இயேசு திராட்சைச் செடியாகவும் நாம் திராட்சைக் கொடியாகவும் நம்மையும், இயேசுவையும் பிதாவானவர் இணைக்கிறார். இயேசு தம்மை திராட்சைச் செடியாகவும், மறுபடி பிறந்து இயேசுவின் சீஷர்களாக மாறினவர்களை கொடிகள் என்றும் விவரிக்கிறார். ஜீவஊற்றாகிய இயேசுவில் நிலைத்திருக்கும் போது அவர்கள் என்றைக்கும் பாதுகாக்கப்படுவார்கள், கனி கொடுப்பார்கள். செடியாகிய இயேசுவோடு இணைந்திருக்கிறவர்கள் எவர்களோ அவர்கள் கொடிபோல் வளர்ந்து படருவார்கள்.
இதில் இயேசு இரண்டு வகையான கொடிகளைப் பற்றி கூறுகிறார். ஒன்று கனி கொடுப்பது, மற்றொன்று கனி கொடுக்காதது. கிறிஸ்துவில் நிலைத்திராத கொடிகளைப் பிதா அறுத்து விடுகிறார். கிறிஸ்துவில் நிலைத்திருக்கும் கனி கொடுக்கும் கொடிகளை அதிக கனிகளைக் கொடுக்கும்படி சுத்தம் பண்ணுகிறார். கனி கொடுத்தல் என்றால் மற்றவர்களுக்கும், ஆண்டவருக்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ்தல் என்று அறியலாம். ஆவியின் கனிகள் (கலா 5 : 22, 23) வாழ்க்கையில் காணப்படுவது மட்டுமின்றி மற்றவர்களுக்கு உதவி செய்வதும், ஆத்மாக்களை கர்த்தருக்கென்று சேர்ப்பதும் கனி கொடுத்தலாகும்.