இந்த உவமையானது திராட்சத் தோட்டத்துக்கு வேலை செய்யப் போன ஊழியர்களோடு ஆரம்பமாகிறது. இதை மத்தேயு 20 : 1 – 16ல் பார்க்கலாம். இயேசு இந்த உவமையில் பரலோகராஜ்யத்தை வீட்டு எஜமானுக்கு ஒப்புமைப்படுத்திக் கூறியிருக்கிறார் பரலோகராஜ்யத்தில் ஆண்டவர், தன்னுடைய அன்பை ருசிக்காத அனேகர் வெளியே இருப்பதால், அவர்களிடம் ஆண்டவரைப் பற்றிச் சொல்ல அநேகர் தேவை. சரீரமாகிய சபையில் எல்லோரும் ஊழியக்காரர்கள். எல்லோரும் ஆண்டவரைப் பற்றி எடுத்துச்சொல்லுகிறவர்களாக மாற வேண்டும் என்கிறார். இதில் கர்த்தர், தான் தயாளனாயிருக்கிறேன் என்கிறார். இயேசுவின் வருகை சமீபமாயிருப்பதால் அவர் வருவதற்கு முன் எல்லா இடங்களிலும் சுவிஷேசம் அறிவிக்கப்பட வேண்டும்.
எஜமான் தேடிய வேலையாட்கள்:
மத்தேயு 20 : 1 – 7 “பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.”
“வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான். “
“மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு:”
“நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.”
“மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.”
“பதினோராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.”
“அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.”
பரலோகராஜ்ஜியமானது வீட்டெஜமானுக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசு கூறுகிறார். இதில் ஒரு எஜமானுக்கு திரளான திராட்சைத் தோட்டங்கள் இருக்கிறது. அவன் பெரிய பணக்காரனாயிருக்கிறான். அவனுடைய திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்படுகிறது. ஆட்கள் இல்லாததால் அதிகாலையில் எழுந்து ஆட்களைத் தேடிச்செல்கிறான். அந்தக் காலை வேளையில் வேலையாட்களைப் பார்த்து ஒரு பணம் கூலிபேசி அவர்களைத் தன் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்புகிறான். யூதரின் வேலைநேரம் இப்பொழுது போல் 8 மணி நேரம் கிடையாது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்ய வேண்டும். அதன் பின்னும் இன்னும் வேலையாட்கள் தேவைப்படுவதால் மூன்றாம் மணி வேளையிலும் எஜமான் கடைத்தெருவில் சும்மா நிற்கிற வேறு வேலையாட்களைக் கண்டு நியாயமானபடி கூலி தருவேன் என்று கூறினதினால் அவர்களும் சம்மதித்துத் திராட்சைத் தோட்டத்துக்குப் போனார்கள். அவர்களிடம் எவ்வளவு கூலி தருவேன் என்று எஜமான் கூறவில்லை. இன்னும் எஜமானுக்கு ஆள் தேவையாதலால் ஆறாம் மணி வேளையிலும், ஒன்பதாம் மணி வேளையிலும், பதினோராம் மணி வேளையிலும் போய் அங்கே சும்மா நிற்கிற சிலரைப் பார்த்து பகல் முழுவதும் ஏன் சும்மா நிற்கிறீர்கள் என்று கேட்டபோது: அவர்கள் தங்களுக்கு யாரும் வேலை தரவில்லை என்கிறார்கள். அவர்கள் சோம்பேறிகளாக நிற்கவில்லை. வேலை கிடைக்காததால் ஏதாவது வேலை தரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்போடு நின்று கொண்டிருந்தார்கள். இவர்களும் அதிகாலையிலேயே தங்கள் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வந்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு யாரும் வேலை கொடுக்கவில்லை. உடனே எஜமான் தன்னுடைய திராட்சைத் தோட்டத்துக்கு அவர்களை அனுப்பி நியாயாமானபடி கூலி தருவேன் என்றார். அவர்களும் கூலியைப் பற்றிப் பேசவில்லை.
