லூக்கா 18 : 1 “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.”
இயேசு தான் கூறிய உவமைகள் மூலமாக ஆவிக்குரிய சத்தியங்களைக் கற்றுக் கொடுத்தார். ஜெபத்தைக் குறித்து நாம் சரியாக அறிந்து கொள்ளும்படியாகவும், ஜனங்கள் சத்தியத்தை எளிதில் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவும், சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பதற்காகவும் இயேசு இந்த உவமையை சீடர்களுக்குச் சொன்னார். நியாயாதிபதியின் பெயரோ, பட்டணத்தின் பெயரோ, விதவையின் பெயரோ குறிப்பிடவில்லை. பொதுவாக ஒரு பட்டணம் என்றும் ஒரு நியாதிபதிபதி என்றும் ஒரு விதவை என்றும் தான் கூறப்பட்டிருக்கிறது. இந்த உவமை எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடியதாயிருக்கிறது. இதில் கூறப்பட்ட நியாயாதிபதியை இயேசுவுக்கு ஒப்புமைப் படுத்தியும் இதில் கூறப்பட்டுள்ள விதவையை நமக்கு ஒப்புமைப் படுத்தியும் கூறப்பட்டுள்ளது.
நியாயாதிபதியின் குணம்:
லூக்கா 18 : 2 “ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.”
இந்த நியாயாதிபதி தேவனுக்கு பயப்படாதவனாகவும், மனுஷனை மதிக்காதவனாகவும் இருந்தான். மேலும் அவனிடம் இரக்க குணமும், உதவி செய்யும் மனப்பான்மையும் இல்லை. மற்றவர்களின் தேவையைக் குறித்து எந்த உணர்வுமில்லாதவனாகவும், எதற்கெடுத்தாலும் கணக்குப் பார்க்கிறவனாகவும் இருந்தான். அவன் எதைச் செய்தாலும் அவனுக்காகவே செய்தான். அவன் தன்னுடைய ஆசையைத் திருப்தி படுத்துவதற்காகவும், தன்னுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே எல்லாவற்றையும் செய்தான். 2 நாளாகாமம் 19 : 4 – 7 ல் யோசபாத் ராஜா ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை அமர்த்தினார். அதன் பின் அவர்களைப் பார்த்து கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்க வேண்டும் என்றும், முகதாட்சிணியம் பாராமலும், பரிதானம் வாங்காமலும் நியாயம் விசாரிக்கையில் எச்சரிக்கையாயிருந்து விசாரிக்க வேண்டும் என்றான். ஆனால் இந்த நியாயாதிபதியிடம் இந்தக் கட்டளைகளில் எதுவுமில்லை. மேலும் இயேசு மத்தேயு 23 : 39 ல் கூறிய உன்னில் அன்புகூறுவது போலப் பிறனிலும் அன்பு கூற வேண்டுமென்பதையும் அந்த நியாயாதிபதி கைக்கொள்ளவில்லை.
விதவையை குறித்து வேதத்தில்:
யாத்திராகமம் 22 : 22 – 24 ல் “விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;” என்றும்,
“அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,”
“கோபமூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.” என்றும்,
உபாகமம் 24 : 17, 18 “நீ அந்நியனுடைய நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் வஸ்திரத்தை அடகாக வாங்காமலும் இருந்து,”
“நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச்செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.”
ஏசாயா 1 : 17 “நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப் பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.” என்றும்
பழைய ஏற்பாட்டில் கர்த்தரும் ஏசாயா தீர்க்கதரிசியும் கூறியதைப் பார்க்கிறோம்.
விதவையின் குணம்:
லூக்கா 18 : 3 “அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில்போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்.”
