வேதம் இல்லாத காலத்தில், இயேசு உலகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சியைக் கொண்டு உவமைகளாக ஜனங்கள் உள்ளத்தில் உண்மையான சத்தியங்களை விதைத்தார். அவர் கூறிய உவமைகளில் ஆழ்ந்த கருத்துக்களும், உயர்ந்த பாடங்களும் ஒப்புமையாகக் கூறப்பட்டிருக்கின்றன. சீஷர்கள் இயேசுவிடம் வந்து ஏன் ஜனங்களோடு உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டனர். அதற்கு இயேசு பரலோக ராஜ்ஜியத்தின் இரகசியங்களை அறிவதற்காக உங்களோடு இவ்வாறு பேசுகிறேன். அவர்களுக்கு இன்னும் அருளப்படவில்லையென்றார் (மத்தேயு 13 : 10, 11). இவைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக யூதர்களுக்கு கூறப்பட்டாலும், அனைத்துக் காலங்களுக்கும், பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஜனங்களுக்கும் பொருத்துவதாவே இருக்கின்றன.
சங்கீதம் 78 : 2 “என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்.”
என்று சங்கீதக்காரன் கூறியதைப் போல பூர்வ காலத்து மறைபொருட்களை வெளிப்படுத்த இயேசு ஜனங்களிடம் உவமைகளாகப் பேசினார்.
மீன் பிடிக்கிறவர்களின் செயல்:
மத்தேயு 13 : 47 – 50 “அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.”
“அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.”
கலிலேயக் கடற்கரையிலிருந்த திரளான ஜனங்களுக்கு இயேசு பரலோக ராஜ்ஜியத்தைப் பற்றிய இந்த உவமையைக் கூறினார். பரலோக ராஜ்யத்தை கடலில் போடப்படுகிற வலைகளுக்கும், பிடிக்கிற மீன்களுக்கும், ஒப்பிட்டு இயேசு கூறியிருக்கிறார். இயேசுவோடிருந்த அனேக சீஷர்கள் மீன் பிடிக்கிறவர்களாகவே இருந்தனர். அவர்களைப் பார்த்து இயேசு “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.” அவர்களும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு தங்கள் வலைகளை அப்படியே விட்டு விட்டு இயேசுவுக்குப் பின்சென்றார்கள் (மத்தேயு 4 : 19, 20). இங்கே கடல், அலை, மீன் என்ற மூன்று பிரிவுகளைப் பார்க்கிறோம். மீன் பிடிக்கும் நிகழ்ச்சி உலக முடிவு நாளாகும். இங்கு மீனவர் என்பது தேவதூதர்களைக் குறிக்கிறது. பிடிக்கிற மீன்கள் என்பது நீதிமான்களையும், பொல்லாதவர்களையும் குறிக்கிறது.
கடல் என்பது நிறைவான பகுதியாக இருக்கிறது. அதில் லட்சக்கணக்கான வகையில் மீன்கள் உள்ளன. அதை மனிதர்களாகிய நாம் பிடித்து அன்றாட உணவுக்குப் பயன்படுத்தி வருகிறோம். மீனவர் மீன்களைப் பிடிப்பதற்காகக் கடலில் வலையை வீசுகின்றனர். ஆனால் வலையில் நல்லவைகளும், ஆகாதவைகளும், பிற உயிரினங்களும் புசிக்கத் தக்கவைகளும், புசிக்கத் தகாதவைகளும் சேர்ந்தே வருகின்றன. அதேபோல் பரலோக ராஜ்ஜியத்தின் நற்செய்தியாகிய வலை ஜனங்கள் நடுவே வீசப்படுகிறது. உலகத்தில் பல மொழிகள் பேசும் பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். தேவனுடைய வார்த்தையைக் கேட்டு தேவனை ஏற்றுக் கொண்டு வழிவிலகிப் போகும் ஜனங்கள் நிராகரிக்கப்பட்ட மீன்கள் எனலாம். இயேசுவின் வார்த்தையைக் கேட்டு வலைக்குள் நின்று இயேசுவை விட்டு வெளியே செல்ல விரும்பாத ஜனங்கள் நல்ல மீன்கள் எனலாம். மீன் பிடிக்கிறவன் வலைக்குள் வருகிற அனைத்தையும் கரைக்கு கொண்டு வருகின்றான். அதன்பின் அதை நல்ல மீன்கள், கெட்ட மீன்கள் என்று தரம் பிரிக்கின்றான். மீன் பிடிக்கிறவர்கள் புசிக்கத் தகாதவைகளைக் கடலுக்குள் போட்டு விடுவர்.
