Menu Close

காற்றையும் கடலையும் அதட்டினார்

மத்தேயு 8 : 23 – 27; மாற்கு 4 : 35 – 41; லூக்கா 8 : 22 – 25 

சமுத்திரம்  என்பது  உலகத்தையும்,  கப்பல்  யாத்திரை  என்பது  நமது  வாழ்க்கையையும்,  சூறாவளி  என்பது  நாம்  சந்திக்கும்  பிரச்சனைகளையும் குறிக்கிறது.  அக்கரை என்பது  பரலோகத்தைக்  குறிக்கிறது.  நாம்  இந்த பூலோகத்திலிருந்து  பரலோகம்  போகும்  யாத்திரையில்  இயேசு  இருப்பாரென்றால்  நமக்கு  உண்டாகும்  பாடுகள்  நம்மை  ஒன்றும்  செய்யாது.  இயேசு  எந்த  சூழ்நிலைகளையும்  அடக்கி  ஆளும்  அதிகாரமுடையவர்.  சகலமும்  அவருடைய  ஆளுகைக்குள்  இருக்கிறது.  சீஷர்களுக்கு  சில  பாடங்களைக்  கற்றுக்  கொடுக்க  அவர்களுக்கு  இதை அனுமதித்தார்.

இயேசு படகில் கப்பர்நகூம்: 

மாற்கு 4 : 35, 36 “ அன்று  சாயங்காலத்தில், இயேசு அவர்களை நோக்கி: அக்கரைக்கு போவோம் வாருங்கள் என்றார். அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவில் இருந்தபடியே அவரைக் கொண்டு போனார்கள். வேறு படகுகளும் அவரோடு கூட இருந்தது.”

அன்று  சாயங்காலம்  என்று  கூறப்பட்டிருப்பதால்  அன்றைக்கு  நடந்த  சில  நிகழ்ச்சிகளை  மனதில்  வைக்க  வேண்டும்.  அநேக  போதனைகளை  சீஷர்களுக்கும் மற்றவர்களுக்கும்  போதித்தார்  (மாற்கு  4 : 33).  அநேக  அற்புதங்களைச் செய்தார் (மத்தேயு 8 : 16).  இயேசுவின்  போதனைகளைக்  கேட்ட  சீஷர்கள்  அதன்படி  நடக்கிறார்களா  என்று  சோதித்தார்.  இயேசு  செய்த  அற்புதத்தைப்  பார்த்த  சீஷர்கள்  விசுவாசத்தால்  சூழ்நிலையை  ஜெயிக்கப்  போகிறார்களா  என்று பார்த்தார்.  எனவே  இயேசு சாயங்கால நேரத்தில் அவரோடு, அவருடைய போதனைகளை கேட்க வந்த ஜனங்களை அனுப்பிவிட்டு, சீடர்களிடம் அக்கரைக்கு போவோம் வாருங்கள் என்றார். எருசலேமின்  ஒருபக்கம் கலிலேயா கடல், மறுபக்கம் கப்பர்நகூம். இதற்கிடையில் 72 கிலோமீட்டர் உள்ளது. அதற்கு படகில் தான் போக வேண்டும். எனவே இயேசு முதலில் படகில் ஏறியதாகவும், சீஷர்கள் அவருக்குப் பின் சென்று படகில் ஏறினார்கள் என்றும் பார்க்கிறோம். இயேசு ஏறிச் சென்ற படகைத்  தவிர மற்ற படகுகளும் அவரோடு கூட சென்றது. 

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

கப்பலும் சுழல்காற்றும்: 

மாற்கு 4 :37,38  “அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பத்  தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி:: போதகரே, நாங்கள் மடிந்து போகிறது உமக்குக்  கவலையில்லையா  என்றார்கள்.”

பிதாவின்  சித்தத்தில்  இருந்ததால்  அவருடைய  சித்தம்  நிறைவேறும்  வரை  எதுவும்  நடக்காது  என்றறிந்து  இயேசு  தூங்கிக்  கொண்டிருந்தார்.  கடலில் பலத்த சுழல்காற்று உண்டானதால் படகுகள் தள்ளாடியது. அலைகள் படகின் மேல்  விடாமல் மோதியதால், படகு தண்ணீரினால் நிரம்ப ஆரம்பித்தது. ஆனால் இயேசுவோ இவைகள் ஒன்றும் தெரியாதவர் போல கப்பலின் அடித்தளத்தில் தலையணையை வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். சீஷர்கள் பதட்டத்துடன் காணப்பட்டனர். படகு அமிழ்ந்தால் முதலில் அமிழ்வது அடித்தட்டு தான். அந்த அடித்தட்டில் தான் இயேசு இருக்கிறார். ஆனால் சீஷர்கள் அதை எண்ணிப் பார்க்கவில்லை. வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் உடைய தேவன், இயற்கையின் மேலும், சீறும் புயலின் மேலும், கொந்தளிக்கும் கடலில் மேலும் அதிகாரமுள்ள தேவன், தங்களோடு தங்கி இருப்பதை சீஷர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. விசுவாசமில்லாமல் இயேசுவை எழுப்புகின்றனர். இயேசு எழும்பிப்  பார்க்கட்டும் என்று  விடாமல் “நாங்கள் மடிந்து போகிறோமே உமக்கு கவலையில்லையா” என்றும் கேட்டனர். நாம் மடிந்து போகப்போகிறோம் என்று இயேசுவிடம் கூறாமல், நாங்கள் மடிந்து போகிறோம் என்று இயேசுவை தனிமைப்படுத்தி கூறியதைப்  பார்க்கிறோம்.

