Menu Close

ஆகாய் புத்தகத்தின் விளக்கம்

இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு விரோதமான அருவருப்புகளையும் பாவங்களையும் செய்ததினால் பாபிலோனில் அடிமையாகக் கொண்டு செல்லப்பட்டனர். எரேமியா தீர்க்கதரிசி “நீங்கள் பாபிலோனில் எழுபது வருஷம் அடிமையாக இருப்பீர்கள், பின்பு எருசலேமுக்கு வந்து ஆலயத்தைக் கட்டுவீர்கள், ஆண்டவர் உங்களை விடுவிப்பார்” என்று தீர்க்கதரிசனம் உரைத்தார். அவர் உரைத்தபடி பாபிலோன் ராஜ்ஜியம் கவிழ்ந்து மேதிய பெர்சிய ராஜ்ஜியம் அரியணைக்கு கி. மு 530ல் வந்தது (எரேமியா 25 : 11, 12, 29 : 10 – 14). அப்பொழுது யூதரல்லாத புறஜாதி மன்னனான கோரேஸ் ராஜா ஆட்சிக்கு வந்தான். அவன் மிகவும் விசேஷமானவன். ஏசாயா தீர்க்கதரிசியினால் இவரது பிறப்பு பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே முன்னறிவிக்கப்பட்டது (ஏசாயா 45 : 1 – 3). தேவன் அவனது உள்ளத்தில் பேசினபடியால் பாபிலோ னிலுள்ள யூதர்கள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிச் செல்லலாம் என்றும், எருசலேமில் இடிக்கப்பட்ட தேவாலயத்தை மீண்டும் கட்டவும் வேண்டுமென்று கி. மு 538ல் ஒரு உத்தரவைப் பிறப்பித்தான். சுமார் 50000 பேர் செருபாபேல், பிரதான ஆசாரியரான யோசுவாவின் தலைமையில் அங்கிருந்து எருசலேமுக்குக் கிளம்பினர். அப்பொழுது நேபுகாத்நேச்சாரால் கொள்ளையடிக்கப்பட்ட ஆலயத்து பணிமுட்டுகளையும் அவர்களிடம் ஒப்படைத்துக் கொண்டு போகச் சொன்னான். மேலும் ஜனங்களிடம் எருசலேமின் ஆலயத்துக்கென்று உற்சாகமாகக் காணிக்கை கொடுத்து அனுப்புங்கள் என்றும், பொன், வெள்ளி, மிருக ஜீவன்களைக் கொடுத்து உதவி செய்யவும் ராஜ்ஜியமெங்கிலும் சுற்றறிக்கை அனுப்பினான். அவர்கள் உற்சாகத்துடன் எருசலேமிலிருந்து கொண்டுவந்த பொன், வெள்ளியைக் கொண்டு இடிக்கப்பட்ட ஆலயத்தின் பலிபீடத்தை கி. மு 536 ஏழாம் மாதம் கட்டி முடித்தனர் (எஸ்றா 3 : 8 – 10). அதை சந்தோஷமாகக் கொண்டாட பண்டிகை ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டாடினர். அங்கு சுற்றியிருந்த சமாரியர்கள் பொறாமையுடன் ஆலயத்தைக் கட்டவிடாமல் தடுத்தனர். அதனால் சோர்ந்துபோன யூத ஜனங்கள் ஆரம்பித்த வேலையை கி. மு 534ல் அப்படியே நிறுத்தி விட்டனர். பதினைந்து ஆண்டுகளாக அதைக் கட்ட எந்த முயற்சியும் எடுக்காமல், வந்த நோக்கத்தையே மறந்து விட்டனர். கி. மு 520ல் ஆகாய் தன்னைவிட சிறியவரான சகரியா தீர்க்கதரிசியுடன் சேர்ந்து செருபாபேலையும், மக்களையும் மீண்டும் தேவனுடைய வீட்டைக் கட்டும்படி தூண்டினான். 

