Menu Close

தானியேல் பார்த்த முதல் தரிசனம்

தானியேல் ஏழாம் அதிகாரத்தில் ஏழு அரசாங்கத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

  1. பாபிலோன் அரசாங்கம் 
  2. மேதிய அரசாங்கம் 
  3. பெர்சிய அரசாங்கம் 
  4. கிரேக்க அரசாங்கம் 
  5. ரோம அரசாங்கம் 
  6. அந்திகிறிஸ்துவின் அரசாங்கம் 
  7. இயேசு கிறிஸ்துவின் அரசாங்கம். 

இதில் நிகழ்காலம், வருங்காலம், எதிர்காலத்தைப் பற்றி கூறப்பட்டுள்ளது. நேபுகாத்நேச்சாருக்கு தேவன் இரண்டு சொப்பனங்களைக் காண்பித்தார், அதில் முதல் சொப்பனத்தில் ராஜ்யங்களை உலோகத்தை ஒப்புமைப்படுத்தியும் இரண்டாவது சொப்பனத்தில் ராஜ்யங்களை விருக்ஷங்களுக்கு ஒப்புமைப்படுத்தியும் காட்டினார். இங்கு தானியேலின் சொப்பனத்திலே ராஜ்யங்களை மிருகங்களுக்கு ஒப்புமைப்படுத்திக் கூறுகிறார். தானியேல் புத்தகத்தில் தானியேலுக்கு நான்கு தரிசனங்களைக் கொடுத்தார். இவைகளையெல்லாம் ஆவியானவர் எழுதி கடைசி காலம் வரை முத்திரை போடு என்றார். ஆனால் வெளிப்படுத்தலில் யோவானிடம் முத்திரை போடாதே என்றார். இருவரும் அவர்கள் தேசத்தில் இருக்கும் போது தரிசனங்களைக் காணவில்லை. தானியல் சொப்பனத்திலும், தரிசனத்திலும் கண்டு எழுதினார். யோவான் அப்படியல்ல ஆவிக்குள்ளாகி எழுதினார்.

தானியேல் தரிசனம் கண்ட காலமும், இடமும்:

தானியேல் 7 : 1 “பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான்.”

தானியேல் இந்தத் தரிசனத்தைக் கண்ட ஆண்டு பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷம் என்று சரித்திரப் பின்னணியோடு கூறப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். பெல்ஷாத்சார் கொலை செய்யப்படுவதற்கு முன்பு தானியேல் இந்தத் தரிசனத்தைக் கண்டார். இந்தத் தரிசனத்தைக் காணும் போது தானியேலுக்கு வயது 75. இது பாபிலோனின் பொன்னான காலம். யூப்ரடீஸ் நதி பாபிலோன் பட்டணத்துக்குள் வந்தபோது, பெல்ஷாத்சார் ராஜா தான் பாபிலோனை ஆண்டு கொண்டிருந்தான். தானியேல் இதில் ஒரு சொப்பனத்தையும், தரிசனங்களையும் கண்டான். இது தான் தானியேலுக்கு முதல் முதலாக வந்த வெளிப்பாடு. நேபுகாத்நேச்சார் சொப்பனத்தைக் கண்டான். அது அவனுடைய வருங்காலத்தைப் பற்றி அவன் அறிய காட்டப்பட்டது. அதன் விளக்கத்தை அந்த நாட்டிலிலுள்ள ஞானிகளாலும், ஜோசியராலும் விளக்க முடியவில்லை. தானியேல் தான் அதை ராஜாவுக்கு தேவன் அவனுக்கருளின ஞானத்தினால் விவரித்தான். மேலும் சொப்பனத்தைத் தானியேல் எழுதி அதன் விவரங்களை தெரிவித்தான் என்று உள்ளதால், எழுதுவதற்கு கூட தானியேலுக்கு நேரம் இருந்திருக்கிறதென்பதை அறிகிறோம்.

