Menu Close

வெள்ளாடு செம்மறியாடு – மத்தேயு 25 : 31 – 46

இந்த உவமை இயேசுவினுடைய ஒலிவமலையின் இறுதிப் பிரசங்கத்தின் போது கூறப்பட்டது. உலகத்தின் முடிவில் என்ன நடக்குமென்று ஜனங்கள் கேட்டதற்கு இயேசு இதைக் கூறுகிறார். இது இயேசுவின் இரண்டாம் வருகை சம்பந்தப்பட்டது. இயேசு அண்ட சராசரங்களையும் படைத்த ராஜா. நானும் நீங்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த மகிமையுள்ள சிங்காசனத்தை இழந்து உலகத்திற்கு வந்த போது நம்மில் ஒருவராக மகிமையற்றவராக வந்தார். ஆனால் அவரது இரண்டாம் வருகையின் போது ராஜாதி ராஜாவாக, பிதாவின் மகிமை பொருந்தியவராக வருவார் என்று மத்தேயு 16 : 27 கூறுகிறது. ஆதாம் ஏவாளுக்குத் தேவன் ஆண்டு கொள்ளும் அதிகாரத்தைக் கொடுத்ததைப் போல 1000 வருட அரசாட்சியில் இயேசுவுக்கு பிதா அந்த அதிகாரத்தைக் குமாரனுக்குக் கொடுத்திருக்கிறார். அந்த ஆளுகையைப் பெற்று இயேசு பரிசுத்த நியாயாதிபதியாக வருவார். கண்கள் யாவும் அவரைக் காணும். அவரைக் குத்தினவர்களும் அவரைப் பார்ப்பார்கள். எல்லோரும் பார்க்குப்படியாக ஒலிவமலையின் மேலேயே வருவார். பரிசுத்த தூதர்களோடு வருவார். “ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் நம் ஒவ்வொருவருக்கும் நியமிக்கப்பட்டிருக்கிறபடியே (எபிரேயர் 9 : 27) நடைபெறும். மகா உபத்திரவ காலத்துக்குப் பின், கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து தமது ஆட்சியை ஆரம்பிப்பதற்கு முன் இந்த செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் பிரிக்கும் நியாயத்தீர்ப்பு நடக்கப் போகிறது. (தானியேல் 7 : 9 – 14, வெளிப்படுத்தல் 5 : 10, 19 : 11 – 20 : 4). 

இயேசுவின் நியாயத்தீர்ப்பில் செய்வது: 

மத்தேயு 25 : 31 – 33 “அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.”

“அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து,”

“செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.”

மகிமையுள்ள சிங்காசனமென்பது என்றைக்கும் அழியாத ராஜ்ஜியம். தானியேல் 7 : 9, 10ல் பரலோக நீதிமன்றத்தில் அனைவரும் நிற்கக்கூடிய காட்சியைப் பார்க்கிறோம். வெளிப்படுத்தலில் கூறப்பட்டுள்ள ஏழாம் எக்காளம் ஊதப்படும்போது உலகத்தின் ராஜ்ஜியங்கள் இயேசுவின் ராஜ்ஜியங்களாயின. எந்த மார்க்கத்தானானாலும், எந்த இனத்தானானாலும் இயேசுவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டும் (2 கொரிந்தியர் 7 : 10). பிதாவின் மகிமை பொருந்தினவராக இயேசு தூதரோடு கூட வரும்போது அவனவன் கிரியைக்குத் தக்கதாகப் பலனளிப்பார் (மத்தேயு 16 : 27). இதில் இரண்டு விதமான கூட்டத்தைப் பற்றிப் பார்க்கிறோம். வலது பக்கமுள்ளவர்கள், இடது பக்கமுள்ளவர்கள் என்றும், வெள்ளாடு செம்மறியாடு என்றும் பார்க்கிறோம். யார் வெள்ளாடு, யார் செம்மறி ஆடு என்று தேவனுக்கு மட்டுமே தெரியும். அவரை நாம் ஏமாற்ற முடியாது. இயேசு தன்னுடைய சொந்த ஜனமாக வலது பக்கத்தில் இருப்பவர்களை செம்மறி ஆடாக தெரிந்து கொள்கிறார். அதேநேரத்தில் தேவனுக்குப் பிரியமில்லாத ஜனங்களை வெள்ளாடு என்று கூறுகிறார். 

