Menu Close

கேள், தேடு, தட்டு பற்றி இயேசு கூறியது: மத்தேயு 7:7-11 லூக்கா 11:9-13

இந்த வசனங்களிலிருந்து நாம் தேவனிடம் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்,  தேடிக்கொண்டேயிருக்க வேண்டும், தட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் என அறிகிறோம். கேட்டல் என்பது நமது தேவையைப் பற்றிய அறிவு, தேவன் நமது ஜெபத்தைக் கேட்பார் என்னும் நம்பிக்கை இவற்றைக் கொண்டது. தேடுதல் என்பது தேவனுடைய சித்தத்துக்குக் கீழ்படிந்து, ஊக்கமாக  தேவனிடத்தில் கேட்டுக் கொண்டிருத்தல் என்பதாகும். தட்டுதல் என்பது தேவன் சீக்கிரமாக நமது விண்ணப்பத்தைக் கேட்டுப் பதிலளிப்பது போல் காணப்படா விட்டாலும், நாம் மனந்தளராமல் விடாமுயற்சியுடன் தேவனிடம் விண்ணப்பித்துக் கொண்டேயிருப்பது.

கிறிஸ்தவர்களாகிய நாம் செய்யவேண்டிய முதல் காரியம் கேட்பது. கேட்பதின் மூலமாக நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள உறவை நாம் வலியுறுத்துகிறோம், நிச்சயப்படுத்துகிறோம். எதைக் கேட்பது, எப்படிக்கேட்பது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குத் தேவையானதை, நன்மையானதை மட்டுமே நாம் கேட்க வேண்டும். நம்முடைய உதடுகள் மட்டுமல்ல, உள்ளான இருதயமும் கேட்க வேண்டும். அதையும் ஒரு நிச்சயத்தோடு கேட்க வேண்டும். கேட்பதைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று இயேசு கூறியது கீழ்க்கண்டவற்றை அடிப்படையாகக் கொண்டது.

  1. முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தைத் தேட வேண்டும்.
  2. தேவனுடைய தகப்பனுக்குரிய அன்பு, பாசம், நன்மைகளைத் தரும் தன்மை இவற்றை உணர வேண்டும் – மத் 6:8,7:11 யோ 15:16,16:23,26 கொலோ 1:9-12
  3. தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிக்க வேண்டும் – மாற் 11:24 யோ  21:22, 1 யோ 5:14
  4. கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டிருக்க வேண்டும் – யோ 15:7
  5. கிறிஸ்துவுக்குக் கீழ்படிய வேண்டும் – 1யோ 3:22

ஜெபத்தின் அடுத்த நிலை தேடுவது நாம் வைத்திருந்து அதன் பின் இழந்து போனதைத் தேடுவோம். நாம் இழந்து போனதை நினைத்து கர்த்தரைத் தேடும் போது ஆசீர்வாதத்தைப் பெறுவோம். நாம் வேண்டிக்கொள்ளும் சில காரியங்கள் நமது பார்வைக்கு நன்மையானதாகத் தோன்றும். ஆனால் இறுதியில் அவை தீமை விளைவிக்கும் என்று தேவன் அதை அறிந்ததால் அவற்றைத் தரமாட்டார். உலகத்தின் தகப்பன் தன் மகன் அப்பத்தை கேட்டால், மகனுடைய பற்களை உடைக்கும்படியாக கல்லைக் கொடுக்கமாட்டான். அதேபோல் தேவன் தன் பிள்ளைகள் மீனைக் கேட்டால் பாம்பைத் தராமல் மீனைத் தருவார் என்பது உண்மை தான். ஆனால் பாம்பைக் கேட்டால் அதை நிச்சயமாகத் தர மாட்டார். நன்மையானவற்றையே தருவார், நிச்சயமாகத் தருவார் – சங் 34:10,84:11 இவ்வாறு தருவதற்கு மூன்று நிபந்தனைகள் உண்டு. அதற்கு நாம்

  1. தேவனுடைய பிள்ளைகளாக இருக்க வேண்டும்.
  2. வேண்டிக்கொள்ள வேண்டும் – மத்  7:11
  3. விசுவாசத்துடன் கேட்க வேண்டும் –  எபி 11:6 யாக் 1:5-8

அதிகமாக எதிர்பார்ப்பவன் அதிகமாகக் கேட்பான், அதிகமாகப் பெற்றுக் கொள்வான். நம்முடைய பரலோக பிதா தமது பிள்ளைகளை ஒருபோதும் ஏமாற்றமடையச் செய்யமாட்டார் என்று இயேசு வாக்களிக்கிறார். ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் தட்டுவது மூன்றாவது அனுபவமாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு உன்னத அனுபவம். நமது தேவைகளை தேவனால் மட்டுமே சந்திக்க முடியும் என்பதை நாம் உணரும்போது தேவசமூகத்தில் துணிகரமாக நின்று கதவுகளைத் தட்ட தைரியம் கொள்ளுகிறோம். ஆவியானவர் நமக்குத் துணை நின்று நம்மை ஊக்குவிப்பதினால் மட்டுமே, நாம் தேவராஜ்ஜியத்தின் கதவுகளை தட்டும் தைரியத்தைப் பெறுகிறோம்.

உலகத்திலிலுள்ள தகப்பன் தன் பிள்ளைகளை நேசிப்பதைக் காட்டிலும் நம் பரமபிதா தம் பிள்ளைகளை அதிக அன்புடன் நேசிக்கிறாரென்றும் நமக்கு   என்னென்ன தேவையோ அவற்றை அவரிடம் கேட்க வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார். நமக்கு நன்மையானவைகளை நிச்சயமாகத் தருவார் என்றும் இயேசு கூறுகிறார்.

Related Posts