Menu Close

கோடித்துண்டு, பழைய வஸ்திரம் – மத்தேயு 9 : 16, மாற்கு 2 : 21, லூக்கா 5 : 36

இந்த உவமையை மத்தேயு 9 : 16, மாற்கு 2 : 21, லூக்கா 5 : 36லும் பார்க்கலாம். இயேசு பரலோக ராஜ்ஜியத்தின் இரகசியத்தை உவமைகள் மூலமாகக் கூறுகிறார். இயேசு நமக்கு உவமைகளாகப் கூறியதின் காரணம்: நாம் சத்திய அறிவில் வளர வேண்டும், அந்த சத்திய அறிவு நமக்குள் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமென்பதுதான். இயேசுவை நேசிப்பதைக் குறித்தும், அவரோடு ஐக்கியம் கொள்வதைக் குறித்தும் இந்த உவமையைக் கூறுகிறார். இயேசு மத்தேயுவின் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றிருக்கும்போது நடந்த உரையாடலின்போது யோவான்ஸ்நாகனின் சீஷர்களும், பரிசேயர்களும், ஆயக்காரர்களும் இயேசுவிடம் “நாங்கள் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே உம்முடைய சீஷர்கள் உபவாசம் பண்ணுகிறதில்லையா” என்று கேட்டனர். அப்போது இந்த உவமையைக் கூறினார். மேலும் இதில் பழைய ஏற்பாட்டின் கட்டளைக்கும், புதிய ஏற்பாட்டின் கிருபைக்குமுள்ள வித்தியாசத்தை உணர்த்துகிறார். 

கோடித்துண்டும், பழைய வஸ்திரமும்:

மத்தேயு 9 : 16 “ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான் இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ்திரத்தைக் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.”

பழைய வஸ்திரம் என்பது பழைய கட்டளைகயையும், புதிய வஸ்திரம் என்பது புதியஏற்பாட்டில் இயேசு போதித்த புதிய போதனைகளையும் குறிக்கிறது. அதாவது அவைகள் இயேசுவின் கிருபையின் பிரமாணத்தில் கூறப்பட்ட கட்டளைகளாகும். இதில் கோடித்துண்டு என்பது புதிய வஸ்திரமாகும். யாரும் புதிய வஸ்திரத்தை பழைய வஸ்திரத்தோடு சேர்க்க மாட்டார்கள். ஏனெனில் அவ்வாறு சேர்க்கும் போது புதிய வஸ்திரத்தை பழைய வஸ்திரம் கிழித்து விடுமென்று இயேசு கூறுவதைப் பார்க்கிறோம். பழைய துணியானது நைந்து போயிருக்கும். புதிய வஸ்திரமானது நல்ல தரமாக, கனமாக இருக்கும். நாம் உபயோகப்படுத்துகிற ஆடைகள் சில ஆண்டுகளில் கிழிந்து ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். ஆனால் எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் எடுத்து வந்த உடைகளை நாற்பது ஆண்டுகளும் கிழிந்து போகாமல் கர்த்தர் பாதுகாத்தார். நைந்து போகும் உடையை கர்த்தர் இவ்வாறு பாதுகாத்ததைப் பார்க்கிறோம். இயேசகிறிஸ்து நீதியாகிய உடையை நமக்குப் போர்த்தியிருக்கிறார். இயேசு நமக்குப் போர்த்துகிறது அவருடைய நீதியே (வெளிப்படுத்தல் 19 : 8). அதை பாதுகாப்பது எவ்வளவு நிச்சயம். 

லூக்கா 23 : 34ல் இயேசுவின் வஸ்திரங்களை அவரை சிலுவையில் அறையும் போது கழட்டி சீட்டுப்போட்டுப் பங்கிட்டார்கள் என்றுள்ளது. உடைகளை நமக்கு கொடுக்கிறவர், உடைகளை நமக்குப் பாதுகாக்கிறவர், நீதியின் உடைகளை நமக்கு அணிவிக்கிறவர் அவருடைய உடைகளைக் கிழிக்க மனமில்லாமல் யாருக்கு வருமென்று சீட்டுப்போட்டு எடுத்துக் கொண்டார்கள். இயேசு இதில் என்ன கூறுகிறாரென்றால் பழைய மனிதனாக இயேசுவண்டை வரவே முடியாது. பாவியாக, பூமிக்குரியவனாக இயேசுவினிடத்தில் வர முடியாது. பாவத்திலிருந்து அவன் மனந்திரும்பி நீதிசெய்கிறவனாக மாற வேண்டும். புதிய சிருஷ்டியாக இருக்கிற தேவனுடைய பிள்ளைகளுக்கு இது பொருந்தும். கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டிருக்கிறோம் (கலாத்தியர் 3 : 27). எனவே நம்மைப் பார்ப்பவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அறிந்து கொள்வார்கள். அதனால் பழைய சுபாவங்களை விட்டுவிட்டு எவ்வாறிருக்க வேண்டுமென்று பவுல், 

எபேசியர் 4 : 22 – 24ல் “அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,”

“உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,”

“மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.” என்று கூறுகிறார். மேலும்,

2 கொரிந்தியர் 5 : 17ல் “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.” என்றார் 

கிறிஸ்துவுக்குள் வந்து, ஆவியானவர் நமக்குள் பிரவேசித்து புது சிருஷ்டியானபின் பழைய கொள்கைகள், பாரம்பரியங்கள், கலாச்சாரம் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். பழையவைகளின் நினைப்போ, ஈடுபாடோ கூடாது. கிறிஸ்து என்ற பரிசுத்தமான வஸ்திரத்தைத் தரித்துக் கொண்டு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசிக்க வேண்டும். பழைய சுபாவங்களை மாற்றினால் மட்டும் போதாது, நம்முடைய உள்ளான மனதில் மாற்றம் உருவாக வேண்டும். நம்முடைய உள்ளத்திலே ஆவியில் புதுப்பிக்கப்பட்ட வேண்டும். நம்முடைய வாழ்க்கையை நமக்குள் மாற்றுவதே கிறிஸ்தவ வாழ்க்கை. மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்டவர் இயேசு ஒருவரே. அவரை நாம் தரித்துக் கொள்ளும்போது நாமும் புதிய மனிதனாகி விடுகிறோம். ஏனென்றால் 1யோவான் 4 : 17 சொல்கிறது “அவர் இருக்கிற பிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.” இயேசு நியாயப்பிரமாணத்திற்கு மெருகேற்றுவதற்கு வரவில்லை. அதோடு மோசேயின் பிரமாணங்களோடு எதையும் கூட்டிக் கொடுக்கவும் வரவில்லை. புதிய காரியத்தைச் செய்ய வந்தேன் என்கிறார். 

இயேசு நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறாரென்று ரோமர் 10 : 4ல் பார்க்கிறோம். இந்த இரண்டும் ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவ்வாறிருந்தால் பரலோகம் செல்ல முடியாது. பழைய உடையைச் சரிசெய்ய வரவில்லை. புதிய வஸ்திரத்தைக் கொடுக்கவே வந்தார். வஸ்திரம் என்பது இயேசு போதித்த இரட்சிப்பைக் குறித்த சத்தியமாயிருக்கிறது. இரட்சிப்பின் வஸ்திரம் என்பது ஆதியாகமம் 3 : 7ல் ஆதாம் கீழ்படியாமல் தங்களுடைய மகிமையை இழந்த போது அத்தி இலையினால் ஆடையை தைத்து தேவன் அவர்களுக்கு உடுத்துவித்தார். அது வரை அவர்களை மூடியிருந்தது மகிமையின் வஸ்திரம். இயேசு போதித்ததின் மையப்பொருள் இரட்சிப்பைக் குறித்த சத்தியமாகும். மணவாளனாக இயேசு தன்னை விசுவாசிக்கும் பாவிகளுக்கு தன்னுடைய நீதியின் வஸ்திரமாகிய புதிய வஸ்திரத்தைக் கொடுக்க வந்துள்ளார். இந்த இரட்சிப்பின் வஸ்திரத்தை தரித்திருந்தால் மாத்திரமே சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக நிற்க முடியும்.

பரிசேயரின் நீதி:

இயேசுவின் காலத்தில் நேர்மையாளர்கள் பழைய வஸ்திரம் மனிதனின் சுய நீதியை காட்டுகிறது. பரிசேயர்கள் என்பவர்கள் அன்றைய காலத்தில் இருந்தவர்கள்.அன்றைக்கிருந்த காலத்தில் அவர்கள் தங்களை நீதி உள்ளவர்களாக காட்ட பிரயாசப் பட்டார்கள். அதற்காக அவர்கள் செய்தது 1. உபவாசமிருந்தனர் 2. சாப்பிடுவதற்கு முன் கை கழுவினர் 3. ஓய்வுநாளை ஆசரித்தனர். மேலும் நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்ட காரியங்களையும் அதோடு கூட்டிக்கொண்டனர். இதுதான் அவர்களுடைய சுயநீதி. அவர்கள் நியாயப்பிரமாணத்தின் கீழே வேலை செய்தார்கள். அவர்களின் கிரியை பொட்டரித்துப் போன வஸ்திரத்தைப் போலிருக்கிறது என்று யோபு 13 : 28ல் பார்க்கிறோம். பரிசேயர்கள் ஆதாமின் வழியில் வந்தவர்கள். கிறிஸ்தவர்கள் பழைய பாரம்பரியத்தோடு, பரிசேயர்கள் பின்பற்றி வந்த சுயநீதியாகிய பழைய பாரம்பரியங்களை இயேசுவின் கொள்கைகளோடு சேர்க்க முடியாது. ஒத்துப்போகவும் முடியாது என்று இயேசு கூறுகிறார். 

