மத்தேயு 9 :20 – 22; மாற்கு 5 : 25 – 34; லூக்கா 8 : 43 – 48
பெரும்பாடுள்ள ஸ்திரீ:
மாற்கு 5 : 25,26 “அப்பொழுது 12 வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அனேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளை எல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிற பொழுது,”
இந்த நிகழ்ச்சி பாலஸ்தீனாவிலுள்ள கப்பர்நகூமில் நடந்த நிகழ்ச்சி. இயேசு யவீரு என்ற ஜெபஆலயத்தலைவனின் மகள் மரணத் தருவாயில் இருப்பதால் அவளைக் குணமாக்கச் சென்று கொண்டிருக்கும் போது, திரளான ஜனங்கள் அவரை நெருக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெரும்பாடுள்ள ஸ்திரீ இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு இயேசுவினிட த்தில் வந்தாள். பன்னிரண்டு வருஷங்களாக அந்த வியாதியோடு மிகவும் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருந்தவள். தன் செல்வத்தையெல்லாம் செலவழித்தும், அனேக வைத்தியர்களைப் பார்த்தும், அந்த வியாதியிலிருந்து அவளுக்கு சுகம் கிடைக்கவில்லை. பெரும்பாடுள்ள உதிரப் போக்கின் போது அவள் யாரையாவது தொட்டால் தீட்டாகிவிடும் (லேவியராகமம் 15 : 25 – 28). இவ்வாறிருக்கும்போது அவள் தேவாலயத்துக்கோ, ஜெப ஆலயத்திற்கோ செல்லக் கூடாது. எந்த ஆசரிப்பிலும், திருவிழாக்களிலும் கலந்து கொள்ளக்கூடாது. வியாதியைவிட இவ்விதமான ஒதுக்கப்பட்ட நிலைமை, தனிமை அவளை வருத்தியிருக்கக் கூடும். அப்படிப்பட்டவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். ஆனால் இந்தப் பெண் தன்னுடைய நோயின் கொடூரத்தினால் வெளியே வந்தாள்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
பெரும்பாடுள்ள பெண் எடுத்த தீர்மானம்:
மாற்கு 5 : 27, 28 “ இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி; ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.”
இந்தப் பெண் இயேசுவால் குஷ்டரோகிகள் குணமாக்கப் பட்டதையும், குருடர்களைப் பார்வையடையச் செய்ததையும், செவிடர்களைக் கேட்கச் செய்ததையும், தீராத நோய்கள் கூட இயேசுவால் குணமாக்கப் பட்டதையும் கேள்விப்பட்டிருந்தாள். அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட யாவரும் சுத்தமானார்கள் என்பதையும் (மாற்கு 6 : 56) கேள்விப்பட்டிருந்தாள். அவள் கேள்விப்பட்டதை நம்பி தான் தீட்டாக இருந்தாலும் இன்றைக்கு நான் இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டு சுகமடைவேன் என்று தீர்மானம் பண்ணினாள். வியாதியின் உக்கிரமானது அவளை அவ்வாறு எண்ண வைத்தது. எனவே தடைகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, இயேசுவின் வல்லமையைத் தேடி ஓடி வந்தாள். இந்தப் பெண்ணின் விசுவாசம் குருட்டுத்தனமான விசுவாசம். அந்த விசுவாசத்தை இயேசு கனம் பண்ணினார். இயேசுவைச் சுற்றி திரளான ஜனங்கள் நெருக்கிக் கொண்டிருந்த போதும், தன்னுடைய நம்பிக்கையைத் தளரவிடாமல் அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்தாள்.
