Menu Close

தீத்து 2 : 11 – Titus 2 : 11 in Tamil – தேவகிருபையானது பிரசன்னமாகி

“ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி” (தீத்து 2:11).

தேவகிருபை ஒருவருக்கு இரண்டு பேருக்கு மாத்திரம் அல்ல. அல்லது ஒரு சில விசுவாசிகளுக்கு மாத்திரம் அல்ல. ஒரு சில ஊழியர்களுக்கு மாத்திரம் அல்ல. எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்கதாக தேவகிருபை பிரசன்னமாகியிருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. தேவபிள்ளைகளே, அந்த கிருபை உங்களுக்காகவும் காத்திருக்கிறது என்பதை மறந்துபோகாதிருங்கள்.

எந்த மனுஷனையும் கிருபையாக பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளியானவர், எந்த மனுஷனையும் தள்ளாமல் அவர் கிருபையாய் ஏற்றுக் கொள்ளுகிறவர். எந்த மனுஷனையும் கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிலைநிறுத்த அவர் வல்லமையுள்ளவர். அவர் உலகம் அனைத்திலும் உள்ள மக்களுக்குக் கிருபையாக இரட்சிப்பை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

கர்த்தர் இரட்சிப்பை சம்பாதித்து வைத்திருந்தபோதிலும்கூட, யார் யார் விசுவாசத்தோடு அதை ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்களே அதை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.

நமக்குப் பக்கத்தில் நமது விசுவாசமும், தேவனுடைய பக்கத்தில் அவருடைய கிருபையும் இணையும்போதுதான் இரட்சிப்பு உண்டாகிறது. அவருடைய இரத்தமும் நம்முடைய மெய்மனஸ்தாபமும் பாவமன்னிப்பை நமக்குப் பெற்றுத் தருகிறது. அல்லேலூயா!

கிறிஸ்து சிலுவையிலே தொங்கிக் கொண்டிருந்தபோது அவருடைய இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கிருபையும் எல்லா மனுஷருக்கும் உண்டாயிருந்தது. ஆனால், அதை ஒருவரும் அறிந்து கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால், அவரோடேகூட சிலுவையில் அறையப்பட்ட ஒரு கள்ளன் அவருடைய கிருபைக்காக கெஞ்சி ஆண்டவரே, என்று அழைத்து, “உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று மன்றாடினபோது கிருபையினாலே அவன் இரட்சிப்பைப் பெற்றான் (லூக். 23:42). – தேவனுடைய கிருபை அவனுடைய நித்தியத்தை மாற்றிற்று. நரகத்தில் போகவேண்டிய அவன் பரதீசுக்குள் சென்றான். பாதாளத்தில் என்றென்றுமாய் தவிக்க வேண்டிய அவன், தேவபிள்ளைகளோடுகூட கிறிஸ்துவை ஆராதிக்கக் கூடிய மேன்மையான இடத்திற்கு வந்தான்.

வேதம் சொல்கிறது: “அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்” (2 தீமோ. 1:9)

தேவாலயத்திற்கு இரண்டு பேர் சென்றார்கள். ஒருவன் பரிசேயன், அடுத்தவன் ஆயக்காரன். பரிசேயன் தன்னுடைய சுயநீதிகளையெல்லாம் சொல்லிச் சொல்லி பெருமையாக ஜெபித்தான்.

ஆனால், அந்த ஆயக்காரன் செய்தது என்ன தெரியுமா? தன்னுடைய கண்களைக்கூட வானத்துக்கு நேராய் ஏறெடுக்கத் துணியாமல் தன் மார்பிலே அடித்துக்கொண்டு, “பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று சொல்லி மன்றாடினான் (லூக். 18:13). அவ்விதமாய் ஜெபித்த உடனேயே தேவகிருபை அவனைச் சந்தித்தது. பாவியாக வந்தவன் நீதிமானாக்கப்பட்டு பரிசுத்தவானாய் திரும்பிச் சென்றான். ஆம், இதுதான் தேவனுடைய கிருபை.

Related Posts