Menu Close

யெப்தா

நியாயாதிபதிகள் 11 : 1, 2, 3 “கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான். கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களான பின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள். அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப்தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள்.

யெப்தாவின் தகப்பன் பெயர் கீலேயாத். கீலேயாத் என்பதற்கு சாட்சியுள்ள மலை என்று பொருள். அவர்கள் இருந்த ஊரின் பெயரும் கீலேயாத். இந்த ஊர் யோர்தானுக்கு கிழக்கேயுள்ளது. அவனுக்கு குழந்தையில்லாமல் இருந்தபோது வேசியின்முலம் குழந்தை பிறந்தது. அவனுக்கு யெப்தா என்று பெயரிட்டனர். யெப்தா என்ற பெயருக்கு வாசலைத் திறக்கிறவன் என்று பொருள். கர்த்தர் நமக்காகவும், நம்மை ஆசீர்வதிக்கவும், நம்மை உயர்த்தவும், நமக்கு விடுதலை தரவும் சில வாசல்களைத் திறக்கிறார். ஓசியா 2 : 15 ல் நியாயத்தீர்ப்பின் இடமாக இருந்த ஆகோரின் பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாசலாகக் கர்த்தர் கொடுத்ததைப் படித்தோம். அப்போஸ்தலர் 12 : 10 ல் பேதுருவைத் தூதன் சிறைச்சாலையிலிருந்து வெளியே கொண்டு வரும்போது அங்கிருந்த இரும்புக் கதவுகள் தானாய்த் திறந்ததைப் பார்க்கிறோம். ஆனால் பேதுருவின் விசுவாசிகள் பேதுருவுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது பேதுரு விடுதலையாகி அங்கு சென்றபோது அவன் தட்டிய பின்தான் திறந்தனர். இதைத்தான் வெளிப்படுத்தல் 13 : 7 ல் தேவன் திறந்த வாசலை வைத்திருப்பதாகக் கூறுகிறார். யெப்தாவின் ஆரம்பம் மிகவும் அற்பமானது. அவன் பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான். கோழையாக இருந்த கிதியோனைப் பார்த்து கர்த்தர் நியாயாதிபதிகள் 6 : 12 ல் பராக்கிரமசாலியே என்றழைத்ததைப் பார்க்கிறோம். . யெப்தா தான் தந்தையின் அத்தனை சொத்துக்கும் எஜமானனானான். அதன்பின் உண்மையான மனைவிக்கு அடுத்தடுத்ததாக குழந்தை பிறந்தது. அந்தப் பிள்ளைகள் பெரியவர்கள் ஆனபின் தாங்கள்தான் சுதந்தரவாளி என்றும், யெப்தாவை வேசியின் மகன் என்றும் அவமானப்படுத்தினர். இவன் எந்தத் தவறும் செய்யவில்லை. தன்னுடைய தகப்பன் செய்த பாவத்தின் கோபத்தை இவனிடம் காட்டினார். யெப்தா ஊர் பஞ்சாயத்திடம் போனான். அவர்களும் அவனை வெறுத்து வேசியின் பிள்ளை என்றனர். அவனுடைய மனமுடையும்படி பேசியது மட்டுமல்லாமல் சகோதரர்கள் அவனை வீட்டைவிட்டே துரத்தினார்கள். ஊருக்குள்கூட தங்கவிடாமல் விரட்டினர். தகப்பனும் அதற்கு உடந்தையாயிருந்தான். அவனுக்காகப் பரிந்துபேச யாருமேயில்லை. யெப்தா கைவிடப்பட்டவனாய் நின்றான். 

எனவே யெப்தா தன் ஊரைவிட்டு தோப் என்னும் தேசத்தில் குடியிருந்தான். அவனோடு கூட இருந்தவர்கள் கூலிப்படைகளும், ரவுடிகளும்தான். இந்த இடம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதி. அது அவனுக்குப் பாதுகாப்பில்லாத பகுதி. யோனாவைக் கர்த்தர் மீனின் வயிற்றில் பக்குவப்படுத்தினதைப் போல, மோசேயை வனாந்தரத்தில் பக்குவப்படுத்தியதைப் போல, தாவீதைக் குகையில் பக்குவப்படுத்தியதைப் போல யெப்தாவை தோப் வனாந்தரத்தில் பக்குவப்படுத்தினார். அதில்தான் கர்த்தர் அவனை உருவாக்குகிற, ஆயத்தப்படுத்துகிற, பக்குவப்படுத்துகிற இடமாக இருந்தது. யெப்தா வீணரான மனுஷர்களுடன் சேர்ந்து பக்கத்தில் உள்ள நாடுகளில் யுத்தம் பண்ணி ஜெயம் பெற்றான். இவ்வாறிருந்தாலும் உண்மையுள்ள தேவனை அவன் மறக்கவில்லை. ஆண்டவரோடு அவனுக்கு நெருக்கம் இருந்தது. 