காற்றும், சமுத்திரமும்:

 தானியேல் 7 : 2, 3 “தானியேல் சொன்னது: இராத்திரிகாலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது.”

“அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.” 

தானியேல் கண்ட தரிசனத்தில் வானத்திலிருந்து நான்கு விதமான காற்றுகள் நான்கு திசைகளிலுமிருந்து வந்து பெரிய சமுத்திரத்தின் மேல் அடித்ததையும், அந்த சமுத்திரத்திலிருந்து நான்கு பெரிய வெவ்வேறு மிருகங்கள் எழும்பியதையும் பார்த்தான். இந்த மிருகங்கள் எல்லாமே பல்வேறு ஜனக் கூட்டங்கள், பல்வேறு மொழி பேசுகிறவர்கள், பல்வேறு இடங்களிலிருந்து உண்டான நான்கு ராஜ்யங்களைக் குறிக்கிறது. இந்தக் காற்று வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளாகும். இதில் காற்று, சமுத்திரம், மிருகங்கள் என்பதெல்லாம் அடையாளங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. 

காற்று என்பது யுத்தம், புரட்சி, குழப்பம், போராட்டம் போன்ற பலவிதமான காரியங்கள் சமுதாயத்தில் ஏற்படுவதன் விளைவாக ஒரு அரசு தோன்றப் போகிறதென்பதைக் குறிக்கிறது. 

சமுத்திரம் என்பது தண்ணீர். அது திரளான ஜனக்கூட்டம் என்றும், சமுதாயம் என்றும், நாடுகள் என்றும் வெளிப்படுத்தலில் கொடுக்கப்பட்டுள்ளது (17 : 1, 15). அதனடிப்படையில் போர் போன்ற காரியங்கள் சமுதாயத்தில் ஏற்படும்.

கழுகின் செட்டைகளுள்ள சிங்கம்: 

தானியேல் 7 : 4 “முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது; மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.”

தானியேல் சிங்கத்தைப் போன்ற ஒரு மிருகத்தைப் பார்க்கிறான். ஆனால் அதற்குச் செட்டைகள் இருப்பதையும், அந்தச் செட்டைகள் கழுகின் செட்டைகளைப் போல் இருப்பதையும் பார்த்தான். இந்த சிங்கமானது பாபிலோனையும், அதிலுள்ள கழுகுகளின் சிறகுகள் முக்கியமாக நேபுகாத்நேச்சாரையும் குறிப்பதாக உள்ளது. சிங்கம் என்பது மிருகங்களின் ராஜா, கழுகு என்பது பறவைகளின் ராஜா. சிங்கம் என்பது நேபுகாத்நேச்சாரின் வெறித்தனத்தையும், கழுகு என்பது நாடுகளோடு நாடுகளைச் சேர்த்த அவனுடைய வேகத்தையும் குறிக்கிறது. நேபுகாத்நேச்சார் தனது படைகளைத் துரிதமாக கொண்டு செல்லும் திறமை உடையவனாக இருந்தான். தானியேல் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அதனுடைய செட்டைகள் பிடுங்கப்பட்டது என்று உள்ளது. இது நேபுகாத்நேச்சார் பைத்தியக்காரனாகி தான் யார் என்று தெரியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு மிருகத்தைப் போல புல்லைத் தின்றதைக் குறிக்கிறது. அவன் பழைய நிலைமைக்குத் திரும்பி ஏழு வருடத்திற்குப் பின், மிருகமாக இருந்த நிலைமாறி உணர்வுள்ள இருதயமான மனுஷ இருதயம் அவனுக்குக் கொடுக்கப் பட்டதைச் சொல்கிறது. இது நேபுகாத்நேச்சாரின் மனந்திரும்புதலைக் குறிக்கிறது. ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரை அவன் அறிந்து கொண்டான். சிங்கம் நேபுகாத்நேச்சார் கண்ட பொன்னான தலையாகிய பாபிலோனை சுட்டிக்காட்டுகிறது. இன்று அது பாழடைந்து கிடக்கிறது.