இந்த பெண் கணவனை இழந்தவள், ஏழையானவள். பாலஸ்தீன நாடுகளில் நியாயஸ்தலத்திற்கோ, நியாயாதிபதியினிடத்திற்கோ பெண்கள் செல்வது தவறான காரியம் என்ற சட்டத்தை வைத்திருந்தனர். ஆனால் இவள் தனியாகப் போவதால் இவளுக்கு எந்த ஆண் துணையும் இல்லை என்றும், எந்த சகோதரர்களோ, நண்பர்களோ, உறவினர்களோ இல்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. இவளைக் குறித்து மூன்று காரியங்களைப் பார்க்கலாம். அந்த விதவைக்கு ஒரு எதிரி இருந்தான். அவள் அந்த நியாயாதிபதியினிடத்தில் போய் எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று அடிக்கடி போய் விண்ணப்பம் பண்ணினாள். இந்தப் பெண்ணுக்கு ஒரு பக்கம் எதிராளியின் பிரச்சினை. இன்னுமொரு பக்கம் இந்த நியாயாதிபதியிடம் நியாயம் கேட்கப் போனால் அவன் அவளை அசட்டை பண்ணுகிறான். அவளுடைய விண்ணப்பத்தைக் கண்டு கொள்ளாமல் அலட்சியம் பண்ணுகிறான். அவள் ஏழையானதால் அவளை அவன் மதிப்பதேயில்லை. அவளுக்கு உதவி செய்யவும் யாரும் இல்லை. அந்த நியாயாதிபதியிடம் பணத்தைக் கொடுத்து எனக்கு நியாயம் செய்யும் என்று கேட்பதற்கு அவளுக்குப் பணவசதியும் இல்லை.
நியாயாதிபதியின் கடைசி நிலை:
லூக்கா 18 : 4, 5 “வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன் நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,
“இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டுமென்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.”
வெகு நாட்களாக அந்த விதவை அவனைத் தேடி வந்தும் அந்த ஏழைக்கு உதவி செய்ய அந்த நியாயாதிபதிக்கு மனதில்லை. ஆனால் அந்த விதவையோ அவனை விடுவதாக இல்லை. இறுதியாக அந்த நியாயாதிபதி அந்த விதவைக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நிலமைக்கு வந்தான். இதை இப்படியே விட்டு விடக்கூடாதென்றெண்ணி செயல்படுகிறான். நீங்களும் நியாயாதிபதி என்ன சொல்கிறான் என்றால் இந்த விதவை அவனைப் போய் அடிக்கடி தொந்தரவு செய்ததால் இனி அவள் தன்னிடம் வந்து தொந்தரவு செய்யக் கூடாதென்று தன் மனதில் நினைத்து அவளுக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று நியாயம் செய்ததாகக் கூறுகிறான். சோர்ந்து போகாமல் அந்த விதவை போய்க் கேட்டுக்கொண்டே இருந்ததால் அந்த விண்ணப்பம் அந்த நீதியுள்ள நியாயாதிபதியை அசைத்தது.
இயேசுவின் விளக்கம்:
லூக்கா 18 : 6, 7 “பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.”
“அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?”
“சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.”
கர்த்தர் நம்மைச் சிந்தித்துப் பார்க்கச் சொல்லுகிறார். தேவனுக்குப் பயப்படாத அந்த நியாயாதிபதியே அடிக்கடி தன்னிடம் வருகிற ஒருத்திக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், இரவும், பகலும் ஆண்டவரை நோக்கி ஜெபம் பண்ணுகிற தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு நீடிய பொறுமையுடன் தேவன் நியாயஞ் செய்யாமலிருப்பாரோ? நிச்சயமாகச் செய்வார். தேவனை நோக்கிக் கூப்பிட்டால் போதும். கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான். தேவனை நோக்கி நாம் கூப்பிடும் போது தேவன் நமக்கு நாம் அறியாததும் எட்டாததுமான வழிகளை நமக்குக் காட்டுவார். எனவே நீங்கள் ஆண்டவரிடம் கேளுங்கள். நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிட்டுப் பாருங்க. உங்களுக்கு நிச்சயமாய் நியாயம் கிடைக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வரவில்லையா? கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்கவில்லையா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? படிக்க வைக்க ஆள் உதவியில்லாமல் இருக்கிறீர்களா? பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கிறீர்களா? தேவனிடம் அதை அறிக்கையிடுங்கள். தேவன் நிச்சயமாக உதவி செய்வார்.
இந்த உவமையை இயேசு இரண்டாம் வருகையில் தான் வருகிற வரை சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும் என்று கூறுகிறார். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் வரவில்லையே, இன்னும் தாமதம் பண்ணுகிறாரே என்று நாம் எண்ணலாம். ஆனால் தேவனோ,
2 பேதுரு 3 : 9 “ தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.”