அம்மோனியரோடு யுத்தம் பண்ண மூப்பர்கள் யெப்தாவை அழைத்தல்:

நியாயாதிபதிகள் 11 : 4 – 7 “சில நாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம்பண்ணினார்கள். அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம் பண்ணும்போது கீலேயாத்தின்மூப்பர் யெப்தாவைத் தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய், யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும் என்றார்கள். அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.” 

இஸ்ரவேலர்கள் மறுபடியும் கர்த்தரை விட்டு விலகியதால் கர்த்தர் அவர்களைக் கைவிட்டார். 18 வருடம் அம்மோனியர்கள் இஸ்ரவேலரைக் கஷ்டப்படுத்தினர். இஸ்ரவேலின் அறுவடை காலத்தில் பெலிஸ்தியர் வந்து அவைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். அவர்கள் கஷ்டப்பட்டதின் பலன் எதுவும் அவர்களுக்குக் கிடைக்காதபடி செய்து விடுவர். அதன்பின் அம்மோனியர்கள் வருவார்கள் அவர்களும் பெலிஸ்தியரைப் போலவே செய்வது மட்டுமல்லாமல் இஸ்ரவேலரின் வீட்டுக்குள் புகுந்து அங்குள்ளவைகளைக் கொள்ளையடித்துச் செல்வர். அறுவடை நெருங்கி விட்டதாலும், தங்களால் அம்மோனியருடன் போரிட முடியாததாலும், அவர்களிடம் சரியான தலைவனோ, வழிநடத்துகிறவனோ, பராக்கிரமசாலியோ இல்லாததால் தாங்கள் துரத்தின யெப்தாவிடம் போய் தோப் தேசத்தை விட்டு மறுபடியும் கீலேயாத்துக்கு திரும்பி வர வேண்டுமென்று கீலேயாத்தின் மூப்பர்கள் கெஞ்சினர். அதுமட்டுமல்லாமல் அம்மோனியரோடு யுத்தம் பண்ண அவன் சேனாதிபதியாக இருக்க வேண்டுமென்றனர். யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பை வெறுத்து குழியில் போட்டனர். ஆனால் கடைசியில் அவனைத்தேடி வந்து கெஞ்சக் கர்த்தர் வைத்தார். அதேபோல் யெப்தாவுக்கும் நடந்தது. யெப்தா அவர்களிடம் “நீங்கள்தானே என்னை என் தகப்பன் வீட்டை விட்டுத் துரத்தினீர்கள். இப்பொழுது உங்களுக்கு இக்கட்டு என்றவுடன் ஏன் வருகிறீர்கள்” என்றான். 

யெப்தாவும் கீலேயாத்தின் மூப்பர்களும்:

நியாயாதிபதிகள் 11 : 8 – 11 “அதற்குக் கீலேயாத்தின்மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின்குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள். அதற்கு யெப்தா: அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின்மூப்பரைக் கேட்டான். கீலேயாத்தின்மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன் வார்த்தையின்படியே செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுநின்று கேட்பாராக என்றார்கள். அப்பொழுது யெப்தா கீலேயாத்தின்மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான்.”