இது பரலோக ராஜ்ஜியத்தின் சில காரியங்களை வெளிப்படுத்துகிறது. இது எதைக் குறிக்கிறதென்றால் அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம் என்று இயேசு மத்தேயு 9 : 37ல் கூறியதைக் குறிக்கிறது. திராட்சைத்தோட்டத்துக்கு வேலைசெய்ய ஆட்கள் தேவைப்படுவதுபோல சுவிசேஷம் சொல்ல ஆட்கள் தேவைப்படுகிறது. நமக்குக் கொடுக்கப்பட்ட பணியிலே உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எவ்வளவு வேலை செய்தோம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு நேரம் வேலைசெய்தோம் என்பது முக்கியமல்ல, எந்த ஸ்தானத்திலிருந்து வேலைசெய்தோம் என்பது முக்கியமல்ல, கர்த்தர் நமக்கு கொடுத்த வேளையில் நாம் எவ்வளவு உண்மையுள்ளவர்களாக இருந்தோம் என்பதுதான் முக்கியம். நாம் எவ்வளவு உண்மையுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை வைத்துத்தான் வெகுமதியும், பரிசும் கிடைக்கும். முந்தி வந்தோரைப் போல பிந்தி வந்தோரும் தங்கள் உழைப்பைக் குறுகிய நேரத்தில் செய்ய முடியும். எஜமானைப் பொறுத்தவரை எவ்வளவு நேரம் வேலை செய்தார்கள் என்பதைவிட, எவ்வளவு வேலை செய்தார்கள், எப்படிச் செய்தார்கள், என்பதே முக்கியமானது.
எஜமான் கூலி கொடுத்த விதம்:
மத்தேயு 20 : 8 – 10 “சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியகாரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.”
“அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.”
“முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.”
சாயங்காலவேளையில் எஜமான் தன்னுடைய காரியக்காரனை நோக்கி பிந்தி வந்தவர்களுக்கு முதலிலும், முந்தி வந்தவர்களுக்கு அப்புறமும் கூலியைக் கொடுக்கச் சொல்கிறார். முந்தி வந்தவர்களுக்குத்தான் முதலில் சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால் இவரோ நேர்மாறாகக் கூறினார். முந்தி வந்தவர்கள் அவர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கிறாரென்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் தனக்கு அதைவிட அதிகமாகக் கிடைக்குமென்று நினைத்தனர். மூன்றாம் மணியில் ஆறாம் மணியில், ஒன்பதாம் மணியில், பதினோராம் மணியில் வந்தவர்களுக்கும், முதலில் வந்தவர்களுக்கும் ஒன்று போல் ஒரு பணம் கூலி கொடுத்தார். முந்தி வந்தவர்களுக்கு அதிகமான கூலி கொடுத்திருக்க வேண்டும். இது நமக்கு நியாயமில்லாததாகவும்,, அநியாயமாகவும் தோன்றுகிறது. தேவனுடைய வழி இதில் வித்தியாசமாக இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையின் தேவைகளும் சந்திக்கப்பட வேண்டுமென்பதுதான் இந்த எஜமானின் எண்ணமாயிருக்கிறது. நம்முடைய தேவன் நம்முடைய தேவைகளை சந்திக்கிறவராக இருக்கிறார். இதில் தேவன் முந்தி வந்தவர்களின் மனநிலை எப்படியிருக்கிறதென்று சோதிப்பதற்காக முதலில் பதினோரு மணிக்கு வந்தவர்களுக்குக் கொடுக்கச் சொல்லுகிறார். இதைத்தான் இயேசு முந்தினோர் பிந்தினோராயும் பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள் என்கிறார். ஊழியத்தில் இருபது ஆண்டு, முப்பது ஆண்டு கஷ்டப்பட்டவர்களுக்கும் நேற்று அழைத்து ஊழியத்துக்கு வந்திருந்தவர்களுக்கும் ஆசீர்வாதம் ஒன்றுதான். இதில் முந்தி வந்தவர்கள் பிந்திவந்தவர்களுக்கு இயேசு காட்டிய கிருபையைப் பார்க்கிறார்கள். தேவனுடைய அழைப்பும் திட்டமும் ஒரு நாளும் மாறாது. நியாயமானதைத்தான் தேவன் தருவார். ஒருவருக்கு கூட்டி ஒருவருக்கு குறைத்து தேவன் கொடுக்க மாட்டார்.