சாய்ந்து நின்ற கரடி: 

தானியேல் 7 : 5 “பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாய்ச் சாய்ந்துநின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது; எழும்பி வெகு மாம்சம் தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது.”

தானியேல் பார்த்த கரடியானது மேதிய பெர்சிய ராஜ்ஜியங்களைக் குறிக்கிறது. இது நேபுகாத்நேச்சார் கண்ட வெள்ளியிலான பகுதியாகும். இந்தக் கரடி ஒரு பக்கம் சாய்ந்து நிற்பதைத் தானியேல் பார்த்தான். இது எதைக் குறிக்கிறதென்றால், ஒரு நாடு மற்ற நாட்டை விட பெரிதாக இருந்தது. மேதிய சாம்ராஜ்யம் முதலாவது வந்தாலும், இரண்டாவது வந்த பெர்சிய சாம்ராஜ்யம் முதலாவதை விட பெரிதானது. இதில் ஒன்று பலமானதாயும், ஒன்று பலமில்லாததாயும் இருந்தது. மேதிய சாம்ராஜ்யத்தை ஆண்டவன் தரியு. அவருடைய மருமகனான கோரேஸ் தான் பெர்சிய சாம்ராஜ்யத்தை ஆண்டான். இவர்கள் இருவரும் சேர்ந்து தான் பாபிலோனைக் கைப்பற்றினர். ரஷ்ய தேசத்தின் சின்னம் கரடி. இது ரத்தவெறி கொண்ட மிருகம். மற்றவர்களை தாக்கும் தன்மை உடையது. இதன் வாயில் மூன்று எலும்புகளை கவ்விக் கொண்டிருப்பது எதைக் குறிக்கிறது என்றால், அந்த நாட்களில் காணப்பட்ட மூன்று முக்கிய ராஜ்ஜியங்களை அழிப்பதைக் குறிக்கிறது. அதாவது பாபிலோன், லிதியா, எகிப்து. இந்த கரடிக்கு இறகுகள் இல்லை. ஆனாலும் எழும்பி மாம்சத்தைத் தின் என்று சொல்லப்பட்டது. கோபமான கரடியைப் போல மேதிய பெர்சிய ராஜ்யத்தின் படையானது குடும்பங்களோடு கூட தீவிரித்துச் சென்றது. 3 லட்சம் ஜனங்களோடும், 300 கப்பல்களோடும் கிரேக்க மன்னனுக்கு எதிராகப் படையெடுத்துச் சென்று தோல்வி கண்டது. அவர்களுடைய கப்பல் படையானது கிழக்கத்திய, மேற்கத்திய நாடுகளை மேற்கொள்ளாதபடி புயலினால் அழிக்கப்பட்டது..

சிவிங்கியைப் போன்ற மிருகம்: 

தானியேல் 7 : 6 “அதின் பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின்மேல் பட்சியின்செட்டைகள் நாலு இருந்தது; அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது; அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.”

அடுத்தாற்போல் தானியேல் சிவிங்கி போலிருக்கிற வேறு ஒரு மிருகத்தைக் கண்டான். உதவியற்ற இரையின்மேல் திடீரென்று பாய்வது சிவிங்கி. இது மேதிய பெர்சிய ராஜ்யத்தின் மீது திடீரென்று வந்து மேற்கொண்ட கிரேக்க சாம்ராஜ்யத்தை ஆண்ட அலெக்ஸாண்டரைக் குறிக்கிறது. 35000 ராணுவ வீரர்களை வைத்துக் கொண்டு அன்றைக்கிருந்த எல்லாத் தேசங்களையும் கைப்பற்றினான். மேதிய பெர்சிய ராஜ்ஜியம் முடிவடையும் போது, அங்கு ஏறக்குறைய 3 லட்சம் வீரர்கள் இருந்தனர். அந்த 3 லட்சம் வீரர்களையும் அலெக்ஸ்சாண்டரிடமிருந்த 35,000 வீரர்கள் ஜெயம் கொள்ளும்படி ஆண்டவர் அவனைப் பலப்படுத்தினார். பட்சியின் நான்கு செட்டைகள் மிகத் தீவிரமாக எந்த திசையிலும் படையை நடத்திச் செல்லும் அவரது திறமையைக் காட்டுகிறது. சிவிங்கிக்குள்ள நான்கு தலையானது மகா அலெக்சாண்டருக்குப் பின் அவருடைய ராஜ்ஜியம் நான்கு ராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்பட்டது. அவருடைய இராணுவத் தலைவர்கள் நாலு பேரும் அதைப் பங்கு போட்டனர்.