கீலேயாத்தின் மூப்பர் அப்பொழுது யெப்தாவை முக்கியமானனாக எண்ணினார். அவர்கள் யெப்தாவிடம் தங்களுடன் அவன் வந்து அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின் குடிகளாகிய தங்களுக்குத் தலைவனாயிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். யெப்தா அவர்களிடம் தான் அம்மோனியரோடு போரிட்டு ஜெயித்துக் காட்டுகிறேன். அதன்பின் தன்னை அவர்களுக்குத் தலைவராக வைப்பீர்களா என்று கேட்டான். அதாவது நியாயாதிபதியாக்குவீர்களா என்பதுதான் அவனது கேள்வி. அதற்கு அவர்கள் தங்களுடைய பெருமையெல்லாம் விட்டுக் கொடுத்து யெப்தா சொல்வதற்கெல்லாம் சரியென்றனர். மேலும் அவர்கள் கண்டிப்பாக செய்வோமென்றும், செய்யாவிட்டால் கர்த்தர் நமக்கு நடுநின்று கேட்பாராக என்றனர். அவர்கள் வேறுவழியில்லாமல் சம்மதித்தனர். இவ்வாறு கர்த்தர் துரத்தப்பட்ட மனிதனிடம் திரும்ப வந்து கெஞ்ச வைத்தார். எனவே யெப்தா கீலேயாத்தின் மூப்பர்களோடுகூடப் போனான். அவர்கள் யெப்தாவைத் தலைவனாகவும், சேனாபதியாகவும் வைத்தார்கள். கர்த்தர்தான் அந்த உயர்வைத் தந்தார் என்று உணர்ந்த யெப்தா நன்றியுள்ள இருதயத்தோடு அவர்கள் போனபின் நேரே மிஸ்பாவுக்குப் போனான். மிஸ்பா என்பதற்கு “நமது உடன்படிக்கைக்கு கர்த்தரே சாட்சி” என்று பொருள். இஸ்ரவேலரை அம்மோனியரிடமிருந்து காப்பாற்றுவது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை அறிந்து தன்னுடைய காரியங்களையெல்லாம் கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து முறையிட்டான் (நியாயாதிபதிகள் 11 : 21). நமக்கும் ஒரு மிஸ்பா தேவை. ஊக்கமாக ஜெபித்து மன்றாட ஒரு இடம் தேவை. மிஸ்பா ஒரு ஜெப இடம். அங்கு தேவ பிரசன்னம் இருக்கும் இடம் என்பதை யெப்தா உணர்ந்தான். 

ஆதியாகமம் 31 : 50, 52 ல் யாக்கோபும், லாபானும் உடன்படிக்கை செய்த இடத்தின் பெயர் மிஸ்பா. அங்கு யாக்கோபு ஒரு தூணை நாட்டி தேவனே சாட்சி என்று லாபானுடன் உடன்படிக்கை செய்தார். யாக்கோபும் கர்த்தரோடு கூட உடன்படிக்கை செய்தார். யாக்கோபின் நிமித்தம் கர்த்தர் லாபானைக் கடிந்து கொண்டாரென்று ஆதியாகமம் 31 : 24 ல் பார்க்கிறோம். அந்த இடத்தில்தான் சாமுவேல் கர்த்தரிடம் மன்றாட ஜனங்களைக் கூட்டினார். (1சாமுவேல் 7 : 5, 6). அந்த இடம் பரிந்து பேசும் இடம். திறப்பின் வாசலில் நின்று விண்ணப்பம் பண்ணும் இடம். இந்த கீரியாத் மலை என்பது கல்வாரி மலைக்கு அடையாளம். அங்கு நாட்டப்பட்ட தூண் கல்வாரி மலையின் சிலுவைக்கு அடையாளம். அங்குள்ள பிசின் தைலம் இயேசுவின் இரத்தத்திற்கு அடையாளம். அங்கு கர்த்தர் நம்மோடு புது இரத்தத்திலான உடன்படிக்கையைச் செய்கிறார். பிசாசுகள் நம்மைக் கல்வாரியின் அடிவரைதான் விரட்டிக் கொண்டுவர முடியும். சாத்தானின் தலையை அங்கு நசுக்கி இயேசு ஜெயம் கொண்டார். 