இயேசு உலகத்திலுள்ள ஜனங்களில் சிலரைத் தனக்கென்று பிரித்தெடுத்தார் (மத்தேயு 4 : 18). இன்று உலகமாகிய கடலில் பலவிதமான இச்சைகள், பல விதமான பாவங்கள் போன்ற பல விதமான காரியங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். வலையென்பது இரண்டு கயிறுகளால் பின்னிப் பிணைக்கப் பட்டிருக்கும். இயேசு ஓசியா 11 : 4ல் கூறப்பட்ட அன்பின் கயிறுகளாலும், எபேசியர் 4 : 15ல் கூறப்பட்ட சத்தியம் என்னும் கயிறுகளாலும் வலைக்குள் நம்மை இழுத்துக் கொள்ளுகிறார். தேவன் நம்மை ஆசாரிய ராஜ்ஜியமாகவும், பரிசுத்த ஜாதியாகவும் தெரிந்தெடுத்து (யாத்திராகமம் 19 : 5, 6), எதைப் புசிக்க வேண்டும், எதைப் புசிக்கக் கூடாதென்று லேவியராகமம் 11 : 9ல் நமக்காகக் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். எனவே நாம் வலைக்குள் நல்ல மீன்களாக இருக்கிறோமா அல்லது வீசியெறியப்படுகிறவர்களாக இருக்கிறோமா, நாம் செய்த பாவங்களை அறிந்திருக்கிறோமா, மனம் மாறி இயேசுவின் மன்னிப்பைப் பெற்றிருக்கிறோமா, ஆவியின் கனிகள் நம்மிடம் வெளிப்படுகிறதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒருநாள் ஆண்டவருடைய சமூகத்தில் ஒவ்வொருவரும் நிறுத்தப்படுவோம். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. அப்போது ஆண்டவர் தூதர்கள் மூலம் நல்லவர்களையும், கெட்டவர்களையும் பிரிப்பார். முதலில் களைகளைத்தான் பிடுங்குவார் அதன்பின்தான் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்.
செதில் உள்ளவைகளைப் புசிக்கலாம் என்று லேவியராகமம் 11 : 9ல் கூறியிருப்பதைப் போல, இயேசுவின் சத்தியத்தைக் கேட்டு அதைப் பின்பற்ற வேண்டும். சிறகும் செதிளும் இல்லாதவைகளைப் புசிக்கக் கூடாதென்று உபாகமம் 14 : 10ல் கூறியிருப்பதைப் போல தவறான கள்ள உபதேசங்களைக் கேட்கக் கூடாது. கேட்டாலும் அதைக் கெட்ட மீன்களைத் தூக்கியெறிவது போல நம்முடைய மனதிலிருந்து தூக்கியெறிய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் மாம்சத்தைப் புசித்து, இயேசுவின் இரத்தத்தைப் பானம் பண்ண வேண்டும். அப்பொழுது நாம் இயேசுவுக்குள் நிலைத்திருப்போம் (யோவான் 6 : 56). சபையில் இருக்கிற நாமனைவரும் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இருக்கிறோம். நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுகிறவர்கள்தான் பலர். அவர்கள் பார்வை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்து பார்வை உள்ளவர்களாக மாற்ற வேண்டும். சத்தியத்தை பார்க்கிற பார்வை அப்போது அவர்களுக்கு இல்லை. முத்துக்களைத் தேடியது போன்ற தேடல் அப்போது அவர்களுக்கு இல்லை. அவர்கள் தீர்க்கதரிசிகளிடம் போனவுடன் மீன் செதில்களுக்கு ஒப்பானவை விழுகிறது (அப்போஸ்தலர் 9 : 18). அதுவரை அவைகளைக் கண்டு கொள்ளும் பார்வை இல்லாமலிருந்தது. இப்போது செதில் விழுவதால் சத்தியத்தை பார்க்கிற பார்வை கிடைக்கிறது. இயேசுவின் வெளிச்சம் நமக்குள் வர வேண்டும். தேவனுடைய ராஜ்ஜியம் நமக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பொக்கிஷத்துக்குள் தான் உபதேசம் இருக்கிறது. அந்த உபதேசத்தை உபதேசிக்கும் போது கேட்க வேண்டும். பழையஏற்பாட்டு உடன்படிக்கையிலிருந்து மட்டுமல்லாமல் புதியஏற்பாட்டு உடன்படிக்கையிலுள்ள பொக்கிஷத்திலிருந்தும் வெளிப்பாடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் (மத்தேயு 13 : 52)
தேவனின் தெரிந்தெடுப்பு:
மத்தேயு 13 : 49, 50 “இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,”
“அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.”