கெடியும், பயங்கரமுமான மிருகம்:

தானியேல் 7 : 7 “அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.”

இந்த மிருகமானது வேற்றுருவமாகவும், பத்து கொம்புகளை உடையதாகவும், கெடியும் பயங்கரமும், மகாபலத்ததுமாயிருந்ததை தானியேல் பார்த்தான். இந்த மிருகம் ரோம சாம்ராஜ்ஜியத்தைக் குறிக்கிறது. இதை ஆண்டவர்களில் முக்கியமானவர் ஜூலியஸ்சீசர். இவர் தான் கிரேக்க சாம்ராஜ்ஜியத்தை முற்றிலும் அழித்தவர். ரோம சக்கரவர்த்திகள் பின்னாட்களில் மூர்க்கத்தனமாக மாறினார்கள். அவர்கள் தெய்வத்தைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்கக் கூடாது என்ற சட்டத்தைப் பிறப்பித்தனர். இதை கிறிஸ்தவர்கள் மறுத்ததினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டனர். இது அதிலுள்ள இரும்புப் பல்லைக் குறிக்கிறது. கிபி 70 ஆம் ஆண்டு தீத்துராயன் படையெடுத்து தேவாலயத்தை தரைமட்டமாக்கினான். யூதர்களை வெட்டிக் கொன்றான். ஒரே நாளில் லட்சக்கணக்கான யூதர்கள் மரித்தனர். உபத்திரவம் அதிகமானதால் சபை சிதறுண்டு போனது. சிதறுண்டதால் அவர்கள் போகிற இடங்களிளெல்லாம் இயேசுவைப் பற்றி பிரசங்கித்தனர். உபத்திரவம் வராவிட்டால் அவர்கள் எருசலேமிலே இருந்திருப்பார்கள். அதன்பின் நீரோ என்ற அரசன் வந்தான். அவன் கிறிஸ்தவர்களைப் போகும் போதும், வரும்போதும் ஆயிரம் ஆயிரம் பேராக நிறுத்தி வைத்து தலையில் தார் ஊற்றி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பான். 

ரோம சாம்ராஜ்ஜியத்திற்குப் பின்: 