முந்திவந்தவர்களின் கேள்வி:
மத்தேயு 20 : 11 – 13 “வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி:”
“பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.”
“அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா?”
முந்திவந்தவர்கள், பிந்திவந்தவர்கள் எல்லோருக்கும் ஒன்றாகக் கூலி கொடுத்ததால் முந்தி வந்தவர்கள் எஜமானை நோக்கி தாங்கள் வெயிலின் உஷ்ணத்தையும், பகலின் கஷ்டத்தையும் சகித்து பன்னிரண்டு மணி நேரம் வேலை பார்த்தோமென்றும், பிந்தி வந்து ஒருமணி நேரம் மட்டுமே வேலை செய்தவர்களுக்கும், தங்களுக்கும் சமமான கூலி கொடுக்கிறீரே என்று முறுமுறுத்தனர். ஏஜமான் அவர்களில் ஒருவனை நோக்கி சினேகிதனே என்றழைத்தார். முறுமுறுத்தவனையும் வெறுக்காமல் இவ்வாறு அழைத்தார். தான் அவனுக்கு அநியாயம் செய்யவில்லையென்கிறார். ஒரு பணத்துக்குச் சம்மதித்துத் தானே வேலைக்கு வந்தீர்கள் என்கிறார். அழைப்பு பிந்தியது வேலைக்காரர் குற்றமல்ல. அவர்கள் வேலைக்காகக் காத்திருந்தனர். அழைப்பு கிடைத்தவுடன் கூலியைப் பற்றி பேசிக்கொண்டிராமல் புறப்பட்டுப் போனார்கள். முதலில் சென்றவர்களுக்கு கூலியைப் பேசியபடி எஜமான் கொடுத்தார். யாருக்கும் அநியாயம் செய்யவில்லை.
எஜமானின் பதில்:
மத்தேயு 20 : 14 – 15 “உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்.”
என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
எஜமான் காலை வந்தவர்களிடம் அவர்களிடம் பேசின கூலியை வாங்கிக்கொண்டு போங்கள் என்கிறார். பிந்திவந்தவனுக்கு என்ன கொடுக்க வேண்டுமென்பது என்னுடைய இஷ்டமென்றும், அதற்கு எனக்கு அதிகாரமுண்டு என்றார். அப்பொழுது கர்த்தர் தான் தயாளனாக இருப்பதாகவும், நீ வன்கண்ணனாயிருக்கக் கூடாதென்கிறார். கர்த்தர் இவ்வளவு பெரிய உலகத்தைப் படைக்கும் போது ஆதாமையும், ஏவாளையும் தான் படைத்தார். அவர்கள் இரண்டு பேரையும் ஏதேன் என்ற இடத்தில் நான்கு நதிகள் ஓடக்கூடிய இடத்தில் கர்த்தர் தன்னுடைய தயாளகுணத்தினால் வைத்தார். தேவன் நமக்கு ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார். அவரவருக்குரிய பலனை அவரவருக்குக் கொடுப்பார். அவர் நீதியுள்ளவர். பாரபட்சமில்லாதவர். இயேசு நமக்கு கூலி கொடுக்கிறவர் அல்ல. கிருபையைத் தந்தருளுகிறவர்..நம்முடைய பாவங்களை மன்னித்து தேவனுடைய கிருபையினால் நித்தியஜீவனைத் தருகிறவர் (ரோமர் 6 : 23).
