2 இராஜாக்கள் 5 : 1, 2 “சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான். சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண்ணைச் சிறை பிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.”
சீரியதேசம் பாலஸ்தீனத்துக்கு அடுத்ததாக உள்ள தேசம். இதன் முதல் பெயர் ஆராம். தாவீதுராஜாவுடன் இவர்கள் யுத்தம் செய்து தோல்வியடைந்தனர். அப்பொழுது சீரியா தேசம் தாவீதின் வசமானது. பின் ரெகொபெயாமின் காலத்தில் அது தனி ராஜ்ஜியமாயிற்று. அதன்பின் சீரியா ரோமராஜ்ஜியத்திற்குட்பட்டிருந்தது. இயேசுவின் நாட்களிலும் அது அப்படியே இருந்தது. இந்த ராஜ்ஜியத்தின் படைத்தலைவனாக நாகமான் என்பவன் இருந்தான். அவன் தன்னுடைய நாட்டிற்காகப் பல நாடுகளை வென்றவன். இஸ்ரவேல் நாட்டோடு போர் புரிந்து வெற்றி வாகை சூடிக் கொடுத்தவன். எனவே நாகமானுக்கு அவனுடைய நாட்டில் மிகுந்த மரியாதை இருந்தது. அவன் மிகுந்த செல்வந்தனாகவும், மகாவீரனாகவும், பராக்கிரமசாலியாகவும் இருந்தான். அவனுடைய நாட்டு மக்களும், படைவீரர்களும் அவனிடம் மிகுந்த அன்பாக நடந்து கொண்டனர் அவன் இஸ்ரவேலின் தேவனை அறியாத ஒரு மனிதனாக இருந்தான். அவன் மூலமாகக் கர்த்தர் சீரியாவுக்கு விடுதலை கொடுத்ததை இதிலிருந்து பார்க்கப் போகிறோம். இவன் கர்த்தர் பயன்படுத்தின ஒரு மனிதனாக இருந்தான். இவனைக் கொண்டு தேவன் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்.
இவன் இஸ்ரவேல் தேசத்தின் மீது படையெடுத்து அங்குள்ளவர்களை சிறைபிடித்து பலபேரை அடிமையாகத் தன்னுடைய நாட்டிற்குக் கூட்டிக் கொண்டு சென்றான். அப்படி கூட்டிச் சென்றவர்களில் ஒரு சிறு பெண்ணைத் தன்னுடைய மனைவிக்கு பணிவிடை செய்யத் தன்னுடைய வீட்டில் வைத்துக் கொண்டான். இவள் ஒரு எபிரேயப் பெண். இவளுடைய பெயர் கூட கொடுக்கப்படவில்லை அவள் சிறியவளாக இருந்தாலும் சிறந்தவளாக, கர்த்தரால் பயன்படுத்தக் கூடியவளாக இருந்திருக்கிறாள். எஸ்தரைப் போல, ரூத்தைப் போல, சாராளைப் போல, ரெபாக்காளைப் போல, ராகேலைப் போல ஒரு சிறந்த பெண். கிறிஸ்தவரல்லாதவர்களையும் தேவன் எடுத்து பயன்படுத்தியதற்கு இந்த நாகமான் ஒரு உதாரணம். கர்த்தர் பார்வோனையும், நேபுகாத்நேச்சாரையும், கோரேஸ் ராஜாவையும், மகா அலெக்சாண்டரையும் பயன்படுத்தினார். மகா பராக்கிரமசாலியான நாகமான் குஷ்டரோக வியாதியால் பாதிக்கப்பட்டு இருந்தான். இந்த குஷ்டரோகமானது குணமாக்க முடியாத ஒரு வியாதி. இது ஒரு தோல் வியாதி. கிட்டத்தட்ட நாகமான் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தான். அதனால் அவனுடைய உறவினர்களும், நண்பர்களும் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தனர். ஆனாலும் யாராலும் அவனுக்கு உதவவோ, குணமாக்கவோ முடியவில்லை.
