வெளிப்படுத்தல் 3 : 21 “ நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.”
பிலதெல்பியாவிற்கு தென்கிழக்கில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் லவோ த்திக்கேயா அமைந்திருக்கிறது. மகா அலெக்ஸ்சாண்டருக்கு அடுத்ததாக சிறந்த ராஜாவாகத் திகழ்ந்தவர் அந்தியோகஸ் என்பவர். அவரது மனைவியின் பெயர் லவோதிக்கேயா, கி. மு 250ல் இவர் லவோதிக்கேயா என்ற பெயரில் நகரைக் கட்டினார். இந்த நகரத்தில் எப்பொழுதும் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. கி. பி 61 ல் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் இந்த நகரம் அழிந்தது. இது ஒரு பெரிய ஆடை வடிவமைப்பு மையமாகவும் விளங்கியது. அங்குள்ள ஆடுகளின் ஊதாவும், கருப்பும் கலந்த மிருதுவும் மினுமினுப்புமான மயிர் மிகவும் புகழ் பெற்றது. இது ஒரு மருத்துவ மையமாகவும் விளங்கியது. இங்கிருந்த மருத்துவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்களாக இருந்தனர். அன்று உலகப் பிரசித்தி பெற்ற இரண்டு லவோதிகேயா மருந்துகள் உண்டு. அதில் ஒன்று காதுக்கானக் மருந்தும், மற்றொன்று கண்ணுக்கான மருந்தும்தான். இன்று இந்தப் பட்டணம் எஸ்கிஹிஸார் என்று அழைக்கப்படுகிறது. பவுல் முதன்முதலில் கிறிஸ்தவ சபை தொடங்கினது இங்கு தான். கொலோசேயருக்கு எழுதப்பட்ட நிருபம் இங்கிருந்துதான் எழுதினார் (கொலோசெயர் 2 : 1).
லவோதிக்கா சபைக்கு இயேசு தன்னை உண்மையும், சத்தியமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிகளுக்கு ஆதியுமாயிருக்கிறவர் என்று கூறுகிறார் (3 : 14). ஏற்கனவே வெளிப்படுத்தல் 1 : 5 ல் உண்மையுள்ள சாட்சியென்றும், 3 : 7 ல் சத்தியமுள்ளவர் என்றும் அழைக்கப்பட்டார். ஆனால் இந்த சபையில் உண்மையும், சத்தியமும் இல்லையென்பது மறைமுகமாக கூறப்பட்டுள்ளது. தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமானவர் என்பது சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. என்பதாகும். ஆமென் என்ற எபிரேய வார்த்தை உண்மையானது, மாறக்கூடாதது என்று பொருள்படும். 3 : 15 ல் நீ குளிருமல்ல அனலுமல்ல என்று நேரடியாகக் குற்றம் சாட்டுகிறார். இந்த வார்த்தை கிறிஸ்துவின் எதிர்பார்ப்பையும், ஏக்கத்தையும், அங்கலாய்ப்பையும் வெளிப்படுத்துகிறது. இது அந்த சபையின் ஆவிக்குரிய நிலையைக் குறிப்பிடுகிறது. வெதுவெதுப்பான சபை என்பது உலகத்துடன் இணைந்து சூழ்ந்துள்ள சமுதாயத்தைப் போலவே காணப்படும். விசுவாசம், நற்செயல்கள், தேவனுக்கென்று உறுதியாயிருத்தல் போன்ற யாவற்றிலும் அரைகுறையாக உற்சாகமிழந்து இருப்பதை அனலுமின்றி, குளிருமின்றி இருப்பதாக இப்பகுதி கூறுகிறது.
இவ்வாறு இருப்போர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் (3 : 15, 16). குளிராக இருப்பவர்கள் தேவனை அறியாதவர்கள். அவர்கள் தேவனை அறிந்தபோது அனலாகிறார்கள். சகேயு காட்டாத்தி மரத்திலிருந்து இயேசுவைக் கண்டவுடன் அனலாகிறான். லவோதிக்கேயா சபையார் சத்தியத்தை அறிந்தவர்களாயிருந்தும், அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளாததால் அவர்களுடைய ஆவிக்குரிய நிலை வெதுவெதுப்பானது. இந்தப் பட்டணத்தில் வெதுவெதுப்பான நீரைச் சுரக்கும் நீறுற்று இருந்ததாகவும் அது உபயோகப்படுத்தக் கூடாத நிலையிலிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சபை குளிருமின்றி அனலுமின்றி இருப்பதால் வாந்தி பண்ணிப் போடுவேன் என்று இயேசு கூறுகிறார். அவர்கள் கிறிஸ்துவை அறிந்திருந்தும் அவரை ஆண்டவராக ஏற்றுக்கொள்ளாததினால் வாந்தி பண்ணிப் போடுவேன் என்று இயேசு எச்சரிக்கிறார். துருக்கிக்குச் சொந்தமான இந்த இடத்தை தேவன் கூறியதுபோல வாந்தி பண்ணிப் போட்டதால் இன்று இங்கு கிறிஸ்தவர்கள் ஒருவரும் இல்லை.