எனவே அவர்களை இரட்சியும் என்று ஜெபம் பண்ணினார்கள். அதன்பின் வந்தவன்தான் கான்ஸ்டாண்டிநோபிள். இவர் மூலமாகத்தான் ரோமன் கத்தோலிக்க சபை உருவானது. அவருக்குப் பின் ரோம சாம்ராஜ்யம் மங்கி ஜனங்களோடு ஜனங்களாக ஆனது. ஆனால் அதனுடைய வேர் இருந்தது. அதன்பின் யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா என்று பல அமைப்புகள் சேர்ந்தது. அதேபோல் யுனைடெட் கிங்டம் என்றும் பல அமைப்புகள் சேர்ந்தது. இவைகள் இரும்பும் களிமண்ணும் கலந்த ஆட்சியைப் போல ஒன்றுக்கொன்று ஒட்டாமல் இருந்தது. இந்தியாவில் ஏழு நாடுகள் சேர்ந்து சார்க் அமைப்பு தோன்றியது. அதேபோல் காமன்வெல்த் நாடுகளில் 22 தேசங்கள் சேர்ந்து கூட்டாட்சி வந்தது. இவைகள் வந்தபின் முடிவுண்டாகும் என்று தேவன் சொல்லுகிறார். தானியேல் பார்த்த இந்த மிருகம் மற்ற மூன்று மிருகங்களைக் காட்டிலும் வித்தியாசமானதாக இருந்தது. இந்த நாலாவது மிருகத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாமும் இந்த நாலாவது மிருகத்தின் காலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பத்து கொம்புகளைக் குறித்து வேதத்தில் வேறு எந்த இடத்திலும் கூறப்படவில்லை. இப்பொழுது வெளிப்படத் துவங்கியிருக்கிறது. அந்த மிருகமானது பயங்கரமான இரும்பு பற்களுடன் காணப்பட்டது. இது நேபுகாத்நேச்சாரின் சிலையில் காணப்பட்ட இரும்பிலான கால்களைக் குறிப்பதாக உள்ளது. 

மீண்டும் உருப்பெறும் ரோமராஜ்ஜியம்:

1000 வருட அரசாட்சியின் காலத்தில், ரோம சாம்ராஜ்யம் மீண்டும் தலைதூக்கும். ரோம சாம்ராஜ்ஜியம் விழுந்து போயிருந்தாலும் அது இந்நாட்களிலும் ஐரோப்பாவின் பல தேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. மத்தியதரைக்கடலின் சுற்றிலும் வாழ்கிறது. தானியேல் தரிசனத்தில் காணப்பட்ட வழக்கத்திற்கு மாறான மிருகம் நேபுகாத்நேச்சார் கண்ட சிலையின் பாதத்திற்கு ஒப்பானதாக இருக்கிறது. இதில் இந்த ராஜ்யம் எப்படி ஆரம்பமானது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், அதனுடைய முடிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது பத்து கொம்புகளின் காலம் குறிப்பிடப்படுகிறது. இது எல்லாவற்றையும் மிதித்துப் போட்டு பயங்கரமான கொடுங்கோல் ஆட்சி நடத்தியது. ரோம வரலாற்றைப் படிக்கும் போது தனிப்பட்ட மனிதர்களுக்கும், சமுதாயத்துக்கும், ஆண்டவருக்கும் விரோதமான காரியங்கள் நிகழ்ந்ததைப் பார்க்கிறோம். இந்த நாலாவது மிருகம் ஏன் முக்கியமானதென்றால் அது இன்னும் நிறைவேற வேண்டிய தரிசனமாக இருக்கிறது. தானியேல் கண்ட மூன்று மிருகங்களின் காலமும் நிறைவேறி விட்டது. இந்த தரிசனத்தில் கூறப்பட்ட நான்கில் மூன்று பகுதி தீர்க்கதரிசனம் நிறைவேறி விட்டது. கொம்புகள் பற்றிய தீர்க்கதரிசனம் நிறைவேறப்போகிறது ரோமராஜ்யம் விழுந்தாலும் மீண்டும் பத்து ராஜ்யங்களாக உருப்பெறும். அது அந்திகிறிஸ்து என்பவனால் ஒருங்கிணைக்கப்படும். 

சின்ன கொம்பு:

தானியேல் 7 : 8 “அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தினகொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷகண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவகளைப் பேசும் வாயும் இருந்தது.”