நாகமானின் அடிமைப் பெண்ணின் செய்தி:
2 இராஜாக்கள் 5 : 3, 4, 5 “அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள். அப்பொழுது அவன் போய், இஸ்ரவேல் தேசத்துப் பெண் இன்ன இன்ன பிரகாரமாய்ச் சொல்லுகிறாள் என்று தன் ஆண்டவனிடத்தில் அறிவித்தான். அப்பொழுது சீரியாவின் ராஜா: நல்லது போகலாம், இஸ்ரவேலின் ராஜாவுக்கு நிருபம் தருகிறேன் என்றான்; அப்படியே அவன் தன் கையிலே பத்துத் தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறைபொன்னையும், பத்து மாற்றுவஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டுபோய்,”
நாகமானின் வீட்டில் அடிமையாகக் கொண்டுவரப்பட்ட அந்தப் பெண்ணால் எந்தக் கட்டளையும் தன்னுடைய எஜமானிக்குக் கொடுக்க முடியாது. ஆனால் ஒருநாள் தைரியத்தை வரவழைத்துத் தன்னுடைய எஜமானியிடம் எஜமானுக்காக சமாரியா நாட்டில் உள்ள எலிசா தீர்க்கதரிசியைப் பற்றிக் கூறுகிறாள். அந்த தீர்க்கதரிசியிடம் தன்னுடைய எஜமான் சென்றால், அவர் குஷ்டரோகத்தை நீக்கி விடுவார் என்று எடுத்துரைத்தாள். இதற்கு முன் எலிசா எந்த குஷ்டரோகியையும் குணமாக்கினதாக இல்லை. தானியேல் பாபிலோனில் தேவனுக்குப் பிரியமானதைச் செய்தான். யோசேப்பு எகிப்து தேசத்தில் தேவனுக்குப் பிரியமானதைச் செய்தான். இந்த சின்னப்பெண் சீரியா தேசத்தில் நற்செய்திப் பணியையும், ஆத்தும ஆதாயப் பணியையும் செய்ததைப் பார்க்கிறோம். மேலும் அவள் இஸ்ரவேலின் தேவனின் வல்லமை குறைந்ததால் தான் தன்னுடைய நாட்டிலிருந்து அடிமையாக வந்திருக்கிறேன் என்று தேவனைப் பற்றிய தவறான எண்ணம் அவளிடம் இல்லை. இந்தச் செய்தியைத் தன்னுடைய கணவனிடம் எஜமாட்டி எடுத்துரைத்தாள். நாகமானுக்கு ஒரே ஆச்சரியம். அந்த சிறு பெண்ணுடைய நாட்டைத் தான் அழித்திருந்தும், அவள் தன்னுடைய வீட்டுக்கு அடிமையாக இருந்து கொண்டிருக்கிற போதும், தனக்கு உதவி செய்ய நினைத்த அவளுடைய மனதை நினைத்து மிகுந்த ஆச்சரியம் அடைந்தான். உடனே சமாரியாவுக்குப் போக எண்ணம் கொண்டான். இதிலிருந்து அடிமைப்பெண்ணின் சொல்லையும் கேட்கும் நற்குணமுடையவன் நாகமான் என்றறிகிறோம்.. அந்தப் பெண் சிறைபிடிக்கப்பட்டு பாடுகள் அனுபவித்தது நன்மைக்கேதுவாக மாறியது. இதேபோல் உங்கள் பாடுகளும் கர்த்தருக்கு மகிமையாகவும், உங்களுக்கு நன்மையாகவும் மாறும்.
ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்துக்குப் போக வேண்டுமானால் அந்த ராஜாவிடம் அனுமதி வாங்க வேண்டும். எதிரி நாடானதாலும், தானே போய் அங்கு சண்டையிட்டு வெற்றி பெற்றதாலும் அவர்கள் தனக்கு உதவுவார்களா என்ற சந்தேகத்துடன் ராஜாவிடம் சென்று விஷயத்தைக் கூறினான். அப்பொழுது சீரிய ராஜாவாக இருந்த இரண்டாம் பெனாதாத் அவன் அங்கு போகச் சம்மதம் தெரிவித்து, எலிசா தீர்க்கதரிசிக்குக் கடிதம் கொடுக்காமல், சமாரியாவின் ராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதி கொடுத்தனுப்பினான். அவன் கையில் அந்த தீர்க்கதரிசிக்குக் கொடுக்கப் பத்துதாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறை பொன்னையும், பத்து மாற்று வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு நாகமானின் நண்பர்களும், படை வீரர்களும் அதிக நாட்கள் பிரயாணம் பண்ணி சமாரியா ராஜாவின் அரண்மனைக்கு நேரே சென்றனர். அப்பொழுது இஸ்ரவேலை ஆண்டு கொண்டிருந்தவர் யோராம் ராஜா. இவர் ஆகாப் ராஜாவின் மகன். இந்த சம்பவம் நடந்த காலம் கி . மு 600ம் ஆண்டு. இஸ்ரவேல் தேசத்தில் குஷ்டரோகிகள் ஊருக்கு வெளியேதானிருக்க வேண்டும். ஊருக்குள் வர முடியாது. ஆனால் நாகமானோ அரண்மனைக்குள் குஷ்டரோக வியாதியோடு செல்கிறான்.
இஸ்ரவேல் ராஜா படித்த நாகமானின் கடிதம்:
2 இராஜாக்கள் 5 : 6 – 8 “இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்த நிருபத்தைக் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கி விட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது. இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்த போது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கி விடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்கச் சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் என்றான். இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்ட செய்தியை தேவனுடைய மனுஷனாகிய எலிசா கேட்டபோது, அவன்: நீர் உம்முடைய வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்வானேன்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ளட்டும் என்று ராஜாவுக்குச் சொல்லியனுப்பினான்.”
இஸ்ரவேல் ராஜா நாகமான் கொடுத்த கடிதத்தைப் படித்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தான். அதில் சீரியராஜா தன்னுடைய ஊழியக்காரனுக்குக் குஷ்டரோக வியாதி இருப்பதால் அதை நீக்கிவிட அனுப்பியிருப்பதாக எழுதியிருந்தார். ராஜாவோ மிகுந்த கோபத்துடன் தன்னுடைய வஸ்திரங்களைக் கிழித்துத் துக்கப்பட்டார். ஏனென்றால் ராஜாவுக்குத் தெரியும் குஷ்டரோக வியாதி குணமாக்க முடியாத வியாதியென்று. மேலும் தான் தீராத வியாதியிலிருந்து சுகம் கொடுக்க தான் தேவனல்ல, எனவே மறுபடியும் சீரியராஜா தம்மோடு போர்புரியக் காரணம் தேடுவதாக நினைத்தான். இந்தச் செய்தி அந்த நாட்டிலுள்ள எல்லோருக்கும் தெரிந்தது. எலிசாவின் கரத்துக்குச் செல்ல வேண்டிய செய்தி, ராஜாவிடம் சென்றதால் இப்படிப்பட்ட குழப்பம் உண்டானது. எலிசா தீர்க்கதரிசியும் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டார். அவர் உடனே ராஜாவுக்கு ஆளனுப்பி இஸ்ரவேலில் தீர்க்கதரிசி உண்டென்பதை அவன் அறிந்து கொள்ளத் தன்னிடம் அவனை அனுப்பப் சொன்னார். ராஜா தன்னுடைய வஸ்திரங்களைக் கிழித்துக் கொள்ள வேண்டாமென்று சொல்லி அனுப்பினார்.
