- யோவானைப் பார்க்கச் சத்தமாய் அழைத்த ஜீவன்:
வெளிப்படுத்தல் 6 : 1 “ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன் “
யோவான் சிங்காசனத்தில் வீற்றிருந்த பிதாவாகிய தேவனைப் பார்க்கிறார். சர்வ வல்லவரின் கரத்தில் ஒரு புஸ்தகம் இருப்பதையும், அது உள்ளும், புறம்பும் எழுதப் பட்டிருப்பதையும், ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப் பட்டிருப்பதையும் காண்கிறார். இது அந்த நாட்களில் பயன்படுத்தப்படும் புஸ்தகச் சுருளைக் குறிக்கிறது. இந்தப் புஸ்தகம் மிக முக்கியமானதாக இருந்திருப்பதால் தான் தேவன் அதைத் தன்னுடைய வலதுகரத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார். இதை,
வெளிப்படுத்தல் 5 : 1 ல் “அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.”
வெளிப்படுத்தல் 5 : 7 ல் “அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.”
உபத்திரவ காலத்தில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு எவ்வாறிருக்கும் என்பது பற்றிய தேவனுடைய திட்டங்கள், துன்மார்க்கனின் நியாயத்தீர்ப்பு, நீதிமான்களின் விடுதலை, தேவ ராஜ்ஜியத்தின் நடபடிகளும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இதை அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எசேக்கியேல் இந்தப் புஸ்தகத்தைப் பற்றி அறிந்திருந்ததால்,
எசேக்கியேல் 2 : 9,10 ல் “ அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச் சுருள் இருந்தது. அவர் அதை எனக்குமுன்பாக விரித்தார்; அதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.” என்று முன்னமே கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.
வெளிப்படுத்தல் 5 : 7, 12 ல் “அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.” “அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமை யையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.”
வெளிப்படுத்தல் 5 : 5 ல் “ அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
அந்தப் புத்தகத்தை திறந்து அதிலுள்ளவைகளை வாசிப்பதற்கு ஒருவரும் பாத்திரராக இல்லையென்பதால் யோவான் அழுதான். அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் யூதா கோத்திரத்துச் சிங்கமான இயேசு, தாவீதின் வம்சத்திலிருந்து வந்த தாவீதின் வேரான இயேசு பழைய ஏற்பாட்டின் பலியாக, புதிய ஏற்பாட்டில் உலகத்தின் பாவத்தைச் சுமக்கிற தேவ ஆட்டுக்குட்டியாக வந்த இயேசுவே அந்தப் புஸ்தகத்தைத் திறக்கத் தகுதியும் வல்லமையுமுடையவர் என்று விளக்குகிறார். ஆட்டுக்குட்டியானவர் பிதாவின் வலதுகரத்திருந்த புஸ்தகச் சுருளை வாங்குகிறார். இயேசுவானவர் அடிக்கப் பட்டதாலும், சிலுவையில் இரத்தம் சிந்தி சகல பாஷைக்காரர்களையும், ஜனங்களை யும், தேவனுக்கென்று மீட்டுக் கொண்டதாலும் முத்திரைகளை உடைப்பதற்கான அதிகாரம் பிதாவினால் கொடுக்கப்பட்டது. ஜெயங்கொண்டவராகப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராக ஆட்டுக்குட்டியானவர் காணப்பட்டதினிமித்தம் வெளிப்படுத்தல் 5 : 8 ல் மிகப்பெரிய ஆராதனை பரலோகத்தில் ஆரம்பமாகிறது. நான்கு ஜீவன்களும் இருபத்துநான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டி யானவருக்கு முன்பாக வணக்கமாக விழுந்து தொழுது கொண்டனர் என்று பார்க்கிறோம்.
முதலாவது முத்திரை உடைக்கப்பட்டதும் உபத்திரவ காலம் துவங்குகிறது. ஏழாவது முத்திரை உடைக்கப்படும்போது எக்காளங்கள் ஊதப்படுகின்றன. ஆறாவது எக்காளத் தோடு உபத்திரவ காலத்தின் முதல் மூன்றரை ஆண்டுகள் முடிவடைகின்றன (வெளிப் படுத்தல் 6 : 1 – 9 : 21). பிதாவின் வலதுகரத்திலிருந்து பெற்றுக்கொண்ட புஸ்தகத்தில் முத்திரைகளை ஆட்டுக்குட்டியானவர் ஒன்றன்பின் ஒன்றாக உடைக்கப் போகிறார். ஆட்டுக்குட்டியானவர் என்பது இயேசுவைக் குறிக்கிறது. யோவான்ஸ்நானகன் 1 : 29 ல் இயேசுவைப் பார்த்து “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றும், வெளிப்படுத்தல் 13 : 9 ல் “உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி” என்றும் இயேசுவைப் பற்றி கூறப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். முதல் முத்திரை உடைக்கப்பட்டதும் நான்கு ஜீவன்களில் ஒன்று இடிமுழக்கம் போன்ற சத்தமிட்டு யோவானை நோக்கி “வந்துபார்” என்றது. இந்த ஜீவன் சிங்க முகமுடையதாக இருக்கலாம் (வெளிப்படுத்தல் 4 : 7). வனவிலங்குகளின் ராஜா என்ற ழைக்கப்படும் சிங்கம் பெலனுக்கும், தைரியத்துக்கும் பேர் பெற்றது (ஆதியாகமம், 49 : 9, தானியேல் 7 : 4, ஆமோஸ் 3 : 8). வந்துபார் என்ற வார்த்தைக்கு யோவான் உடனடியாகக் கீழ்ப்படிந்தார்.
