Menu Close

யோர்தான் நதியை கடக்க செய்த தேவன்

யோர்தான் நதி :

இஸ்ரவேல் ஜனங்கள் கானானைச் சென்றடைய நாற்பது வருடங்கள் சுற்றித் திரிந்தார்கள். யோசுவா சித்தீமிலிருந்து இரண்டு வேவுகாரர்களை அனுப்பி தேசத்தையும், எரிகோவையும் பார்த்து வர அனுப்பினான். அவர்கள் வேவுபார்த்துத் திரும்பி வந்து “கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்” என்று கூறினார்கள் (யோசுவா 2 : 1). யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி ஜனங்களிடம் தேவையான போஜன பதார்த்தங்களை ஆயத்தம் பண்ணச் சொல்லி, இன்னும் மூன்று நாளைக்குள்ளே யோர்தானைக் கடந்து போவோம் என்று சொல்லக் சொன்னான் (யோசுவா 1 : 11). அதன்பின் சித்தீமிலிருந்து பிரயாணம் பண்ணி யோர்தான் மட்டும் வந்தடைந்தனர். அவர்கள் கானானை நுழைவதற்குத் தடையாக இருந்தது யோர்தான் நதி. அதைக் கடந்தால் தான் கானானைச் சென்றடைய முடியும். யோர்தான் என்றால் இறங்கிப் பாய்தல் என்று பொருள். இது பனிபடர்ந்த எர்மோன் என்ற மலையிலிருந்து வருகிறது. 

இது 223 மைல் அல்லது 360 கிலோமீட்டர் நீளம் உடையது. இது லெபனான், சிரியா நாட்டின் எல்லைகள் வழியாக வருகிறது. அங்கிருந்து கலிலேயா பின் சவக்கடலை அடைகிறது. இதில் உப்பின் தன்மை அதிகம். யோர்தான் நதி அறுப்புக் காலத்தில் கரைபுரண்டு ஓடும். இது எரிகோவின் பக்கத்தில் சுமார் பத்து அடி ஆழமுடன் ஆவேசத்துடன் பாயும். எர்மோன் மலையிலிருந்து வருகிற ஆசீர்வாதம் கீழிருக்கிறவர்களை செழிக்கச் செய்கிறது. எலியா தீர்க்கதரிசி பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் வந்தபோது தேவன் அனுப்பிய ரதம் வந்து அவரை அழைத்துச் செல்லப் போவதற்குத் தடையாக இருந்தது, இந்த யோர்தான் நதிதான். எலியா தன்னுடைய சால்வையை எடுத்து முறுக்கி யோர்தானின் தண்ணீரை அடித்தான். யோர்தான் இருபக்கமாகப் பிரிந்து எலியாவும், எலிசாவும் உலர்ந்த தரை வழியாக அக்கரைப் பட்டார்கள் (2 இராஜாக்கள் 2 : 8). பரம கானானுக்குள் செல்வதற்கு எலியாவுக்குத் தடையாக இருந்தது கானான் 

யோர்தான் நதி. அதேபோல் நாமும் பரம கானானுக்குச் செல்ல ஆசைப்பட்டால், யோர்தான் போன்ற தடையான பாவங்களையும், சோதனைகளையும் கர்த்தருடைய வார்த்தையினால் ஜெயம் எடுத்தால் மட்டுமே அதற்குள் பிரவேசிக்க முடியும். அதேபோல் எலியா எடுத்துக் கொள்ளப்பட்டபின் எலிசா எலியாவின் மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்து யோர்தானுக்கு முன்னே நின்று எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான். தண்ணீர் இருபக்கமும் பிரிந்து எலிசா அக்கரைப்பட்டான் (2இராஜாக்கள் 2 : 13, 14). குஷ்டரோகியான நாகமோன் எலிசாவின் வார்த்தையின்படி ஏழு தடவை யோர்தானில் மூழ்கி புதிய சரீரத்தைப் பெற்றான் (2 இராஜாக்கள் 5 : 14). எலிசா யோர்தான் நதியில் தான் தீர்க்கதரிகளின் புத்திரர் போட்ட இரும்புக் கோடாரியை மிதக்கப் பண்ணினார் (2இராஜாக்கள் 6 : 1 – 6). இயேசுகிறிஸ்து யோவான்ஸ்நானனிடம் யோர்தான் நதியில் தான் ஞானஸ்நானம் பெற்றார் (மத்தேயு 3 : 16). . திடீரென்று கர்த்தரிடமிருந்து கட்டளை பிறந்தது. 