யாருமறியாமல் இயேசுவின் அருகில் சென்று, இயேசுவுக்குத் தெரியாதபடி, இயேசுவிடம் எதுவும் கூறாமல் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். இந்த வாய்ப்பை விட்டுவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்பதால் அதை தைரியத்தோடு பயன்படுத்தினாள் . அவிசுவாசம் தடைகளைப் பார்க்கும். விசுவாசமோ வாய்ப்புகளைப் பார்க்கும். இயேசுவை விசுவாசத்தால் தடைகள் கண்ணுக்குத் தெரியாது. இயேசுவின் வஸ்திரத்தில் வல்லமையும் அபிஷேகமும் இருந்தது. வியாதியஸ்தர்கள் இயேசுவைத் தொடுவதைக் குறித்துப் பல இடங்களில் பார்க்கிறோம். அதேபோல் இயேசு வியாதியஸ்தர்களைத் தொடுவதைக் குறித்தும் வேதத்தில் பல இடங்களில் பார்க்கிறோம், மத்தேயு 14 : 36 லும், மாற்கு 6 : 56 லும் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்ட யாவரும் சுகம் பெற்றனர். இயேசுவைக் கூட்டத்தில் அநேகர் நெருக்கினார்கள். அவர்களுக்கு நடக்காத அற்புதம், இந்தப் பெண்ணுக்கு நடந்தது. இயேசு அவருடைய சரீரத்தில் நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (1 பேதுரு 2: 24)
அந்தப் பெண் பெற்ற அற்புத சுகம்:
மாற்கு 5 :29 30 “உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்று போயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: தன் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.”
இயேசுவின் வஸ்திரத்தை தொட்டவுடன், அந்தப் பெண்ணின் உதிரத்தின் ஊறல் நின்றது. இயேசுவிடமிருந்து வல்லமை பாய்ந்து அவளுக்கு சுகம் கிடைக்கிறது. அந்தப் பெண் அந்த அற்புதத்தை சுதந்திரத்தாள். தெய்வீக ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொண்டாள். லூக்கா 6 : 19 ல் இயேசுவினிடமிருந்து வல்லமை புறப்பட்டு வியாதியஸ்தர்களைக் குணமாக்கினதைப் பார்க்கிறோம். லூக்கா 5 : 17 ல் எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், நியாயசாஸ்திரிகளும் பிணியாளிகளைக் குணமாக்கும் வல்லமை இயேசுவிடம் வெளிப்பட்டதைப் பார்த்தனர். இயேசு இவளை ஏறெட்டுப் பார்க்கு முன் சுகம் பெற்று விட்டாள். இந்த நோயையுடையவள் தீட்டானவள். இந்தத் தீட்டானவள் இயேசுவைத் தொட்டும் இயேசு தீட்டாகவில்லை. மத்தேயு 15 : 28 ல் கானானிய ஸ்திரீயின் மகள் எங்கோ இருந்தாள். ஆனால் இயேசுவின் வார்த்தையால் சுகம் பெற்றாள். எனவே இயேசு தொட்டாலும் சுகம். சொன்னாலும் சுகம். சகரியா 9 :12 ல் “இரட்டிப்பான நன்மையைத் தருவேன் இன்றைக்கே தருவேன்” என்று வாக்குப்பண்ணின கர்த்தர் அன்றைக்கே அவளுடைய நோயிலிருந்து விடுதலை கொடுத்தார். அவள் தான் ஆரோக்கியமானது தன் சரீரத்தில் உணர்ந்தாள். இயேசு தன்னுடைய வல்லமை தமக்குள்ளிருந்து வெளியே போனதை உணர்ந்தார். எனவே ஜனக்கூட்டத்தைத் திரும்பி பார்த்து என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். தன் வஸ்திரங்களை யாரோ தொட்டதை இயேசு அறிந்திருந்ததை அறிகிறோம்.
சீஷர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வி:
மாற்கு 5 :31,32 “ இயேசுவின் சீடர்கள் இயேசுவை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.”
