Menu Close

4000 பேருக்கு உணவளித்தார்

மத்தேயு15 : 29 – 38; மாற்கு 8 : 1 – 9

இயேசு  நோய்களை சுகமாக்கிய அற்புதம்:  

மத்தேயு15 : 29 – 31 “இயேசு அவ்விடம்  விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக்  கடலருகே  வந்து,  ஒரு  மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார். அப்பொழுது, சப்பாணிகள், குருடர்,  ஊமையர்,  ஊனர்  முதலிய  அனேகரை, திரளான  ஜனங்கள்  கூட்டிக்கொண்டு  இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை  அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர்  சொஸ்தப்படுத்தினார். ஊமையர்  பேசுகிறதையும், ஊனர்  சொஸ்தமடைகிறதையும்,  சப்பாணிகள்  நடக்கிறதையும், குருடர்  பார்வையடைகிறதையும்  ஜனங்கள்  கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை  மகிமைப்படுத்தினார்கள்.”

இயேசு  இதற்கு  முன்பு  ஐந்து  அப்பம்  இரண்டு  மீனைக்  கொண்டு 5000  பேரை  போஷித்த  நிகழ்ச்சி  நான்கு  சுவிசேஷங்களிலும்  கூறப்பட்டிருக்கிறது.  ஆனால்  இந்த நிகழ்ச்சி  மத்தேயு,  மாற்கு  சுவிசேஷங்களில்  மட்டும்  கூறப்பட்டுள்ளது. இரண்டும்  வெவ்வேறான  நிகழ்ச்சிகள்.  இயேசு கலிலேயாக்  கடலின்  அருகிலுள்ள ஒரு மலையின்மேல் ஏறி  தனித்திருக்கும்படி சென்றார்.  அந்த  இடத்தில்  சீஷர்களும் அவரோடு கூட உட்கார்ந்தார்கள். அப்பொழுது  திரளான  ஜனங்கள்  சப்பாணிகளையும்,  குருடர்களையும், ஊனர்களையும் கூட்டிக்கொண்டு  வந்தனர். அவர்களனைவரையும் இயேசுவின் காலடியில் வைத்தார்கள் ஒவ்வொருவரையும் இயேசு சுகமாக்கினார். ஊமையர்களைப்  பேச  வைத்தார். சப்பாணிகளை  நடக்கச் செய்தார். குருடர்களைப் பார்வை அடையச்  செய்தார்.  இவைகள்  அனைத்தையும்  கண்ட  ஜனங்கள்  இயேசுவை மகிமைப்படுத்தினர். 

இயேசுவின் மனதுருக்கம்:

மத்தேயு 15: 32 – 34 “பின்பு  இயேசு  தம்முடைய  சீஷர்களை  அழைத்து ஜனங்களுக்காகப்  பரிதவிக்கிறேன்,  இவர்கள் என்னிடத்தில் மூன்று நாள் தங்கியிருந்து  சாப்பிட  ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய்  அனுப்பி விட  எனக்கு  மனதில்லை, வழியில்  சோர்ந்து போவார்களே  என்றார். அதற்கு அவருடைய சீஷர்கள்:  இவ்வளவு  திரளான  ஜனங்களுக்குத்  திருப்தியுண்டாகும்படி  வேண்டிய  அப்பங்கள்  இந்த  வனாந்தரத்தில்  நமக்கு எப்படி  அகப்படும்  என்றார்கள். அதற்கு இயேசு உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார் அவர்கள் 7 அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.”