யூத கலாச்சாரத்தின் அடிப்படையிலும் யூத ஜனங்களின் அடிப்படையிலும் ஆராய்ந்து பார்த்தபோது அவர்களின் செம்மறி ஆடுகள் வெண்மையான நிறத்தில் காணப்படும். அது மேய்ப்பனுக்கு அடங்கும். மேய்ப்பனுடைய சத்தத்தைக் கேட்டு அவன் பின்னால் போகும். மேய்ப்பனால் வழி நடத்தப்படும். வெள்ளாடு கருப்பு நிறத்தில் காணப்படும். தன் மனம்போன போக்கில் போகும். அவைகள் ஓடிக்கொண்டே இருக்கும். ஒன்றுக்கும் அடங்காது. தேவன் தன்னுடைய பிள்ளைகளை வெண்மை நிறத்தில் உள்ள செம்மறி ஆடு என்று அழைக்கிறார். நாம் ஆடுகளாகவும் இயேசு நல்ல மேய்ப்பனாக நம்மை வழிநடத்துகிறவராகவும் இருக்கிறார். இதைத்தான் இயேசு, 

யோவான் 10 : 14 – 16ல் “நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,”

“நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.”

“இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.” என்று இயேசு வாக்களித்திருப்பதைப் பார்க்கிறோம். 

மரித்து உயிர்த்தெழுந்து சிங்காசனத்தில் இருந்தபின் நியாய விசாரணை காலத்திற்குப்பின் நியாயத்தீர்ப்பு கொடுக்க இரண்டாம் முறை இயேசு வருகிறார். அப்பொழுது இயேசு நியாயாதியாக இருந்து வெவ்வேறாகப் பிரிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் கிறிஸ்துவின் வருகையின் போது, உலகில் வாழ்ந்து கொண்டிருந்த இரட்சிக்கப்பட்டவர்களும், பாவிகளும், ஒன்றாகக் கலந்து காணப்பட்டார்கள். நியாயத்தீர்ப்பில் அக்கிரமக்காரர்களும், நீதிமான்களும் தனித்தனியாகப் பிரிக்கப்பட வேண்டியிருந்தது. வலது பக்கம் இருப்பவர்களையும், இடது பக்கம் இருப்பவர்களையும் தனித்தனியாக நிறுத்துவார். அப்போது சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். யூதர்களின் அடிப்படையில் வலது பக்கம் ஆசீர்வாதம், தேவனுடைய நன்மை, தேவனுடைய ஜீவன் இடது பக்கம் சாபம், தீமை, மரணம். இதேபோலதான் தேவன் உலகத்தைப் படைக்கும் போது இருளையும், வெளிச்சத்தையும், பிரித்தார். அதேபோல் இங்கு நல்லவர்களையும், தீயவர்களையும் பிரிக்கிறார். 

2 கொரிந்தியர் 5 : 10ல் “ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.” 

மத்தேயு 16 : 27 “மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.”

இயேசு வலதுபக்கமுள்ளவர்களைப் பற்றிக் கூறினது:

மத்தேயு 25 : 34 – 40 “அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.”

“பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;”

“வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.”

“அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?”

“எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக்கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?”

“எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.”

“அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.”

இயேசு வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து “பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே” என்று அழைக்கிறார். உலகம் உண்டானதுமுதல் “உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்திற்குள் வாருங்கள்” என்று கூறாமல் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று அழைக்கிறார். நமக்கு அதை சுதந்திரமாகத் தந்து அதை உரிமையாக்குகிறார். ஆயிரம் ஆண்டு அரசாட்சியில் வாழ்வதற்கு (ஆள்வதற்கு அல்ல) அனுமதிக்கப்படும் மக்கள் கிறிஸ்துவின் வலது புறத்தில் நிறுத்தப்பட்டிருப்பார்கள். மேலும் இயேசு பசியாயிருக்கும் போதும், தாகமாயிருக்கும் போதும், வஸ்திரமில்லாதிருக்கும் போதும், வியாதியாயிருக்கும் போதும், காவலிலிருக்கும் போதும், அந்நியனாயிருக்கும் போதும் உங்கள் விசுவாசத்தைச் செயலில் காட்டினீர்கள் என்கிறார். விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்பட்டோம். விசுவாசத்தினால் நாம் நீதிமான்களாகிறோம், தேவனுடைய பிள்ளைகளாகிறோம். இப்படிப்பட்ட விசுவாசத்தைச் செயல்களினால் காட்டப்பட வேண்டியது அவசியம். கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று பார்க்கிறோம். நீதிமான்களாக்கப்பட்ட நம்முடைய வாழ்க்கை நற்கிரியைகளினால் தேவனுக்குத் தெரிய வரும். 