அடிமையான சிறு பெண்ணுக்கிருந்த விசுவாசம் இஸ்ரவேலின் ராஜாவுக்கு இல்லை. அவனிடம் எலிசா தன்னிடம் குணமாக்கும் வரத்தைத் தேவன் கொடுத்திருக்கிறார் எனவே என்னால் குணமாக்க முடியுமென்று பெருமை பாராட்டவில்லை. ராஜாவால் முடியாதது தேவனால் முடியும் என்பதையும், எலிசா நேசிக்கிற தேவன் அவனைக் கைவிடமாட்டார் என்பதையும் அறிந்திருந்தார். இதை எலிசா தன் சுயநலத்துக்காகச் செய்யவில்லை. தேசத்தின் ஷேமத்துக்காகக் கேட்கிறான். . மேலும் நாகமான் ஒரு பெரிய படைத்தளபதி என்று தெரிந்தும், தன்னுடைய நாட்டோடு போரிட்டு வெற்றி பெற்றவன் அவன் என்று தெரிந்தும் அவன் இருக்கிற இடத்துக்கு எலிசா போகாமல் தன்னுடைய இடத்துக்கு அவனை வரச் சொல்லும் துணிச்சலை எலிசாவிடம் நாம் பார்க்கிறோம். இதைக்கேட்ட இஸ்ரவேல் ராஜா நிம்மதியடைந்தான். ஏனென்றால் எலிசாவைப் பற்றி நன்கு ராஜா அறிந்திருந்தார். அந்தச் செய்தியை நாகமானுக்குச் சொல்லியனுப்பினார்.
எலிசா கூறியதும், நாகமானின் கோபமும்:
2 இராஜாக்கள் 5 : 9 – 11 “அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான். அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான். அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன்.”
நாகமான் எலிசா ராஜாவிடம் கூறிய செய்தியைக் கேட்டு மிகுந்த சந்தோஷத்துடனும், நம்பிக்கையுடனும் எல்லாப் பரிசுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு இரதங்களோடும், குதிரைகளோடும் எலிசாவின் வீட்டு வாசலுக்கு வந்தான். நாமும் இதேபோல் கடன் பளுவால் துக்கப்பட்டிருந்தாலும், நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் , சமாதானக் குறைவினால் இருந்தாலும் இயேசுவைத் தேடிச் செல்ல வேண்டும். அவைகள் அனைத்தையும் மாற்ற வல்லவர் இயேசு ஒருவரே. இந்த எலிசா இயேசுவுக்கு அடையாளமானவர். யோர்தான் நதியில் தான் வானத்திலிருந்து சால்வை அவர் மேல் விழுந்து வல்லமையாக ஊழியம் செய்தார். அதே யோர்தானில்தான் இயேசுவும் ஞானஸ்தானம் பெற்று வானத்திலிருந்து புறாவானவர் இறங்கி வல்லமையாக ஊழியம் செய்தார். எலிசாவும், இயேசுவும் அப்பங்களைப் பெருகச் செய்தனர். நாகமான் தன்னைப் பற்றி தீர்க்கதரிசி நன்கு அறிந்திருப்பான் எனவே தனக்கு எலிசாவிடம் நல்ல வரவேற்பு கிடைக்குமென்று நினைத்திருப்பான். ஆனால் எலிசாவோ எந்த வரவேற்பும் அவனுக்குக் கொடுக்கவில்லை. வெளியே வந்து அவனைப் பார்க்கக்கூட இல்லை. இது நாகமானுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்தது. மேலும் அவனுக்கு இது பெரும் இழுக்காகும். எலிசா தன்னோடிருந்த கேயாசியை அவனிடம் அனுப்பி அவனை யோர்தானில் போய் ஏழு தரம் ஸ்நானம் பண்ணச் சொல், அப்பொழுது அவனது குஷ்டரோகம் நீங்கி சுத்தமாவான் என்று சொல்லச் சொன்னான். அப்படிச் செய்வதன் மூலம் நாகமான் தனக்கு சுகம் கிடைத்தற்கான காரணம் என்று எந்த மனிதனையும், இயற்கை சக்திகளையும் சுட்டிக் காட்ட முடியாது. யோர்தான் நதியினால் குஷ்ட ரோகத்தை நீக்க முடியாது என்று இஸ்ரவேலருக்கும், சீரிய மக்களுக்கும் தெரியும்.