ஆகாய்:

சின்ன தீர்க்கதரிசிகளின் பத்தாம் நபர். சிறையிருப்பின் நாட்களில் முதன் முதல் தீர்க்கதரிசனம் உரைத்தவர். இவர் பாபிலோனில் பிறந்து வளர்ந்து பின் எருசலேமில் குடியிருந்திருக்கலாம். ஆகாய் பாபிலோனிலிருந்து செருபாபேலோடு கி. மு 530ல் எருசலேமுக்கு வந்தவர்களில் ஒருவர் (2 : 3, எஸ்றா 3 : 12). ஆகாய் என்றால் பண்டிகை, கர்த்தரின் பண்டிகை, எனது பண்டிகை, பெருமகிழ்சசி என்றெல்லாம் பொருள் கூறுவர். இந்த அபூர்வப் பெயரைப் பெற இவர் ஏதாவது பண்டிகை காலத்தில் பிறந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவரது பெயரை இந்நூலில் ஒன்பது முறையும் 1 : 1, 3, 12, 13 2 : 1, 10, 13, 14, 20), எஸ்றா நூலில் இரு முறையும் காணலாம் (எஸ்றா 5 : 1, 6 : 14). இவர் தீர்க்கதரிசி என்று அழைக்கப் படுகிறார் (1 : 1, 2 : 1, 19, எஸ்றா 6 : 14). இவர் கர்த்தருடைய தூதன் என்றும் குறிப்பிடப்படுகிறார். இவர் தேவனுடைய செய்தியைக் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறியதிலிருந்து அறிகிறோம் (1 : 13). ஆகாய் தன்னை முற்றிலும் மறைத்து தேவனையே உயர்த்தினார். இவருடைய செய்தி மிகவும் எளிமையானதாகவும், உண்மையானதாகவும் இருந்தது. ஆகாய் சிறையிருப்புக்குப்பின் தீர்க்கதரிசனமுரைத்த தீர்க்கதரிசிகளின் முதலாவது இடத்தைப் பெறுகிறார். இவரைத் தொடர்ந்து சகரியா தீர்க்கதரிசனமுரைத்தார். இவரை சிறைமீட்சியின் பின் முழங்கிய முதல் தேவ சத்தம் என்று அறிஞர்கள் அழைப்பதுண்டு. இந்தப் புத்தகத்தை எழுத மூன்று மாதமும் பதினாலு நாட்களும் எடுத்துக் கொண்டதாக வேத வல்லுநர்கள் கூறுகின்றனர். இவர் இந்த புத்தகத்தை கி. மு 520ல் எழுதி முடித்தார். இவர் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது எழுபது வயதுக்கு மேல் இருக்கலாம் என்று அறிஞர்கள் கருத்து கூறியுள்ளனர். இவருடைய ஊழியம் வெறும் நான்கு மாதங்கள்தான். ஆகாயும், சகரியாவும் ஒரே காலகட்டத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள். இவர் ஜனங்களை ஆலயத்தைக் கட்ட வைக்கும் அணுகுமுறை வித்தியாசமானது. இவர் முதலில் உலகின் மீது கவனம் செலுத்தி தேவாலயப்பணியை அரைகுறையாக விட்ட மக்களைக் கண்டிக்கிறார். பின்பு தேவப் பணியைத் தீவிரம் செய்ய அழைப்புக் கொடுக்கிறார். தொடர்ந்து மக்கள் தங்கள் சோர்வுகளை மாற்றி எழும்ப அழைப்பு விடுக்கிறார் (2 : 3). பின்பு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டுமென்ற முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார் (2 : 10 – 19). இறுதியில் தாவீதின் பரம்பரையில் வந்த செருபாபேலை அதிகாரப்படுத்துகிறார் (2 : 23). 