பழைய உடன்படிக்கை, புதிய உடன்படிக்கை:

இயேசு இரண்டு காரியங்களை கூறுகிறார். ஒன்று மோசேயின் பழைய ஏற்பாட்டு உடன்படிக்கை. இரண்டாவது புதிய ஏற்பாட்டு உடன்படிக்கை. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்ட இந்த உவமையைக் கூறினார். இவைகள் இரண்டும் ஒன்றோடொன்று பொருந்தாது. அவைகளை இணைக்கவும் முடியாது. இணைத்தால் கிழிந்து போகும். பழைய உடன்படிக்கை என்பது செயலின் அடிப்படையில் உண்டான இரட்சிப்பு. அதற்காக சில கிரியைகளையும் சில செயல்களையும் செய்தனர். உபவாசம் 

இருந்தனர், பலிகளைச் செலுத்தினர், அதனால் இரட்சிப்பு கிடைக்கும் என்றனர். புதிய ஏற்பாடு இரட்சிப்பின் அடிப்படையான செயல். கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார் என்று ரோமர் 10 : 4 ல் பார்க்கிறோம். நமக்கு இரட்சிப்பையளிப்பதற்காக இயேசு மனித இனத்தின் சகல மீறுதல்களையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு மரித்தார். கிறிஸ்து தனக்காக மரித்தார் என்று விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் கல்வாரி சிலுவையில் வெளிப்பட்ட தேவநீதியை சுதந்தரிக்கிறவர்கள் ஆகிறார்கள். பழைய வஸ்திரம் என்பது நியாயப்பிரமாணம். புதிய வஸ்திரம் என்பது சுவிசேஷம். யோவான் 1 : 17ல் நியாயப்பிரமாணம் மோசேயினால் வந்தது. கிருபையின் பிரமாணம் இயேசுவினால் வந்தது என்று வேதத்தில் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். . 

பழைய ஏற்பாட்டிலிருப்பவர்கள் மோசேயின் காலத்திலிருந்து யோவான்ஸ்நானகனின் பிறப்பின் காலம் வரை இருந்தவர்கள். இவர்களது பெயர் தேவதாசர்கள். புதிய ஏற்பாட்டிலுள்ளவர்கள் சிலுவை மரணத்துக்குப் பின் வந்தவர்கள். இரட்சிக்கப்பட்டவர்கள், விசுவாசிகள், தேவனுடைய பிள்ளைகள் (யோவான் 1 : 12) என்றழைக்கப்படுகின்றனர். பழைய வஸ்திரம் மக்களின் சுயநீதி. வேலைக்காரர்களாக வைத்திருந்தனர். ஆனால் புதிய வஸ்திரமாகிய சுவிசேஷமும், சத்தியமும் இயேசுவின் பிள்ளைகளாக மாற்றியது. இயேசு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறார். பழைய ஏற்பாட்டில் கிரியைகளினால் நீதிமான்களாக்கப்பட்டனர். நாம் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்படுகிறோம். பீறல் உண்டாயிற்றென்றால் நீதிமானாக முடியாது. பழைய வஸ்திரம் அவனை எப்பொழுதும் பாவியாகவே வைத்திருந்தது. புதிய ஏற்பாடு நம்மை நீதிமான்களாக்கியிருக்கிறது. 

ஏசாயா 64 : 6 “நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.”

அந்தக்காலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் வைத்திருந்த சுயநீதி அவர்களிடமிருந்த தவறான விஷயங்கள் எல்லாம் அழுக்கான கந்தையைப் போலிருப்பதால் தீட்டானவர்களாக இருப்பதாகவும் அதனால் இலைகள் உதிருவது போல் உதிர்ந்து, அவர்களுடைய அக்கிரமங்களினிமித்தம் காற்றைப்போல் மறைந்து போவதாக ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறான். ஒருவன் நியாயப்பிரமானத்தின்படி நீதிமானாக மாற அதிலுள்ள கட்டளைகள் அனைத்தையும் கைக்கொள்ள வேண்டும். அது ஆகாத காரியம். அதைத்தான் பவுல், 

கலாத்தியர் 3 : 11 ல் “நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.” 

எந்தக் கிரியைகளும் செய்யாமல் தேவனால் நீதிமான் என்று சொல்லுகிற பாக்கியமே பாக்கியம் என்று பவுல் கூறுகிறார் பேதுருவும் மாறுபாடான இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள் என்று தன்னுடைய முதல் பிரசங்கத்தில் கூறினார் (அப்போஸ்தலர் 2 : 40). 

நாம் கற்றுக் கொண்ட பாடம்:

நாம் நம்முடைய பழைய கொள்கைகள், பழைய சடங்காச்சாரங்கள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று அந்நிய பாஷையில் பேசி கனி கொடுக்கும் அனுபவத்திற்கும் செல்ல வேண்டும். அவைகள் நமக்குப் புதிய மாற்றத்தையும், ஆவியானவரின் மூலம் புதிய வாழ்வையும் அளிக்கின்ற புதிய . துணையாகவும் இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் மனம்மாறி தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு புதிய உடன்படிக்கையின் புதிய மனிதனாக வாழ நாம் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இயேசுவின் திருமண விருந்தில் கலந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட வாழ்க்கைக்குத் தயாராவோம். கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.

Related Posts