Menu Close

ஐந்தாம் முத்திரை – வெளிப்படுத்தல் 6:9-11

  1. பலிபீடத்திலிருந்து கொல்லப்பட்ட ஆத்மாக்களின் சத்தம்:

வெளிப்படுத்தல் 6 : 9 “ அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். 

முதல் நான்கு முத்திரைகள் உடைக்கப்பட்டபோது நான்கு வித்தியாசமான நிறமு டைய குதிரைகளில் அந்திகிறிஸ்து வெளிப்பட்டதைப் பார்த்தோம். அதன் விளைவாக உலகில் நடக்கும் காரியங்களையும் யோவான் தரிசனத்தில் காண்கிறார். ஆட்டுக் குட்டியானவர் ஐந்தாம் முத்திரையை உடைத்த போது யோவான் பூமியில் உபத்திரவ நாட்கள் தொடங்கியபின் பரலோகத்தில் நடக்கும் காரியத்தைக் காண்கிறான். “தேவ வசனத்தினிமித்தம் கொல்லப்பட்டார்கள்” என்பது கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தால் அவரது வார்த்தையின் மேல் உண்மையாயிருந்ததாலும், இரத்த சாட்சிகளாக மரித்தவர்களைக் குறிக்கிறது. கிறிஸ்துவுக்குள் மரணமடைந்தவர்கள் பரலோகத்திலிருக்கின்றனர் என்பதை இவ்வசனம் தெளிவாகக் கூறுகிறது. இதைத் தான் மாற்குவிலும், லூக்காவிலும் பார்க்கிறோம். 

மாற்கு 13 : 9 – 13 ல் நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள். ….அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள்.என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.”

லூக்கா 21 : 12, 18, ல் இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள். ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது. “ என்றுள்ளது. 

பரலோகத்திலுள்ள பலிபீடத்தின் கீழ் (வெளிப்படுத்தல் 8 : 3 – 5, 14 : 18, 16 : 7) இரத்த சாட்சிகளாக மரித்தவர்களைக் காண்கிறார். இவர்கள் லூக்கா 11 : 50, 51 ல் கூறப்பட்டவர்கள். கிறிஸ்து நமக்காக இரத்தம் சிந்திய பலிபீடம் பரலோகத்தில் காணப் படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இயேசுவின் இரத்தம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இரத்தசாட்சியாக மரணமடைந்தவர்களுக்குப் பலிபீடத்தின் கீழே சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இன்னும் மகிமையின் சரீரம் கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. சரீரக் கண்களால் ஆத்மாக்களைக் காணமுடியாது. யோவான் ஆவிக்குள்ளான நிலையில் அவைகளைப் பார்க்கிறார் (வெளிப்படுத்தல் 4 : 2). முற்காலத்தில் கொல்லப்பட்ட அனைத்து இரத்த சாட்சிகளும் பலிபீடத்தின் கீழே காணப்பட்டனர். 

பலிபீடமென்பது ஆசாரிப்புக்கூடாரத்தின் மிகவும் பரிசுத்தமான பகுதி. சர்வாங்க தகனபலிகளும், போஜனபலிகளும் செலுத்தப்படுமிடம் (யாத்திராகமம் 39 : 39, 40 : 29). அதில் கொல்லப்பட்ட மிருகங்களின் இரத்தம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றப்பட வேண்டும் என்று லேவியராகமம் 4 : 7, யாத்திராகமம் 9 : 39, 40 : 29 ல் உள்ளது. ஆனால் கடைசி காலத்திலோ கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காகவும், அவருக்காகச் சாட்சியாய் வாழ்வதாகவும், கர்த்தருடைய பிள்ளைகள் இரத்த சாட்சியாய் மரிப்பார்கள் என்பதை இந்த வசனம் கூறுகிறது. உபத்திரவ காலத்துக்கு முன்பு சபை எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்களுக்கு மகிமையின் மறுரூபமாக்கப் பட்ட சரீரம் வழங்கப்பட்டு விடுகிறது. (1கொரிந்தியர் 15 : 51, 52). கிறிஸ்துவின் சிங்காசனத்துக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தின் போதும் மகிமையின் சரீரத்தில் அவர்கள் வெளிப்படுவார்கள். 

  1. பழிவாங்க தேவனிடம் விண்ணப்பித்தல்:

வெளிப்படுத்தல் 6 : 10 “ அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். 

இரத்த சாட்சியாக மரித்தவர்கள் கர்த்தரோடு பேசுகிறார்கள். அவர்கள் மகா சத்தமிட்டுக் கூப்பிடுவதை யோவான் தன் செவிகளில் கேட்கிறார். இந்த ஆத்துமாக்கள் நீதிமான்களின் ஆவிகள். இவர்கள் பரிபூரணம் உள்ளவர்கள். தேவனைத் தள்ளி அவரைப் பின்பற்றுகிறவர்களைக் கொலை செய்த துன்மார்க்கர் தெய்வீகத் தண்டனை அடைய வேண்டுமென பரலோகில் உள்ளவர்கள் வேண்டு கின்றனர். ஏனெனில் இவர்கள் பழைய ஏற்பாட்டின் திடமான அடித்தளத்தில் நின்று கொண்டு தேவனுடைய பரிசுத்த சட்டத்தின் அடிப்படையில் நீதி கேட்கிறார்கள். இது பழி வாங்குதல் ஜெபமல்ல. மாறாகத் தேவனுக்காக, நீதிக்காகப் பாடுபடுகின்ற பரிசுத்தவான்களுக்காகச் செய்யப்படும் ஜெபம். “எதுவரைக்கும்” என்ற அதே கூக்குரலை இந்த வசனத்திலும் கேட்கிறோம். பூமியில் குடியிருக்கிறவர்களிடத்தில் ஏன் பழிவாங்கவில்லையென்று தான் அவர்கள் புலம்புகிறார்கள். சங்கீதம் 119 : 84 ல் “என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்? என்று கேட்டதைப் பார்க்கிறோம். இயேசுகிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பில் தாமதமுண்டாவதாக அவர்கள் நினைக்கிறார்கள். இயேசுவோ, 

