜா தன்னுடைய வேலைக்காரனுக்குக் கடனாகப் பதினாயிரம் தாலந்து பணம் கொடுத்திருக்கிறார். இது ஒரு பெரிய தொகை. ராஜா கணக்குப் பார்க்கத் தொடங்கின போது இந்த ஊழியக்காரனின் குற்றம் கண்டு பிடிக்கப்பட்டது. அவன் அதிகமாகச் செலவு செய்து கடன் பட்டான் என்று தெரிந்து கொண்டார். அந்தத் தொகை மன்னிக்க முடியாத அளவுள்ள ஒரு பெரிய தொகை. அந்த மனிதன் கடனைத் தீர்க்க திராணியற்றவனாக, அதைச் செலுத்த முடியாத அளவுக்கு வந்து விட்டான். இதை அந்த ராஜா அறிந்து கொண்டான். அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்றாலும் அவனுடைய கடனைச் செலுத்தி தீர்க்க முடியாது. தன்னுடைய முழு குடும்பத்தையும் ராஜாவுக்கு அடிமையாகக் கொடுத்தாலும் அவனுடைய கடனை அடைக்க முடியாது. யூத கலாசாரத்தின் படி கடனைக் கொடுக்க ஒருவனால் முடியாவிட்டால் அவனைச் சிறைச்சாலையில் போட வேண்டும் அல்லது அவனுடைய மனைவி பிள்ளைகளை விற்று அந்தக் கடனை அடைக்க வேண்டும். மோசேயின் நியாயப்பிரமாணமும் அதைத்தான் கூறுகிறது. அதனால் ராஜா யூத கலாச்சாரத்தின்படி அவனிடம் “உன்னுடைய குடும்பத்தையம், உனக்குண்டான எல்லாவற்றையும் விற்றுக் கடனைத் தீர்க்கும்படி கட்டளையிட்டார்”. இதில் கூறப்பட்டுள்ள ராஜா தேவனுக்கு அடையாளம். ராஜா கணக்குப் பார்த்தது நியாயத்தீர்ப்புக்கு அடையாளம். கடன் வாங்கிய ஊழியக்காரன் விசுவாசிகளுக்கு அடையாளம். அடைக்க முடியாத கடன் பாவத்தின் அடையாளம்.
கடன் பட்டவனின் கெஞ்சுதல்:
மத்தேயு 18 : 26, 27 “அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான்.”
“அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைப்பண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.”
ராஜாவிடம் கடன்பட்ட அந்த மனிதன் ராஜாவின் காலில் விழுந்து கெஞ்சுகிறான். பொறுமையாயிருக்கும்படி வேண்டுகிறானேயொழிய, தன்னால் செலுத்தித் தீர்க்கமுடியவில்லை என்று கூறவில்லை. இதிலிருந்து இவன் தன்னுடைய நிலையை உணரவில்லையென்றறிகிறோம். கொஞ்ச காலத்தில் தான் வாங்கிய கடன்கள் எல்லாவற்றையும் அடைத்து விடுவதாகக் கூறுகிறான். நாமும் ஆண்டவரைப் பணிந்து கொள்ள வேண்டும். அவரை ஆராதிக்க வேண்டும். ஆனால் அவனால் கடனைக் கொடுத்துத் தீர்க்க முடியவில்லை. ராஜாவோ அவனுடைய நிலைமையை அறிந்து, மனமிரங்கி அவனுடைய எல்லா கடன்களையும் மன்னித்துவிட்டேன் என்றார். இந்தக் கடன் பாவத்திற்கு அடையாளமாக இருக்கிறது. ஒரு மனிதன் தன்னுடைய பாவத்தை உணராமலும் அதைத் தேவனிடம் அறிக்கையிடாமலும் இருந்தால் அவனுக்குப் பாவ மன்னிப்பு கிடையாது. அவனுக்காக இயேசு கல்வாரி சிலுவையில் தன்னையே மரிக்க ஒப்புக்கொடுத்து பாவங்களை மன்னித்திருக்கிறார். மன்னிக்கப்படாத பாவத்தை யாரெல்லாம் அறிக்கையிடாமல் வைத்திருக்கிறார்களோ அவர்கள் அவைகளைத் தேவனிடம் கண்ணீரோடு அறிக்கை செய்து பாவ மன்னிப்பைப் பெற வேண்டும். கடன்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் சந்தோஷத்தோடு அங்கிருந்து செல்கிறான்.
மன்னிக்கப்பட்டவனும், அவனுடைய கடனாளியும்:
மத்தேயு 18 : 28 – 30 “அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக்கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.”
“அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.”
“அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.”
தன்னுடைய கடனிலிருந்து விடுபட்ட அந்த ஊழியக்காரன், தன்னுடைய வீட்டுக்குப் போகும் போது தன்னிடம் 100 வெள்ளிக்காசு கடனாகப் பெற்ற, தன்னிடம் வேலை பார்த்த ஒருவனை வழியில் பார்த்தான். அந்த நாட்களில் ஒரு நாள் சம்பளம் ஒரு வெள்ளிப் பணம். அவ்வாறெனில் அது அவர்களுடைய நுறு நாள் சம்பளம். எனவே இந்தக் கடன் மிக மிகக் குறைவு.ஆனால் ராஜா இவனுக்கு மன்னித்த தொகையோ மிகப்பெரியதாய் இருந்தது. ராஜா அவ்வளவு பெரிய தொகையையே தனக்கு மன்னித்தாரே, அதேபோல் தானும் இவனுக்கு மன்னிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அவனது தொண்டையை நெரித்து அவன் பட்ட கடனை உடனே கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்று அவனைக் கொடுமைப் படுத்தினான். அந்த வேலைக்காரன் இவன் ராஜாவிடம் கூறியதைப்போல பொறுமையாயிரும் எல்லாவற்றையும் கொடுத்துத் தீர்த்து விடுகிறேன் என்று வேண்டினான். ஆனால் இவனோ ராஜா மன்னித்தது போல மன்னிக்கப் பிரியமில்லாமல் அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்கும் மட்டும் அவனைக் காவலில் போட்டான். இவன் பழையஏற்பாட்டு நியாயப்பிராணத்தின்படி நடக்கிறான். இவன் கிருபையையும், இரக்கத்தையும் காட்டவில்லை.
ராஜா கொடுத்த தண்டனை:
மத்தேயு 18 : 31 – 34 “நடந்ததை அவன் உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.”
“அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.”
“நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,”
“அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.”
ராஜாவோடு இருந்த வேலைக்காரன், இவன் செய்ததைப் பார்த்து மிகவும் துக்கப்பட்டு, அதை ராஜாவிடம் தெரிவித்தான். ராஜா, மன்னித்த அவனை பொல்லாத ஊழியக்காரனே என்று அழைத்து “நான் உனக்கு மன்னித்ததைப் போல நீயும் உன்னிடம் கடன் பெற்றவர்களுக்கு மன்னிக்க வேண்டும். ஆனால் நீ மன்னிக்காததால் நீ பட்ட கடனைக் கொடுக்கிற வரை நான் உன்னை உபாதிக்கிறவர்களின் கையில் ஒப்புக் கொடுக்கிறேன். நான் உனக்கு கொடுத்த மன்னிப்பை திரும்பப் பெறுகிறேன்” என்று கூறினான். இதற்குக் காரணம் அவன், தான் பெற்ற மன்னிப்பை மறந்து விட்டான்.
இன்றைக்கும் சிலர் நமக்கு விரோதமாக சில தவறுகளைச் செய்கிறார்கள். அதற்காக வருந்தி நம்மிடத்தில் மன்னிப்பும் கேட்கிறார்கள். நாம் அவர்களுடைய தவறுகளை மனப்பூர்வமாக மன்னிக்க வேண்டும். ஏனெனில் நம்முடைய பாவங்களையும், நம்முடைய தவறுகளையும் இயேசு சிலுவையில் அறையப்பட்டு, நமக்காக இரத்தத்தை சிந்தி, நமது பாவங்களை மன்னித்தார். இயேசுவின் சரீரம் சிலுவையில் அடிக்கப்பட்டு, அவருடைய சரீரம் பிட்கப்பட்டது. அவருடைய கைகளும், கால்களும் ஆணிகளால் கடாவப்பட்டது. யோவான் அப்போஸ்தலன்,
1 யோவான் 1 : 8 , 9 “நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.”
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” என்கிறார்.
ஏசாயா தீர்க்கதரிசி,
ஏசாயா 1 : 18ல் “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.” என்று கூறுகிறான்.
தாவீது நம்முடைய பாவங்களை. மேற்குக்கும், கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நம்முடைய பாவங்களை விலக்கிப் போடுவார் என்கிறார். தன்னிடத்தில் வருகின்ற பாவியை ஒருநாளும் தள்ளாத தெய்வம் இயேசு. இந்த உலகத்தில் பாவத்தில் வாழும் மக்களை இரட்சிப்பதற்காகவே வந்தார்.
இயேசு கூறியதும், விளக்கமும்:
மத்தேயு 18 : 35 “நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.”