நாகமான் தனக்கு ஏற்பட்ட சுகம் தேவனுடைய கிருபையினால், தீர்க்கதரிசியின் மூலம் அவனுக்கு கூறப்பட்ட தேவவார்த்தையின் வல்லமையினால் கிடைத்தது என்பதை அவன் அறிய வேண்டும் என்பதுதான். . எனவே நாகமான் கடுங்கோபம் கொண்டு வெளியே போனான். அவன் என்ன நினைத்தானென்றால் எலிசா வெளியே வந்து ஜெபம் பண்ணி குஷ்டரோகம் இருக்கிற இடத்தில் அவர் கையால் தடவி குஷ்டரோகத்தை நீக்குவார் என்றெண்ணினான். ஆனால் எலிசா அதைச் செய்யவில்லை. கர்த்தர் ஏசாயா 55 : 8 ல் “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று“ கூறியிருப்பதை எலிசா அறிந்திருந்தார். ஏனெனில் எலிசா மனுஷரைப் பிரியப்படுத்துகிற ஊழியக்காரனல்ல (கலாத்தியர் 1 : 10). இதுவரை அவனை இவ்வாறு யாரும் நடத்தியதில்லை. ஆதலால் கோபப்படுகிறான். தேவன் நாகமானை குஷ்டத்திலிருந்து மட்டுமல்ல பெருமையிலிருந்தும் விடுவிக்கிறார். தேவன் மிகவும் வெறுக்கிற காரியங்களில் ஒன்று பெருமை. நீதிமொழிகள் 6 : 16 – 19ல் ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார் என்றுள்ளது. அதில் முதலில் வருவது மேட்டிமையான கண்தான். அதேபோல் நீதிமொழிகள் 29 : 23 ல் மனுஷனுடைய அகத்தை அவனைத் தாழ்த்தும் என்றுள்ளது. மேலும் நீதிமொழிகள் 14 : 12 ல் கூறியிருப்பது போல அவனுக்கு செம்மையாய்த் தோன்றுகிற வழியில் சென்றால் அது மரணம் என்பதை அவன் அப்பொழுது அறியவில்லை. பெருமையாக இருப்பவர்கள் யாரும் கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசிக்க முடியாது.
நாகமானும் ஊழியக்காரரும்:
2 ராஜாக்கள் 5 : 12, 13 “நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப் போனான். அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும் போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.”
இஸ்ரவேலிலுள்ள யோர்தான் நதியின் தண்ணீர் மிகவும் கலங்கலானது. அதையறிந்து வைத்திருந்த நாகமான் அவன் கூறியபடி தமஸ்குவிலுள்ள நதிகளான ஆப்னாவும் பர்பாரும் உண்மையாகவே மிகவும் அருமையான தண்ணீர் உள்ளவை. அதனால்தான் அப்படிப்பட்ட அருமையான தண்ணீரில் குளிக்காமல் இந்த அழுக்கான தண்ணீரில் ஏன் குளிக்க வேண்டுமென்று நினைத்துப் பயங்கரக் கோபத்துடன் திரும்பிப் போனான். எலிசாவிடம் வரும்போது விசுவாசத்தோடு வந்தான். ஆனால் இப்போது கோபத்தோடு போகிறான். அவர்கள் போகும் வழியில் யோர்தானிருந்தது. நாகமான் பெருமையில் நின்று கொண்டிருந்தாலும் அவனுடைய வேலையாட்கள் தீர்க்கதரிசி சொன்ன காரியத்திலும் நன்மையிருக்குமென்று அவனுக்கு உணர்த்த முயற்சிக்கிறார்கள். அவனோடு அவர்கள் சமாதானமாகப் பேசி சம்மதிக்க வைக்க முயற்சித்தனர். என்ன கூறினார்களென்றால் தீர்க்கதரிசியானவர் எதாவது பெரிய காரியத்தைச் செய்யச் சொல்லியிருந்தால் கண்டிப்பாக அதற்குக் கீழ்படிந்து கண்டிப்பாக அதைச் செய்திருப்பீர். ஆனால் அவர் சொன்னது இந்தத் தண்ணீரில் மூழ்கியெழுந்தால் சுத்தமாகும் என்றுதானே கூறியிருக்கிறார் என்றனர். இந்த எளிய விஷயத்தை நிறைவேற்ற வேண்டியது மிகவும் முக்கியமல்லவா என்றனர்.