இந்த சின்னக் கொம்பானது நாலாவது மிருகத்தின் தலையில் இருந்து முளைத்து எழும்புகிறது. மூன்று கொம்புகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஒரு கொம்பு எழும்புகிறது. இது கடைசி காலத்தில் வரும் அந்திகிறிஸ்துவைக் குறிக்கிறது. இங்கு மூன்று கொம்புகள் பிடுங்கப்பட்டதென்பது மூன்று ராஜ்ஜியங்கள் அந்திகிறிஸ்துவோடு சேர மாட்டோம் என்று கொஞ்ச காலம் விலகுவார்கள். இந்தக் கொம்பில் மனுஷர் கண்களைப் போன்ற கண்களும், பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. அந்திகிறிஸ்து தந்திரமாக யூதர்களை தன் கைக்குள்ளாக்குவான். இவன் இஸ்ரவேல் தேசம் இருக்கிற மத்திய தரைக் கடலிலிருந்து தான் எழும்புவான். இவன் கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிப்பான்.

நீண்ட ஆயுசுள்ளவர்:

தானியேல் 7 : 9 “நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது”

தானியேல் தன்னுடைய தரிசனத்தில் தேவனுடைய சிங்காசனத்தைப் பார்க்கிறான். இதை நாம் வெளிப்படுத்தல் 4 : 4, 5 லும் பார்க்கிறோம். இது மகா உபத்திரவ காலத்திற்குப் பின் வரும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் ஆயத்தத்தைக் குறித்தும் பேசுகிறது. நீண்ட ஆயுசுள்ளவர் என்பது நித்தியமான தேவனைக் குறிக்கிறது. அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போல் இருக்கிறதென்பது, அவருடைய குணநலமான பரிசுத்தத்தையும், நீதியையும் குறிக்கிறது. அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும், பஞ்சைப் போல துப்புரவாகவும் இருந்ததென்பது அவரது அளவிடமுடியாத ஞானத்தைக் குறிக்கிறது. அவருடைய சிங்காசனம் அக்கினி ஜுவாலையாய் இருந்ததென்பது நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. அதின் சக்கரங்கள் எரிகின்ற நெருப்பைப் போலிருந்ததென்பது எசேக்கியேல் 1 : 13 — 21ல் கூறியது போல எதிர்த்து நிற்க முடியாத அவருடைய வல்லமையை குறித்துப் பேசுகிறது.. 

1000 வருட அரசாட்சியும், அந்திகிறிஸ்துவின் அழிவும்:

தானியேல் 7 : 10, 11, 13, 14 “அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.

“அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துகொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.” 

“இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.”

“சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.”

இந்த வசனங்கள் உபத்திரவ காலத்துக்குப் பின் வரும் ஆயிரம் வருட அரசாட்சியைக் குறித்துப் பேசுகிறது. பரலோகத்தில் தேவனை ஆயிரம் ஆயிரம் பேர் சேவிப்பார்கள் கோடானுகோடி பேர்கள் அவருக்கு முன்பாக நிற்பார்கள். அக்கினி நதியானது அவருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டது. நியாயத்தீர்ப்புக்கான புத்தகங்கள் திறக்கப்பட்டது. பூமியிலே இந்த சிறிய கொம்பான அந்திகிறிஸ்து தேவனுக்கு விரோதமாக தேவதூஷணம் பேசியதால் அவன் அழிக்கப்பட்டு. எரிகிற அக்கினியில் தள்ளப்படுவான். இது இறுதி கட்ட நியாயத்தீர்ப்பைக் குறித்துப் பேசுகிறது. இயேசு அரசாள வருவதற்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு தான் இந்த சின்னக் கொம்பு எழும்பும். இதில் தானியேல் தன்னுடைய தரிசனத்தில் பார்த்த மனுஷசாயலான ஒருவர் என்பது மேசியாவைக் குறிக்கிறது. மேசியாவானவர் நீண்ட ஆயுசுள்ளவர் மட்டும் கொண்டு வரப்பட்டார். கர்த்தத்துவமும், மகிமையும், ராஜரீகமுடயவரை சகல ஜனங்களும் சேவித்தனர். கிறிஸ்துவின் ஆட்சி ஆயிரமாண்டு அரசாட்சியுடன் முடிவடையாது. அவருடைய ஆட்சிக்கு காலவரம்பு கிடையாது.