வெளிப்படுத்தல் 3 : 17 ல் சபையானது நிர்பாக்கியமுள்ளவனாகவும், பரிதபிக்கக் கூடியவனாகவும், தரித்திரனாகவும், குருடனாகவும், நிர்வாணியாகவும் இருந்தாலும் அவர்கள் தங்களை ஐசுவரியவானாகவும், திரவிய சம்பன்னராகவும், ஒரு குறைவும் இல்லாதவர்களென்றும் கூறுவதாகக் கூறுகிறார். 3 : 18 ல் சபையின் ஆவிக்குரிய தரித்திரம் நீங்க புடமிடப்பட்ட பொன்னை கிறிஸ்துவிடம் வாங்க வேண்டுமென்றும், சபையின் நிர்வாணமாகிய அவலட்சணம் மறைக்கப்பட கிறிஸ்துவிடமுள்ள வெண்வஸ்திரத்தை வாங்கிக் கொள்ள வேண்டுமென்றும், சபை பார்வையடைவதற்கு கலிங்கம் போடவும் கிறிஸ்து ஆலோசனை தரு கிறார். புடமிட்ட பொன் என்பது பரிசோதிக்கப்பட்ட விசுவாசத்தையும் (1பேதுரு 1 :7), வெண்வஸ்திரம் என்பது தேவன் அளிக்கும் இரட்சிப்பையும், நீதியையும், (ஏசாயா 61 : 10, வெளிப்படுத்தல் 19 : 8), கலிங்கம் போடுதலென்பது வேதத்தினாலும், ஆவியினாலும் தேவனைப் பற்றிய அறிவு பெறுதலையும் (சங்கீதம் 19 : 7,8, எபேசியர் 1 : 17 – 19, 1யோவான் 2 : 27) குறிக்கின்றன. இந்த மூன்று காரியங்களையும் சபைக்கு ஆலோசனையாக மட்டுமே இயேசு தருகிறார். சபைக்கு எந்தக் கட்டளையும் கொடுக்கப்படவில்லை.
முந்தின சபைகளில் காணப்பட்ட எந்தத் தவறுகளும், பாவங்களும் இந்த சபையில் சொல்லப்படவில்லை. என்றாலும் இந்த சபையைக் குறித்து இயேசு மிகவும் அதிர்ப்தியடைந்தவராகக் காணப்படுகிறார். இரட்சிப்பின் செய்தியைக் கேட்கும் அநேகர் மனந்திரும்பாமலும், இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கின்றனர். மனம் திரும்பும்படி அழைக்கும் பொழுது ஏற்றுக் கொள்ளாதவர்களைக் கர்த்தர் சிட்சைகள் மூலம் அழைத்துக் கொண்டிருக்கிறார். முதலாவது அழைக்கும்போதே மனம் திரும்புகிறவர்களுக்கு சிட்சைகள் இல்லை (3 : 19). இயேசு தம்முடைய பரிசுத்தத்துக்குப் பங்குள்ளவர்களாகும்படி நம்முடைய பிரயோஜனத்துக்காகவே சிட்சிக்கிறார். “ஜாக்கிரதையாய் மனந்திரும்பு” என்ற எச்சரிக்கை இந்த ஒரு சபைக்கு மட்டுமே கூறுகிறார். சிட்சையைக் குறித்த விளக்கம் எபிரேயர் 12 : 6 – 11 ல் பார்க்கிறோம். 3 : 20ல் வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறேன் என்று பரலோகத்தில் குத்துவிளக்குகளின் மத்தியில் உள்ள சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவர் கூறுகிறார். தட்டுங்கள் திறக்கப்படுமென்று யோவான் 10 : 7 ல் சொன்ன இயேசு நம்முடைய கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார். யாராவது தன்னுடைய அடைக்கப்பட்ட அவர்களுடைய இருதயத்தைத் திறந்து தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்று ஆர்வத்தோடு காத்திருந்து தட்டிக் கொண்டிருக்கிறார்.