நாகமான் யோர்தானில் மூழ்கி பெற்ற அதிசயம் :
2 ராஜாக்கள் 5 : 14 “அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.”
தன்னுடைய ஊழியக்காரர்கள் சொல்வதைக் கேட்ட நாகமான் அவர்களுடைய சொல்லை ஏற்று யோர்தான் நதியில் இறங்கி மூழ்க ஆரம்பித்தான். நாகமானுக்கு தன்னோடிருக்கிறவர்கள் சொல்வதைக் கேட்கும் குணமும் இருந்ததையும் பார்க்கிறோம்.. ஒவ்வொரு முறை மூழ்கி எழுந்திருக்கும் போதும் அவனோடு சென்ற எல்லோரும் மிகவும் கவனமாக ஏதாவது அவனது உடம்பில் மாற்றம் தெரிகிறதா என்று பார்த்தனர். ஆறுதடவை மூழ்கி நாகமான் எழுந்தும் எந்த அற்புதமும் நடக்கவில்லை. நாகமானும் ஒவ்வொரு தடவை எழுந்திருந்த போதும் தன்னுடைய சரீரத்தை உற்று உற்றுப் பார்த்திருப்பான். ஆனாலும் அவன் சோர்ந்து போகவோ பொறுமையை இழக்கவோ இல்லை. ஏழாவது முறை மூழ்கி எழுந்தபோது அவனுடைய மாம்சத்திலுள்ள எல்லா குஷ்டரோகமும் நீங்கி சிறுபிள்ளையின் உடம்பைப் போல சுத்தமானான். நாகமானோ தாங்கமுடியாத ஆச்சரியத்தில் மூழ்கினான். நாகமானைக் கண்ட அவனது உதவியாளர்களும், படைவீரர்களும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். அவர்கள் அனைவரும் அவனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்தனர். ஆனால் அவனது உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றம் மிகப்பெரிது. ஜீவனுள்ள தேவனை அவனது உள்ளம் யாரென்று கண்டு கொண்டது. எனவே ஜீவனுள்ள தேவனை ஏற்றுக்கொண்டார். நம் தேவன் நினைப்பதற்கும், வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாகச் செய்கிறவர். நமக்குப் புத்திக்கெட்டாத காரியங்களைச் செய்கிறவர். குஷ்டரோக பாவத்திலிருந்து வெளியேவர எலிசா எழுமுறை யோர்தானில் முழ்கச் சொன்னான். நாமும் பாவத்திலிருந்து வெளியேவர நம்மில் ஏழு காரியங்களைச் செய்ய வேண்டும். 1. மனந்திரும்ப வேண்டும் (அப்போஸ்தலர் 2 : 38). 2. தான் ஒரு பாவி என்று உணர்ந்து இயேசுவுக்கு முன் அறிக்கை செய்ய வேண்டும் (1யோவான் 1 : 9). 3. வேத வசனத்தை வாஞ்சையோடு தேடி மனதில் இருத்த வேண்டும் (1பேதுரு 2 : 3, யாக்கோபு 1 : 21). 4. பாவத்தை விட்டு விலக வேண்டும் (பிலிப்பியர் 4 : 8). 5. ஞானஸ்நானம் எடுத்துத் தேவனோடு உடன்படிக்கை பண்ண வேண்டும் (1பேதுரு 3 : 21). 6. மரித்தோரிலிருந்து எழுந்து என்றும் ஜீவிக்கிற தேவன் இயேசுவே என்று விசுவாசிக்க வேண்டும் (ரோமர் 10 : 9). 7. முடிவுபரியந்தம் கர்த்தருக்குள் நிலைநிற்க வேண்டும் (மத்தேயு 24 : 13).