விளக்கம் கொடுத்த தூதன்:

தானியேல் 7 : 25, 26 “உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.”

“ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.”

பத்து ராஜாக்களுக்கு பின் வேறொருவன் எழும்புவான். அவன் உன்னதமான தேவனுக்கு விரோதமாக தூஷண வார்த்தைகளைப் பேசி, உன்னதமான பரிசுத்தவான்களை ஓடுக்குவான். பாரம்பரியங்களையும் சட்டதிட்டங்களையும் மாற்றுவான். புது வித கால அட்டவணை, புதுவித சட்டங்கள் ஆகியவை அந்திகிறிஸ்துவால் கொண்டுவரப்படும். அந்திக்கிறிஸ்துவின் குணநலன் தேவனுக்கு விரோதமாக பேசுவது. இதை வெளிப்படுத்தல் 13 : 5, 6 ல் பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது என்றும், அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் துஷித்தது என்றும் பார்க்கிறோம். ஒருகாலமும், காலங்களும், அரை காலமும் செல்லுமட்டும் அவனுடைய கையில் ஒப்புக் கொடுக்கப்படுவார்கள். ஆனால் இவனுடைய காலம் மிகவும் குறுகியது. அதாவது மூன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்வான் (வெளிப்படுத்தல் 11 : 2, 3, 13 : 5). இந்த மூன்றரை ஆண்டுகளும் பரிசுத்தவான்களைத் துன்பப்படுத்த அதிகாரம் கொடுக்கப்படுகிறது. ஆட்டுக்குட்டியானவர் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் வந்து அந்திகிறிஸ்துவின் ஆளுகையை நீக்கிப்போடுவார்.

நித்தியராஜ்ஜியம்: 

தானியேல் 7 : 27 “வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்.”

முதலாவது ஆயிரம் வருட அரசாட்சியில் நடப்பதையும், பின் நித்திய ராஜ்யத்தில் உள்ள ஆளுகையை குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்ஜியங்களின் ஆளுகையை உன்னதமான பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். இயேசு கிறிஸ்துவின் ராஜ்யமானது நித்திய ராஜ்யம். சகல ஜனங்களும் அவரைச் சேவித்து அவருக்குக் கீழ்பட்டிருப்பார்கள். இந்தத் தரிசனத்தைக் குறித்துத் தன்னோடிருந்த யாரிடமும் தானியேல் கூறவில்லை. ஏனெனில் இது முடிவு காலத்தைக் குறித்த தரிசனம். அதனால் தானியேல் மிகவும் கலங்கினான். அவனுடைய முகம் வேறுபட்டது. இந்தத் தரிசனத்தைத் தானியேல் தன்னுடைய மனதில் வைத்துக் கொண்டான். இந்த தரிசனமானது தானியேலின் முழு வாழ்க்கையையும் மாற்றியது. 

தரிசனம் காட்டியது:

உலக ராஜ்ஜியங்கள் தலைமுறை தலைமுறையாக நிற்பதில்லை. அதே போல் தான் எகிப்து, அசிரியா, பாபிலோன், மேதிய பெர்சியா, கிரேக்க ரோம சாம்ராஜ்யங்கள் வந்தன. இவைகள் அனைத்தும் ஒரு ராஜ்ஜியம் மற்ற ராஜ்யத்தை மேற்கொண்டது. ஆனால் கர்த்தருடைய ராஜ்யம் என்றென்றைக்கும் நிலைநிற்கும். அவருடைய ஆளுகைக்கு முடிவே இல்லை. அவர் ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர். எளியவனை புழுதியிலிருந்து உயர்த்தி ராஜாக்களோடும், பிரபுக்களோடும் உட்கார வைக்கிறவர். எனவே அவருடைய ராஜ்யத்துக்கு என்றுமே முடிவில்லை என்பதை இந்தத் தரிசனம் நமக்குக் காட்டுகிறது.

Related Posts