தேவன் உங்களையும் என்னையும் மன்னித்தது போல நீங்களும் ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டும். நாம் மன்னிப்பதில் அடிப்படையில்தான் தேவன் நம்மை மன்னிப்பார். இதைத்தான் இயேசு,
மத்தேயு 6 : 14 “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.”
மாற்கு 11 : 26 “ நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்.”
இல்லாவிட்டால் நாம் தேவனிடத்தில் இருந்து முழுமையான மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள முடியாது. இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கையின் குணநலம். பேதுரு இயேசுவினிடத்தில் வந்து தன்னுடைய சகோதரன் தவறு செய்தால் அவனை ஏழு முறை மன்னிக்க வேண்டுமா என்று கேட்டான். அதற்கு இயேசு ஏழு முறை அல்ல ஏழு எழுபது முறை மன்னிக்க வேண்டும் என்றார். ஏழு எழுபது முறை என்பது 490 முறை மன்னிக்கலாம் என்பதுதான். இதற்கு என்ன பொருள் என்றால் மன்னிப்பதற்கு ஒரு அளவு இல்லை என்பது தான் (மத்தேயு 18 : 21, 22). எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். இதைத்தான் ஏசாயா தீர்க்கதரிசி,
ஏசாயா 1 : 18ல் “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.” என்றும்
ஏசாயா 55 : 7ல் “துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.” கூறுகிறார். யோவான்
1யோவான் 1 : 7ல் “அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” என்றார்.
இயேசுவை சிலுவையில் அறைந்தனர், அவரை அடித்தார்கள், துப்பினார்கள். காயப்படுத்தினார்கள், வஸ்திரங்களையெல்லாம் உரிந்தார்கள். ஆகிலும் அவர் சிலுவையில் இருந்தபடியே அவர்களைப் பார்த்து பிதாவே இவர்களை மன்னியும் என்றார். இந்த இடத்தில் இயேசுவின் நிபந்தனையற்ற ஒரு அன்பைப் பார்க்கிறோம். இதேபோல் நாமும் பிறருக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் மன்னிக்க வேண்டும். தேவன் நம்முடைய பாவங்களை முற்றிலும் மன்னித்தார். சங்கீதம் 103 : 12ல் கிழக்கிற்கும் மேற்கிற்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை மன்னித்தார். அதை ஆழத்தில் போட்டுவிட்டார். கிறிஸ்தவ மதத்தின் போதனையே பாவங்களை மன்னிக்க வேண்டும் என்பதுதான். பிதாவாகிய தேவன் உலகத்தில் உள்ள நம் ஒவ்வொருவருக்கும் மன்னிப்பைக் கொடுத்திருக்கிறார். இயேசுவின் மூலமாக வரும் நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்வதற்காக இயேசுவைப் பிதா நமக்குக் கொடுத்தார். இந்த உலகத்தில் நாம் வருத்தத்தையும், சங்கடத்தையும், சாபத்தையும் தான் அனுபவிக்கிறோம். தேவனோ நமக்கு அழிவில்லாத நித்திய ராஜ்யத்தைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார்.
இதன் கருத்து:
எபேசியர் 4 : 32 “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”
நமது தவறுகளை கர்த்தர் மன்னித்ததை நினைத்து, மற்றவர்களின் தவறுகளையும் நாம் மன்னிக்க வேண்டும். மன்னிப்பு என்பது நம் ஒவ்வொருவருக்கும் தேவன் கொடுத்த கட்டளை. நாம் மன்னிக்க முடியாத தவறுகளை நம்முடைய நண்பர்களோ, உறவினர்களோ, வேலை பார்க்கிற இடத்திலிருப்பவர்களோ செய்தார்களானாலும், பகைவராயிருந்தாலும் அவர்களையும் நாம் மன்னிக்க வேண்டும். அவ்வாறு நாம் மன்னிப்போமானால், தேவன் நம்முடைய தவறுகளையும் மன்னிப்பார். பிறரின் தவறுகளை மன்னிக்காதவர்களுக்கு தேவனிடம் மன்னிப்பும் கிடையாது, பரலோக ராஜ்ஜியத்தை பார்க்கவும் முடியாது. இந்த உலகத்தில் மன்னிப்பது என்பது லேசான காரியம் அல்ல. ஆனால் மன்னிப்பதற்குள்ள மனதைத் தேவன் நமக்குக் கொடுப்பார். ஜீவபுஸ்தகத்தில் நம்முடைய பெயர் எழுதப்பட முயற்சிப்போம். மாரநாதா சீக்கிரமாய் வாரும். ஆமென்.