இஸ்ரவேல் தேசத்தில் இன்னும் அநேக குஷ்டரோகிகள் சொஸ்தமடையாமல் இருந்தார்கள் என்றும் நாகமான் ஒருவனே சுத்தமானான் என்று இயேசுவும் நாகமானைப் பற்றிக் குறிப்பிட்டார் (லூக்கா 4 : 27). இதிலிருந்து தேவனுடைய மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமலும், அவருடைய வார்த்தையைக் கேளாமலும் இருக்கும்போது, தேவன் அவர்களிடமிருந்து தமது இராஜ்ஜியத்தை எடுத்து விட்டு, மற்றவர்களை எழுப்பி, அவர்கள் தேவனுடைய இரட்சிப்பை அனுபவிக்கவும், நீதியையும் அவருடைய ராஜ்ஜியத்தின் வல்லமையையும் அறிந்து கொள்ளவும் செய்வார் (மத்தேயு 8 : 10 –13, 23 : 37 – 39).
நாகமான் எலிசாவை சந்தித்தல்:
2 ராஜாக்கள் 5 : 15, 16 “அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.”
நாகமான் சந்தோஷத்தில் தான் குணமான விஷயத்தைச் சொல்ல எலிசாவைப் பார்க்கப் போனான். இயேசுவிடம் பத்து குஷ்டரோகிகள் சுகம் பெற்றனர் அதில் ஒன்பது பேர் வந்து இயேசுவிடம் நன்றி செலுத்தவில்லை. அதேபோல் நாகமான் செய்யாமல் எலிசாவைத் தேடிப் போனான். முதலில் நாகமான் எலிசாவைச் சந்திக்க வந்தபோது அவர் அவனை சந்திக்க வரவில்லை. ஆனால் இப்பொழுது நாகமனை நேருக்குநேர் சந்தித்தார். நாகமான் எலிசாவின் முன் நின்று இஸ்ரவேலின் தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லையென்று அறிக்கையிட்டான். நாகமானுக்கு தேவனுடைய படைபலம் மனிதர்களின் படைபலத்தைவிட அதிகம் என்பதை அறிந்து கொண்டான். மேலும் சந்தோஷத்துடன் தான் கொண்டுவந்த காணிக்கையை வாங்கிக் கொள்ள வேண்டுமென்று எலிசாவிடம் வற்புறுத்தினான். அவன் கொண்டு வந்த காணிக்கை லட்சக்கணக்கான விலைமதிப்புடையது. இஸ்ரவேலின் தேவன் காசுக்கு குணமளிக்கும் வியாபாரி அல்ல. நாகமானின் பொற்குவியல்கள் எல்லாம் எலிசாவின் கண்களுக்கு மேன்மையுடையனவாகத் தோன்றவில்லை. அவையெல்லாம் வெறும் குப்பைகளாக எலிசாவுக்குத் தோன்றின. எலிசா பணத்துக்காகவோ, புகழுக்காகவோ ஊழியம் செய்யவில்லை. கர்த்தருக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் ஊழியம் செய்தார். அதனால் கர்த்தர் செய்த காரியத்துக்காக எந்த காணிக்கையையும் பெற்றுக்கொள்ள எலிசா விரும்பவில்லை. நாகமானோ வற்புறுத்தி வாங்கச் சொல்லிச் சொன்னபிறகும் எலிசா தான் வாங்குவதில்லையென்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு கூறி விட்டான். தேவஊழியர் பணம் வாங்கக் கூடாது என்பதல்ல. பணம், புகழ் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு ஊழியம் செய்யக் கூடாது. கர்த்தர் மீது உள்ள அன்பினால் செயல்படுவதே உண்மையான ஊழியம் ஆகும். தேவனுடைய கிருபை, இரட்சிப்பு, அவர் அருளும் சுகம் யாவும் இலவசமானவை. எனவே எலிசா காணிக்கையை வாங்க மறுத்து விட்டார். செல்வம், புகழ், செல்வாக்கு போன்ற யாவும் மரணமடைந்தபின் பயன் தராது. இலவசமாக இயேசுவிடம் பெற்றுக்கொள்ளும் இரட்சிப்பு மட்டுமே நமக்குப் பலன் தரும் (ரோமர் 3 : 23, 24).