தேவன் வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதம் பண்ணாமல், ஒருவரும் கெட்டுப் போகாமல் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமை உள்ளவராக இருக்கிறார் என்று கூறுகிறார்.
உவமையின் கருத்து:
பரிசுத்தவான்களாகிய இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களாகிய நாம் தான் அந்த விதவையை போல் இருக்கிறோம். உண்மையான கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. எனவே நாம் அவர் சீக்கிரமாக வரவேண்டும் என்று இரவும் பகலும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணி இயேசுவே வாரும் இயேசுவே வாரும் என்று ஜெபிக்க வேண்டும். தேவனுடைய இரண்டாம் வருகையில் நாம் அவரோடு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற ஆவலோடு ஜெபிக்க வேண்டும். அதற்காக யாக்கோபு போராடி ஜெயித்ததைப் போல ஆண்டவரே சீக்கிரமாய் வாரும் என்று ஜெபத்தில் போராடவேண்டும் (ஆதியாகமம் 33 : 26). ரூத் விடாப்பிடியாக தேவனுடைய நகரத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஜெபித்து அங்கு சென்று அவளுடைய சந்ததியில் இயேசு பிறந்ததைப் போல நாமும் தேவனுடைய பரலோகத்திற்கு நாம் போக வேண்டும் என்ற விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும் (ரூத் 1 : 14). பலவந்தம் பண்ணுகிறவன் தான் பரலோகத்தில் பிரவேசிக்க முடியும் என்று மத்தேயு 11 : 12 ல் கூறியதைப் போல நாம் பலவந்தம் பண்ணி ஜெபிக்க வேண்டும். கொர்நேலியுவைப் போல இயேசுவின் வருகையை எதிர்நோக்கி எப்பொழுதும் ஜெபிக்க வேண்டும்.
பிலிப்பியர் 3 : 20 “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.”
1 தெசலோனிக்கேயர் 1 : 10 “அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.”
நம்மை இரட்சித்து, மரித்திருந்த நம்மை எழுப்பினவருமாகிய இயேசு என்னும் இரட்சகர் பரலோகத்திலிருந்து வருவதை எதிர்நோக்கி பாரத்துடன் ஜெபிப்போம்.
மத்தேயு 24 : 36 “அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.”
மத்தேயு 24 : 44 “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.”
மாற்கு 13 : 32, 33 “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.”
“அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.”
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எப்போது வருவாரென்று பிதாவைத் தவிர யாருக்கும் தெரியாது. பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். எனவே நாம் ஆயத்தமாக, எச்சரிக்கையாயிருந்து, விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும். பவுல் கூறியதைப் போல நல்ல போராட்டத்தைப் போராடுவோம். ஓட்டத்தை முடிப்போம். விசுவாசத்தைக் காத்துக் கொள்வோம் ( 2 தீமோத்தேயு 4 : 7). இயேசுவின் வருகையில் அவரோடு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய செயல்களைச் செய்வோம். நம்முடைய விசுவாச ஜீவியத்தை உறுதியாக நாம் நிலைத்திருந்து அதை காத்துக் கொள்ளவேண்டும் இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அனைவரின் விசுவாசமும் குறையும். அன்பு தணியும். ஜெபத்தின் மீதுள்ள நம்பிக்கை குறையும். தேவன் பதிலளிப்பார், நியாயம் தீர்ப்பார் என்ற நம்பிக்கை குறைந்து விடும். எனவே நாம் அவரை நோக்கி இரவும் பகலும் விசுவாசத்துடன் கூப்பிடவேண்டும். நிச்சயமாகக் கர்த்தர் சீக்கிரத்தில் நமக்குப் பதில் தருவார். நாம் தேவன்மேல் வைத்துள்ளது விசுவாசம் குறைந்து போகாமல் காத்து, சோர்ந்து போகாமல் ஜெபம் பண்ணுவோம். நம்முடைய கர்த்தராகிய தேவன் நீதியாய் நியாயம் தீர்ப்பார். நமக்கு உதவி செய்வார்.