ஜனங்களைப் பரிசுத்தம் பண்ண யோசுவா கூறினான்:

யோசுவா 3 : 5 ”யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.”

ஜனங்கள் தங்கள் உள்ளங்களில் பரிசுத்தமுள்ளவர்களாகவும், தேவனுடைய சித்தத்திற்கேற்ப நடந்து கொள்கிறவர்களாகவும் இருந்தால் தான் தேவன் ஜனங்கள் மத்தியில் வல்லமையாகக் கிரியை செய்வார். நாம் தேவன் நமக்கு அற்புதங்களையும், அடையாளங்க ளையும் செய்ய வேண்டுமென்று விரும்பினால் நாம் நம்முடைய இருதயத்தைப் பரிசுத்தமாகக் காக்க வேண்டும். மேலும் நம்முடைய ஆசைகளும், விருப்பங்களும் கர்த்தருடைய பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகின்றனவா என்று ஆராய்ந்து பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். அற்புதங்களை விரும்பி எதிர்பார்க்கிறவர்கள் பாவமன்னிப்பைப் பெற்றுப் பரிசுத்தமாக இருக்க வேண்டும். இதைத்தான் யோசுவா ஜனங்களிடம் நாளைக்குக் கர்த்தர் நம்முடைய நடுவில் அற்புதம் செய்யப் போவதால் அனைவரும் பரிசுத்தமாக்குங்கள் என்றான். ஏற்கனெவே, 

லேவியராகமம் 11 : 44ல் “நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.” 

என்று எவ்வாறு இருக்க வேண்டுமென்று கர்த்தர் கட்டளையிட் டிருந்தார். யோசுவா 7 : 13 லும் ஜனங்கள் பரிசுத்தம் பண்ணும்போது சாபத்தீட்டானது ஒன்றும் ஜனங்களின் நடுவே இருக்கக் கூடாது என்று கூறியதைப் பார்க்கிறோம். 

யோசுவாவுக்குக் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தம்:

யோர்தானைக் கடக்க வைப்பதற்கு முன்னமே கர்த்தர் முதலில் யோசுவாவிடம், 

யோசுவா 1 : 5, 9 ல் “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” 

“பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.”

யோசுவா 3 : 7 ல் “கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.

என்று வாக்களித்திருந்தார். கர்த்தர் கூறியபடி மோசேயோடு கர்த்தர் எவ்வாறு இருந்தாரோ அதேபோல் யோசுவாவோடும் இருந்தார். மேலும் யோர்தானை பிரிப்பதில் மூலம் ஜனங்கள் மோசேயோடு கர்த்தர் எவ்வாறு இருந்தாரோ அதேபோல் யோசுவாவோடும் கர்த்தர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளச் செய்வேன் என்றும், ஜனங்களுக்கு முன்பாக யோசுவாவை மேன்மைப் படுத்துவேன் என்றும் கர்த்தர் வாக்களித்தார். அவர் கூறியதை யோசுவா 4 : 14 ல் பார்க்கலாம். கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக மேன்மைப் படுத்தினார் என்றும், ஜனங்கள் மோசேக்கு எவ்வாறு பயந்திருந்தார் களோ அதேபோல் யோசுவா உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனுக்குப் பயந்திருந்தார்கள். என்றும் பார்க்கிறோம். இதேபோல் கர்த்தர் சாலமோனை மேன்மைப்படுத்தினதை,

1 நாளாகாமம 29 : 25 ல் “இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.”ல் பார்க்கிறோம். 