நம்முடைய  வாழ்க்கையிலும்  இதேபோல்  திடீரென்று  கடும்புயல்  வீச  ஆரம்பித்து  விடுகிறது.  நம்முடைய  அஸ்திபாரங்களை  அசைக்கத்தக்கதாகவும்,  நாம்  எதையெல்லாம்  சார்ந்திருந்தோமோ  அதையெல்லாம்  பிடுங்கியெறியத்  தக்கதாகவும்  காற்று  அடிக்கிறது.  ஒருவேளை  அது  வியாதியாயிருக்கலாம்,  மரணமாயிருக்கலாம்  அல்லது  உறவுகளில்  ஏற்பட்ட  பெருத்த  ஏமாற்றமாயிருக்கலாம்.  அதனால்  நமக்கு  பயம்  ஏற்படுகிறது. ஆனால்  நாம்  இயேசுவை  நம்முடைய  வாழ்க்கையின்  நடுமையத்தில்  வைப்போமென்றால்  அவருடைய  வல்லமையானது  கொந்தளிப்பில்  நடுவிலே  அமைதியைக்  கொடுக்கும்.  

இயேசு செய்த அற்புதம்:

மத்தேயு 8 26 “ அதற்கு  இயேசு:அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல்  உண்டாயிற்று.”

கர்த்தர் எழும்பின உடன், அற்ப விசுவாசிகளே ஏன் பயப்படுகிறீர்கள் என்றார். அதற்குக்  காரணம் இயேசு ஏற்கனவே சீஷர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்திருந்தார். இயற்கையின் மேலும் கர்த்தர் அதிகாரத்தை  அவர்களுக்குக் கொடுத்திருந்ததால் தான், யோசுவா சூரியனை கிதியோன் மேலும், சந்திரனை  ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நிற்கச் செய்தார். மோசே செங்கடலை இரண்டாகப் பிளக்கச்  செய்தார். யோசுவா யோர்தான் நதி வெள்ளத்தை பின்னிட்டுத்  திரும்பச் செய்தார். எலியா மழைக்கும், பனிக்கும் கட்டளையிட்டு மூன்றரை ஆண்டுகள் மழையும், பனியும் பெய்யாமல் நிறுத்தினார். அதே எலியா ஜெபித்து வானத்திலிருந்து அக்கினியை இறங்கப்  பண்ணினார். இவைகள் அனைத்தும் அவர்களுக்குத் தெரிந்தும், அவர்கள் அந்த வல்லமையை  பயன்படுத்தாததால் அற்பவிசுவாசிகளே என்று அழைத்தார். இதேபோல்,  

மத்தேயு  6 :  30 ல் “அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?”  என்றதைப் பார்க்கிறோம்.  

இயேசு எழுந்தார், காற்றை அதட்டினார், கடலை பார்த்து இரையாதே  அமைதலாயிரு என்று கட்டளையிட்டார். 18 மைல் நீளமும், 9 மைல் அகலமும் கொண்ட கலிலேயாக்  கடலும், அதின்  மேலெழும்பி நின்ற ஆயிரமாயிரமான அலைகளும் இயேசுவின் அதட்டல் கேட்டு கப்சிப்பென்று அடங்கியது. கர்த்தர் முதலில் சீஷர்களை அதட்டினார். மறுபக்கம் புயலை அதட்டினார். 

சங்கீதம் 65 : 7 ல் “ சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.” என்றும் 

சங்கீதம்  89 : 9 ல் “ தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.” என்றும். 

சங்கீதம்  107 : 29 ல் “கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.” என்றும்  வேதத்தில்  கூறியிருப்பதை  அறிகிறோம். 

சீஷர்களுக்கு  இதில்  என்ன  வெளிப்படுத்தியிருக்கிறாரென்றால் இயேசு  அவர்களோடு  இருக்கும்  போதே  போராட்டத்தைப்  பார்க்கிறீர்கள்.  இயேசு  போனபின்பு  ரோமர்களாலும்,  மற்றவர்களாலும்  போராட்டம்  வரும்  அவைகளில்  சோர்ந்து  போகாமல்  ஊழியம்  செய்ய  வேண்டும்  என்பதுதான்.  நமக்கும் கர்த்தர் ஆவிக்குரிய  அதிகாரத்தை கொடுத்திருப்பாரானால் அதை நாம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். அதை நான் பயன்படுத்தவில்லையென்றால் கர்த்தர் நம்மையும் அதட்டுவார்.  நமது  வாழ்க்கையிலும்  இரண்டு  விதமான  புயலைத்  தேவன்  அனுமதிக்கிறார்.  1.  நம்மை  உருவாக்க  அனுப்பும்  புயல்,  2.  நம்மை  சிட்சித்து  சீர்படுத்துகிற  புயல்  (எபிரேயர்  12 : 5, 6).