மனதுருக்கம்  என்ற  வார்த்தை  சுவிசேஷங்களில்  ஒன்பது  இடங்களில்  வருகிறது.  இயேசு  மத்தேயு  9 : 16 ல்  மேய்ப்பனில்லாத  ஆடுகளாய்  திரளான  ஜனங்கள்  இருப்பதைக்  கண்டு  மனதுருகினார்  என்று  பார்க்கிறோம். முதலில் அவர்களின்  ஆவிக்குரிய  பசியைப் போக்க  அவர்களுக்குப் போதித்தார். இயேசு  ஜனங்கள்  தம்மோடு  மூன்று  நாட்கள்  தங்கி  இருந்ததால்  அவர்கள்  சோர்ந்து போவார்கள்  என்றும், அவர்களைப்  பட்டினியாய்  அனுப்பிவிட  தனக்கு மனதில்லை  என்றும்  சீடர்களிடம்  கூறினார். ஆனால்  அவர்களோ  இந்த வனாந்திரத்தில்  இத்தனை திரளான  ஜனங்களுக்குச்  சாப்பாடு வாங்க எவ்வாறு முடியும்  என்று  கேட்டனர். இதற்கு  முன்பு  சீஷர்கள்  இயேசு  5000  பேருக்கு அவர்கள்  மூலமாக  மீனையும்  அப்பத்தையும்  கொடுத்தது  அவர்களுக்குத் தெரியும். அப்படியிருந்தும்  அவர்கள்  இவ்வாறு  கேட்டனர். இயேசு  அவர்களிடம் உங்களிடம்  எத்தனை  அப்பங்கள்  உண்டு  என்று  கேட்டார். அதற்கு  அவர்கள் ஏழு  அப்பங்களும்  சில  சிறு  மீன்களும்  உண்டு  என்றனர்.ஓய்வெடுக்க  வந்த  இயேசு  ஜனக்கூட்டத்தைப்  பார்த்து  மனதுருகினார்.

இயேசு செய்த அற்புதம்: 

மத்தேயு 15 : 35- 38 “ அப்பொழுது இயேசு ஜனங்களை தரையில் பந்தியிருக்கக்  கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்  பண்ணி,  பிட்டுத்  தம்முடைய சீஷர்களிடத்தில்  கொடுத்தார். சீஷர்கள்  ஜனங்களுக்குப்  பரிமாறினார்கள். எல்லாரும் சாப்பிட்டுத்  திருப்தியடைந்தார்கள்;  மீதியான துணிக்கைகளை  ஏழு கூடை நிறைய எடுத்தார்கள். ஸ்திரீகளும்  பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்  நாலாயிரம் பேராயிருந்தார்கள்”

இயேசு  சீஷர்களிடம்  ஜனங்களைத்  தரையில்  பந்தியிருக்கக்  கூறினார். அங்கு புல்வெளி  இல்லாததால்  தரையிலிருக்கக்  கூறினார்.  இயேசுவை  நம்பி  அமர்ந்திருந்தனர்.  இயேசுவை  நம்பிக்  காத்திருப்பவர்கள்  வெட்கப்பட்டுப்  போவதில்லை.  நாமும்  அதேபோல்  நம்முடைய  பிரச்சனைகளை  இயேசுவிடம்  விண்ணப்பித்து  விட்டு  பொறுமையுடன்  காத்திருக்க  வேண்டும்.  அதன்பின்  இயேசு சீஷர்கள்  யாரிடமிருந்தோ வாங்கிக்  கொடுத்த  ஏழு அப்பங்களையும் மீன்களையும்  எடுத்து ஸ்தோத்திரம்  பண்ணி  அதைப்  பிட்டு தம்முடைய  சீஷர்களின்  கையில்  கொடுத்தார். சீஷர்கள்  அதை  ஜனங்களுக்குப்  பரிமாறினார்கள். ஜனங்கள்  அனைவரும்  சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதம்  இருப்பதையும்  ஏழு  கூடைகள்  நிறைய  எடுத்தனர்.  ஸ்திரீகளும்  புருஷர்களும்  தவிர  சாப்பிட்ட  புருஷர்கள்  நாலாயிரம்  பேர் இருந்தனர். இதில்  தேவனின்  உருவாக்குதலைப்  பார்க்கிறோம். யாவற்றையும் படைத்தவர்  சமைத்த  ஆகாரத்தையும்  படைக்கும்  ஆற்றலுள்ளவர்  என்று அறிகிறோம். நம்மிடத்தில்  உள்ள  கொஞ்சம்  பொருளைக்  கர்த்தரிடத்தில் கொடுக்கும்  பொழுது  அதைப்  பெருகச்  செய்கிறார்  என்பதையும்  அறிகிறோம். 