நாகமான் எலிசாவிடம் கேட்டது:
2 ராஜாக்கள் 5 : 17 – 19 “அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை. ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக; என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணிய வேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான். அதற்கு அவன்: சமாதானத்தோடேபோ என்றான்; “
நாகமான் எலிசாவிடம் இரண்டு கோணிப்பை நிறைய மண் எடுத்துக் கொண்டு போக அனுமதி கேட்கிறான். ஏனென்றால் நாகமான் தன்னுடைய தேசத்தில் வணங்கிய தெய்வங்கள் ஒன்றும் அவனுடைய நோயைக் குணமாக்கவில்லை. இந்தத் தெய்வமே அவனுடைய தீராத வியாதியைக் குணமாக்கியது. அதனால் வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது என்றும் இனிமேல் தான் செலுத்தும் தகனபலி இஸ்ரவேலின் தெய்வத்துக்குத் தான் என்றும் முடிவெடுத்தான். அதற்காகத்தான் சமாரியாவிலுள்ள மண்ணைக் கேட்கிறான். அந்த மண்ணினால் சீரியா தேசத்தில் பலிபீடம் கட்டி தொழுதுகொள்ளப் போகிறான். அதோடுகூட இன்னுமொரு சந்தேகத்தையும் கேட்கிறான். சீரியா தேசத்திலுள்ள ரிம்மோன் தெய்வத்தை வணங்க ராஜா செல்லும் பொது தானும் அவரோடு செல்ல வேண்டுமாதலால் அங்கு ராஜாவுக்கு கைலாகு கொடுத்து அந்த கோவிலில் பணிய வேண்டுமே, அவ்வாறு செய்வதைக் கர்த்தர் மன்னிப்பாரா என்று எலிசாவிடம் கேட்டான். நாகமான் மனதளவில் இஸ்ரவேலின் பிள்ளையாக மாறிவிட்டான். எலிசா சமாதானத்தோடு போ என்றான். நாகமான் சுகம் பெற்றவுடன் மாறுவியா, ஞானஸ்நானம் எடுப்பியா என்றெல்லாம் எலிசா அவனிடம் கேட்கவில்லை.. யாராயிருந்தாலும் தேவன் ஏற்றுக்கொள்வார் என்று எலிசாவுக்குத் தெரியும். அவன் திரும்ப ஊருக்குப் போய் கர்த்தருக்குப் பலிபீடம் கட்டி தேவனைத் தொழுது கொண்டான். அக்கிரமங்களினாலும், பாவங்களினால் மரித்தவனாயிருந்த நாகமானைத் தேவன் உயிர்ப்பித்தார் (எபேசியர் 2 : 1). முன்னே துரமாயிருந்த அவனை கர்த்தர் சமீபமாக்கினார் (எபேசியர் 2 12, 13).
அரியணைகள் அமைக்கப்படலாம். ஆனால் அதில் ஏறப்பண்ணுபவர் தேவனே. அரசனால் முடியாதவைகளும், மனிதபலத்தால் சாதிக்க முடியாதவைகளும் தேவனால் கூடும். தேவன் சொல்வது எளிமையாக இருந்தாலும் அதற்கு கீழ்ப்படிதலே முக்கியம். செல்வம், புகழ், செல்வாக்கு போன்ற யாவும் மரணமடைந்த பின் பயன் தராது. இலவசமாக இயேசுவிடம் பெற்றுக்கொள்ளும் இரட்சிப்பு மட்டுமே நமக்குத் பயன் தரும் (ரோமர் 3 : 23, 24). தேவனுடைய கிருபையும், இரட்சிப்பும் இஸ்ரவேலருக்கு மட்டும் சொந்தமல்ல. அந்நியர்களுக்கு உண்டு என்பதே இதன் முக்கிய கருத்தாகும். தேவன் இஸ்ரவேலர் அல்லாதவர்களுக்கு இரக்கம் காட்டி அவர்களை உண்மையான தேவனிடம் வழிநடத்த விரும்புகிறார். ஆமென்.