உடன்படிக்கை பெட்டியின் மகிமை:

உடன்படிக்கை பெட்டி முன்னால் செல்வது எதற்கு அடையாளம் என்றால் ஜீவனுள்ள தேவன் இஸ்ரவேல் ஜனங்கள் நடுவில் இருக்கிறார் என்பதற்கு அடையாளமாகும். உடன்படிக்கை பெட்டியை இங்கு சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிற உடன்படிக்கை பெட்டி என்று கூறப்பட்டுள்ளது. சகரியா 4 : 14 லிலும், 5 : 5 லிலும் “சர்வலோகத் துக்கும் ஆண்டவராயிருக்கிறவர்” என்று சகரியா தீர்க்கதரிசி கூறியிருப் பதைப் பார்க்கிறோம். கர்த்தர் கானானியரையும் ஏத்தியரையும், ஏவிய ரையும், பெர்சியரையும், கிர்காசியரையும், எமோரியரையும், எபூசியரை யும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், ஜனங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக உடன்படிக்கை பெட்டி யோர்தானில் போகிறது என்றார். மக்களின் மத்தியில் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி தேவனுடைய பிரசன்னத்திற்கு அடையாளமாக இருந்தது. எனவே கண்ணால் காணமுடியாவிட்டாலும் மிக அதிகமாகத் தேவனுடைய பிரசன்னம் அந்த இடத்தில் இருந்தது (யாத்திராகமம் 25 : 22, எண்ணாகாமம் 10 : 35). .தேவனுடைய கட்டளைப்படி உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து சென்ற ஆசாரியர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் முன்னால் சென்றனர். படையை விட்டு இவ்வளவு தூரம் தனியாக முன் செல்வதற்கு ஆசாரியர்கள் தயங்கவில்லை என்பதையும், தேவனுடைய பெட்டிக்கு மனிதர்களின் பாதுகாப்பு தேவையில்லை யென்பதையும் இது காட்டுகிறது. தேவனுடைய பெட்டி புறப்படுவதைக் காணும் போது அதனைத் தொடர்ந்து இருப்பது லட்சம் ஜனங்களும் பின்னால் பயணித்தனர். 

யோர்தான் பிளந்த அற்புதம்:

யோசுவா 3 :14 – 17 “ஜனங்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்கள் கூடாரங்களில் இருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்து கொண்டுபோய், யோர்தான் மட்டும் வந்தார்கள். யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள். சகல ஜனங்களும் யோர்தானைக்கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள்.”

ஜனங்கள் யோசுவாவின் சொல்படி ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து செல்லும் போது அதற்குப் பின்னே பிரயாணம் பண்ணி யோர்தான் மட்டும் வந்தார்கள். தேவனுடைய பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் கால்கள் யோர்தான் நதியில் பட்டவுடன் தண்ணீர் திடுக்கிட்டு நின்றது. வந்த வேகத்தில் குவிந்தது. அந்தக் குவியலின் வேகம் 29 கிலோமீட்டர். அது தொலைவிலிருந்து ஆதாம் ஊர் வரை எட்டியது. சகல ஜனங்களும் யோர்தானைக் கடந்து தீரும்வரை கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கும் ஆசாரியர்கள் யோர்தானின் நடுவில் உலர்ந்த தரையில் நின்று கொண்டிருந்தனர். செங்கடலைப் பிளப்பதற்குத் தேவன் காற்றைப் பயன்படுத்தினார் (யாத்திராகமம் 14 : 21). ஆனால் யோர்தானைப் பிளப்பதற்குக் கர்த்தர் ஒன்றையும் பயன்படுத்தவில்லை. வெள்ளமாகப் புரண்டு வரும் தண்ணீரை நிறுத்தியது ஒரு மாபெரும் அற்புதமாகும். தண்ணீர் குவியலாக நின்றதும், உலர்ந்த தரையான வழி இருந்ததும், செங்கடலைத் தேவன் இரண்டாகப் பிளந்து வழி உண்டாக்கினதற்கு ஒப்பான அற்புதமாகும். 

இந்த அதிசயச் செயல் ஜீவனுள்ள தேவன் தன்னுடைய ஜனங்கள் மத்தியில் இருந்தார் என்பதை நிரூபித்தது. வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்தை சுதந்தரித்துக் கொள்வதில் ஏற்படும் எதிர்ப்புகளையும் பிரச்சனைகளையும் எதிர்ப்பதற்குத் தேவையானபடி அவர்களுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தத் தேவன் இதைச் செயல்படுத்திக் காட்டி னார். நடந்தவை இஸ்ரவேலரின் விசுவாசத்திற்கு உற்சாகமளிப்ப வையாகவும், எதிரிகளுக்கு மிகுந்த பயமுண்டாக்குபவையாகவும் அமைந்தன. குப்பையைக் குவித்து வைக்கலாம். பனிக்கட்டியைக் கூடக் குவித்து வைக்கலாம். தண்ணீரை எவ்வாறு குவித்து வைக்க முடியும். விசுவாசமானது தண்ணீரையும் குவிக்கும். யோர்தான் நதியின் தண்ணீர் குவியலைக் கண்டு ஜனங்கள் வியப்படைந்தனர். 