நூலின் சிறப்பு:

பழைய ஏற்பாட்டின் இரண்டாவது சிறிய நூலாக இது விளங்குகிறது. இந்தப் புத்தகத்தில் மொத்தம் 38 வசனங்கள் மட்டுமே உள்ளன. மிகச் சிறிய நூல் ஒபதியா. இதில் இரண்டு அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. இந்நூலின் சிறப்பு புதிய ஏற்பாட்டு காலத்தில் கர்த்தருடைய வார்த்தை என்ற பொருளில் வரும் பதங்கள் 29 முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலின் தீர்க்கதரிசனங்கள் தேதியுடன் குறிப்பிடப்படுகின்றன. இந்நூலில் நான்கு பிரசங்கங்கள் மட்டுமே உள்ளன. இதில் ஒவ்வொரு பிரசங்கமும் எந்த ஆண்டில், எந்த மாதத்தில் எந்த நாளில் பேசப்பட்டது என்று நாட்குறிப்பு போன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் தனி சிறப்பு. பாபிலோனிய சிறையிருப்புக்குப் பின் யூதாவில் கேட்கப்பட்ட முதல் தெளிவான தீர்க்கதரிசன வார்த்தை. இந்நூல் புதிய ஏற்பாட்டின் யாக்கோபு நூலுடன் ஒப்பிட்டுக் கற்கத் தகுந்தது. இந்தப் புத்தகம் வரலாற்று சிறப்பு மிக்க புத்தகமாகத் திகழ்கிறது. இது சிறையிருப்பிலிருந்து திரும்பி எருசலேமுக்கு வந்து மீந்திருந்த மக்களுக்கு மிகவும் அவசரமாகக் கொடுக்கப்பட்ட செய்தி. வருங்காலத்தில் தேவன் பூமிக்கு மீண்டும் வருவார் என்பதைக் குறித்து தைரியமான தீர்க்கதரிசனங்களில் ஒன்று இதில் அடங்கியுள்ளது (2 : 6 – 9). நூலின் நடை எளிமையும், தெளிவும் மிக்கது. 

நூலை எழுதியதன் நோக்கமும், காலமும்:

தேவாலய பணியை நிறைவு செய்ய மக்களுக்கு உணர்வூட்டி, முடிக்க வேண்டும். ஆகாய் அதற்காக மீண்டும் அந்தப் பணி அர்ப்பணிப்போடும், தேவ ஆசீர்வாதத்தோடும் தொடங்கப்பட மக்கள் தங்கள் வாழ்க்கையையும், விருப்பங்களையும் சீர்படுத்தும்படி அவர்களை ஊக்கப்படுத்தவும் தான் ஆகாய் நூலின் நோக்கம். இந்த நூல் கி. மு 520ல் எழுதப்பட்டிருக்க வேண்டும். 

முதல் செய்தி: ஆகாய் 1 : 1 – 15 ஆலயம் கட்ட அழைப்பு:

ஆகாய் தீர்க்கதரிசி ஆறாம் மாதம் முதல் தேதியில் கர்த்தர் கூறிய முதல் செய்தியைக் கூறினார். ஜனங்கள் ஆலயத்தைக் கட்ட ஏற்ற காலம் வரவில்லையென்றதால் ஆகாய் தீர்க்கதரிசி முதன்முதலில் கர்த்தருடைய வார்த்தையை செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும் யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் கூறினார். செருபாபேல் என்ற பெயருக்கு பாபிலோனில் விதைக்கப்பட்டவன் என்று பொருள். இவன் தாவீதின் வம்சத்தில் வந்தவன். யோயாக்கீனின் பேரன். கோரஸ் ராஜாவால் யூதாவின் ஆளுநராக நியமிக்கப் பட்டிருந்தான். யோசுவா யோத்சதாக்கின் குமாரன். பாபிலோனிய படையெடுப்பின் போது யோத்சதாக் பிரதான ஆசாரியராக இருந்தவர். எனவே ஆகாய் தனது செய்தியை சமயத் தலைவருக்கும், ஆட்சியில் முக்கியமானவருக்கும் கூறினார். ஆலயப்பணி தொடங்கி சமாரியர்களின் எதிர்ப்பால் பணியை நிறுத்திவிட்டனர் (எஸ்றா 4 : 1- 5, 24). பொதுவாகக் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைத் தம்முடைய ஜனங்கள் என்றுதான் கூறுவார். இங்கு கோபத்தில் “இந்த ஜனங்கள்’ என்று கூறுகிறார். 