தேவன் நம்மை அவரது குணநலத்தைப் போலிருக்கவும், தேவனுடைய கிரியைகளை வெளிப்படுத்துகிறவர்களாகவும், அவருடைய நிபந்தனைக்கு உட்பட்டவர்களாகவும், கீழ்ப்படிகிறவர்களாகவும் இருப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த உலகத்தில் தேவைப் படுகிறவர்களுக்கு நற்செயல்களை செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நீதிமான்கள் இயேசுவிடம் எப்பொழுது உமக்கு இவைகளைச் செய்தோமென்று கேட்டார்கள். அதற்கு இயேசு சிறியவராகிய என் சகோதரனுக்கு நீங்கள் செய்ததை தனக்குச் செய்ததாகக் கூறுகிறார். பழைய ஏற்பாட்டில் சகோதரன் என்று யாரையும் தேவன் சொல்லவில்லை. மோசேயைக் கூட “என் தாசனாகிய மோசே” என்கிறார். ஆபிரகாமை மட்டும் தன்னுடைய நண்பன் என்கிறார். இயேசு உயிர்த்தெழுந்த பின் சந்தித்த மகதலேனா மாரியாளிடம் மத்தேயு 28 : 10 ல் இயேசு தான் உயிர்த்தெழுந்ததைத் தன் சகோதரரிடம் சொல்லுங்கள் என்று தன்னுடைய சீஷர்களை சகோதரர் என்கிறார். யாரெல்லாம் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுகிறோமோ அவர்கள் இயேசுவின் சகோதரர்கள். அதனால் அந்த சகோதரர்களுக்குச் செய்வது எனக்குச் செய்ததாகும் என்கிறார். இயேசு நம்மைச் சகோதரர் என்று சொல்வதற்கு வெட்கப்படாமல் நம்மில் ஒருவரானார். 

இயேசு இடது பக்கமுள்ளவர்களைப் பற்றிக் கூறினது:

மத்தேயு 25 : 41 – 46 “அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.”

“பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;”

“அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார்.”

“அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ளவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.”

“அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.”

“அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.”

இயேசு இடதுபக்கம் நிற்பவர்களைப் பார்த்து சபிக்கப்பட்டவர்கள் என்றழைக்கிறார். தான் பசியாயிருக்கும் போது போஜனமும், தாகமாயிருக்கும் போது தண்ணீரும், வஸ்திரமில்லாமலிருக்கும்போது வஸ்திரமும், காவலிலும், வியாதியிலும் இருக்கும்போது விசாரிக்கவும் வரவில்லை என்கிறார். அப்பொழுது அவர்கள் ஆண்டவரே “எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ளவராகவும், காவலில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம்” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு இப்படிப்பட்ட கஷ்டத்தில் இருப்பவர்கள் யாருக்கும் அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி, அதைத் தனக்குச் செய்யாததாகும் என்கிறார். தேவையிலிருப்பவர்களுக்கு நாம் உதவி செய்வதில் கவனமாயிருப்போமாக. சிறியர் என்பது சபையிலிருக்கிற விசுவாசிகளைக் காட்டுகிறது. இயேசுவின் சீஷர்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தவன் பரலோகத்தில் தன் பலனை அடைவானென்று இயேசு கூறியதைப் பார்க்கிறோம் (மத்தேயு 10 : 42, 18 : 6). இவர்களே இயேசுவின் சகோதர சகோதரியாக இருக்கிறார்கள். நல்ல சமாரியனைப் போல நாம் உதவி செய்யும் போது தீர்ப்புநாளில் இயேசுவின் வலதுபுறத்தில் இடம் பெறுவோம். மலைப் பிரசங்கத்தில் “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” என்றுள்ளது (மத்தேயு 5 : 7).

மேலும் இயேசு அவர்களைப் பார்த்து சபிக்கப்பட்டவர்களிலாகிய நீங்கள் பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணி வைத்திருக்கிற நித்திய அக்கினியில் தள்ளப்பட்டு நித்திய ஆக்கினையை அடைவீர்கள் என்கிறார். நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். பூமி மனிதன் வாழ்வதற்காக உண்டாக்கப்பட்டது. பரலோகம் தேவன் வாழ்வதற்காக உண்டாக்கப்பட்டது. சாத்தான், பிசாசு, அசுத்தஆவி தங்குமிடம் தான் நரகம். மேலும் அந்த இடத்துக்கு சுயநலக்காரன், கடினமான மனநிலையுடையவன், சபிக்கப்பட்டவன் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றாதவர்கள் போவார்கள். தேவனுக்கெதிரான சாத்தானின் முதல் கலகத்தால் பரலோகத்திலிலுள்ள தூதர்களில் மூன்றில் ஒரு பங்குப்பேர் சாத்தானுடன் சென்றார்கள் (வெளிப்படுத்தல் 12 : 4). இவர்களில் ஒரு பகுதியினர் நரகத்தில் கட்டப்பட்டிருக்கிறார்கள் (2பேதுரு 2 : 4, யூதா 6). மீதிப்பேர் சுதந்திரமாக சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் அவனுடைய ராஜ்ஜியத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள் (மத்தேயு 12 : 24, 25 : 41, எபேசியர் 2 : 2, வெளிப்படுத்தல் 12 : 7). இவர்கள்தான் சிறப்புத் தூதர்களாகச் செயல்படுகிறார்கள். 