அன்னாளின் மிஸ்பா தேவனுடைய ஆலயம் (1சாமுவேல் 1 : 10). எசேக்கியா ராஜாவின் மிஸ்பா ஒரு சுவர் (ஏசாயா 38 : 2, 3). தானியேலின் மிஸ்பா அவனுடைய மேலரை (தானியேல் 6 : 10). இயேசுகிறிஸ்துவின் மிஸ்பா கெத்செமனே தோட்டம் (லூக்கா 22 : 44). புதிய ஏற்பாடு ஜெபிக்கும் இடத்திற்கு முக்கியத்துவம் தராமல் ஜெபிக்கும் விதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க இயேசு சொன்னார். தேவன் ஆவியாயிருப்பதால் அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும் என்றார் (யோவான் 4 : 21, 23, 24). யெப்தா தன் காரியங்களையெல்லாம் கர்த்தருடைய சந்நிதியில் சொன்னான். யெப்தா அங்கு செல்லும் போதெல்லாம் ஆண்டவருடைய பிரசன்னத்தை உணர்ந்தான். அதனால் யெப்தா அங்கு சென்று “நாங்கள் பண்ணிய உடன்படிக்கைக்கு நீரே சாட்சி” என்று பொருத்தனை பண்ணினான். தான் பண்ணிய உடன்படிக்கையை யெப்தா கர்த்தருடைய சந்நிதியில் சொன்னதைப் பார்க்கிறோம். தனக்கு ஒரு பெரிய பொறுப்பு வந்தவுடன் அதைக் கர்த்தரிடம் சொல்லிச் செய்யும் சுபாவத்தைப் பார்க்கிறோம். 

யெப்தா அம்மோனியா ராஜாவுக்கு அனுப்பிய சமாதான தூது:

நியாயாதிபதிகள் 11 : 12, 13, 24 “பின்பு யெப்தா அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நீ என் தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்பண்ண வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச்சொன்னான். அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தாவின் ஸ்தானாபதிகளை நோக்கி: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவக்கி யாபோக்மட்டும், யோர்தான்மட்டும் இருக்கிற என் தேசத்தைக் கட்டிக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாய்த் திரும்பக்கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். …… உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் கட்டிக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் கட்டிக்கொள்ளுகிறோம்.”

யெப்தா அவர்கள் கூறியவுடன் யுத்தத்துக்குப் போகாமல் அம்மோனிய புத்திரரின் ராஜாவுக்கு ஆள் அனுப்பி தங்களுக்கு விரோதமாக யுத்தத்திற்கு வருவதற்கு காரணம் என்னவென்று கேட்டான். அதற்கு அவர்கள் இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து வரும்போது தங்கள் தேசத்தைக் கைப்பற்றினாரென்றும் அதை மீட்க வந்திருக்கிறோமென்றனர். அதற்கு யெப்தா இப்பொழுது தாங்கள் இருக்கிறது அவர்களின் தேசமல்ல என்றும் அதில் ஏதோமியரின் பங்கு இருக்கிறது என்றும், அதைக் கர்த்தர் தங்களுக்கு கொடுத்தார் என்றும் விளக்கினார். ஏதோமியர் தண்ணீர் தராமல் இருந்ததால் கர்த்தர் அதை வெல்ல வைத்தார் என்றும், 300 வருடங்களாக அது தங்களுடைய ஆளுகையில் இருக்கிறதென்றும் எனவே யுத்தம் வேண்டாம் என்றும் தெளிவு படுத்தினான். பழைய சரித்திரத்தை யெப்தா தெரிந்து வைத்திருந்ததால் இவ்வளவாய்ப் பேசினான். ஒரு தலைவனாக இருக்கிறவனுக்கு பழைய சரித்திரம் தெரிந்திருக்க வேண்டுமென்று இதிலிருந்து அறிகிறோம். இஸ்ரவேலர் அம்மோனியரின் தேசத்தில் குடியிருக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினான். அவைகள் இஸ்ரவேலருக்குச் சொந்தமானது என்றும் அதை அவர்கள் சரியான வழியில் சுதந்தரித்தார்களென்றும் விவரிக்கிறான். எதிரிநாட்டு ராஜா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே யெப்தா “உங்களுடைய தெய்வம் உங்களுக்காக தருகிற தேசத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். எங்கள் தெய்வம் எங்களுக்காகத் தருகிற தேசத்தை நாங்கள் வைத்துக் கொள்கிறோமென்றான். “ 

யெப்தா பண்ணிய பொருத்தனை:

நியாயாதிபதிகள் 11 : 29 — 33 “அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான். அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப்பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால், நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான். யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள்வரைக்கும், மகா சங்காரமாய் முறிய அடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.”