உன்னதப்பாட்டு 5 : 2 ல் “நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.”
ஒருவன் அவருடைய சத்தத்தைக் கேட்டுக் கதவைத் திறந்தால் அவனிடத்தில் பிரவேசிப்பதாக கூறுகிறார். பாவம், அறியாமை, அவிசுவாசம் ஆகியவைகள் கிறிஸ்து ஒருவனுக்குள் பிரவேசிக்கக்கூடாதபடி தடை செய்யும் கதவுகள். அவர் கதவைத் தட்டுவதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்றால் வேத வார்த்தையின் மூலமாக நம்மோடு பேசுவார். தோல்வி, நஷ்டம், போன்ற நிகழ்ச்சியின் மூலமாகவும் நம்மோடு பேசுகிறார். அந்த சத்தத்தைக் கேட்டுக் கதவைத் திறக்கும்போது அவர்களோடு போஜனம் பண்ணுவேன் என்கிறார். லவோதிக்கேயா சபை தனது சுய நிறைவான செழிப்பினாலும், உலக சிநேகத்தாலும் இயேசு கிறிஸ்துவை சபை மக்களின் நடுவினின்று அகற்றி விட்டது. வாசலின் வெளியில் அழைக்கும் கிறிஸ்துவின் அழைப்பின் சத்தமானது, சபையின் வெதுவெதுப்பிலிருந்து மனந்திரும்பி வருகின்ற மனிதனுடன் ஐக்கியம் கொள்ள வாஞ்சிக்கும் தொனியாகும்.
பிதாவாகிய தேவன் தன்னுடைய ஒரே குமாரன் ஜெயங்கொண்டதின் விளைவாக தன் சிங்காசனத்தில் தன்னோடுகூட உட்கார வைத்ததுபோல, கிறிஸ்துவும் ஜெயங்கொள்ளுபவர்களை தன்னுடைய சிங்காசனத்தில் தன்னோடுகூட உட்கா ரச் செய்வார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே ஜெயம் கொண்ட முதல் மனிதர். யோவான் 16 : 33 ல் “நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று இயேசு அறிக் கையிடுகிறதைப் பார்க்கிறோம். இதுவரை இதுபோல் யாரும் சொன்னதில்லை. உலகத்தில் இயேசு ஜெயம்கொள்ளாத காரியம் எதுவுமில்லை. மரணத்தின் அதிகாரியான பிசாசானவனைத் தமது மரணத்தினால் ஜெயித்தாரென்று எபிரேயர் 2 : 14 ல் பார்க்கிறோம். மேலும் எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும் (எபிரேயர் 4 : 15) அவைகளெல்லாவற்றிலும் ஜெயங் கொண்டார். இயேசு கிறிஸ்து தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு ஏற்கனவே வாக்களித்தார். அது என்னவென்றால்,
மத்தேயு 19 : 28 “அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
நாம் இன்று ஜெயங்கொள்ளுகிறோமென்றால் அந்த ஜெயம் கிறிஸ்துவுக்குள் அடங்கியிருக்கிறது. இதைத்தான் யோவான் தன்னுடைய 1 யோவான் 4 : 4 ல் “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” என்றார். இதில் நம்முடைய ஜெயம் அடங்கியிருக்கிறது. கிறிஸ்துவின் ஜெயம் நம்முடையதாயிருக்கிறது. “நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளு கிறவர்களாயிருக்கிறோம். இதுவரை நாம் பார்த்ததுபோல் நாம் ஒவ்வொரு வரும் ஜெயங்கொண்டு ஜீவவிருட்சத்தின் கனியைப் பெற்று, இரண்டாம் மரணத்தின் மேல் வெற்றி பெற்று, மறைவான மன்னாவையும், வெண்மையான குறிக்கல்லையும் பெற்று, ஜாதிகளின் மேல் அதிகாரம் பெற்று, வெண் வஸ்திரம் தரித்து, ஆலயத்தில் தூணாக நிறுத்தப்பட்டு, ஜீவ புத்தகத்தில் நம்முடைய பெயர் எழுதப்பட்டு, இயேசுவோடுகூட அமரப் பாடுபடுவோம். ஆமென்.