தேவனுடைய வீடு கட்டப்படாமலிருக்கும் போது ஜனங்கள் தங்களுக்கென்று மச்சுப்பாவப்பட்ட வீடுகளைக் கட்டினர். எனவே கர்த்தர் அவர்கள் வழிகளைச் சிந்தித்துப் பார்க்கக் கூறினார். மனிதனுடைய வழிகள் எப்போதும் அவனுக்குச் சரியானதாகவே தோன்றும் (சங்கீதம் 1 : 6, நீதிமொழிகள் 14 : 12, 13 : 15, ஏசாயா 53 : 6, 55 : 7, 9, எரேமியா 6 : 14, 10 : 2, 23, 30 : 21). ஜனங்கள் திரளாய் விதைத்தாலும் அறுத்துக் கொண்டு வருவது கொஞ்சம்தான். ஆலயத்தைக் கட்டாததால் ஆசீர்வாதம் அவர்களிடம் தங்குவதில்லை என்று கர்த்தர் உரைத்தார். அவர்களின் கைவேலை பரிதாபமாக வீணாய்ப் போகத்தக்கதாக கர்த்தர் அவர்களது வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கொடாமலும் பண்ணி பஞ்சத்தால் சிட்சித்தார். தேவ மக்கள் தங்களது சொந்த விருப்பங்களையே நாடி வாழ்ந்ததால் தேவனது ஆசீர்வாதத்தை இழந்து விட்டனர். எனவே கர்த்தர் ஜனங்களிடம் மலைகளில் ஏறிப்போய் மரங்களை வெட்டிக்கொண்டுவந்து ஆலயத்தைக் கட்டுங்கள் என்றார். இது லேசான காரியமல்ல. கடினமான உழைப்பு தேவை. தேவன் நம்மிடம் கிரியைகளை எதிர்பார்க்கிறவர். 

இந்தப் புத்தகத்தின் செய்தி சுவிசேஷத்தின் பணிதான். தேவன் அவர்கள் விருப்பத்தில் மாறுதல் அடையும்படியும், சுறுசுறுப்படையும்படியும் சொல்கிறார். முதலிடத்தைக் கொடுக்க வேண்டியதற்கு முதலிடம் கொடுக்க ஆகாய் அறிவுரை கூறினார். தலைவர்களும், மக்களும் ஆகாயின் செய்திக்குச் செவி கொடுத்து கர்த்தருக்கு முன்பாகப் பயந்திருந்தனர். தேவனது வீட்டின் பணியை மீண்டும் தொடங்கத் தங்களை ஒப்புக் கொடுத்தார்கள். ஆகாய் செய்தி சொன்ன 23 நாட்களிலே ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தனர். கர்த்தர் தமக்குக் கீழ்ப்படிந்த மக்களோடு இருப்பதாக அவர்களுக்கு வாக்களித்தார். அவர்களது வேலையை நிறைவேற்றி முடிக்க செருபாபேலின் ஆவியையும், யோசுவாவின் ஆவியையும் ஜனங்கள் எல்லோருடைய ஆவியையும் கர்த்தர் எழுப்பி வேலையை முடிக்க உதவி செய்தார். (சகரியா 4 : 6). கர்த்தர் ஒவ்வொரு விசுவாசிக்கும் கொடுக்கும் பெரிய வாக்குத்தத்தம் “நான் உங்களோடு இருக்கிறேன்” என்பதாகும் (ஆதியாகமம் 26 : 24, 28 : 15, 39 : 2, 3, 21, 23, யாத்திராகமம் 3 : 12, 29 : 45, 46 மத்தேயு 28 : 20). தேவன் நமக்கு ஒரு பணியை ஒப்புவித்தால் அதனைத் தொடங்கப் பயப்பட வேண்டாம். தேவனின் பண்டக சாலையில் எந்தக் குறைவும் இல்லை. அப்பணியை நிறைவேற்றத் தேவன் துணை செய்வார். 