யெப்தா தன் எதிரிகளை உடனடியாகத் தாக்காமல் மீண்டும் மீண்டும் தூதர்களை அனுப்பி நியாயத்தைக் கூறுவதன் மூலம் போரைத் தவிர்க்க முயற்சி செய்தார். அம்மோனியர் தவறாகக் கூறினதை நியாயமாக மறுத்துரைத்தார். அம்மோனியரோ அதற்குச் செவி சாய்க்கவில்லை. எனவே யெப்தா அவர்களோடு யுத்தம் பண்ண முடிவெடுத்தான். அம்மோனியரோடு படையெடுக்கச் செல்லும்போது கர்த்தரிடம் ஒரு பொருத்தனை பண்ணினான். அம்மோனியரைக் கர்த்தர் தன் கையில் ஒப்புக் கொடுத்தால் தான் தன்னுடைய வீட்டிற்கு சமாதானத்தோடு வெற்றியுடன் திரும்பி வரும்போது kவீட்டுக்குள்ளிருந்து எதிர்கொண்டு வருவதைக் கர்த்தருக்குரியதாகத் தகனபலியாகச் செலுத்துவேன் என்றான். யெப்தா பண்ணிய பொருத்தனை நியாயப்பிரமாணத்துக்கு ஏற்புடையதாக இல்லை. வீட்டு வாசலிலிருந்து அவனை எதிர்கொண்டு வருவது மனிதனே தவிர விலங்காக இருக்க முடியாது. கர்த்தருடைய ஆவியானவர் இறங்கினதால் அவன் வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. கர்த்தரே வெற்றியைக் கொடுப்பார் என்ற எண்ணம் அவனுக்கு இல்லாமல் போயிற்று. யெப்தா அவசரப்பட்டு இப்படி ஒரு பொருத்தனை பண்ண வேண்டிய அவசியமில்லை. .யெப்தா போருக்குப்போய் வெற்றி பெற்றார். அவன் செய்த பொருத்தனையினால் கர்த்தர் அவனுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. கர்த்தர் யெப்தாவின் படையை ஜெயிக்க வைத்தார். இஸ்ரவேலர் அம்மோனியரின் 20 ஊர்களைக் கைப்பற்றினர். பயங்கரமாக யுத்தம் நடந்தது. அம்மோனியர் போரிட்டுத் தோற்றனர். யெப்தாவுக்கு ஜெயம் கொடுத்த ஆண்டவர் நமக்கும் ஜெயம் கொடுப்பார். 

யெப்தா ஜெயம் பெற்று வீட்டுக்கு வருதல்:

நியாயாதிபதிகள் 11 : 34 – 37 “யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை. அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லி விட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான். அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் புத்திரராகிய உம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியினால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள். பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டு மாதம் தவணைகொடும் என்றாள்.”

யெப்தா யுத்தம் முடிந்து பலநாள் கழித்து ஜெயம் பெற்று தன்னுடைய வீட்டிற்குச் சென்றான். அவர் வீட்டுவாசலை அடைந்தவுடன் தான் பண்ணிய பொருத்தனை ஞாபகம் வந்தது. யெப்தாவுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள் கன்னிப்பெண். தகப்பனுக்கு மிகவும் பிரியமானவள். வேறு பிள்ளைகள் இல்லை. நல்ல தாலந்து உள்ளவள். அவள் தன்னுடைய தந்தை வெற்றியுடன் வருகிறதை வரவேற்க தம்புரு வாசித்து நடனஞ் செய்து யெதாவுக்கு எதிராக வந்தாள். யெப்தா அவளைக் கண்டவுடன் அதிர்ச்சியடைந்தான். தன்னுடைய உடையைக் கிழித்துக் கொண்டு தன்னுடைய பொருத்தனையை மகளிடம் கூறி அழுதான். தான் கர்த்தரிடம் கூறி விட்டதால் மாற்றக்கூடாது என்று கதறினான் (சங்கீதம் 15 : 4). அவன் மிகுந்த விசுவாசத்தோடும், மனஉறுதியோடும் வந்தது தன் மகளாக இருந்தாலும் மறைக்காமல் கூறியதைப் பார்க்கிறோம். யெப்தாவின் மகளும் தன்னுடைய தந்தையிடம் கர்த்தர் நமக்கு ஜெயத்தைக் கட்டளையிட்டபடியால் தாங்கள் பண்ணிய பொருத்தனையை நிறைவேற்றும் என்று கூறி, தான் தன்னுடைய தோழிகளுடன் மலைக்குப் போய் இரண்டு மாதம் துக்கம் கொண்டாட தவணை கேட்டாள். யெப்தாவின் மகள் கீழ்ப்படிதலுள்ளவளாக இருந்ததால் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் தன்னையே அர்ப்பணித்ததைப் பார்க்கிறோம். அவளுக்குத் தேவனைக் குறித்த அறிவும், பயமும் இருந்திருக்கிறது. அதேவேளையில் தன்னுடைய தகப்பனுக்குக் கீழ்ப்பய வேண்டுமென்ற எண்ணமும் இருந்திருக்கிறது. எனவேதான் தன்னுடைய தகப்பன் தேவனுக்குப் பண்ணிய பொருத்தனையைத் தான் ஒத்துக்கொள்கிறேன் என்கிறாள். 