இந்த உவமைக்கு முன் இயேசு கூறிய கோதுமையோடு வளரும் களைகளை அறுவடையின்போது கட்டி அக்கினிச் சூளையிலே எறியப்படுமென்றார். இரண்டாவதாக செம்மறி ஆடு, வெள்ளாடு உவமையில் வெள்ளாடுகளை எரிநரகத்திலே எறியப்படும் என்றார். பரலோக ராஜ்ஜியத்திற்குரிய உவமைகளில் கடைசியாக இயேசு இந்த உவமையைச் சொல்லி இவைகளைக் கேட்டும் மனந்திரும்பாவிடில் நரகத்திற்குப் போய்விட நேரிடுமென்கிறார். தேவதூதர்கள் நல்ல விஷயங்களை பூமிக்கு கொண்டு வந்தவர்கள். இயேசுவின் பிறப்பை முதலில் அறிவித்தவர்கள் தேவதூதர்கள்தான். இயேசு உயிரோடெழுந்ததை அறிவித்ததும் தேவதூதர்கள்தான். நமக்குப் பாதுகாவலர்களாய் இருப்பவர்களும் அவர்கள்தான். ஆனால் கடைசியில் நம்மை தேர்ந்தெடுக்கப் போவதும், நிராகரிக்கப் போவதும் அவர்கள் மூலமாகத்தான். நம்முடைய வாழ்வில் கடைசிவரை நமக்கு நன்மை செய்யவும், நன்மைகளைச் சொல்லவும், வழிகாட்டவும் இருக்கும் தேவதூதர்கள் கடைசியில் நமக்குத் தீர்ப்பிட வருவார்கள். அப்போது அவர்கள் வழுவாத நீதியுடன் செயல்படுவார்கள். தேவதூதர்களின் மூலம் இயேசு வலையைப் போட்டு பிடித்து உலகத்தின் முடிவில், உலகம் முழுவதும் சென்று நீதிமான்களிடருந்து தீயோரைப் பிரிப்பர். அதில் நல்லவர்களாகிய பரிசுத்தவான்களை பரலோகத்திற்கும் தீயவர்களை நரகத்திலுள்ள அக்கினிச் சூளையிலும் போடுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்கிறார். அக்கினிக்கடலில் மனுஷன் போகும் போது அவனுடைய சரீரத்தோடு போவான். பரலோகத்திலுள்ள நித்தியத்துக்குள் போகப்போகிற நாம் மகிமையடைந்த சரீரத்தோடு காணப்படுவோம். இன்னும் வலை நிறையவில்லை. கரை சேர்க்கப்படவில்லை. இப்போது நடப்பது இரக்கத்தின் காலம்.
மத்தேயு 7 : 22, 23 “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.”
“அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.”
