Menu Close

நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கு தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பு

தானியேல் 4 : 29 – 31 “ 12 மாதம் சென்றபின்பு ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக் கொண்டிருக்கும்போது:

“இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.”

“இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னை விட்டு நீங்கிற்று.”

நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கு எச்சரிப்பு கொடுத்து, ஒரு வருடம் தேவன் தவணையும் கொடுத்தார். ஆண்டவர் யாருக்கும் எச்சரிப்பு கொடுக்காமல் ஒரு காரியமும் செய்வதில்லை. ஒரு வருடத்திற்குப் பின்பும் ராஜா மனந் திருந்தாமல், தன் இருதயத்தைக் கடினப்படுத்தினார். ராஜா தன்னுடைய அரண்மனையின் மேல் மாடியில் உலாவிக் கொண்டிருக்கும் போது, பாபிலோனைப் பார்த்து பெருமையாக “நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா” என்று கூறினான். அந்த வார்த்தை வாயிலிருக்கும் போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது, “ராஜாவின் ராஜ்யபாரம் நீங்கிற்று” என்று உரைத்தது. அந்த நிமிஷத்திலே தேவன் அவனை அடித்ததால், அரண்மனையில் ஆட்சி செய்த அந்த மன்னன் காட்டில் அலைந்து திரியும் மிருகத்தைப் போல் மாற்றப்பட்டு பைத்தியக்காரனானான். ஆகாயத்துப்பனியில் நனைந்து பயங்கரமான தண்டனையை அனுபவித்தான். ராஜாவுக்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் தேவனுடைய கிருபை என்று அப்பொழுது அவனுக்குத் தெரியவில்லை. நியாயத்தீர்ப்பின் பரம அதிகாரத்தை அறியும் வரை ராஜாவுக்கு இந்த நிலை நீடித்தது. ராஜாவின் பெருமையால் இது நடந்தது. லூசிபரின் பெருமையால் பரலோகத்திலிருந்த அவனை நரகத்தில் தேவன் தள்ளியதைப் போல ராஜாவையும் மிருகமாக மாற்றியது. “தேவன் பெருமை உள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் தாழ்மை உள்ளவர்களுக்கும் கிருபை அளிக்கிறார்” என்று யாக்கோபு 4 : 6லும், 1பேதுரு 5 : 5 லும் பார்க்கிறோம்.

ஏழு வருடத்திற்கு பின் நடந்தது: 

தானியேல் 4 : 34, 36, 37 “அந்த நாட்கள் சென்ற பின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.”

“அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பி வந்தது; என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடி வந்தார்கள்; என் ராஜ்யத்திலே நான் ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது.”

“ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.”

ராஜாவின் பயங்கரமான ஏழு ஆண்டுகள் நிறைவேறிய பின்பு தன்னுடைய கண்களை பரலோகத்திற்கு நேராக ஏறெடுத்து, மனந்திரும்பிய போது, ராஜாவின் புத்தி திரும்ப வந்தது. கர்த்தரை ஸ்தோத்தரித்தான். தேவனுடைய சமூகத்தில் தன்னை ஒப்புக் கொடுத்தான். தேவனைப் புகழ்ந்தான். மகிமைப் படுத்தினான். தன்னுடைய எல்லா காரியங்களையும் அர்ப்பணித்தான். தேவனுடைய பரம அதிகாரத்தை அறிந்த பின்புதான், ராஜாவின் புத்தி திரும்ப வந்தது. தேவன் மந்திரிமார்களும், பிரபுக்களும் அவனைத் தேடிவரச் செய்தார். ராஜா தன்னுடைய வாயால் தேவனுடைய கிரியைகள் அனைத்தும் சத்தியமாயிருக்கிறது என்றும், அவருடைய வழிகள் அனைத்தும் நியாயமான வழிகள் என்றும் கூறினார். அகந்தையாய் நடக்கிற யாராக இருந்தாலும் தாழ்த்த அவராலே ஆகும் என்று சாட்சியாக எழுதினார்.

Related Posts