Menu Close

இயேசுவின் பிறப்பு பற்றி ஏசாயாவின் தீர்க்கதரிசனங்கள்

ஏசாயா 7 : 14 “ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இமானுவேல் என்று பேரிடுவாள்.”

இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியதை மத்தேயு 1 : 22, 23ல் காணலாம். இதில் வரும் கன்னிகை திருமணமாகாத பருவ வயதுடைய பெண் என்பதாகும். இந்தக் கன்னிகை புதியஏற்பாட்டில் மரியாளையும், இமானுவேல் என்பது இயேசுவையும் குறிக்கும். மரியாள் இயேசுவைப் பிரசவிக்கிற வரை கன்னியாகவே இருந்தாள். இமானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று பொருள். இமானுவேல் என்ற பெயரைக் கூறி இயேசுவை யாரும் அழைக்கவில்லை. இயேசு என்பது அவரது பெயர். கிறிஸ்து என்பது அவரது பணியும்,பொறுப்பும் ஆகும். அவர் கன்னியின் வயிற்றில் பிறக்காவிட்டால் நம்மோடு இருக்க முடியாது. அவர் இமானுவேலராக இல்லாதிருந்தால் இயேசுவாகவும் இரட்சகராகவும் இருந்திருக்க முடியாது. 

ஏசாயா 9 : 6 “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும் அவர்நாமம் அதிசயமானவர் ஆலோசனை வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா சமாதான பிரபு எனப்படும்.” 

இதில் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்று ஏசாயா கூறியிருப்பதை பார்க்கிறோம். அவருடைய பிறப்பு சரித்திரத்தில் ஒரு திட்டவட்டமான காலத்தில், திட்டவட்டமாக இடத்தில் நடைபெறும் என்றும், அவர் ஒரு தனிப்பட்ட விதமாக அற்புதமான முறையில் பிறப்பார் என்றும் இப்பகுதி நமக்குப் போதிக்கிறது. அவர் இங்கு நான்கு பெயர்களைக் கொடுக்கின்றார். 

அதிசயமானவர்: இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் செய்கிறவர். அற்புதங்களினால் தன்னை வெளிப்படுத்துகிறவர். 

ஆலோசனைக்கர்த்தர்: ஆலோசனை கர்த்தராக இருந்து இரட்சிப்பின் முழுத்திட்டத்தையும் வெளிப்படுத்துவார். 

வல்லமையுள்ளதேவன்: தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் அமைந்திருந்தது.. 

நித்தியபிதா: தம்முடைய மக்களிடம் நித்திய காலமாக அன்பு செலுத்தி பாதுகாத்துத் தேவைகளைச் சந்திக்கும் மனதுருக்கமுள்ள தந்தையாகச் செயல்படுவார். 

சமாதானபிரபு: பாவம், மரணம் இவற்றிலிருந்து உண்டாகும் விடுதலையின் மூலமாக மனித இனத்திற்கு சமாதானத்தைக் கொண்டு வருவார். 

 ஏசாயா 11 : 1 “ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.”

ஈசாய் என்பது தாவீதின் தகப்பனின் பெயர். இஸ்ரவேலின் முடிவில்லாத அரண்மனைக்காக வாக்குத்தத்தத்தைப் பெற்றவர் தாவீது (1 நாளாகமம் 11 : 10 – 14). அந்த அடிமரத்திலிருந்து துளிர்க்கின்ற கிளையாக, இயேசு இருப்பாரென்று, இயேசு பிறப்பதற்கு 700 வருடங்களுக்கு முன்னமே கூறப்பட்டிருப்பதை இதில் காணலாம். அதன் முதல் கட்டமாக இயேசு தோன்றினார் (மத்தேயு 1 : 1).

Related Posts