சீஷர்கள் இயேசுவிடம் இத்தனை திரளான ஜனங்கள் நெருக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உம்மைத் தொட்டது யார் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற கேள்வியைக் கேட்டனர். கர்த்தர் அனைத்தும் அறிந்தவர். எபிரேயர் 4 : 13 ல் அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை என்றும் சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும், வெளியரங்கமாயும் இருக்கிறது என்றும பார்க்கிறோம். இயேசு தன்னைத் தொட்டது யார் என்று பார்ப்பதற்காக ஜனங்களைச் சுற்றிலும் பார்த்தார். கர்த்தரின் வல்லமை செங்கடலைப் பிளக்கும் வல்லமை, சூரியனையும் சந்திரனையும் நிறுத்தும் வல்லமை, யோர்தானைப் பின்னிட்டுத் திரும்பச் செய்யும் வல்லமை.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
இயேசு ஆசியளித்தார்:
மாற்கு 5 : 33, 34 “ தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவருக்கு முன்பாக விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்கு சொன்னாள். இயேசு அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.”
சாதாரண கூட்டத்தின் நெரிசலில் ஒருவர் தொடுவதற்கும், விசுவாசத்தினால் இயேசுவை ஒருவர் தொடுவதற்கும் வேறுபாடு உண்டு. இயேசு இதையறிந்து விட்டாரே என்று அந்தப் பெண் பயத்தில் நடுங்கினாள். தன்னுடைய சரீரத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும், அவள் பன்னிரண்டு வருடங்களாகத் தன் சரீரத்தில் ஏற்பட்ட வேதனைகளையும், அதற்குத்தான் எடுத்த தீர்மானத்தையும், அதனால் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதையும் இயேசுவிடம் கூறினாள். இயேசு எதற்காக அவளைப் பார்த்தாரென்றால், அந்தப் பெண் தான் பெற்றுக்கொண்ட உடல் சுகத்தை, அற்புதத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்க முயன்றாள். ஆனால் இயேசு ஜனங்களுக்கு முன்பாக அதை அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார். இயேசு அவள் எடுத்த முடிவையும், அவளுடைய விசுவாசத்தையும், செயலையும் பார்த்தார். எனவே அந்தப் பெண்ணைப் பார்த்து மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றும், சமாதானத்தோடு போ என்றும், உன் வேதனையெல்லாம் நீங்கி விட்டது என்றும், இனி நீ சுகமாயிருப்பாய் என்றும் கூறினார். இந்தப் பெண் இயேசுவை விசுவாசித்ததால் இயேசு அவளைப் பார்த்து ‘மகளே” என்றார். ஊரார் அவளைத் தீட்டாக நினைத்தாலும் இயேசு அவளது தீட்டாக எண்ணாமல் ஆசீர்வதித்து அனுப்பினார்.
மத்தேயு 8 : 13 ல் நுற்றுக்கதிபதியின் வேலைக்காரன் சுகவீனனாயிருக்கும் போது அவன் இயேசுவிடம் தன் வீட்டுக்கு வர வேண்டாம் என்றும், இயேசு இருந்த இடத்திலிருந்து ஒரு வார்த்தை சொன்னால் போதுமென்றான். அதற்கு இயேசு அவனுடைய விசுவாசத்தைப் பார்த்து “நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அதேபோல் பர்திமேயு என்ற குருடன் மாற்கு 10 52 ல் இயேசு போகிற சத்தத்தைக் கேட்டு தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான் அவரோடு போனவர்கள் அவனை சத்தம் போடாதிருக்கும்படி அதட்டினார். ஆனால் அவனோ இன்னும் அதிக சத்தமாகக் கூப்பிட்டான். இயேசு அவனிடம் “ நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். விசுவாசத்தினால் தேவனிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை, இந்த அற்புதத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்கிறோம். எந்த நேரத்திலும் எந்த நிலைமையிலும், நாம் இயேசுவிடம் சென்றால் இயேசு நம்மை கண்ணோகுக்கிறவராக இருக்கிறார். நம்பிக்கையுடன் இயேசுவை நெருங்குவோம். இயேசுவின் அபிஷேகத்தின் வஸ்திரம் நம் மேல் விழும்படி செய்வார். 12 வருடங்களாக அவதிப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அந்த நோயிலிருந்து விடுதலை கிடைத்ததைப் போல,. நம்முடைய வாழ்க்கையிலும் நம்முடைய வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட நாம் இயேசுவைத் தேடிச் சென்று அதிலிருந்து விடுதலை பெறுவோம். ஆமென்.