முந்தினோர் பிந்தினோராவார்:
மத்தேயு 20 : 16 “இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். “
முந்தினோரென்பது யூதரைக் குறிக்கிறது. முந்தினோரான யூதர்களுக்கு ஆபிரகாமின் வாக்குத்தத்தமாகக் கிடைத்த கிருபை புறஜாதியாருக்குக் கிறிஸ்துவில் கிடைக்கிறது. இதனால் யூதர் பொறாமைப்பட வேண்டிய அவசியமில்லை. பிந்தின புறஜாதியாருக்கும் கிருபையை அளித்தது தேவனுடைய தாராள மனப்பான்மையைக் காட்டுகிறது. அது யூதரின் தகுதியைக் குறைப்பதாக எண்ண முடியாது. பிந்தினோராகிய நம்மைத் தேவன் தெரிந்து கொண்டு அவர்கள் செய்யாமல் விட்டதை தேவன் நம் கையில் செய்யக் கொடுத்திருக்கிறார். நாம் அதற்கு பெருமை பாராட்டக் கூடாது. அதேபோல் அவர்களை அற்பமாய் எண்ணவும் கூடாது. அவர்களைப்போல நாமும் நடந்தால் அவர்களைப்போல நாமும் தள்ளப்படுவோம். இவ்வுலகில் உயர்ந்த பதவியில் இருப்பவர்களை விட அவர்களின் கீழ் வேலை செய்கிறவர்கள் பரலோக ராஜ்ஜியத்தில் பெரியவர்களாகக் கருதப்படுவர். இதை உணர்ந்தவர்களாக நாம் தாழ்மையுடன் செயல்பட வேண்டும். தன்னைவிட சிறியவர்கள் தன்னைவிட அதிகமாக ஊழியம் செய்து புகழ் பெற்று விளங்கும் போது மகிழ்ச்சியுடன் கர்த்தருக்கு நன்றி செலுத்த வேண்டும். அப்படிப்பட்டவர்கள் உண்மையான தாழ்மையுள்ளவர்கள் ஆவார்கள். இளம் வயதினரை, கல்வியில் குறைந்தவர்களை நம்மைவிட அதிகமாகப் பயன்படுத்தினால் பொறாமை கொள்ளக்கூடாது. நமக்குக் கர்த்தர் கொடுத்திருக்கும் பணியைச் சரியாகச் செய்து முடிப்பதே கர்த்தருக்குப் பிரியம். வாழ்க்கையின் இளமைப் பகுதியில், நடுத்தர வயதில் முதிர் வயதில் எத்தனை ஆண்டுகள் கர்த்தருக்கென்று உழைத்தனர் என்பதல்ல. அழைக்கப்பட்ட நாளிலிருந்து கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து உண்மையாக உழைத்தார்களா என்பதுதான் முக்கியம்.
கருத்து:
இது அறுவடையின் காலம். ஆண்டவர் இரண்டாவது முறை வரும்போது நியாயம் தீர்க்க வரப்போகிறார். பழைய ஏற்பாட்டில் உள்ள மோசே, எலியா, ஏசாயா, எலிசா, எரேமியா, எசேக்கியேல் போன்ற எல்லா தீர்க்கதரிசிகளைக் காட்டிலும், ராஜாக்களைக் காட்டிலும் யோவான்ஸ்நானகன் பெரியவன் ஆகிறான். இவன் ஒரு அற்புதமோ, அடையாளமோ செய்யவில்லை. யோவான்ஸ்நானகன் தான் முதன்முதலில் மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினவன் (மத்தேயு 3 : 2). இவர்தான் தேவனுடைய வழியை ஆயத்தம் பண்ண வந்தவன். அதனால் தான் இயேசு “ஸ்திரிகளிடத்திலே பிறந்தவர்களிலே யோவான்ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லையென்றார் (லூக்கா 7 : 28) நீங்களும் நானும் தேவனுடைய ஆலயமாக இருக்கும் பாக்கியத்தை பெற்றிருக்கிறோம். இந்த காலம் ஆண்டவருடைய பிரசன்னத்தில் அற்புதமான காலம். பரலோக ராஜ்ஜியத்தில் வேலை செய்யும்பொழுது தேவன் அதற்கேற்ற பலனைத் தருவார். தனக்காக வைராக்கியமாக வேலை செய்கிற மக்களைத் தேவன் பார்க்கிறார். ஆண்டவருடைய வருகைக்கு முன் அனைவரையும் இரட்சிப்புக்குள் கொண்டுவர முயற்ச்சி செய்ய வேண்டும். நியாயத்தீர்ப்பு நாட்களுக்கு முன் நாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். எனவே இன்றைக்கே நாம் பலனை எதிர்நோக்காமல் தேவனுடைய ராஜ்ஜியம் கட்டப்பட, அதற்காகப் பிரயாசப்பட தீர்மானம் செய்வோம். கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாய் வாரும்.