இரண்டாம் செய்தி: ஆகாய் 2 : 1 – 9 கர்த்தருக்குள் தைரியப்படுத்துதல்:

ஆகாய் கர்த்தர் கூறிய இரண்டாவது செய்தியை ஏழாம் மாதம் இருபத்தோராம் தேதியில் கூறினார். சாலமோன் கட்டிய தேவாலயம் மிகவும் பிரமாண்டமாக பொன்னும், வெள்ளியும் கொண்டு அலங்கரிக்கப் பட்டதாகக் காட்சியளித்தது அதைப் பார்த்த அங்கிருந்த பெரியவர்களுக்கு இது ஒன்றுமில்லாததாகத் தோன்றியதால் அழுது கவலையுடன் மிகவும் சோர்ந்து போயிருந்தனர். கர்த்தர் ஆலயம் கட்டும் பணியை உற்சாகமாகச் செய்யுமாறும், திடன் கொள்ளச் சொல்லியும் ஜனங்களை ஆகாய் மூலம் உற்சாகப்படுத்தியதுதான் இந்த இரண்டாம் செய்தி. சாலமோன் ஆலயத்தைவிட இந்த ஆலயம்தான் மகிமை நிறைந்ததாக இருக்கும் எப்படியெனில் மேசியாவானவர் மனித அவதாரமெடுத்து இந்த ஆலயத்துக்குள்தான் பிரவேசிக்கப் போகிறார், அதனால் இது மகிமை நிறைந்ததாக இருக்கும் என்பதாகும். இந்தப் புதிய ஆலயத்தில் “நான் உங்களுடனே இருக்கிறேன்“ என்றது போக “என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலை கொண்டிருப்பார் பயப்படாதேயுங்கள்” என்று வாக்குறுதி யளித்தார். 

இந்த ஆலயத்தில் ஒரு முறை அல்ல பலமுறை இயேசு அங்கு சென்றிருக்கிறார். நமக்குள்ளும் ஆவியானவர் இருப்பதால் பயப்பட வேண்டாம் (1 யோவான் 4 : 18). எபேசியர் 6 : 10ல் கூறியிருப்பது போல கர்த்தருடைய சத்துவத்திலும், அவருடைய வல்லமையிலும் பலப்பட வேண்டும் (1 கொரிந்தியர் 16 : 13). நமக்குத் தேவன் கொடுக்கப்பட்ட ஊழியம் சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. அதை உண்மையும், உத்தமுமாகச் செய்ய வேண்டும். ஆகாய் 2 : 7, 21 வசனங்களில் இருமுறை தேவன் வானத்தையும், பூமியையும் அசையப் பண்ணுவேன் என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். அதாவது யூதரை ஆளுகை செய்து ஒடுங்கின பாபிலோனியரை மட்டுமின்றி இம்சை செய்த அனைவரையும் அசையப் பண்ணுவதாக தம் தாசனின் மூலம் கூறியுள்ளார். இந்த வாக்கின்படி பெர்சிய, கிரேக்க, ரோம சாம்ராஜ்ஜியங்களையும் பல சிறிய அரசுகளையும் ஆண்டவர் அழித்து விட்டார் (2 : 6, 7). இந்த அசைவு நிகழ்வது ஆயிரம் ஆண்டு அரசாட்சியின் முடிவில் புதிய வானத்தையும், புதிய பூமியையும் உண்டாக்கும் பொழுது நடைபெறும். 

சகல ஜாதிகளையும் அசையப் பண்ணுவது இயேசுவின் இரண்டாம் வருகையில் வரும் போது நடைபெறும் (யோவேல் 3 : 16, மத்தேயு 24 : 29, 30). மகா உபத்திரவ காலத்தில் தேவாலயம் கட்டப்படும். அதற்குப் பின்பு ஆயிரவருட தேவாலயம் கட்டப்படும். அவர் வரும்போது ஷகினா மகிமை அவருடன் வந்து தங்கும் (மத்தேயு 24 : 30). அதில் அந்திகிறிஸ்துவின் உருவம் இருக்கப் போவதில்லை. அப்பொழுது இதற்கு முன் என்றுமில்லாத வண்ணம் தேவ மகிமையால் ஆலயத்தை நிரப்புவேன் என்கிறார். மகிமையின் இரட்சகராய் தேவன் சமாதானத்தோடு தமது மக்கள் மத்தியில் வாசம் செய்வார். செருபாபேலினால் கட்டப்பட்ட தேவாலயத்தில் இல்லாதிருந்த அலங்காரம் ஆயிர வருட அரசாட்சியில் உள்ள தேவாலயத்தில் அதிகமாக ஈடு கட்டப்படும். பிந்தின ஆலயத்தில் தேவனுடைய பெட்டி இல்லாமல் போகலாம். ஆனால் தேவ மகிமை இல்லையென்று எண்ணிவிடக்கூடாது. அங்கு தேவன் இருப்பார் ( 2 : 4). ஆவியானவர் இருப்பார் (2 : 5). அங்கு கிறிஸ்து வருவார் (2 : 7 – 9).