யோர்தானின் அடையாளச் சின்னம்:

செங்கடலைப் பிளந்து பாட்டுடன் புறப்பட்டவர்கள், நாற்பது ஆண்டுகளுக்குப் பின் யோர்தானைப் பிளந்து எக்காளமுடன் கானானில் பிரவேசித்தனர். அவர்கள் யோர்தானைப் பிளந்த நாள் பஸ்காவுக்கு நான்கு நாட்களுக்கு முந்திய நாளாகும் (யோசுவா 4 : 19). சாத்தானின் ஆளுகையின் தேசமாகிய எகிப்திலிருந்து தேவனின் ஆளுகையின் தேசமாகிய கானானுக்குள் வந்தனர். அதன்பின் கர்த்தரின் வார்த்தையின்படி யோர்தானைப் பிளந்தவர்கள் 12 கற்கள் வீதம் இரண்டு ஜோடி எடுத்துக் கொள்கின்றனர். அதில் ஒரு ஜோடியை கர்த்தருடைய இரண்டு பெட்டியைச் சுமந்த லேவியராகிய ஆசாரியர்கள் பாதங்கள் நின்ற யோர்தான் நதியில் நாட்டினர் (யோசுவா 4 : 19, லேவிய ராகமம் 23 : 5). அவர்கள் நாட்டின முதல் ஜோடி கற்கள் கர்த்தரின் வல்லமை வெளிப்பட்டதை நினைவூட்டின. அந்த நினைவுத் தூண்கள் இறந்தகால நிகழ்ச்சிகளின் நினைவுகளை நமக்கு வழங்கின. 

அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது. இந்தக் கற்கள் ஏதென்று நம்முடைய பிள்ளைகள் நம்மைக் கேட்கும்போது, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்து போனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்து போகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்ல வேண்டும். ஏறக்குறைய நாற்பதினாயி ரம்பேர் யுத்த சன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள். அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள். சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார்.

யோசுவா: யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான். அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தான் நடுவிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்துக்குத் திரும்பி, முன்போல அதின் கரையெங்கும் புரண்டது. இந்தப் பிரகாரமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கீழெல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள். இன்னொரு ஜோடியை எரிகோவுக்கு மூன்று மைல் தொலைவிலிருந்து கில்காலில் நாட்டினர் (யோசுவா 4 : 3, 20). இரண்டாவது ஜோடிக்கு கற்கள் கர்த்தர் தனது வார்த்தையில் உண்மையுள்ளவராக இருந்து தன்னுடைய ஜனங்களைக் கானான் வரை கொண்டு சேர்த்தார் என்பதை நினைவூட்டின. 

முடிவுரை:

விசுவாசிகளின் வாழ்க்கைக்கு எதிர் சூழல்கள் தடையாக இருக்க முடியாது. அவைப் படிகளாகத்தான் இருக்க முடியும். தேவ பெட்டியைச் சுமந்த ஆசாரியர்களின் கால்கள் பட்டவுடனே யோர்தான் வழி விட்டதைப் போல, தேவனை உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட விசுவாசிகளுக்காக வழிவிட எந்தச் சுழலும் மறுப்பதில்லை. அதனால் தேவ நாமம் மகிமைப்படும். இஸ்ரவேலரின் யோர்தானைப் பிளந்த பயணம் வரலாற்றில் ஒரு சுவடைப் பதித்தது. மேலும் அந்நிகழ்ச்சி பாலஸ்தீனக் பகுதியில் வலிமையாகக் கால் பதிப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தன. மோசேயோடும், யோசுவாவோடும் இருந்த தேவன் நம்மோடும் இருக்கிறார். (மத்தேயு 28 : 20) கர்த்தர் நமக்குச் செய்த நன்மைகளை நம்முடைய குடும்பத்தினருக்குச் சொல்லி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். அவற்றைக் கூறுவது நமது பின்சந்ததியினர் கர்த்தர் பேரில் நம்பிக்கை வைப்பதற்கு உதவி செய்யும். ஆமென்.

Related Posts