யெப்தாவின் மகளின் அர்ப்பணிப்பு: 

நியாயாதிபதிகள் 11 : 38 – 40 “அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி, இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள். இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று.”

யெப்தா தன்னுடைய மகளின் கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவித்தான். அவள் தன் தோழிகளுடன் மலைக்குப் போய் இரண்டு மாதம் முடிந்து திரும்பி வந்தாள். யெப்தா தான் பண்ணிய பொருத்தனையின்படி செய்தான் என்று முடிகிறது. பழையஏற்பாட்டில் கர்த்தர் நரபலி செய்வதைத் தடை செய்திருந்தார் (லேவியராகமம் 18 : 21, 20 : 2 – 5, உபாகமம் 12 : 31, 18 : 10). ஆடு, மாடு, புறாக்களைத்தவிர எதையும் பலி செலுத்தக் கூடாது என்றார். யெப்தா தான் பண்ணிய பொருத்தனையில் உண்மையுள்ளவராக விளங்கியதால் தனது ஒரே மகளை தேவ சந்நிதியில் வாழ ஒப்புக் கொடுத்தார். அவள் புருஷனை அறியாதிருந்தாள் என்பதிலிருந்து அவள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கென்று தன்னை அர்ப்பணித்திருந்தாள் என்றறிகிறோம். யெப்தாவுக்கு வேறு குழந்தைகள் இல்லாததால் தன்னுடைய வம்சம் இதோடு முடியப்போகிறதை நினைத்து யெப்தா வருந்தினான். கர்த்தருக்கென்று பொருத்தனை பண்ணப்பட்டவர்களை ஆசாரியன் மதிப்பிட்டு அந்த மதிப்பை செலுத்துவதன் மூலம் மீட்டுக் கொள்ளலாம் என்பதை லேவியராகமம் 27 : 1 – 8 ல் பார்க்கிறோம். இவ்விதம் அவள் மீட்கப் பட்டிருக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை இஸ்ரவேலின் குமாரத்திகள் நான்குநாள் இதனைக் குறித்து புலம்புவது வழக்கம். விசுவாசிகளாகிய நாம் நமது சரீரங்களை தேவசந்நிதியில் ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 12 : 1, 2). யெப்தா தன்னுடைய ஒரே குமரத்தியை ஒப்புக்கொடுக்க எவ்வளவாய்த் துடித்தார். பிதாவோ தனது ஒரே குமாரனை நம் எல்லோருக்காகவும் ஒப்புக் கொடுத்ததை என்றென்றும் நாம் மறக்கக் கூடாது. 

யெப்தா பத்தாவது நியாயாதிபதியாக ஆறு ஆண்டுகள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். பரஸ்திரீயின் மகனான யெப்தா விசுவாச வீரர் பட்டியலில் இடம் பெற்றான் (எபிரேயர் 11 :32). தன் குடும்பத்தினரால் வெறுத்துத் தள்ளப்பட்ட யெப்தாவைக் கர்த்தர் பயன்படுத்தினார். மற்றவர்கள் நம்மை வெறுத்துத் தள்ளினாலும் கர்த்தர் நம்மைச் சேர்த்துக்கொள்வார். நாம் செய்யக்கூடியதையே பொருத்தனையாகச் சொல்ல வேண்டும். வாய்தவறி எதையும் சொல்லக்கூடாது. அப்படிப்பட்டவர்களைத் தேவன் மூடனென்று பிரசங்கி 5 : 2, 4, 5ல் கூறுவதைப் பார்க்கிறோம். இவைகள் நமக்கு யெப்தாவின் மூலம் பாடமாக உள்ளது. ஆமென்.

Related Posts