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

சீஷர்களின் சந்தேகம்: 

மாற்கு  4 : 40, 41 “இயேசு அவர்களை நோக்கி: ஏன் இப்படி பயப்படுகிறார்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று என்றார். அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் ஏற்படுகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.”

வேதத்தில்  பயப்படாதே  என்ற  வார்த்தை  365  தடவை  வருகிறது.  இயேசு சீடர்களிடம் ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லை என்று கேட்டார். இயேசுவோடு கூட இருந்தும் அவர் யார் என்று அறிந்தும் ,எப்படிப்பட்ட வல்லமை உள்ளவர் என்று அறிந்தும், அவர் செய்த அற்புதங்களைக்  கண்ணால் பார்த்தும், அவர்கள் அனைவரும் விசுவாசத்தில் குறைவுள்ள வர்களாகவே இருந்தனர். அதனால் தான் இயேசு அவர்களைப் பார்த்து இந்தக்  கேள்வியை கேட்டார். கர்த்தர்  ஆபிரகாமிடம்  “நான்  உனக்கு  கேடகமும்,  மகாப்பெரிய  பலனுமாயிருக்கிறேன்  என்றவர்  (ஆதியாகமம்  15 : 1),  நான்  உன்னோடுகூட  இருப்பேன்  என்று  ஈசாக்குக்கும்,  யாக்கோபுக்கும்,  யோசுவாவுக்கும் வாக்களித்தவர் (ஆதியாகமம்  6 : 3, 28 : 15,  யோசுவா  1 : 5)  நம்மோடு  கூட  இருக்கிறார்  என்பதை  சீஷர்கள்  உணரவில்லை.  அவர்கள் அனைவரும்  காற்றையும், கடலையும் அதட்டியதைக் கண்ணால்  பார்த்ததால், இயேசுவைப் பார்த்து மிகவும் பயந்தனர். ஒருவரோடொருவர் இயேசு யார்? காற்றும், கடலும் இவருக்குக்  கீழ்படிகிறதே என்றனர். இயேசு செய்த அற்புதத்தைப்  பற்றி ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்தனர். 

பேதுரு தண்ணீரில் அமிழ்ந்து போகும் போது கர்த்தாவே இரட்சியும் என்று கூப்பிட்டார். உடனடியாக கர்த்தர் மனமிரங்கி கையை நீட்டி அவனைத் தூக்கி எடுத்தார். கர்த்தர் நமக்காகவும் எழுந்தருளுவார். நம்மைச் சூழ பிரச்சனைகளும், சத்துருக்களும்  எழும்பும் போது அதைப்  பார்த்துக்கொண்டு அவரால் சும்மா அமர்ந்திருக்க முடியாது. கர்த்தரோடு நாம் செல்லச்செல்ல, அவரோடு நாம் வளரவளர, நம் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொன்றையும் தேவன் அமைதியாக்குவார். மேலும் மேலும் கர்த்தரைப்  பற்றி அறிந்துகொள்ள, வாஞ்சையுள்ளவர்களாக, கருத்து உள்ளவர்களாக இருப்போம். இது  இயேசு செய்த ஐந்தாவது அற்புதம்.

தேவன்  நம்முடைய பிரச்சனைகளையும், போராட்டங்களையும், சமாதானக் குறைவுகளையும் தீர்க்க எழுந்தருளுவார். பயப்படவேண்டாம். இயேசுவை நம்மை விட்டுப் பிரித்துப் பார்க்கக் கூடாது. நமக்காகக்  கவலை கொள்பவர்  இயேசு. இதற்காகவே உலகத்திற்கு வந்தார். வேதனையை சகித்தார். மரணத்தை வென்றார். இன்றும் பரிந்து பேசுகிறார். கர்த்தரையே நாம் சார்ந்து கொண்டு, ஆண்டவரே எழுந்தருளும், எங்களுக்கு இரக்கம் செய்யும் என்று மன்றாட வேண்டும். நமக்காக இரக்கம் செய்யக்  கர்த்தர் எழுந்தருளுவார். நாம் இயேசுவை வாஞ்சித்து அழைக்கும் போது  நமது குழப்பங்களைத்  தீர்ப்பார். கஷ்டங்களை மாற்றுவார். அப்பொழுது நமது வாழ்க்கை வசந்தமாக மாறும். நமது குடும்பத்துக்குப்  பாதுகாப்பும், கிருபையும், ஆசீர்வாதமும் கிடைக்கும். ஆமென்.

Related Posts