மூன்றாம் செய்தி: ஆகாய் 2 : 10 – 19 கீழ்படிதலால் வரும் தற்போதைய ஆசீர்கள்: 

ஆகாய் கர்த்தர் கூறிய மூன்றாம் செய்தியை ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாம் தேதியில் கூறினார். கர்த்தர் சொல்லி ஆகாய் ஆசாரியர்களிடம் சில கேள்விகளைக் கேட்டார். “ஒருவன் தன் வஸ்திரத்திலே பரிசுத்த மாம்சத்தைக் கொண்டு போகையில் தொட்டால் அது பரிசுத்தமாகுமா? “பிணத்தால் தீட்டுப் பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால் அது தீட்டுப்படுமா? என்று கேட்டார். அதன் முடிவு பரிசுத்தமானவைகளை ஒருவன் சுமக்கும் போது அவன் வேறு பொருளைத் தொடுவதினால் அந்தப் பொருள் பரிசுத்தம் ஆகாது என்றும், அதே வேளையில் பாவத்தோடு தீட்டுப்பட்டவன் யாராவது எதைத் தொட்டாலும் அது தீட்டுப்பட்டுப் போகும் என்பதைத் தேவன் மக்களிடம் விளக்குகிறார். ஆகாய் நன்மையா, தீமையா எது பிறவற்றைப் பாதிக்கும் என்று கேட்கிறார். 

இவ்வாறு அசுத்தம் நியாயப்பிரமாணத்தின்படி ஒருவரிலிருந்து வேறொருவரின் மேல் வியாபரித்தாலும் பரிசுத்தம் அவ்வாறு வியாபரிப்பதில்லை. எனவே யூத மக்கள் தேவாலயம் கட்டுவதில் தங்கள் கீழ்ப்படியாமையால் தேவனுடைய பார்வையில் தீட்டுப்பட்டனர். ஆகவே அவர்கள் தொட்டதெல்லாம் தீட்டுப்பட்டுப் போயிற்று. அவர்கள் தொட்டதெல்லாம் அசுத்தமானது. ஜனங்கள் தேவாலயத்தைக் கட்டுவதை நிறுத்தியபின் வேளாண்மை சரியாய் விளையவில்லை. அவர்கள் எதிர்பார்த்த அளவில் பாதிமட்டும் கிடைத்தது. “உங்கள் வழிகளை சிந்தித்துப் பாருங்கள்” என்கிறார். “இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன்” என்கிறார். விதைத் தானியத்தை இன்னும் விதைக்காவிடினும் தேவனின் ஆலயத்தைக் கட்ட தொடங்கினபின் தேவன் அந்நாள் முதல் அவர்களது சகல காரியங்களையும் ஆசீர்வதிப்பேன் என்று கூறுவதைக் காணலாம் (2 : 19). 

நான்காம் செய்தி: ஆகாய் 2 : 20 –23 செருபாபேலின் தெரிந்தெடுப்பு:

2 : 21 – 23ல் கர்த்தர் ஆகாயிடம் பூமியெங்கிலுமுள்ள தேசங்களின் வல்லமையையும், ராஜ்ஜியங்களின் வல்லமையையும் தேவன் ஒருநாளில் அழிப்பேன் அன்றைக்கு செருபாபேலை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கூறச் சொன்னார். இந்த வாக்குத்தத்தோடு இந்த புத்தகம் முடிகிறது. சுமார் 78 ஆண்டுகளுக்கு முன்பு யோயாக்கீன் அரசரை பாபேல் அரசர் அடிமையாக பிடித்துச் சென்றார். அவரை குறித்துக் கர்த்தர்,

