Menu Close

மூன்றாம் முத்திரை – வெளிப்படுத்தல் 6:5-6

  1. கறுப்புக் குதிரையில் தராசுடன் புறப்பட்டான்:

வெளிப்படுத்தல் 6 : 5 “ அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். 

ஆட்டுக்குட்டியானவர் மூன்றாம் முத்திரை உடைக்கும்போது மூன்றாவது ஜீவன் யோவானை வந்து பார்க்கும்படியாக அழைக்கிறது. மூன்றாவது ஜீவன் மனித முகமுடையது (வெளிப்படுத்தல் 4 : 7). இந்த ஜீவன் மேன்மையான அந்தஸ்தைப் பெற்ற மனிதனைப் போலிருக்கிறது. தலைமைத்துவம், அறிவு இவைகளில் மனிதன் பேர்பெற்றவன் (ஆதியாகமம் 2 : 7, 9). இதில் கருப்புக் குதிரையில் (சகரியா 6 : 2) வெளிப் பட்ட அந்திகிறிஸ்து தராசைக் கையில் ஏந்தி வெளிப்பட்டான். கருப்பு நிறமானது யுத்தத்தையும் தொடர்ந்து வரும் பஞ்சத்தையும் தெரிவிக்கிறது. வில்லையும், பட்ட யத்தையும் கையில் ஏந்திக்கொண்டிருந்த அந்திகிறிஸ்து இப்போது உணவுப் பொருட் களின் தட்டுப்பாடு உண்டாக்குவதை வெளிப்படுத்தும்படியாகத் தராசை ஏந்திக் கொண்டிருக்கிறான். 

எசேக்கியேல் 4 : 16, 17 ல் “பின்னும் அவர்; மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும், நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.” என்றும்,

புலம்பல் 5 : 10 ல் “பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்பங் கரையைப்போல் கறுத்துப்போயிற்று.” என்றும்,

புலம்பல் 4 : 8, 9 ல் “இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப் போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று. பசியினால் கொலையுண்டவர்களைப் பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்துபோகிறார்கள்.” என்றும், 

எரேமியா 4 : 26 – 28 ல் “பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின. இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்;” என்றும் முன்னமே வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 

யோவான் சத்தத்தை மட்டுமே கேட்கிறாரே தவிர, யார் பேசுகிறார்கள் என்பது அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. யுத்தத்தின் முடிவில் வரும் நியாயத்தீர்ப்புகள் மிகவும் கொடுமை நிறைந்ததாயிருக்கும். யுத்தம் முடிந்தால் உடனே பஞ்சம் வந்துவிடும். கொடிதான நியாயத்தீர்ப்புகளில் பஞ்சமும் ஒன்று. இதைவிட ஒரு கொடிய பஞ்சம் இனியுள்ள காலத்தில் வரப்போகிறது. அது போஜனபதார்த்த பஞ்சமல்ல. கர்த்தருடைய வார்த்தைக்கு வரும் பஞ்சம். கர்த்தருடைய வார்த்தையைத் தேடினாலும் பெற்றுக்கொள்ள முடியாது. இப்படிப்பட்ட பஞ்சம் எல்லா பஞ்சங்களை விடக் கொடியது. 

 

  1. கோதுமை, வாற்கோதுமைக்குக்கூட பஞ்சம்:

வெளிப்படுத்தல் 6 : 6 “அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். “

பொதுமக்களால் அதிகமாகப் பயன் படுத்தும் கோதுமை, வாற்கோதுமை ஆகியவற்றின் விலையை நிர்ணயம் பண்ணும் இந்தச் சத்தம், ஐசுவரியவான்களும், அதிபதிகளும் பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் திராட்சைரசத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படக்கூடாதென்று கட்டளையிடுகிறது. அந்நாட் களில் பொதுவாக ஒரு தொழிலாளி நாள் ஒன்றுக்கு ஒரு பணத்தைக் கூலியாகப் பெற்றுக் கொண்டான் என்பதை மத்தேயு 20 : 2 ல் பார்க்கிறோம். அந்த நாட்களில் அந்த ஒரு பணத்துக்கு எட்டு படி கோதுமை, அல்லது இருபத்து நான்கு படி வாற்கோதுமை வாங்க முடியும் என்பதினால், அவனால் அவன் தன் முழுக் குடும்பத்தையும் அதைக் கொண்டு போஷிக்க முடியும். ஆனால் அப்பொழுது வாழ்க்கையின் அடிப்படைப் பொருட்கள் கூடக் கிடைக்காமல் விலைவாசி ஏறி பசி, பட்டினி உலகை வாட்டும். தராசு பஞ்சத்திற்கு அடையாளம். உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால் தாராளமாக உணவு கிடைக்காததால் வாற்கோதுமையைக் கூடத் தராசில் நிறுத்துக் கொடுக்கின்றனர். எண்ணெய், திராட்சைரசம் என்பவை ஒலிவ மரத்தையும், திராட்சைச் செடியையும் குறிப்பிடுகிறது. தானியங்களின் அளவுக்கு இவைகள் பாதிப்படைவதில்லை. இரட்சிக்கப்பட்டுக் கர்த்தருக்குள் நிலைத்திருக்கிறவர்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரும் மீதியாயிருக்கும் மக்களில் சிலர் இரட்சிக்கப்படுவார்கள். 

இவ்விதம் இரட்சிக்கப்பட்டவர்கள் ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்வார்கள். எண்ணெய் ஆவியானவரின் அபிஷேகத்தையும், திராட்சைரசம் இரட்சிப்பையும் குறிக்கிறது. இந்த அனுபவங்களைப் பெற்றிருக்கிறவர்களைச் சேதப்படுத்தாதே என்று குதிரையின் மீது இருந்தவனுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. தன்னுடைய குடும்பத்தின் உணவுத் தேவையைச் சந்திக்க முடியாமல் பஞ்சத்தில் பலர் மரிக்க நேரிடும். புலம்பல் 4 : 9 ல் “பசியினால் கொலையுண்டவர்களைப் பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்.” என்றுள்ளது. எண்ணெய் மற்றும் திராட்சை ரசத்தின் விலைகள் நிர்ணயிக்கப் படாததால் அந்தப் பஞ்சத்தின் விளைவாக உபத்திரவ காலத்தின் துவக்க நாட்களில் பணக்காரர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் ஆறாம் முத்திரை உடைக்கப்படும் போது பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும் பாதிப்படைவார்கள். 

மத்தேயு 24 : 7 “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.” என்ற வார்த்தை இந்த முத்திரை உடைக்கப்பட்ட போது நடந்ததைக் காணலாம்.

Related Posts