5000  பேரைப்  போஷித்ததைப்  போலத்தான்  இதுவும். ஆனால்  எதற்காக திரும்பவும்  செய்கிறாரென்றால்,  இயேசுவின்  சீடர்களின்  விசுவாசத்தை அதிகப்படுத்தவும், இயேசு  எதையும்  செய்ய  வல்லவர்  என்பதை  உறுதியாக அவர்கள்  தெரிந்து  கொள்வதற்காகவும்  இவ்வாறு  செய்தார்.  இயேசு அதோடு ராஜ்யத்தின்  சுவிசேஷத்தைப்  பிரசங்கிப்பதை நிறுத்தி  விட்டார். மக்கள் புறக்கணிக்கும்  சூழ்நிலையில்  அப்பொழுது  இயேசு இருந்தால் சீஷர்கள் எவ்வாறு மெதுவாக கற்றுக்  கொண்டிருக்கிறார்கள்  என்று  பார்க்க  அவ்வாறு  செய்தார். இப்பொழுதும்  அவர்கள்  அவிசுவாசத்தோடுதான்,  இத்தனை  ஜனங்களுக்கு எவ்வாறு  போஜனம்  கொடுக்க  முடியுமென்று  கேட்டனர். அந்த  நேரத்தில் சீஷர்கள் அவரைப்  புரிந்து  கொள்ளவில்லை. இயேசு  நம்பப்படத்  தக்கவரென்பதை அவர்கள்  அறியவில்லை. இயேசு  ஜனங்களை  அனுப்பி  விட்டுத்தான்  அடுத்த  இடத்துக்குப்  போனார்.  கடைசிவரை  கரம்பிடித்து  நடத்துபவர்  இயேசு.  

5000 பேருக்கும், 4000 பேருக்கும்  செய்த  அற்புதத்திலுள்ள  வித்தியாசங்கள்:

5000 பேருக்குப்  போஷித்த,  4000  பேருக்குப்  போஷித்த  அற்புதங்களில் 7 வித்தியாசங்களைப்  பார்க்கலாம். 1. 5000  பேர்  இயேசுவோடு  ஜனங்கள்  ஒரு நாள்  மட்டும் தங்கியிருந்தனர். 4000  பேரில்  மூன்று  நாட்கள்  இயேசுவோடு ஜனங்கள்  தங்கியிருந்தனர். 2. முதலில்  யாரிடமாவது  உணவு கிடைக்குமா  என்று இயேசு  கேட்டார். அதற்கு  சீஷர்கள்  சிறுவனிடம் என்று  கூறினர். இரண்டாவது முறை  கேட்காமலே அவர்கள்  என்ன  இருக்கிறது  என்று  கூறிவிட்டனர். 3. முதலில்  ஐந்து  அப்பமும்  இரண்டு  மீனும் ஒருவனிடம்  இருந்தது. இரண்டாவது  தடவை  ஏழு அப்பங்களும், சில  சிறு  மீன்களும்  ஒருவனிடம் இருந்தது  4. முதலில்  பன்னிரெண்டு  கூடை நிறைய  மிகுதியானதை  எடுத்தனர். இரண்டாவது  தடவை  7 கூடை  நிறைய மிகுதியானதை  எடுத்தனர்  5. முதலில்  50 பேர், 100 பேர்  என்று  பந்தியாக இருக்கச்சொல்லி  இயேசு  கட்டளையிட்டார். ஆனால்  இரண்டாவது  முறை புல்கள் காய்ந்து  விட்டதால்  தரையில்  உட்கார  வைக்கச்  சொன்னார். 6.  வானத்தைப் பார்த்து  முதலில்  ஜெபித்துக்  கொடுத்தார். இரண்டாவது  தடவை  ஸ்தோத்திரம் பண்ணி  பிட்டுக்கொடுத்தார்  7. இரண்டுமே  வித்தியாசமான  வேளைகளில் நடந்தது.

இயேசு  ஜனங்களை  பார்த்து  மனதுருகுகிறவரென்றும்,  ஒன்றுமில்லாத  இடத்திலும்  யாவற்றையும்  உருவாக்கிக்  கொடுக்க வல்லவரென்பதையும்,  இந்த  அற்புதத்திலிருந்து  அறிகிறோம்.  இயேசுவிடம்  கொடுத்த  7 அப்பங்களையும், சில  சிறு  மீன்களையும்  கொண்டு  4000 பேரை போஷித்தார். அதேபோல்  நம்மிடமிருக்கிற  பொருளை  இயேசுவிடம்  ஒப்படைக்கும்  போது  தேவன்  அதைப்  பெருகச்செய்வார். இக்காலத்தில்  மட்டுமல்ல வருங்காலத்திலும்  நமக்கு  என்ன  தேவை  என்பதையறிந்து  நமக்குத்தர  வல்லவர்.  இயேசுவையே  சார்ந்து,  அவரையே  நோக்கிப் பார்த்து வாழப்பழகுவோம். ஆமென்.

Related Posts