எரேமியா 22 : 24 “யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”

இப்போது அவரது பேரனான செருபாபேல் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட முத்திரை மோதிரமாக எருசலேமுக்குத் திரும்பி வந்துள்ளார். முக்கியமான ஆவணங்களில் கையொப்பத்திற்குப் பதிலாக அரசரின் முத்திரையை பதிக்க முத்திரை மோதிரம் பயன்படுத்தப் பட்டது. அரச பரம்பரையின் தலைவர்களை தேவன் மீண்டும் அங்கீகரித்ததன் நிரூபணமாக இவரது தெரிந்து கொள்ளுதல் அமைகிறது, கர்த்தர் செருபாபேலைத் தனக்கு மிகவும் அருமையானவனாகப் பாவித்து அவனிடம் மேலான அதிகாரத்தை ஒப்புவிப்பேன் என்று கர்த்தர் இச்சொல்லின் மூலம் தன் தாசனாகிய செருபாபேலுக்குக் கூறுகிறார். ஆபிரகாம், தாவீது, சாலமோன் முதலிய பலரைத் தேவன் தெரிந்தெடுத்து அவர்களுக்குத் தன் திவ்விய சேவையை ஒப்புவித்தது போலவே கர்த்தர் செருபாபேலையும் தெரிந்து கொண்டார். மேலும் செருபாபேலும் மேசியாவின் முன்னோர்களில் ஒருவராயிருக்கும்படி ஆண்டவர் அவரைத் தெரிந்தெடுத்தார். (மத்தேயு 1 : 11, 13). ஆனால் இந்தத் தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேற செருபாபேலின் பரம்பரைக்குட்பட்டவரும் தாவீதின் மகன் என்று குறிப்பிட்டவருமான இயேசுவின் வருகைவரை காத்திருக்க வேண்டியது. தேவமுத்திரையை மனித குலத்தின்மேல் பதித்தவர் இயேசுவானவர். பிதாவாகிய தேவன் அவரைத் தமக்கு முத்திரை மோதிரமாக வைத்துள்ளார். இதன் பொருள் என்னவென்றால் நாம் பாவ அடிமைத்தனத்தில், பாவ உலகத்திலும், அடிமைப் பட்டிருக்கிறோம். ஆனால் ஒருநாள் நிச்சயமாக இந்த உலகத்தை ஸ்தாபிக்கும் போது அன்றைக்கு அடிமையாயிருக்கிற நம்மை அரசாளுவதற்கென்று சிங்காசனத்தில் அமரச் செய்வார். 

புதிய ஏற்பாட்டின் நிறைவேறுதல்:

ஆகாய் 2 : 6ல் உள்ள வசனத்தை எபிரேயர் 12 : 26ல் காணலாம். 

முடிவுரை 

ஆகாய் 15 வருடங்களாகத் தடைப்பட்டிருந்த ஆலய வேலையை ஜனங்களை உற்சாகப்படுத்தித் தொடங்க வைப்பதே கர்த்தர் அவருக்கு கொடுத்த தரிசனமாகும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நாம் சோர்ந்து போகலாகாது என்பதே ஆகாயின் முக்கிய செய்தியாகும். ஆலயத்தைக் கட்டும்படி ஆகாய் கொடுக்கிற அறைகூவல், அதைக் கேட்டு செருபாபேலும், யோசுவாவும் மற்றும் தேவஜனங்களும் உணர்வடைந்து ஆலயத்தைக் கட்டி முடித்தனர். முந்தின ஆலயத்தின் மகிமையை விட பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று தேவனே கூறியுள்ளதைப் பார்த்தோம். கடைசியில் செருபாபேலை கர்த்தர் தன்னுடைய வேலையை செய்யச் சொல்லி , முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று அவருக்கு அருளின வார்த்தையோடு இந்தப் புத்தகம் முடிகிறது. இதிலிருந்து ஆண்டவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு அழைப்பு உண்டு. நமது அழைப்பு என்னவென்று சிந்திக்க வேண்டும். கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.

Related Posts