Menu Close

நான்காவது கோபக்கலசம் – வெளிப்படுத்தல் 16:8-9

  1. சூரிய உஷ்ணத்தினால் சேதம்:

வெளிப்படுத்தல் 16 : 8 “ நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.” 

நான்காவது கோபக்கலசம் உற்றப்படும்போது சம்பவிக்கும் காரியங்கள் 8, 9 வசனங்களில் சொல்லப்படுகிறது. மகா உபத்திரவ காலத்தில் ஆண்டவர் சூரியனில் அடையாளங்களை ஏற்படுத்துகிறாரென்று, 

லூக்கா 21 : 25 ல் “சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.”

என்று இயேசு கூறியுள்ளதைப் பார்க்கிறோம். ஏற்கனவே நான்காவது எக்காளம் ஊதப்படும் போது சூரியன், சந்திரன், நட்சந்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு இருளடைந்ததென்று வெளிப்படுத்தல் 8 : 12 ல் பார்த்தோம். மகா உபத்திரவ காலத்தில் சூரியனில் ஏற்படும் மகா உஷ்ணத்தைக் குறித்து “தேசத்தார் தகிக்கப் பட்டார்கள்” என்ற வார்த்தையை, , 

ஏசாயா 24 : 6 ல் “ சாபம் தேசத்தை பட்சித்தது, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார்கள்.” என்று ஏசாயா ஏற்கெனவே கூறியுள்ளார். 

  1. ஜனங்கள் உஷ்ணத்தினால் தேவனை தூஷித்தார்கள்:

வெளிப்படுத்தல் 16 : 9 “அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை;”

மகா அதிகமான வெப்பம் பூமியில் உண்டாகி, அது தாங்கக் கூடாததாக இருந்தபடியால், தேவனை மக்கள் தூஷித்தனர். மனுக்குலத்திற்குத் தேவன் எத்தனையோ தண்டனைகளைத் திரும்பத் திரும்பக் கொடுத்தும் அவர்கள் தேவனுடைய நாமத்தைத் தூஷிக்கத் துணிகிறார்களேயல்லாமல், தேவனை மகிமைப்படுத்தவோ, தாங்கள் மனந்திரும்பவோ மனதில்லாமல் இருக்கிறார்கள். இதைத்தான் ஏசாயா, 

ஏசாயா 42 : 25 ல் “ அவர்களைச்சூழ அக்கினிஜுவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களைத் தகித்தும், அதைமனதிலே வைக்காதே போனார்கள்.” என்றார்.

இஸ்ரவேல் ஜனங்களைத் தேவன் அற்புதமாக எகிப்திலிருந்து விடுதலை செய்து கூட்டி வந்தாலும், வனாந்தரத்தில் பிரயாணப்பட்டு வரும்போது அடிக்கடி அவர்கள் தவறுகிறார்கள். ஒவ்வொரு முறையும் கர்த்தர் அவர்களைத் தண்டிக்கிறார். எத்தனையோ பேர் மரிக்கிறார்கள். திருந்தி வரும் மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லாமற் போயிற்று. 

  1. மனந்திரும்பாத ஜனங்கள்:

வெளிப்படுத்தல் 16 : 11 ல் “ தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.” என்றுள்ளது. 

தேவனுடைய அன்பு, இரக்கம், கிருபை, தயவு ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு தேவனை நேசிக்க முடியாதவர்கள், அவர் கொடுக்கும் வாதைகளினால் அவரை நெருங்குவதில்லை. மனந்திரும்புதல் என்பது இருதயத்தில் உண்டாகும் மனமாற்றத்தைக் குறிக்கிறது. இந்த நாட்களில் தேவனுடைய பிள்ளைகள் பாதுகாக்கப்படுவார்கள். இதைக்குறித்த எச்சரிப்பை, 

மல்கியா 4 : 1 ல் “ இதோ, சூளையைப்போல எரிகிறநாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” 

தேவப் பிள்ளைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுவார்களென்று சங்கீதக்காரன் கூறுகிறான். 

சங்கீதம் 121 : 5 – 8 ல் “ கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.”

வெளிப்படுத்தல் 7 : 16 ல் “வெயிலாவது, உஷ்ணமாவது அங்குள்ளவர்கள் மேல் படுவதுமில்லை” என்று கூறப்பட்டுள்ளது. எனவே நாமும் தேவனிடம் நம்மை அங்கு அழைத்துச் செல்ல மன்றாடுவோம்.

Related Posts