வெளிப்படுத்தல் 16 : 3 “இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.”
இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினபோது சமுத்திரத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் இரத்தமானது (வெளிப்படுத்தல் 8 : 8, 9). ஆனால் இரண்டாவது தூதன் கோபக்கலசத்தை ஊற்றினபோது சமுத்திரம் முழுவதும் பாதிப்படைகிறது. சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின. சமுத்திரத்திலுள்ள தண்ணீரானது செத்தவனுடைய இரத்தத்தைப் போல சிவப்பாயிற்று. எகிப்தில் உண்டான வாதையால் நைல்நதி முழுவதும் இரத்தமானதை யாத்திராகமம் 7 : 20 – 25 ல் பார்க்கிறோம். இதனால் துர்நாற்றம், வியாதிகள் கொள்ளைநோய்கள் உண்டாகும். வேதத்தில் மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறதென்றும், மரணமும் இரத்தத்தில் இருக்கிறதென்றும் கூறுகிறது (லேவியராகமம் 17 : 11). சமுத்திரம் நாம் உயிர்வாழ மிகவும் அவசியமான ஒன்று. இரத்தம் மரணத்தின் அடையாளமாயிருக்கிறது. கடல் ஜீவனின் ஊற்றாக இருப்பதற்குப் பதிலாக, அது மரணத்தின் கல்லறையாக இருக்கிறது. கப்பல் போக்குவரத்து, வியாபாரம், பொருளாதாரம் போன்றவைகள் பாதிக்கப்படுகின்றன. கோபக்கலசங்கள் ஊற்றப்படும்போது உலகளாவிய அழிவு உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.