லூக்கா 23 : 34 ல் “அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.” 

மத்தேயு 5 : 44 ல் “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.” என்றார். ஸ்தேவான் அப்போஸ்தலர் 7 : 60 ல் “ அவனோ முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.” 

என்றுள்ளது. இதேபோல் அவர்கள் ஜெபிக்கவில்லை. அவர்களுடைய மரணத்துக்குக் காரணமாயிருந்தவர்கள் அப்போது பூமியில் வாசமாயிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அவர்களுடைய மரணம் ஏழு வருடங்களுக்குள் நடந்திருக்கிறது. பழையஏற்பாட்டு பரிசுத்தவான்களும், மகா உபத்திரவக்கால பரிசுத்தவான்களும் இரண்டாவது உயித்தெழுதலில் சேர்க்கப்பட வேண்டும் (சங்கீதம் 79 : 10 – 13 ல்) . 

  1. தேவனின் ஆறுதலான வார்த்தை:

வெளிப்படுத்தல் 6 : 11 “அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரையும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.”

அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது. வெள்ளை அங்கி வெற்றியையும், பரிசுத்தத்தையும் குறிக்கிறது. தங்கள் ஜெபத்திற்கான பதிலை அவர்கள் உடனடியாகப் பெற்றுக் கொண்டாலும் அவர்கள் எதிர்பார்க்கும் நியாயத்தீர்ப்புக் காலதாமதாகும் என்பது அறிவிக்கப்படுகிறது. அதற்கான காரணமும் சொல்லப்படுகிறது. உபத்திரவ காலத்தின் போது அவர்களின் உடன் பணிவிடைக்காரரும், சகோதரருமான இன்னும் பலர் கொலை செய்யப் படுவார்களென்பதையும் அதற்குப் பிறகுதான் சகல உபத்திரவங்களுக்கும் காரணமாயிருந்த மகாபாபிலோன் அழிக்கப் படும் என்பதையும் தேவன் அறிவிக்கிறார். உபத்திரகாலத்தில் சிலர் இரட்சிக்கப்படும் வாய்ப்பு பெறுவார்கள். இவர்கள் உலகிலிருந்த போது சுவிசேஷத்தை சரியாக அறியாதவர்களும், புரியாதவர்களுமாவார். சபை எடுத்துக் கொள்வதற்கு முன் பாவத்தில் துணிந்து ஜீவித்தவர்களுக்கு அதன்பின் இரட்சிக்கப்படும் வாய்ப்பு இல்லை. 

பிரசங்கி 3 : 11 ல் “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும்கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.”

வெளிப்படுத்தல் 22 : 11 ல் “அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ் செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.” 

ஆதியாகமம் 15 : 16 ல் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்”

என்ற காரணத்துக்காகத் தேவன் பொறுமையோடிருந்து, அது நிறைவானபின் அவர்களை அழித்தார். வெள்ளை அங்கிகளைப் பெற்ற பரிசுத்தவான்கள் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. உபத்திரவ காலத்தில் கொல்லப்பட்ட சகல பரிசுத்த வான்களும் ஒன்றிணைந்தவர்களாய் வெள்ளை அங்கிகளைத் தரித்து தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவ ருக்கு முன்பாகவும் நிற்பதை வெளிப்படுத்தல் 7 : 9, 15 : 2 ல் காணலாம். இந்த முத்திரையையானது இறுதிவரை நிலைநின்று இரத்த சாட்சிகளான பரிசுத்தவான் களைக் காட்டுகிறது. அவர்கள் பழிவாங்குவதற்காக வேண்டுதல் செய்கின்றனர். அவர்களை இன்னும் கொஞ்சகாலம் பொறுமையாக இருக்குமாறு கூறுகிறார். அந்த கொஞ்சகாலம் மட்டும் இரத்தசாட்சியாய் மரித்தவர்கள் இளைப்பாற வேண்டும். தம்முடைய பிள்ளைகளை உபத்திரவப் படுத்துகிறவர்களைக் கர்த்தர் பழி வாங்குவார். அவர்களுக்கு நித்திய ஆக்கினையைக் கொடுப்பார். இவர்களுக்கோ நித்திய இளைப்பாறுதலைத் தருவார். கொல்லப்பட்டவர்கள் மகா சத்தமிட்டுக் கூப்பிட்டதால் மரணத்திற்கும், உயித்தெழுதலுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆத்துமா உணர்வுடையதாயிருக்கும் என்பதும், ஆத்துமா மரிப்பதில்லையென்பதும் நிரூபணமாகிறது.

Related Posts