என்று இயேசு கூறினார். கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லையென்கிறார். கர்த்தரின் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துதல், தீர்க்கதரிசனம் உரைத்தல், அற்புதங்கள் செய்தல் ஆகியவை நல்லது தான் ஆனால் இவைகளின் அடிப்படையில் யாரும் பரலோக ராஜ்யத்திற்குள் நுழைய முடியாது. ஏனெனில் இவர்கள் கூறுவதில் நாங்கள் செய்தோம் என்று தங்கள் செயல்களை பற்றியே கூறியிருக்கின்றனர். மனிதனின் நற்செயல்களால் அல்ல. இயேசுவிடமிருந்து பாவமன்னிப்பையும், ஆவியானவரின் அபிஷேகத்தையும் விசுவாசத்தினால் பெற்றுக் கொண்டிருப்பதே பரலோக ராஜ்யத்திற்குச் செல்வதற்குரிய தகுதியாகும் (யோவான் 3 : 3, 5). ஒருவன் பரலோக ராஜ்யத்திற்குச் செல்வதற்கு ஒரே ஒரு வழி உண்டு. இயேசுவே நீர் எனக்காக இரத்தம் சிந்தினீரே, உமது இரத்தத்தால் என்னைப் பாவமறக் கழுவினீரே (வெளிப்படுத்த 1 : 6), கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சித்தீரே இது உம்முடைய ஈவு அல்லவா (எபேசியர் 2 : 8), பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுத்தீர் அல்லவா (யோவான் 3 : 3, 5) எங்களுக்காக பரலோக ராஜ்யத்தைக் கொடுப்பதாகக் கூறினீரே (லூக்கா 12 : 32) உமது கிருபை எனக்கு போதும் இயேசுவே (2 கொரிந்தியர் 12 : 9) என்று உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்து கூற வேண்டும். அவ்வாறு கூறுகிறவர்களுக்கு அவர் அளிக்கும் பதில் “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே” என்பதாகும். இறுதியில் தேவன் தம்முடைய ஜனங்களை மற்றவர்களிடமிருந்து நித்திய நித்தியமாய் பிரித்தெடுத்து தம்மோடு கூட சேர்த்துக் கொள்வார்.
ஆமோஸ் 9 : 8, 9 “இதோ, கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதைப் பூமியின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
“இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை.”
இதில் ஆமோஸ் தீர்க்கதரிசி கூறியதைப் பார்க்கிறோம்.. தேவனுக்கு யாரை அழிக்க வேண்டும். யாரை அழிக்கக் கூடாதென்று தெரியும். நாம் நம்முடைய மரணப்பரியந்தம் உண்மையுள்ளவனாக இருந்து தேவனுடைய ராஜ்ஜியத்துக்குள் நுழைய முற்படுவோம்.
நாம் கற்றுக்கொண்ட பாடம்:
தேவனுடைய வார்த்தையானது நமக்கு வாழ்வளிக்கிறது. இறுதியில் அந்த வார்த்தையே நமக்குத் தீர்ப்பிடும் வாளாகவும் மாறிவிடும் என்று வேதம் கூறுகிறது. இயேசுவின் தீர்ப்பு நல்லோரையும், தீயோரையும் பிரிக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும். எனவே தேவனுடைய வார்த்தையைக் கேட்கிற நாம் வலை இழுக்கப் படுவதற்கு முன் மனம் திரும்பி தேவன் காட்டும் வழியில் செல்ல வேண்டுமென்பதே தேவனுடைய எதிர்பார்ப்பு. உலகத்தின் முடிவு நிச்சயம் உண்டு. ஒவ்வொருவருடைய மரணமும் தேவன் முடிவு செய்யும் நாளில் நடக்கும். இப்போது வலை வீசப்பட்டுள்ளது. தேவன் வீசும் வலைக்குள் நுழைந்து தேவனுடைய எல்லைக்குள் பிரியத்துடன் வாழ்பவர்கள் பாக்கியவான்கள். தேவனுக்கேற்ற நல்ல மீன்களாக வாழும் ஒவ்வொருவரும் தேவனின் கூடையில் நுழைவது நிச்சயம். தேவனுடைய வார்த்தையைக் கேட்டும் கெட்ட மீன்களாக வாழ்பவர்கள் நெருப்பில் விழப்போவது நிச்சயம். மாரநாதா சீக்கிரமாய் வாரும். ஆமென்.