நாம் தெரிந்து கொண்ட கருத்து: 

வெளிப்படுத்தல் 20 : 4ல் கூறப்பட்டதை போல இயேசுகிறிஸ்து பிதாவிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றதைப் போல இயேசு தன்னுடைய வலது பக்கத்தில் இருக்கிற செம்மறி ஆட்டுக் கூட்டத்திற்கு அந்த அதிகாரத்தைக் கொடுக்கிறார். நமக்காகத் தேவன் பிதாவின் வலதுபாரிசத்தில் பரிந்து பேசக் கூடியவராக இருக்கிறார். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் நியாயத்தீர்ப்பு “மகிமையுள்ள சிங்காசனத்தின் நியாயத்தீர்ப்பு” ஆகும் (மத்தேயு 25 : 31). இது விசுவாசிகளுக்கான கிறிஸ்துவின் நியாயாசன நியாயத்தீர்ப்பு போன்றதோ, இறுதி நியாயத்தீர்ப்பான வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு போன்றதோ அல்ல. இந்த நியாயத்தீர்ப்பில் சபையின் விசுவாசிகள் இருப்பதில்லை. மரித்தவர்களில் எவரும் உயிர்த்து நியாயத்தீர்ப்பை அடைவதில்லை. இந்த நியாயத்தீர்ப்பைக் கூறும் இன்னுமொரு வேதப்பகுதி பழைய ஏற்பாட்டின் யோவேல் 3 : 11 – 17 ஆகும். இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் கிறிஸ்துவின் வெளிப்படையான இரண்டாம் வருகையில் உயிரோடிருக்கும் புறஜாதியராவார். 

இவர்களை யோசாபாத் பள்ளத்தாக்கில் கூடிவரச் செய்யும் கிறிஸ்து (யோவேல் 3 : 12) இஸ்ரவேலரோடு அவர்கள் காண்பித்த தயவின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்து வலப்பக்கம் நிற்போரை ஆயிரம் ஆண்டு அரசாட்சிக்கு அனுமதிப்பார் (மத்தேயு 25 : 34). இடப்பக்கம் நிற்போரை இறுதி நித்திய நியாயத்தீர்ப்புக்கு ஒப்புக்கொடுப்பார் (மத்தேயு 25 : 41, 46).இங்கு கூறப்படும் மிகச் சிறியவரான என் சகோதரர் என்போர் (மத்தேயு 25 : 40) அக்கால விசுவாசிகளான இஸ்ரவேலரையோ, அக்காலத்தில் ஊழியம் செய்யும் 144000 பேரையோ (வெளிப்படுத்தல் 7ம் அதிகாரம், 14 : 1 – 9) குறிக்கலாம். ஆயிரம் ஆண்டு ஆட்சிக்கு முன் நடக்கும் இந்தத் தீர்ப்புக்கும், தற்கால கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை. விசுவாசிகளின் உபதேசங்கள் (ரோமர் 2 : 14 – 16), ஊழியங்கள் (1கொரிந்த்தியர் 3 : 10 – 17), நடத்தைகள் (ரோமர் 14 ம் அதிகாரம்), மாமிசக் கிரியைகள் (கொலோசெயற் 3ம் அதிகாரம்), வார்த்தைகள் (மத்தேயு 12 : 32 – 37), பிறருக்கு இடறலாகும் காரியங்கள் தேவனுக்கு கீழ்ப்படியாத காரியங்கள் (ரோப்கார் 12ம் அதிகாரம்) போன்றவை நியாயந்தீர்க்கப்படும், அன்று மறைந்திருப்பவை வெளியாகும். எனவே, 

கலாத்தியர் 6 : 10ல் “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.”

என்று பவுல் கூறியதைப் போல தேவனுக்கேற்ற கிரியைகளைச் செய்து பரலோகம் செல்ல தயாராவோம். கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாய் வாரும்.

Related Posts