- வெள்ளைக் குதிரையில் ஜெயிப்பதற்குக் புறப்பட்டவன்:
வெளிப்படுத்தல் 6 : 2 “நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.”
இந்தத் தரிசனத்தில் யுத்தத்திற்குப் பயிற்சியளிக்கப்பட்ட நான்கு குதிரைகளைப் பார்க்கிறார். இந்தக் குதிரைகள் மக்களது பாவத்திற்கும், கீழ்ப்படியாமைக்கும் கிடைக்கிற நியாயத் தீர்ப்பைக் குறிக்கிறது. இந்த நான்கு குதிரைகளும் இறுதிகால நியாயத்தீர்ப்புக்கு முன்னடையாளங்களாக இருக்கின்றன. இவ்விதம் குதிரைகளைக் குறித்த செய்திகளைச் சகரியா 6 : 1 – 8 வசனங்களில் காணலாம். முதலாவது வெள்ளைக் குதிரையைப் பார்க்கிறார். உபத்திரவ காலம் வெள்ளைக் குதிரையில் தொடங்கி (வெளிப்படுத்தல் 6 : 2), வெள்ளைக் குதிரையில் முடிவடைகிறது (வெளிப்படுத்தல் 19 : 11). வெள்ளை நிறம் சமாதானத்தையும், பரிசுத்தத்தையும் குறிப்பிடுவதால் வெளிப்பட்டவர் இயேசு கிறிஸ்து அல்ல. முத்திரையை உடைப்பவரும், அதனால் வெளிப் படுபவரும் ஒருவராய் இருக்க முடியாது. குதிரையில் வருகிறவனுடையனின் கையில் வில் இருக்கிறது. வில்லானது மறைமுகமாக தூரத்திலிருந்து வஞ்னையாக எதிரிகளைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. வில் வைத்திருக்கும் இந்த மனிதனின் கையில் அம்பும் வைத்திருப்பதாகச் சொல்லப்படவில்லை (எண்ணாகமம் 24 : 8). எனவே இந்தப் போர்வீரன் யுத்தம் செய்து எதிரிகளை மேற்கொள்ளாமல், அவர்களை அச்சுறுத்தி சூழ்ச்சியினாலும், நயவஞ்சக்கத்தினாலும் ஜெயம் பெறுவான் என்று தெரிகிறது.
அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப் பட்டது என்றதால் அது குறிப்பிட்ட காலம் வரை பயன்படுத்தும்படியாகத் தேவனால் வழங்கப்பட்டிருக்கிறது என்றறியலாம். வெள்ளைக் குதிரையில் வருபவன் அந்திகிறிஸ்து. இயேசுவானவர் பகிரங்க வருகையின்போது வெள்ளைக்குதிரையில் ராஜாதிராஜாவாக வருவார் என்று வெளிப்படுத்தல் 19 : 11 ல் காணலாம். உலகின் ஆளுகையை ஏழு ஆண்டுகள் தற்காலிகமாக அவன் கையில் தேவன் ஒப்புக்கொடுக்கிறார். அவன் ஜெபிப்பவன் என்று எழுதப்பட்ட படி சமாதானத்தை உலகுக்கு கொண்டு வருபவனைப் போலக் காண்பித்து, உலகத்தின் அதிபதியை ஏமாற்றி, தன்னுடைய ஆட்சியை ஸ்தாபிப்பான். கிறிஸ்துவை எதிர்க்கிறவர்கள் அனைவரையும் ஏமாற்றத் தேவனால் அவனுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய ஆட்சியின் துவக்க நாட்களில் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை செய்வான். அவர்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவதினிமித்தம் அந்தி கிறிஸ்துவை யூதர்கள் மேசியாவாக உலகம் நம்புமளவு தன்னை வெளிப்படுத்துவான். இதைத்தான் இயேசு,
மத்தேயு 24 : 5 ல் “ ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு, நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்” என்றார். தானியேலும்,
தானியேல் 11 : 21ல் “இவன் சமாதானமாய் நுழைந்து இச்சகம் பேசி ராஜ்ஜியத்தைக் கட்டிக் கொள்ளுவான்.” என்றும்,
ஏசாயா 19 : 2 ல் “சகோதரனோடே சகோதரனும், சிநேகிதனோடே சிநேகிதனும், பட்டணத்தோடே பட்டணமும் ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம் பண்ணும் படியாய், எகிப்தியரை எகிப்தியரோடே போர் கலக்கப்பண்ணுவேன்.”
என்றும் கூறியுள்ளனர். உயிப்பிக்கப்பட்ட ரோமசாம்ராஜ்ஜியத்தில், பத்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டணித் தலைவனாக அந்திகிறிஸ்து உருவாகி உபத்திரவ காலத்தின் துவக்கத்தில் படிப்படியாக உலகமனைத்தையும் மேற்கொள்ளுவான் என்பதை தானியேல் 7 : 8, 24 – 26, 8 : 8 – 10, 20 – 25, 11 : 35 – 45 ஆகிய வசனங்களில் பார்க்கிறோம். தானியேல் 8 : 23, 24 ல் மூர்க்க முகமும் சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான். அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினாலல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக் கிரியை செய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான்”. என்று தானியேல் தீர்க்கதரிசி கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இந்த முத்திரை பூமியில் சமாதான உடன்படிக்கை ஏற்பாடுகளைக் காட்டுகிறது.